18 August 2012

எமூர்

அன்று மாலை கிண்டி ரயில் நிலையத்தில் உயரதிகாரியை சந்திக்கவேண்டி இருந்தது. தூரல் மழையாகுமுன் வண்டியை விரட்டிக்க்கொண்டு சென்றேன். முதற்பார்வைக்கே நிழலுருவங்களாய் வரிசை நீண்டிருப்பது தெரிந்தது. நடைமேடை சீட்டு வாங்க எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும்போல் தோன்றவே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். நடைமேடைக்கு இறங்காமல், பறந்துகொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலின்றி நடுவழியிலேயே சுவரோரம் நின்றுகொண்டேன். மண்ணின் மைந்தர்தம் வாய்த்திறம் வெள்ளை டைல்ஸ் சுவரை ஓவியங்களாய்  அலங்கரித்திருந்தது. புட்டத்தில் ஓவிய நகல் பதித்துவிடாதிருக்க சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள நேர்ந்ததில், பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் முழங்கைமுட்டிகள் தொப்பையைப் பதம்பார்த்துக்கொண்டிருந்தன. இனிபொறுப்பதில்லை தொப்பையைக் குறைக்க ஏதாவது செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் பேப்பரையாவது அந்த காலம்போல் தரையில் குந்தி உட்கார்ந்து படிக்க வேண்டும்.

விசிறித் தெரிப்பாய் இருந்த தூரல் மழையாகத் தொடங்குவதை, கீழே தெரிந்த நடைமேடை ஈரம் மினுக்கிக் காட்டிற்று. தாண்டிச் சென்று கொண்டிருந்த மக்களின் உடைகள் மெல்ல ஓதத்திலிருந்து ஈரமாகிக்கொண்டிருந்தன. திடுப்பென எதிரில் ஒருவர் தோன்றி எமூர்? என்றார்.

எனக்குப் புரியவில்லை. இரண்டு குட்டிகள் மற்றும் இளம் மனைவியுடனான மங்கோலியச் சாயல் குடும்பம்.

வாட்?

ஐ வாண்ட்டு கோ எமூர்

யு வாண்ட் டு கோ டு எக்மூர்?

தாண்டிப்போன ஈர இளம் தமிழன் நின்று சார் அவுரு ஆம்பூர் போவனும்னு  சொல்றார் போல இருக்குது என்று உரையெழுதிவிட்டு அகன்றான்.

சென்னை மெய்ன் ஸ்டேஷன். பிக் ஸ்டேஷன், என்றார் மங்கோலியர்.

ஓ! செண்ட்ரல் ஸ்டேஷன்? கெட் டவுன் அட் பார்க் ஸ்டேஷன். கிராஸ் தி ரோட். யு வில் சீ செண்ட்ரல் ஸ்டேஷன் என்றேன்.

நோ சார் எமூர்.

எக்மூர்? ஓகே சேம் ட்ரெய்ன். இந்தப்புறம்தான் வரும் என்கிறவிதமாய் இடதுபக்கம் கையைக் காட்டினேன். 

அதுவரை முன்னங்காலில் நின்றிந்த கணவனும் மனைவியும் குழந்தைகளை இழுத்துக்கொண்டு பாய்ந்தனர்.

டிக்கெட் கவுண்டர் அவுட்சைட் என்று உரக்கக் கூறினேன். அதற்குள் நான்காவது படிக்குச் சென்றிருந்த குடும்பத்தலைவன் திரும்பி, பிரதர் ஈஸ் பையிங் என்றபடி படிக்கட்டில் விறுவிறுத்தார். 

அவங்காளுங்க நெறையபேர் ரேஸ்கோர்ஸ் ரோடு கவுண்ட்டராண்ட நிக்கிறாங்க என்றார் அருகிலிருந்த பெரியவர். 

சொட்டச்சொட்ட ரயில் வந்து நிற்கவும் வரச்சொன்ன உயரதிகாரியின் முகம் தட்டுப்படுகிறதா என்று தேடுவதில் மும்முரமானேன்.

சோம்பித்திரிய அனுமதிக்கப்பட்ட ஓய்வுநாளான காரணத்தால், மறுநாள் காலை மெல்ல விடிந்தது. தொப்பையைக் குறைக்கும் உறுதியின் முதற்படியாய், தரையில் குந்தி உட்கார்ந்து ஆங்கில நாளிதழை எதிரே விரித்தேன். 1.86 லட்சம் கோடி மோசடி என்று கொட்டை எழுத்தில் கூவிற்று. ஏற்கெனவே 1.76 லட்சம் கோடிகள் அடுத்து என்ன 1.96 லட்சம் கோடிகளா என்று அசுவாரசியமாய் பார்வை தினசரியின் கீழ்புறம் நோக்கிச் சரிந்தது.

கூட்டம்கூட்டமாய் சென்னையிலிருந்து வெளியேற்றம் என்ற செய்தியில் எமூர் எமூர் என்று எக்மூருக்கு வழிகேட்ட குடும்பத்தின்  பதற்றமுகம் நிழலாடிற்று.

டைல்ஸ் தரையில், பத்திரிகைக்குப் பக்கத்தில் கசகசவென்று எறும்புகள் செல்லத்தொடங்குவது கண்ணோரம் தெரியவும், எங்கிருந்து வருகின்றன இவ்வளவு கறுப்பு எறும்புகள் என்று அனிச்சையாய்  வாய்விட்டுக்கூறியபடி பால்கனியைத் திரும்பிப்பார்த்தேன். 

ஐயையோ! சரியாகப் பாருங்கள் சிவப்பெறும்பு என்றபடி அழுக்குத் துணியைக் கொண்டுவந்து எறும்புக் கூட்டத்தை வழித்து அள்ளிக்கொண்டு வாஷ்பேசினுக்குப் போனாள் மனைவி. ஈரத்துணியால் தரையைத் துடைத்தபடி என்னைக் கடந்து சென்றவள், பால்கனிக் கதவுக்கான நிலையில் பூச்சிக்கொல்லிக் கட்டியால் கோடிழுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

சுலோகத்தை ஒலித்துக்கொண்டிருந்த இசைக்கருவி-மேசையின் அடியிலிருந்து ஈரத்தில் வழுக்கியபடி வந்து,படித்துக்கொண்டிருந்த பேப்பர்மேல் ஏறிற்று ஓர் எறும்பு. 

வீட்டு வாயிலில் அரிசிமாவில் கோலம்போட்டு, ஊருகிறவற்றுக்கும்  உணவிட்டது ஒருகாலம். விஷப்பொடியில் கோடிழுத்து,தாண்டினால் கொல்ல முனைவது இந்தக்காலம் என்றது.
    
எல்லா மனிதர்களுக்கும் உள்ள, இயல்பான ஜாக்கிரதை உணர்வுதான் என்று கூறியபடி கூட்டம்கூட்டமாய் வெளியேற்றம் பற்றிய செய்தியின் தொடர்ச்சி படங்களுடன் என்று போட்டிருந்த பக்கத்தைத் தேடிப் புரட்டினேன்.

எல்லாம் வயிற்றுப்பாடுதான். இருக்கிற இடத்தில் உணவு கிடைத்தால் அடுத்தவன் விட்டுக்குள் நுழையவேண்டிய அவசியமென்ன ஓய்?

அத்துமீறி நுழைவதில்கூடப் பெரிய பாதகமில்லை. கடிவேறு படவேண்டி இருக்கிறதே! என்றேன்.

யாரோ எங்கோ கடித்ததற்கு தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கும் நானாய்யா பிணை? என்றது எறும்பு.

கடித்துவிடுவீர்களோ என்கிற பயம்தான் வேறென்ன? என்றேன்.

நாளிதழின் அடியிலிருந்து மேலேறிவந்து, எக்மூர் ரயில் நிலையத்தில் கும்பலாய் காத்திருந்தவர்களுடன் கலந்தது எறும்பு. சற்று நேரத்தில் எம் ஊர் என்று எழுதப்பட்டிருந்த நீண்ட ரயில்வந்து அனைவரையும் துடைத்து எடுத்துக்கொண்டு சென்றது. 

உணவு தயார் என்றழைத்தாள் மனைவி. எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தது என் வயிறு .