27 December 2014

சாதனை

@writerpara: @maamallan /துண்ட கட்டிக்கிட்டு குளிக்கப் போறமாதிரி / சாகும்வரை மறக்கமாட்டேன். குட்நைட்.
***
இதைக் கூறியது நானில்லை. சுந்தர ராமசாமி.
84-85ஆக இருக்கலாம். மெட்ராஸ் வந்த ராமசாமி, வழக்கம்போல அபிராமபுரத்தில் க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அவரது இலக்கிய நண்பர்கள் மொய்க்காமல் எனக்கே எனக்காய் அவர் கிடைக்கக்கூடிய நேரம் மதியம்தான். எனவே, தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரிக்கு அருகிலிருந்த என் அலுவலகத்திலிருந்து, மதிய வாக்கில் காவி வேட்டி இலக்கிய சங்கரர் எதிரில் ஆஜராகிவிட்டேன். 
என்ன மாமல்லன் இந்த நேரத்துல... கதவைத் திறந்தவர் சிரித்தபடி கேட்டார். ஆபீஸ்ல ஒண்ணும் சொல்லமாட்டாங்களா? 
நான் டெஸ்பேச் கிளார்க்குதானே. வந்த தபாலையெல்லாம் எழுதி அவங்கவங்களுக்கு உள்ளதை விநியோகிச்சாச்சி. ரெஜிஸ்டர் போஸ்ட் இருந்தா 3.30க்கு பண்ணிடணும். 3.30ஐத் தாண்டிட்டா லோக்கல்ல வாங்கமாட்டான். பாண்டிபஜார் போகணுமேனு சிப்பாய் சடைச்சுக்குவான். அதனால அதுக்குள்ள எல்லா தபாலையும் கவர்ல போட்டு ஸ்டாம்ப் ஒட்டிட்டா இன்னைக்கு நாளே முடிஞ்சிறும். தபால் போயிடுச்சினா போதும். நாளைக்குக் காத்தால தபால் விநியோகம் ஆகாம தேங்கி நிண்ணு, எதாவது ரிப்போர்ட் கேட்டு நுங்கம்பாக்கம் ஹெட் ஆபீஸ்லேந்து சாவு மணி அடிச்சாதான், நான் செத்தேனா இருக்கேனாங்கற கவலையே ஆபீசருக்கு வரும். அதான் 2 டூ 3க்குள்ள உங்களைப் பார்த்துடலாமேன்னு ஓடிவந்தேன்.
புன்னகைத்தபடி தோளைத் தொட்டார். 
அந்த அன்புக்காகவும் அவரிடம் காதல் மீதூர்ந்து திளைத்த காலங்கள் அவை.
கடவுள் எப்படி இருப்பார்னு இப்ப யாராவது எங்கிட்டக் கேட்டா, ஈசியா சொல்லிடுவேன் லியோ டால்ஸ்டாய் மாதிரி இருப்பார்னு 
புன்னகை விரித்து, என்ன ஆயிற்று என்பதுபோல் புருவங்களை இருமுறை சடுதியாய் உயர்த்தினார். 
இல்லே. எப்பையோ ஏதோ லைப்ரரில நின்னுகிட்டே படிச்ச டால்ஸ்டாய் புஸ்தகம். ரெண்டு மூணு பக்கம் தாண்டறதுக்குள்ளையே பரவசமாகி பேண்ட்டுக்குள்ள வெச்சி திருடிகிட்டு வந்துட்டேன். நேத்து அது தற்செயலா கண்ல பட்டுது. அதுல 'ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்'ங்கற கதையைப் படிச்சி முடிச்சதும் நெஞ்சு முட்டி விம்மிட்டேன். ஸ்ட்ரெய்ட் நீதி போதனைக் கதை. அது எப்படி இவ்ளோ பெரிய இம்ப்பேக்டை குடுக்குது. அப்பதான் தோனிச்சி - கடவுள் டால்ஸ்டாய் மாதிரி இருப்பார்னு. அதை உங்ககிட்ட சொல்லிடணும்னுதான் ஓடிவந்தேன்.
ப்ச் என்றபடி உதட்டைப் பிதுக்கி ஆமோதித்தவராய், எழுத்து இலக்கியம் பத்தியெல்லாம் நிறைய தியரீஸ் வெச்சிருந்தவர் டால்ஸ்டாய். கடைசீ காலத்துல எல்லாத்தையும் தூக்கி தூர போட்டுட்டார். இதுவரைக்கும் நான் எழுதினதெல்லாம் ஒன்னுமில்லே. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடுங்கோ. இனிமேல் எழுதப்போறதுதான் என்னோடது எனக்காக எழுதப்போறதுனு சொல்லி பழுத்த பழமா எழுதின கதைகள்தான் நீங்க சொன்ன கதையெல்லாம். குளிக்கப் போறதுக்கு துண்டை கட்டிக்கிறோமே அது மாதிரி, எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு ஃப்ரீயா எழுதின கதைகள் இதெல்லாம் என்றார் சுந்தர ராமசாமி. 
இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன், சுகுமாரன் மொழிபெயர்த்த பஷீரின் தேன் மாம்பழம் சுட்டியை ட்விட்டரில் பகிர்ந்ததுக்கு நன்றி கூறி வியந்து மருகிப் புலம்பிக்கொண்டிருந்த பா. ராகவனிடம். அன்புமிகுந்து அவர் போட்ட ட்விட்டுதான் தொடக்கத்தில் நீங்கள் படித்தது.
சாதிக்கவேண்டும் என்கிற வெறியையும் துறந்த பிறகே சாதனை சாத்தியம் 
கனிவைத் திரட்டிக் கடவுள் படைத்தது பஷீராயிற்று