03 March 2018

வழிகாட்டி - தி. ஜானகிராமன்

கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.