இன்னும் இரண்டு மணி நேரம்தான்.
மீனாவுக்கு படபடப்பு அதிகமாயிற்று. பொங்கி வந்த வியர்வையில் உடல் குளித்தது போல நனைந்தது. இன்னொரு முறை குளித்துவிட்டு உடை மாற்றியாக வேண்டும்.
ஏதாவது செய், ஏதாவது செய் என்று ஒரு குரல் உள்ளுக்குள்ளேயே நச்சரித்தது. என்ன செய்யறது, என்ன செய்யறது என்று மீனா வாய் விட்டுத் தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். கட்டிலில் உட்கார்ந்து புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்படியே சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தாள். படபடப்பு அதிகமாயிற்று. நிமிடங்கள் கூட வருடங்களாக கனத்தன. கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தினாள். கண்ணில் உடனே பட்டது எதிரே மாட்டியிருந்த கடிகாரம்தான். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற படபடப்பை அதிகப்படுத்திற்று. கூடவே சம்பந்தமில்லாமல் 745ரூபாய் விலை இந்த கடிகாரம் என்ற கணக்கும் மனதில் எழுந்தது.
சுற்றிலும் பார்த்தாள் மீனா. பொருட்கள் அலமாரியிலும், கட்டிலிலுமாக இறைந்து கிடந்தன. இரண்டாயிரத்து இருநூறு, எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து, மூவாயிரத்து ஐநூற்று அறுபது ரூபாய் எழுபது பைசா, நூற்று எழுபத்தாறு ரூபாய் என்று ஒவ்வொரு பொருளின் விலையும் மனதில் அணிவகுத்தன.
கூடவே அப்பாவின் முகம். போன ஒரு வருடத்தில் அவருக்கு பத்து வயது அதிகமாகி விட்டிருந்ததாக மீனாவுக்குத் தோன்றியது. ஒரு வருஷத்துக்கு 365 நாட்கள். 365 நாட்களில் 65 பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் அவர் வந்தாக வேண்டும். வெறுங்கையோடு வர முடியாது. மாப்பிள்ளைக்கு ஏதாவது கொண்டுவந்தாக வேண்டும். ஒவ்வொரு முறையும் அவருக்கு ஒரு கப் காபி கிடைக்கும். வெறுங்கையோடு வந்த சமயத்தில் அதுகூட தரப்படமாட்டாது. மீனாவின் கையிலிருந்த காபி டம்ளரைப் பிடுங்கி 'சிங்க்'கில் கொட்டிய நாளை மறக்க முடியாது.
மறக்க முடியாதவை நிறைய இருக்கின்றன. இன்றைக்கு மேடையில் அப்படி ஒரு கேள்வி கேட்பார்களா? உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எது?
மீனா, கணுக்காலில் மறைத்த புடவையை சற்று நீக்கி குனிந்து பார்த்துக்கொண்டாள். நான் மறக்க முடியாத தழும்பு இது என்று மேடையில் பதில் சொல்ல முடியுமா? ம்ஹூம். என்ன சொல்ல வேண்டும் என்று காலையிலேயே சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். என் பிறந்த நாளன்று காலை கண்விழித்துப் பார்த்தபோது அவர் கையில் புதுப்புடவையுடன் பக்கத்தில் நின்றதை மறக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வழுக்கைத் தலையன் அவரிடம் மறக்க முடியாத நிகழ்ச்சி எது என்று கேட்டால், நான் புடவையைக் கொடுத்தபோது அவள் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்தை நான் மறக்க முடியாது என்று அவர் பதில் சொல்ல வேண்டும். 'என்னடா புரிஞ்சுதா?' 'சரிம்மா'.
சரிம்மா!
அவர் அலமாரியில் தினுசுதினுசாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. பிரித்துப் பார்த்தால் மீனாவுக்கு எதுவும் புரிவதில்லை. கம்பளிப்புழு மாதிரி ஒரே வார்த்தைகள். அவ்வளவையும் படித்திருக்கிற அவருக்கு ஏன் வேறு வார்த்தைகளே பேசத் தெரிவதில்லை? 'சரிம்மா' என்ற அவருடைய குரல் மீனாவின் தலையைக் குடைந்தது.
அவன் இந்த மாதிரி கேட்டால் நீ இந்த மாதிரி பதில் சொல்லு. அப்படி கேட்டால் இப்படி. இப்படிக் கேட்டால் அப்படி, தெரிஞ்சுதா? 'சரிம்மா' என்னடி, உனக்குப் புரிஞ்சுதா? 'சரி அத்தை'.
முந்தைய நிகழ்ச்சிகளை எல்லாம் அத்தை அக்கறையோடு வீடியோவில் பதிந்து வைத்திருந்தாள். பலமுறை போட்டுப் பார்த்து குறிப்புகள் எடுத்து அவற்றின் அடிப்படையில் இருவருக்கும் பயிற்சி கொடுத்தாள்.
எப்படியாவது மாருதி காரை வென்று விடவேண்டும்.
உங்கப்பனாலதான் கார் வாங்கித் தர முடியல. எவனோ பரிசாத்தரான். அதையாவது ஜெயிச்சுகிட்டு வந்து காட்டு.
மறக்க முடியாதவை பட்டியலில் அந்த நாளுக்கும் இடம் உண்டு. அன்று அவர் ஊரில் இல்லை. லண்டனில் இருந்து திரும்பி வர வேண்டிய நாள், கடைசி நிமிடத்தில் நான்கு நாட்கள் தள்ளி வருவதாகத் தகவல் வந்தது. அப்பாவுக்கு அது தெரியாது. மாப்பிள்ளை திரும்பி வருகிற நாளாயிற்றே என்று கூடையில் ஆப்பிள் பழங்களுடன் வந்திருந்தார்.
ரெண்டு மாசம் லண்டன்ல தங்கிப் படிச்சுட்டு வர்றான். இனிமயும் இங்க ஸ்கூட்டர்ல போய்கிட்டிருந்தா மரியாதையா இருக்குமா? சீக்கிரமா ஒரு மாருதி காருக்கு புக் பண்ணுங்க சம்பந்தி.
மீனா அப்பாவின் முகத்தையே அப்போது பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நொடிதான். அப்பாவின் முகத்தில் - மாருதி கார் வாங்க பணத்துக்கு எங்கே போவது, இந்த சம்பந்தம் இன்னும் எங்கேயெல்லாம் என்னை இழுத்துக்கொண்டு போகுமோ என்ற வேதனை ஒரு நொடி தோன்றி மறைந்தது. பெண்ணைப் பெற்றவர்கள் தலைசிறந்த நடிகர்களாகவும் இருக்க வேண்டும். உணர்ச்சிகளை சட்டென்று மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் வேண்டும்.
மீனாவின் அப்பாவும் முயற்சி செய்தார். ஆனால் அந்த ஒரு நொடி முகம் மீனாவின் மறக்க முடியாத பட்டியலில் உறைந்து போயிருந்தது.
நான்கு நாட்கள் கழித்து அப்பா மாப்பிள்ளையைப் பார்க்க வரவில்லை. ஏன் அவர் வரவில்லை என்ற கேள்விக்கு மீனா ஈடுகொடுக்க வேண்டியதாயிற்று. அவர் எதுவும் கேட்பதில்லை. எல்லாம் அத்தைதான். நான் சொல்லிட்டேன்டா. சரிம்மா.
லண்டனிலிருந்து திரும்பிய நாளின் அந்த இரவையும் மீனாவால் மறக்க முடியவில்லை. இதே கட்டில்தான்.
படுத்த சில நொடிகளில் அவர் தூங்கி விட்டார். தயங்கி தயங்கி மெல்ல அவர் மார்பின் மீது கையை வைத்தாள். அனிச்சையாக அவள் கையை விலக்கித் திரும்பிப் படுத்தார். கண்கள் அரை விழிப்பில் அவளைப் பார்த்தன.
ரெண்டு மாசமா தனியா இருந்தது கஷ்டமா இருந்துச்சா என்று கேட்டாள். அவர் முகத்தில் குரூரமாக ஒரு புன்னகை மலர்ந்தது. உன்ன விட்டா எனக்கு வேற கதியே இல்லனு நெனச்சியா? முட்டாள். உலகத்துல எல்லா பொம்பளயும் ஒரே மாதிரிதான். புரண்டு படுத்தார்.
இனிமேல் கண்களில் நீர் மீதி இல்லை என்றாகும்வரை அந்த இரவு முழுவதும் மீனா விழித்திருந்தாள். நடு வீதியில் அவளை நிர்வாணமாக ஓடவிட்டு ஒரு கும்பலே துரத்துவது போல அருவருப்பாகவும், பயமாகவும் இருந்தது.
சாந்தி முகூர்த்தம் எந்தக்கிழமை நடந்ததுனு ஒரு கேள்வி தவறாம கேக்கறான். தப்பு தப்பா பதில் சொல்லிடாதீங்க தெரிஞ்சுதா? 21-ந்தேதி வெள்ளிக்கிழமை. ஞாபகம் வெச்சுக்க.
மறக்கவில்லை. கூடவே பத்தாந்தேதி புதன்கிழமையும் சேர்ந்தே நினைவில் இருக்கிறது. அன்றைக்குத்தான் சாந்தி முகூர்த்தம் நடந்திருக்க வேண்டிய நாள். நிச்சயித்தபடி நடக்கவில்லை. அப்பா டைட்டன் வாட்ச் வாங்க மறந்து போய்விட்டார். வாட்ச் வந்தப்புறம் பார்த்து மறுதேதி குறிச்சுக்கலாம். சரிம்மா.
சாந்தி முகூர்த்த நாளை இப்போது நினைத்துப் பார்க்கக்கூட மீனாவுக்கு அருவருப்பாக இருந்தது. அய்யோ, இது என் உடம்பு, இதற்குள்ளே என் மனசும் இருக்கிறது என்று மவுனமாக கதறிக்கதறி வெறும் சோர்வில் உடலை அவரிடம் ஒப்படைத்துவிட்டு செத்துப்போன நாள். ஏக்கத்தை, தவிப்பை சாந்திப்படுத்த முடியாமலே அந்த முகூர்த்தம் முடிந்து போயிற்று. என்னடா கள் குடிச்ச நரி மாதிரி இருக்கே. பின்னாலேயே அலையாதே. அப்பறம் நம்ம கதி அவ்வளவுதான். சரிம்மா.
அந்த வழுக்கைத் தலையனுக்கு கண்ணுக்குத் தெரியாத இரண்டு கொம்புகள் இருப்பதுபோல உணர்ந்தாள் மீனா. 'நீங்களும் அவரும் ஒரு பார்ட்டிக்குப் போறீங்க.. ரொம்ப நெருக்கமான நண்பர் எதிர வராரு...'
இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? பாஸ் பட்டனை அழுத்திவிட்டுக் கேட்டாள் அத்தை. ஏதோ ஒரு அப்பாவிப் பெண்ணின் முகம் திரையில் உறைந்து போயிருந்தது.
மீனா திரையையே பார்த்தாள். அத்தை பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பெண்ணை சந்தித்தால் நன்றாயிருக்கும். நீயும் கார் ஜெயித்துத் தரத்தான் வந்தாயா? உன் அப்பா எந்த அலுவலகத்தில் குமாஸ்தா? உன் கணவர் நிஜமாகவே உன்னை பார்ட்டிக்கெல்லாம் அழைத்துப் போனாரா?
சாயந்தரம் 6 மணிக்குப் புறப்படணும். பத்து நிமிஷத்துல போயிரலாம். நாலரை - ஆறு ராகு காலம். ஆறு அஞ்சுக்குக் கெளம்பத் தயாராயிருங்க. நீ பனியன்லாம் போடாதே, சூட் போட்டுக்கிட்டு போ. நீ அந்த பனாரஸ் புடவையை கட்டிக்க. அது ஒண்ணுதான் உங்க வீட்ல வாங்கினதுல சுமாரான புடவை. ஆறு மணிக்கு ரெடியா இருக்கணும்.
மீனாவுக்கு படபடப்பு அதிகமாயிற்று.
இன்னும் அரை மணி நேரத்தில் அவர் வீடு திரும்பி விடுவார். குளித்து டிஃபன் சாப்பிட்டுத் தயாராக இன்னொரு அரை மணி நேரம். ஏதாவது செய், ஏதாவது செய். பழைய கதையை யோசிச்சுக்கிட்டு இருக்காதே. குரல் மறுபடியும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டது.
நான் ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று சொல்லிவிடலாமா? யாரிடம் சொல்வது? அவரிடம்? சொன்னபிறகு அவர் காதில் விழுந்ததா? விழுந்தும் சும்மாயிருக்கிறாரா? விழவே இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியாமல் திணற வேண்டும். அவர் பாட்டுக்கு ட்ரஸ் மாற்றிக்கொண்டே இருப்பார். மறுபடி, மறுபடி சொன்னதை எப்படித் திருப்பிச் சொல்வது? அதுவும் - வரமுடியாது என்று? அத்தையிடம்? கணுக்காலில் இருந்த ஆறிப்போன தழும்பு மறுபடியும் வலித்தது. அப்பாவிடம் போய் நான் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சிக்கு போக மாட்டேன் என்று சொல்லிவிடலாமா? அப்பா என்ன சொல்லுவார்? தெரியாது. நேரே மேடைக்குப் போய் எங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியே இல்லை. ஆனால் தயவு செய்து கார் மட்டும் கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவார்கள் என்று பகிரங்கமாக சொல்லிவிடலாமா? 'நல்லா ஜோக்கடிக்கிறீங்க' என்பானோ வழுக்கைத் தலையன்?
மீனாவுக்கு படபடப்பு அதிகமாயிற்று. ஏதாவது செய் மீனா. ஏதாவது செய். அந்த அறையில் இருந்த ஒவ்வொரு பொருளும் அவளிடம் பேச ஆரம்பித்துவிட்டாற்போலத் தோன்றியது. புடவை, கடிகாரம், மின்விசிறி, சூட்கேஸ், கட்டில். ஏதாவது செய் மீனா. ஏதாவது செய்.
வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஷூ ஒலி.
வாப்பா. இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு. போய் குளி.
மீனா.. அவன் வந்துட்டான். நீயும் சீக்கிரமா ரெடி பண்ணு மீனா! காதுல விழுந்துச்சா?
மீனா குரல் எட்டாத தொலைவில் இருந்தாள்.
நன்றி: டிவி உலகம் 15.05.1994.