09 November 2017

விதி வகைகள்

கவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது. 


நம்பியின் மகனது அறையில் தங்கியிருக்கும் அவர் நண்பருக்கு போன் அடித்தேன் போகவில்லை. அவரது இடம் டிஸ்கவரி புக் பேலஸ் அருகில் இருக்கவே, சும்மா உள்ளே எட்டிப் பார்த்தேன். வேடியப்பனின் தம்பி என்னைப் பார்த்ததும் அண்ணனுக்கு போன் பொட்டுவிட்டார். 

எதுக்குங்க. நான் சும்மாதான் வந்தேன் என்றேன். 

முக்கியமானவங்க யார் வந்தாலும் அண்ணன் சொல்லச்சொல்லி சொல்லீருக்காங்க. 

போனில் வந்த அவரோ எதிர்ப்புறம் தாம் புத்தக வேலையாய் இன்னொரு அலுவலகத்தில் இருப்பதாகத் தெரிவித்து வாருங்களேன் என்றார். 

அவரிடம் பேச்சுவாக்கில், புதிதாக எழுதிய கதைகளை தவிப்பு என்கிற பெயரில் POD புத்தகமாகக் கொண்டுவருவதாக இருப்பதாகக் கூறி ஒன்பது கதைகள் இருந்தும் 60-70 பக்கம் கூட வராது போல இருக்கிறதே, கிரவுன் சைஸை ஏன் இப்படி ஒழித்தே கட்டிவிட்டது இந்தப் பதிப்பக உலகம் என்றேன். 

இன்னமும் கிரவுன் சைஸில் புத்தகம் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். க்ரியா இன்னமும் கிரவுனில் புத்தகங்களைப் போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாங்களே போட்டிருக்கிறோமே. எல்லாம் டெம்மியா ஓடிக்கிட்டு இருக்கும்போது நடுல கிரவுன் விட்டா கொஞ்சம் வேஸ்டேஜ் வரும். அதெல்லாம் பெரிய விஷயமில்லே. உங்கள் புத்தகத்தை நானே போடுகிறேன் தாருங்களேன் என்றார். 

என் எல்லாக் கதைகளும் இணையத்தில் இருப்பதால் கொஞ்சநாள் முன்பு தயங்கினீர்களே என்றேன். 

சார் அது 300+ பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். இது 70 பக்கங்களில் சிறியதுதானே. மேலும் அந்தப் புத்தகம் மொத்தமும் இணையத்தில் இருப்பதாய்க் கூறினீர்களே என்றார். 

புதிதாக எழுதிய இவை மட்டுமென்ன, என் எல்லா எழுத்துக்களும் இனையத்தில் இலவசமாகத்தான் கிடக்கின்றன. என் புத்தகம் டெம்மி சைஸில் 150 பக்கங்கள்  வருகிற அளவுக்கு நான் எழுத இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ தெரியவில்லை. அதனால்தான் நானே போடுவது எனத் தீர்மானித்து இருக்கிறேன் என்றேன். 

இணையத்தில் இருந்தாலும் பரவாயில்லை. 70 பக்கங்கள் தானே ஒன்றுமே பிரச்சனையில்லை. பக்கங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இதற்காக நீங்கள் எழுதவேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஒன்பது கதைகள் ஒரு தொகுப்புக்கு தாராளமாகப் போதுமானவை. 

புத்தகம் சிறியதாகத் தெரியும் என்பதால் எவர் பார்வையிலுமே படாமல் போய்விடும் என்கிறார்களே. 

அதனால் என்ன கிரவுன் சைஸிலேயேக்கூடப் போட்டுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, கீழே போய் டீ சாப்பிடலாம் என்றார். 

டீயா நான் பேலியோவில் இருக்கிறேனே என்றேன். அவர் மதிய உணவுக்காகக் கிளம்பினார். நான் மறுபடி அண்ணாச்சி மகனின் நண்பருக்கு போன் அடித்தேன். இந்த முறை எடுத்தவர் வந்து அழைத்துப் போனார். 

அட்ரஸ் சொன்னா நானே வந்துருவேனே 

நீங்க பைக்ல வருவீங்கனு தெரியாதே சார் 

எழுத்தாளன் என்றால் சைக்கிள்கூட ஒட்டத் துப்பில்லாதவனாய் இருக்கவேண்டும் என்பது இலக்கனம் போலும். 

நம்பியின் இளைய மகனின் அறையில் இருக்கிற கவிதைப் புத்தகங்கள் இவ்வளவுதான் என நம்பியை அழைத்துத் தெரிவித்தேன். 

உங்கள் வேலையாக வந்து என் புத்தகம் டிஸ்கவரி போடுவதாக ஆகிவிட்டது பாருங்கள் என்றேன். 

ரொம்ப நல்ல விசயம்ப்பா. நல்ல பையன். உழைச்சி நல்லா வந்துட்டான். காலச்சுவடு அளவுக்கு வரதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்னாலும். இவனும் எல்லா கண்காட்சிலையும் ஸ்டால் போடறான். ராயல்டிலாம் ரொம்ப நியாயமா குடுத்துடறான் என்று அடுக்கிக்கொண்டே போனார். 

நம்பி என் 70-80 பக்க புக்கை 4000 ரூபாய்ல 100 காப்பி நானே போட்ருவேன். அவர்கூட பெரிய செலவில்லே ஆப்செட்லையே, ஆரம்பத்துல 300 காப்பி போடறேன்னு சொல்லி இருக்காரு. 

நல்லதாப் போச்சு. புக்கு போட்டுறலாம்பா சேல்ஸு நெட் ஒர்க் இல்லாம நாம எதுவுமே பண்ண முடியாதுப்பா. அது பெரிய மண்டையிடி. அவன் நிறைய டைட்டில் வாங்கி வெச்சிருக்கான்பா கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும் அவன் கிட்ட சண்டைகிண்டை போட்டுக்காதே. 

புக் ஃபேருக்குனு இல்லே சொன்னாரு.

அப்படிதாம்பா சொல்லுவான். அவன் கொண்டு வரணும்னு கூட நினைக்கலாம் நெருக்கடி எப்படி இருக்கும்னு தெரியாதில்ல. நல்ல எடம் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. 

கொஞ்சம்லாம் இல்ல. புக்கு வராதுனு தம்மாத்தூண்டு டவுட்டு வந்தாக் கூட நான் பாட்டுக்கும் டிஜிட்டல் பிரிண்ட்டிங்ல, ரெண்டு நாள்ல புக்க போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன் என்று அண்ணாச்சியிடம் சொல்லிவைத்தேன். 

அவசரப்படாதே பொறுமையா இரு என்றார்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக வேடியப்பனுக்கு போன் போட்டு இந்த புக்ஃபேருக்குதான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். 

இரண்டு புத்தகக் கண்காட்சிகளாகக் கேட்டுக்கொண்டு இருந்தார். நான் வேறொரு பதிப்பகம் போட்டால் நன்றாக இருக்குமே என்று பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டு இருந்தேன்.

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்

என் புத்தகத்தைப் போடுவதால் அவருக்கு எங்கெங்கிருந்து என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறதோ. அவருடைய ராசிக்கு சனி எங்கே நகர்ந்திருக்கிறதோ யாருக்குத் தெரியும்.