04 February 2015

நரையும் திரையும்

பெயர் குறிப்பிடமுடியாத தெருவொன்றில், நெரிசலுக்கிடையில் வேகமாய் போகையில், எதிரில் வந்தவர் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு வந்த பெரிய பையில் மோதி, பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். தடுப்பான் உருளை முதலில் தரையில் மோத வலது கால் முட்டி அடுத்து மோதிற்று. அணிச்சையாய் இருகைகளும் தரையில் வேகமாய் ஊன்றியதால் அடிபட்டாலும் முட்டி தப்பியது. பின்னால் வந்து முன்னால் போன பெருசு ஸ்கூட்டரை நிறுத்தித் திட்டத் தொடங்கிற்று. அவர் பெண்டாட்டியோ ஸ்கூட்டரைவிட்டு இறங்கி தெருவில் நின்று கழுவி ஊற்றவே தொடங்கிவிட்டது. 

ஏம்மா விழுந்தது நான் தானே நீ ஏன் கத்தறே

எங்கமேல மோதி நாங்க விழுந்திருந்தா...

இதற்குள் பின்னாலிருந்து அப்போதுதான் குடும்பத்தோடு வந்த பைக் காரன், 

ஏய் என்னா பேசுறே 

ஏன் என்னா பேசணும் 

என்னா திமிரா பேசறே 

உன்கிட்ட நான் ஏன்யா பேசணும். 

எவ்ளோ வேகமா வந்தே.

இந்த ரோட்ல வேகமா வேற வர முடியுமா 

ஏன்யா லெஃப்ட்டுல ஏறி வந்தே. 

யோவ் ஒன்வே ரோட்ல ஏதுயா லெஃப்ட்டு ரைட்டு. அந்த ஆள் அவ்ளாம் பெரிய பையை ரோட்டுமேல தூக்கிகிட்டு வந்தாரு. வண்டி மோதிடுச்சி. அது என் தப்பா.

பின்னால், மகனுக்கும் பின்னால் அமர்ந்திருந்த அவன் பெண்டாட்டி. நீ பேசாம வண்டியை எடுத்துகிட்டுப் போ என அவன் கன்னத்தை முகரையை இடித்தாள். பைக் காரனோ, சம்மந்தமேயில்லாமல் ஏதோ சுங்கப் பயல்கள் லஞ்சம் வாங்கி துண்டுதுண்டாய் வெட்டிக் காட்டப்பட்ட வீடியோவில் பிடிபட்டதைப் பார்த்துவிட்டு, ட்விட்டரில் என்னை சதாய்த்த சரோஜாதேவிபோல, அவனுக்கு எந்த பாதகமும் இல்லாவிட்டாலும் சமூகக் களப்பணியாளன்போல் என்னுடன் மல்லுக்கு நின்றான். பைக் காரன் ரொம்பத்தான் சிலுப்பினான் டிவியில் ஆக்குரோஷமாய் விவாதிக்கும் அறச்சீற்ற கவிஞர் போல. 

எடுத்து நிறுத்தப்பட்டபின், என்ஜின் கிளம்பியும் வண்டி நகர மறுத்தது. கியர் விழவில்லையோ என்று பார்த்தால் அதிலெல்லாம் பிரச்சனையில்லை. மானம் போக மரத்துப் போய் வியர்த்துக்கொண்டிருந்தேன். விழுந்ததன் வலியைப் பொருட்படுத்தாததால் அது பெரிதாய் தெரியவில்லை. இதை எழுதும்போது மடக்கினால் வலிக்கிறது என்பதென்னவோ உண்மைதான். 

பேண்ட்டிலிருந்து கைலிக்கு மாறும்போது, கன்னியிருப்பது கண்ணில் பட்டுவிட்டிருக்க வேண்டும். விபத்தா, அடிபட்டதா, கீழே விழுந்தாயா, உள்ளே வரும்போது இளித்த இளிப்பிலேயே ஏதோ திரிமிசம் நடந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். இன்று காலையில் கிளம்பும் முன் ’ஜெயஸ்ரீ கருடத்வஜ’ சொல்லிவிட்டுக் கிளம்பவில்லையா. காலையில் கிளம்பியவன் எப்போது திரும்பப்போகிறாய் என்றே தெரியாமல் இங்கொருத்தி தனியாய் மொட்டுமொட்டென்று ஒன்றுமே தெரியாமல் கிடக்கிறேன் என்று தொடங்கிய வெண்முரசு முதல் பாகத்தை ஒருவழியாய் சமாளித்தாயிற்று இளித்து. 

ஆனால் வண்டி கிளம்பாத அப்போது வேறு பல பிரச்சனைகளும் சேர்ந்து அழுத்திக்கொண்டிருந்தன. முதலில் அந்த இடத்தை விட்டு விரைந்து வெளியேறியாக வேண்டும். அந்த இடத்துக்குச் சற்று முன்பாகதான் சிலகாலம் முன்பு பல மணி நேரம் இருந்த விசாரித்ததை அவ்வளவு சீக்கிரம் எவனும் மறந்திருக்க மாட்டான். எவன் கண்ணிலும் பட்டுவிடுமுன் இடத்தைவிட்டு அகன்றாக வேண்டும். வந்த வேலை வெற்றிகரமாய் முடிந்தது. ஆனால் சுவடு பதியாது ஏரியாவை விட்டு முதலில் வெளியேறினால்தான் ஆசுவாசம். ஆனால் அப்போதைக்கு வண்டி இம்மிகூட நகரும் என்று தோன்றவில்லை. 

செயின் கழன்ருச்சி சார் என்று கீழேயிருந்து குரல் கேட்டது. இழந்த சகலத்தையும் திரும்பப் பெற்றதைப் போல் உணர்ந்தேன். வண்டியின் பின்பக்கமாய் சாலையில் குந்தியிருந்த ஆள்,  துணி இருக்கா என்றார். இல்லை என்றேன்.

தேங்க்ஸ் இதை நான் பாத்துக்கறேன் என்று கூறிவிட்டு டிராபிக்கை சமாளித்து எதிர்ப்புறம் ஓடி இரண்டு மூன்று பேப்பர் குப்பைகளைப் பொறுக்கிக்கொண்டு வண்டியருகில் வந்தேன். இரண்டாவது பேப்பர் செலவாவதற்குள் இருந்த பேப்பர்களை, மசி ஆன பகுதிகளை மடக்கி மடக்கி செயினை மாட்டிவிட்டேன். முப்பது வருடங்களுக்கு முன் சைக்கிளில் செயினை மாட்டிய அனுபவ லாகவம் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிடக்கூடியதா என்ன. எழுத்தைப் போன்றதில்லையா அது. எழுதுவதை விட்டுவிட்டால் எழுத்து மறந்து விடுமா என்ன. நெஞ்சின் நீறுபூத்த நெருப்பல்லவா அது. உண்மையான எழுத்தாளன் எழுதுவதை நிறுத்தினாலும் உள்ளூர எழுதிக்கொண்டிருப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்பதல்லவா உண்மை. 

வீடியோவைப் பார்த்துவிட்டு வெவ்வெவ்வே என்ற ஜென்மம், கட்டங்கடைசி வார்த்தைவரை பார்த்திருந்தால், நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்த அதற்கு என்னிடம் பேசக்கூட தனக்கு வாய் இல்லை என்பது புரிந்திருக்கும். ஆனால் எல்லோருமே பைக் காரன் போல எதையுமே முழுதாய் பார்க்கத் தயாரில்லை. என்னை சரோஜாதேவி என்றாயா நீ எழுத்தாளனில்லை நீ வெவெவ்வே அவ்வளவுதான் அவரவர் அறம். நெஞ்சறிந்து வண்ணநிலவனை ஜெயமோகன் தூஷிக்கும்போது இதனிடம் எதைதான் எதிர்பார்க்க முடியாது.

நான் யார் 
என்ன காரணத்துக்காக அந்த நெரிசலிலும் வேகமாய் போக நேர்ந்தது 
அந்த விபத்துக்குச் சற்றுமுன் அந்த ஏரியாவில் எங்கு போனேன் 
என்ன பார்த்தேன் 
என்னென்ன செய்தேன் 
இனி என்று என்ன நடக்கப் போகிறது என்பதைக் கூறியிருந்தால் முகரைக் கட்டையில் மனைவி கையால் இடிபட்டும் சம்மந்தமே இல்லாது சிலுப்பிய பைக் பயல் இன்றிரவு தூங்குவதுகூட சந்தேகம். 

ஆனால் அதையெல்லாம் எழுத முடியாது. நீங்கள் கூர்ந்து படிப்பவராய் இருந்தால் - ஜெயமோகன் வாசகர்கள் தங்களைப் பற்றி - தேர்ந்த வாசகர்கள் தாமே தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள் என அபரிமித அபிப்ராயம் வைத்துக் கொண்டிருப்பதைப் போலல்லாது உன்மையான் கூர்த்த வாசகராய் இருந்தால், இது இவன் எழுத்துபோலவே இல்லையே. விவரணைகளில் காலம் இல்லை. நடந்த இடம் நேரம் பற்றிய விவரங்கள் துப்புரவாய் இல்லை. முன்னும் பின்னுமாய் சம்பவங்கள் கோர்க்கபடவில்லையே ஏன் என்று நெற்றி சுருக்கியிருப்பீர்கள். 

இவை மட்டுமன்று. எதையுமே வெளிப்படுத்தாது இருப்பதுதான் வேலையே. 'தன்'னை அழித்து அநாமதேயமாதல் அநாமதேயங்களுக்கேகூட அவ்வளவு சுலபமான காரியமில்லை. இல்லாவிட்டால், முன்னால் போன ஸ்கூட்டர் பெருசுகளும் பின்னால் வந்த பைக் காரனும் மூடிக்கொண்டல்லவா போயிருப்பார்கள். அனாவசியமாய் அவர்கள் 'தன்'களையல்லவா நடுத்தெருவில் வெளிப்படுத்தித் திருப்தியடைந்தார்கள். இயல்பிலேயே நான், கழுவி ஊற்றப்படும்வரை காத்திருக்கும் சாத்வீக விலங்கினத்தைச் சேர்ந்தவனில்லை. ஆனால் அங்கு துதிருஷ்டவசமாய் இரண்டு அடி விழுந்திருந்தாலும் வாங்கிக்கொண்டுதான் இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை. அடையாள அட்டையைத் தூக்கிக் காட்டிக் கொண்டிருக்க முடியுமா என்ன.

வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது எனும் கட்டுப்பாடு தளர்ந்தால் அப்போதைய ஒருவனுடைய உழைப்பு மட்டுமல்ல, யார் என்றே தெரியாத எத்தனையோ பேர்களுடைய எத்தனையோ நாள் உழைப்பு வீணாகிவிடும். மட்டுமல்ல, இரை உசாராகிவிட்டால் இறைவனே நினைத்தாலும் அடுத்த முறை என்பது அவ்வளவு சுலபமன்று. திரும்ப அனைத்தையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.

எதையெதை எழுதவேண்டும் என்பதைத் தெரிந்தவன் அல்ல சுவாரசியத்துக்காக கைத்தட்டலுக்காக அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக என்னத்தை வேண்டுமானாலும் எழுதுவேன் என்பவனும் அல்ல எதையெதை எழுதக்கூடாது என்று கறாராகத் தெரிந்தவன்தான் பொறுப்புள்ள எழுத்தாளன். சமூகப் பொறுப்பு என்பது சாதாரண விஷயமில்லை. உரிமை உண்டுதான் . யாரில்லை என்றார். கடமைக்கல்லவா முதலிடம்.

செயின் கழன்ற சேதியைக் கண்டு சொன்ன ஆள் அருகிலிருந்த நீலவண்ண ஆட்டோவில் எனக்கு முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தார். 

வலதுகை சுட்டு விரலில் கொஞ்சம்போல மசி ஈஷியிருந்தது, மிச்சமிருந்த குப்பைப் பேப்பரில் துடைத்துவிட்டு, நன்றிகூறும் விதமாய், அவர் முதுகில் கை வைத்து, ஒன்னியுமே இல்லாத சின்ன விசயத்துக்கு எல்லாரும் என்னமா குதிக்கிறாய்ங்க என்றேன்.

ஊர் மின்னமேரி இல்ல சார். அவனவன் வெச்சதுதான் சட்டம்னு ஆயிருச்சி. ஒன்னியும் சொல்றதுக்கில்ல என்றார்.

என்னை என் பெரிய மனுசத் தொப்பயும் முழுக்க நரைத்த மீசையும்தான் தர்மடியிலிருந்து இன்று காப்பாற்றியிருக்கிறது என்று தோன்றியது. பாவம் அந்த ஆட்டோ டிரைவருக்கு இன்னும் பெருமாள்முருகன் அளவுக்குக் கூட நரைத்திருக்கவில்லை.