16 November 2010

ஓஸிப் பொங்கல்னா எனக்கு ரெண்டு தொண்ணை

இணையத்தில், எல்லோரும் எல்லா கதைகளையும் PDF ஆக்கச் சொல்லி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இது தவறு என சொல்ல ஒரு குரல்கூட இல்லை.

எனக்கு
எனக்கும்
எனக்கும் கூட
இது என் மெய்ல் ஐடி என்னைக் கேட்க வேண்டும் என்று இல்லை, இதை நீங்கள் டிபால்ட்டாக பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு கதைதானா, முழு தொகுப்பும் கிடைக்குமா


இதில் பங்குகொண்ட அனைவரும் இலக்கிய ஆர்வமும் சமூகப் பொறுப்புணர்வும் பொதுவெளி நாகரிகமும் (குறைந்தது தான் விமர்சனத்திற்கு உட்படுத்தப் படாதவரை) கொண்டவர்கள். இன்றைய ஆட்சியின் இலவசத்திட்டங்கள் பற்றி தாமாகவே முன்வந்து அது இழிவு எனக் கருத்து சொல்லும் அளவிற்கு தார்மீக தர்மாவேசம் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் ஊழல் பற்றிய ஊடக அமர்வுகளில் முக்கியஸ்தர்களாக உட்காரும் அளவிற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் தகுதி உடையவர்கள்.

ஒரு எழுத்தாளன் தானே முன்வந்து இணையத்தில் எழுதி அதை வாசகர்கள் இலவசமாகப் படிப்பது என்பது ஒன்று. 

அது கிட்டத்தட்ட எழுத்துக்ளை நாட்டுடமையாக்க ஒப்புக்கொள்ளும் தனி நபரின் தேர்வு. ஆனால் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா? 

இதன் மறுபக்கத்தில், இணையத்தில் கிட்டத்தட்ட 24 மணிநேரமும் இருக்கும் இவர்களில் பெரும்பாலோருக்கு இந்த வாசிப்பும் இணையமும் மட்டுமே சொந்த மண்ணின் வேர்களொடு இணைக்கும் கண்ணி. ஊருக்கும் சோறுக்குமான இடைவெளியில் வாழ்வை, வேலை தின்றுகொண்டு இருக்கிறது. 

தேடித் தேடிப் படிக்கும் வாசக வெறி பிரமிக்க வைக்கிறது. ஆனால் அது, சுற்றில் இருக்கும் புத்தகங்களாய் கடைகளில் கிடைக்கக் கூடியவற்றையும் கூட PDF ஆக்கி இலவசமாய் சுற்றில் விடுவது எல்லை தாண்டுவதாகாதா?

இவர்களின் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிச்சயம் பாராட்டுக்குரியதுதான், சந்தேகமே இல்லை. அநேகமாக இவர்கள் யாருக்குமே இலக்கியத்திற்காக செலவழிக்கக் கூடாது என்பது குறிக்கோளும் அல்ல. ஆனால் மனித இயல்பு எதையுமே இலவசமாகத்தான் எதிர்பார்க்கிறது.

இதில் நாம் ஆட்டோக்காரனை மட்டும் குறைகூறி அயோக்கிய நாமகரணம் சூட்டுவது எவ்வளவு தூரம் சரி. அது சரி என்பதல்ல, அதைக் குறை சொல்ல நமக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என சிந்தித்தால நல்லது. நாம் எல்லோருமெ ஒரு விதத்தில் ஆட்டோக்காரர்களைவிடவும் மோசம். அவனைப்போல், நிர்ணயித்த கூலிக்கு மேல் கேட்பதில்லை, இலவசமாக எடுத்துக் கொள்கிறோம். தனிச்சுற்றுக்கு மட்டுமில்லை தாராளப் பிரசாதமாக PDF ரூபத்தில் எடுத்துக் கொள்கிறோம். கூச்சமில்லை, குற்ற உணர்ச்சியும் இல்லை. 

வெளிநாட்டில் இருப்பவனுக்கு வீடும் வேலையும் ஒன்றே என ஆகியிருக்கும் அவலத்தைக் கைநிறைய கிடக்கும் காசு இட்டு நிரப்பிவிடக்கூடுமா?

உள்நாட்டில் இருப்பவனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இருக்கிற விலைவாசியில் இலக்கியம் கடைசீ பட்சத்திற்கே தள்ளப்பட்டாக வேண்டும். சிறுபத்திரிகை காலங்களில் குறைந்த வருவாய் கொண்ட நடுத்தர வர்க்க குமாஸ்தாக்களே கலை இலக்கிய நவீன நாடகம் சினிமா குழுமம் என சகலத்திற்கும் புரவலர்கள்.

அப்போது க்ரியாமேல் வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம். புத்தகம், தயாரிப்பிலும் உயர்வாக இருப்பது முக்கியம்தான் ஆனால் அதற்காக யானை விலை குதிரை விலை வைப்பது நியாயமா? கொஞ்சம் குறைந்த தரத்தில் குறைந்த விலையில் நிறைய பேர் வாங்க வகைசெய்யலாமே.

இன்று நிறைய க்ரியாக்கள் வந்துவிட்டன. தனி நபர்கள்கூட தரமாக புத்தகம் தயாரிக்கத் தொடங்கி விட்டனர். வாசகர் எண்ணிக்கை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இணையாக பெருகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் வருமானமும் கூடியிருக்கிறது. எல்லாப் பொருட்களின் விலையும். 

எல்லாப் புத்தகங்களும் விற்பதில்லை எனப் புலம்புவதில் நியாயமும் இல்லை. அது வாசகன் தேர்வு. வாசகர் எழுத்தாளர் என்கிற இடைவெளி அருகி வாசக-எழுத்தாளர்கள் பெருகிவிட்ட சூழல். இதுதான் பரிணாம வளர்ச்சி. எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. இப்படித்தான் என்றும் இருக்க வாய்ப்பு உண்டு. இணையத்தின் கட்டற்ற விஸ்தரிப்பின் காரணமாக வட்டம் பிரம்மாண்டமாகி இருக்கிறது. இணைய வாசக-எழுத்தாளர்கள் எண்ணிக்கையை விடவும் மிகப்பெரியது இணைய வாசகர் எண்ணிக்கை.

தனிச்சுற்றாகத் தயாரிக்கப்படும் PDF இலக்கிய புத்தகங்கள் தட்டினால் கிடைத்துவிடும் அளவிற்கு தாராளமாகப் புழங்கத் தொடங்கி விட்டன. ஒரு முறை ஒன்றை இணையத்தில் ஏற்றிவிட்டால் அதற்கு இறப்பில்லை என்றாகிவிட்டது. இது கண்டிப்பாக பதிப்பகங்களின் விற்பனையை பாதிக்கும்.  சந்தேகமே இல்லை. அந்த விதத்தில் அது தவறு மட்டுமல்ல சட்டப்படி குற்றமும் கூட. 

அதேசமயம், இறவாதன்மை கொண்ட இணையம் இலக்கியத்தையும் வாழவைக்கும் என்ற உண்மையையும் மறுக்க முடியாது இல்லையா?

ஒரு இண்டர்நெட் தொடர்பை மட்டும் காசு கொடுத்து வாங்கிவிட்டால் போதும், அப்புறம் அனைத்துமே இலவசத் தரவிரக்கம்தான். அடிப்படை கணினி இயக்கிமுதல் அனைத்து மென்பொருட்களும் திருட்டு இலவசம் மட்டுமே என்றாகிவிட்டது. நம்மில் யார்தான் இதற்கு விதிவிலக்கு.

பெருமாள் கோவிலில் பொங்கல் கொடுக்கிறார்களாமே...

எங்கே எங்கே ஓஸியில் கிடைக்குதா எனக்கு ரெண்டு தொண்ணை, எனக்கொண்ணு எங்கப்பனுக்கொண்ணு!