20 January 2026

கசடதபற விளம்பரங்களும் குழப்பங்களும்

வாட்ஸப் குரூப் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ப்ராட்காஸ்ட் என்பது பலருக்குத் தெரியாது. 


ப்ராட்காஸ்ட் லிஸ்டில் 256 பேர் வரை சேர்த்துக்கொள்ளமுடியும். அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யாரென்று யாருக்கும் - இருக்கிறவர்களுக்குக்கூட ஒருவருக்கொருவர் - தெரியாது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண் உங்கள் ப்ரைவசி பாதுகாக்கப்படுகிறது. இதிலிருக்கும் வசதி ஒரு செய்தியை ஒருமுறை போட்டால் 256 பேருக்கும் போய்விடும். ஆனால் படிக்கிறவர்களுக்கு நான் அவர்களுக்கு மட்டுமே அனுப்பிய செய்தி போலத் தோன்றும். 


இதனால்தான் நான் போடுகிற கசடதபற விளம்பரங்களைப் பலரும் - குறிப்பாக மொபைல் இண்ட்டர்நெட் தொழில்நுட்பங்களில் பரிச்சயமில்லாதவர்கள் - பெயர் கொடுத்தும் பட்டியலில் நம் பெயர் சேர்க்கப்படவில்லையோ அதனால்தான் நமக்கு கசடதபற செய்தியைத் திரும்பத்திரும்ப இவன் அனுப்புகிறானோ என எண்ணிக்கொண்டு திரும்பத் திரும்ப என்னைச் சேர்த்துக்கொள் சேர்த்துக்கொள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். 


கசடதபறவுக்குப் பெயர் கொடுத்ததும் உங்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதே பட்டியலில் சேர்ந்துவிட்டீர்கள், உங்களைச்  சேர்த்துவிட்டேன் என்பதற்கான அக்னாலெட்ஜ்மெண்ட்தான்


ஆனால் சேர்ந்தவர்களுக்கே ஏன் திரும்பத் திரும்பச் செய்தி வருகிறது? 


இதுவரை எத்தனைப்பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குச் செய்தியாவதோடு அவர்களையும் சேர ஊக்குவிக்கும் விளம்பரமாகவும் ஆகிறது. சாபம் விடுமளவுக்கு எரிச்சலூட்டினாலும் விளம்பரம் என்பது திரும்பத்திரும்ப கண் முன்னே தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். 


என் புத்தகமான ஆபீஸ் நாவலுக்கே - சாரு ஜெயமோகன் போல ஆகா ஓகோவென சுயதம்பட்டமடித்துக்கொண்டு நான் அலறவில்லை. எழுத்துக்கு எழுத்தை விடச் சிறந்த விளம்பரம் கிடையாது என்கிற தன்னம்பிக்கையுடன் நாவலின் சிறு துணுக்குகளை தினந்தோறும் மூன்று முறையேனும் படிக்கக் கொடுக்கிறேன். இதுதான் என் விளம்பரம். 1100 / 1500 விலையுள்ள புத்தகம் முன்பதிவிலும் புக் ஃபேரிலுமாக இதுவரை 350 பிரதிகள் விற்றிருப்பதே என் நம்பிக்கை சரியானதே என்பதற்கான சாட்சியம்.


கசடதபற முழுத்தொகுப்பு என்று சொல்லி உங்களிடம் பணம் பறிக்க வரவில்லை. 


2010 முதல் என்னைப் பார்க்கிற பலர் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மை நான் எந்தப் பொதுக்காரியத்தில் இறங்கினாலும் முழு ஆதரவைப் பண ரீதியிலும் பரோபகாரமாகவும் தயங்காமல் செய்ய முன்வருபவர்கள். 


இவர்களில் பலர் பல விஷயங்களில் என்னோடு ஒத்த கருத்து உள்ளவர்களல்ல. ஆனால் என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். 2011 முதலே பண விஷயத்திலும் பொது விஷயங்களிலும் நான் எப்படி என்பதை நன்கு அறிந்தவர்கள். இந்த நம்பிக்கை ஒரு நாளில் ஒரு நிகழ்வில் வந்ததில்லை. நான் என்ன சொல்கிறேன் என்பதைவைத்து அல்ல; என்ன செய்கிறேன் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதை வைத்து வந்தது. 15 வருடங்கள் தொடர்ந்து நம்பிக்கைக்குரியவனாக ட்விட்டர் பேஸ்புக் போன்ற பொதுவெளியில் தாக்குப் பிடித்து நிற்பது சாதாரண விஷயமில்லை. 


எனக்குப் பேர் புகழ் விருது காசு பணம் பார்க்கவேண்டும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இருப்பதே எதேஷ்டம் என ஒளிவு மறைவின்றி என் எழுத்தைப் போலவே இருந்துகொண்டிருக்கிறேன். 


ரூபாய் 1000க்கும் மேல் ஆகப்போகிற கசடதபற முழுத்தொகுப்பை வாங்க முடியாதவர்களுக்கும் கசடதபற இதழ்களை வடிவமைப்புக்காகப் பார்க்க விழைபவர்களுக்குமாகப் பொதுவெளியில் இலவசமாகக் கொடுத்திருக்கிறேன். 


இதையும் மீறி நூல் வடிவில் வேண்டும் என்போர் சுட்டியில் போய் இதழ்களைப் பார்த்துப் படித்துவிட்டு அதன் பிறகும் வேண்டும் என்றால் மட்டும் 9551651212 என்கிற வாட்ஸப் எண்ணில் வந்து பெயர் கொடுக்கவும். 


ஆள் வந்தால் போதும் என்று தலையில் கட்டிவிடுவது கசடதபறவுக்கும் அதைக் கலை இலக்கிய ஓவிய இயக்கமாக நடத்தியவர்களுக்கு இழைக்கிற அநீதியாகும். கசடதபறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் வாங்குவதே அவர்களுக்குப் பெருமை சேர்க்கும்.


இப்போதே 153 வந்துவிட்டது. 200 சேர்ந்தால் போதும்வேலையில் இறங்கிவிடுவேன். விரைவில் 200 ஆகவேண்டும் என நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். அதுதான் கசடதபற விளம்பரங்களிலிருந்து தப்ப உங்களுக்கு இருக்கும் ஒரே வழி.