01 March 2015

ஆளுமை

பொதிகை சேனலுக்காக காந்தி சீரியல் எடுத்தால், அதில் கதாநாயகப் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு என்பது போன்ற தோற்றத்தில் ஜெயா டிவியில் ஒருவர் நடந்தது என்ன என்கிற நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தார். பரிச்சயப்பட்ட குரலாய் இருந்தது.

சற்று உற்றுப் பார்த்தேன். புதிர் விடுபட்டு, குறும்புப் புன்னகையில் என் முகம் மலர்ந்ததை உனர முடிந்தது. பெரிய பொறுப்பில் இருக்கிறார் போலும். மூளையைக் கசக்கி அம்மாவுக்காக அரண் கட்டும் பொறுப்பு இட்டுக்கட்டி எழுதுவதைவிட பெரிதல்லவா.

அதைக் காசு கொடுத்துப் பார்க்கும் லட்சக்கணக்கான இளிச்சவாய் அநாமதேயங்களில் அடியேனும் ஒருவன்..

1991-92ஆக இருக்கலாம். மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு பிலியர்ட்ஸ் அசோசியேஷனுக்கு வக்கீல் நண்பனுடன் அடிக்கடி சென்று கொண்டிருந்த காலகட்டம். கோலி விளையாடும் பருவத்திலேயே குறி பார்த்து அடிக்கத் தெரியாத காரணத்தால் என்னைவிட நாலு வகுப்பு சிறியவனுக்கு உதவியாளனாய் இருக்குமளவுக்கு பக்குவமடைந்திருந்தவன். ஆக பிலியர்ட்ஸ் டேபிளைத் தொட்டுப் பார்க்கும் விபரீத ஆசைகூட இருந்திருக்கவில்லை. 89ல் எம்80 வாங்கியதும் குடிப்பதையும் விட்டவன் என்பதால் சைட்டிஷ் கொறிப்பதோடு சரி.

தூரத்திலிருந்த டேபிளில் கிளாசும் கையுமாய் இருந்த ஒருவர் மங்கிய வெளிச்சத்தில் என்னை நோக்கிக் கையசைப்பது தெரிந்தது. தெரிந்த முகமாகவும் இருந்தது. ஆனால் சட்டென அடையாளம் தெரியாததால் லேசான தடுமாற்றத்துடன் யாரையோ என்பது போல் அமைதியாய் இருந்தேன்.  

வாருங்கள் அறிமுகப் படுத்துகிறேன் என வக்கீல் நண்பன் அவரிடம் அழைத்துச் சென்றான்.

எப்படி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கைகுலுக்கி விசாரித்துவிட்டு, இவர் மாமல்லன் என்று அறிமுகப்படுத்தினார். பிரபலம் என்பதால் தெரிந்திருக்கும் அல்லது தெரிந்திருக்க வேண்டும் இல்லை, பிரபலத்தின் முன்பு பிரபலத்தின் பெயரைக் கூறுவது தொடர்புக்கு ஹானி என்று எண்ணினார் போலும் என் நண்பர். அவர் பெயரைக் கூறாவிட்டாலும் பேசத்தொடங்கியதும் குரலிலேயே தெளிவாகிவிட்டது சுதாங்கன் என்று. 

இவர்கிட்டலாம் பேசற அளவுக்கு நமக்குல்லாம் தகுதி இருக்கான்னு நான் ஒரு காலத்துல உங்க கிட்ட பேசவே பயந்துகிட்டு இருந்திருக்கேன் தெரியுமா. எப்படி நீங்க ஒன்னுமே ஆகாமப் போயிட்டீங்க? 

பாவம் அவர் இதை என்மீதான நிஜமான பச்சாதபத்துடன்தான் சொல்லியிருப்பாராயிருக்கும். ஆனால் நானோ எழுத முடியாமல் உள்ளூர புழுங்கிக் கொண்டிருந்த காலம் அது. வெறுமனே வறட்டுப் புன்னகை ஒன்றை உதிர்த்து வைத்தேன். 

இதை அவர் கூறியது 1992-93ல். பேசத் தயங்கியதாய் அவர் குறிப்பிட்ட காலகட்டம் 80களாய் இருக்க வேண்டும்.

இப்போது 2015. இடைப்பட்ட காலத்தில் அவர் என்னென்னவெல்லாமோ ஆகி ஜெயா டிவியில் அம்மாவுக்காக ஆஜராகி இருக்கிறார். 

நான் எதுவுமே ஆகிவிடாமல் அப்படியே இன்னமும் இருந்துகொண்டு இருக்கிறேன் என்பதைவிட வேறு எதும் எனக்குப் பெரியாதாய் படவில்லை. 

வாழ்க்கை இழுத்த இழுப்பில் போனாலும் சுயத்தை இழக்காமல் போய்க்கொண்டிருப்பதை துரதிருஷ்டவசமாய், ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்வதில்லை இந்த உலகம்.