30 December 2014

தெரிதலும் தெளிதலும்


<எப்படி ஒரு ஷக்கீலா படத்தில் திரைமுழுக்க அவரது ரூபம் பரந்து விரிந்திருக்குமோ அது போல் ஷோபாசக்தியின் மொழியிலும் அவரே ஆதியும் அந்தமுமாக இருப்பார். இந்த சுயமுன்னெடுப்பு அல்லது சுய-வாந்தியெடுத்தல் ஷோபாசக்தியின் ஒரு பலவீனம். எந்த பாத்திரத்தை, சம்பவத்தை சித்தரிக்கும் போது அவரது விமர்சனம், கருத்து, தீர்மானம் அதில் நீட்டிய வாளைப் போல் துருத்தி நிற்கும். அவரது பிரமாதமான அங்கதத்தை சற்று மாற்று குறைப்பது இது தான். ஆனால் சயந்தனிடம் இந்த துருத்தல் இல்லை> 
படித்துவிட்டீர்களா! கட்டுரைக்குள் போகவே இல்லை. வேண்டவும் வேண்டாம். நம்மைப் படிக்கத் தூண்டுவதற்காக எழுத்தாளர் கொடுத்திருக்கும் நான்கு வரிகளை மட்டும் பரிசீலிப்போம்.
<எப்படி ஒரு ஷக்கீலா படத்தில்> 
இங்கு தேவையே இல்லாமல் 'ஒரு' ஏன்? ஒன்பது படத்தைப் பற்றியா பேசுகிறார் உயர்தர உயிர்மை ஆஸ்தான எழுத்தாள ஆளுமை. ஷக்கீலா படத்தில், எப்படி அவரது ரூபம்.... என்றால் போதாதாதா? எழுத்தின் மீது ஆளுமை வரும் முன்பாகவே இலக்கிய ஆளுமையாகிவிடுவதன் இன்றைய பிரச்சனை. 
பேசும் போது, வாக்கியத்துக்கு வாக்கியம் வார்த்தைக்கு வார்த்தை என்ன என்ன என்று சொல்லிக் கொல்லுவார்கள் சிலர். ஆனால் அவர்களில் ஒருவர்கூட நாலுபேருக்கு முன்பாக, மேடையை விடுங்கள் திண்ணையில்கூட ஏறிப் பேசத் தயங்குவார்கள். தம்மைப் பேச்சாளர் என கனவில்கூட சொல்லிக்கொள்ள அஞ்சுவார்கள். இணைய இம்சைகளுக்கு இந்தச் சொல் பொழிவாளர்கள் எவ்வளவோ மேல்.
<திரைமுழுக்க அவரது ரூபம் பரந்து விரிந்திருக்குமோ அது போல்>
'ஒரு' ஷக்கீலா படம் என்று இல்லை. மலையாள பிட்டு படங்களில் துண்டு கட்டி மொத்தமாக நடித்தது போகவும் தமிழ் படங்களில் துண்டு பாத்திரங்களில் நடிக்கும்போதும்கூட தனியாக பிரேம் வைத்தால் ஷகீலாவின் ரூபம் திரைமுழுக்க பரந்து விரிந்துதான் இருக்கிறது. 
கட்டுரையாளர் இங்கே சொல்ல வருவதற்கான பொறுத்தமான உவமையா இது என்பதை அடுத்த வரி சொல்லிவிடும். 
<ஷோபாசக்தியின் மொழியிலும் அவரே ஆதியும் அந்தமுமாக இருப்பார்.> 
ஷோபாவின் மொழியில் ஆதியும் அந்தமுமாய் அவர் இல்லாமல் உங்கள் ஆயாவா வந்து இருக்க முடியும். திரும்பவும் எழுத்தாளப் பெருந்தகை நொட்டை சொல்ல வருவது மொழி அன்று - ஷோபாவின் படைப்பு பற்றி. ஷோபாவின் புனைவுகளில் வரும் எல்லா கதா பாத்திரங்களிலும் ஜெயகாந்தனைப்போல ஜெயமோகனைப்போல ஷோபா சக்தியே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார் என்பதே கூற நினைத்து. ஆனால் எழுத்து ஆளுமையை மீறி பீறிட்டு வெளியில் வந்தது மொழி என்கிற பயன்பாடு. மொழிக்கும் படைப்புக்குமே வேறுபாடு தெரியாமையே விமர்சகனாவதற்கான அடிப்படைத் தகுதி.
<இந்த சுயமுன்னெடுப்பு அல்லது சுய-வாந்தியெடுத்தல் ஷோபாசக்தியின் ஒரு பலவீனம்.>
சுய முன்னெடுப்பு பற்றிக்கூற ஆசிரியர் அளவுக்கு நமக்கு அருகதையில்லை ஷோபா ஜிப் போடாமல் திரிவது அவர் பார்வைக்கு மட்டுமே பிரத்தியேகமாய் தெரிகிறது போலும். 
சுய-வாந்தியெடுத்தல் - அடுத்தவர்களுக்காக வாந்தியெடுப்பதில் அபிலாஷை விஞ்ச ஆள் கிடையாது என்று சொந்த அனுபவத்தின் அடிப்படையிலான சான்றிதழை மனுஷ்ய புத்திரனே மனமுவந்து வழங்கிவிடுவார் எனவே அதையும் விட்டுவிடுவோம். 
அது என்ன ஒரு பலவீனம்? 
ஒன்பது பலவீனத்தைச் சொல்லியிருப்பதற்கான தடயம்கூட இல்லையே. அப்புறம் ஏன் திரும்பவும் அந்த ’ஒரு’. தமிழ் எழுத்தாளனைப் பீடித்திருக்கும் பல நோய்களில் தீராதது இது.
<எந்த பாத்திரத்தை, சம்பவத்தை சித்தரிக்கும் போது> 
ஷக்கீலாவின் ரூபத்தை ஷோபா சக்தியின் மொழிக்கு உவமையாய்ச் சொன்னதை ஏன் குறை கூறினேன் என்று இப்போது புரிகிறதா? 
அபிலாஷ்! 'போது' அங்கே போதாது, ஷோபா சக்தியின் 'ம்'மை அங்கே போடவும். அப்போதுதான் நீவிர் நவில வருவது யாதெனத் துலக்கமடையும். முழுங்கிப் பேச திரையில் கமல் என்பது போல எழுத்தில் நான் எனப் பெயர் வாங்க உத்தேசமோ என்னவோ.
<அவரது விமர்சனம், கருத்து, தீர்மானம் அதில் நீட்டிய வாளைப் போல் துருத்தி நிற்கும்.>
நீட்டிய வாள் என்பதைப் படித்த நொடியிலேயே, கூர்மையான நீண்ட வாள் அல்லவா வாசகனின் மனத்திரையில் தோன்றும். வாள் என்பது தமிழனுக்கு வீரத்தின் பிம்பமாகக் கலாச்சாரத்தில் கலந்துறைந்து பளீரிட்டுக்கொண்டு இருக்கக்கூடிய சாதகமான விஷயம் அல்லவா? இதைத் துருத்தி நிற்பது என்கிற பாதகமான சமாச்சாரத்துக்குப் பயன்படுத்துவது தங்களது மொழித் தேர்ச்சியை அல்லவா கூறுபோட்டு இளித்துக் காட்டுகிறது.
<அவரது பிரமாதமான அங்கதத்தை சற்று மாற்று குறைப்பது இது தான்.>
எதுதான்? விமர்சனம், கருத்து, தீர்மானம் என மளிகைப் பட்டியலாய் பலவற்றை அடுக்கிவிட்டு, மளிகைக்காரர் பெண்டாட்டியை மட்டுமே கூட்டிக்கொண்டுபோகும் உத்தேசம் இருப்பது போல ஒருமையில் இதுதான் என்கிறீர்கள்.
இனியேனும் மாற்றிக் குரைக்கப் பழகவும்.
 <ஆனால் சயந்தனிடம் இந்த துருத்தல் இல்லை> 
அது அவரை படித்தபின் அவரிடம் இருப்பது துருத்தலா உறுத்தலா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தங்களுக்கேன் பாவம் தக்கிமுக்கித் தமிழெழுதும் அனாவசிய சிரமம்.
எழுதியிருப்பதோ நான்கு வரிகள். அவை காட்டிக்கொண்டு நிற்பதோ நானாவித லட்சணம். இதில் நாக்கு சுழல்கிறது நாலா பக்கமும் நான்கடிக்கு. 
அவரவர் உயரம் தெரிவதும் தெளிவதும் அவசியமில்லை அத்தியாவசியம்.