04 December 2017

எதோ என்னாலானது

1980முதல் 1994வரை எழுதி வெளியான 30 கதைகளை 4 புத்தகங்களாகவும் 2010ல் உயிர்மை வெளியிட்ட முழுத் தொகுப்பையும் நானே வெளியிட்ட சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையும் அமேஸானில் 6 eBookகுகளாக 24.10.17 முதல் வெளியிடத்தொடங்கினேன். அவற்றில் இதுவரை 54 பிரதிகள்  விற்றிருக்கின்றன. 5702 பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன.  இன்று வெளியான சின்மயி விவகாரம் மட்டுமே 424 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன. 


எனக்கு eBook பற்றிச் சொன்ன பா ராகவனுக்கும், eBookகில் பொருளடக்கத்தை எப்படி உருவாக்குவது என்பதைச் சொல்லிக்கொடுத்த ஹரன் பிரசன்னாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

இந்த கிண்டில் அமேஸான் கொண்டாட்டம் தொடங்கியபின் இவர்கள் இருவரையும் நான் இன்னும் நேரில்கூட சந்திக்கவில்லை. எல்லாம் கைப்பேசி மூலமான வாய்ப்பேச்சுதான்.  

விடுப்பில் இருந்துகொண்டு விடுதலையான எண்ணத்துடனும் ஓய்வின் காரணமான உடல் ஆரோக்கியத்துடனும் முழுக்க இலக்கியக் காரியங்கள் மட்டுமே செய்துகொண்டு உவப்புடன் இருந்துகொண்டிருக்கும் இந்த சில நாட்களே என் வாழ்வின் சிறந்த நாட்கள். எனவே VRS கொடுத்துவிடலாமா என்கிற உந்துதல் அவ்வப்போது தோன்றுகிறது. இரண்டரை வருடத்து 70,000/- மாதாந்திர சம்பளம் சாதாரணத் தொகையில்லை. ஓய்வுக்குப் பின்னும் ஜோசியத்தைப் பொய்ப்பிக்கக் கடவுள் என்னைத் தப்பித்தவறி வாழவைத்துவிட்டால், எவரிடமும் கையேந்தாமல் எவ்விதக் கருத்து சமரசத்தையும் எவருடனும் செய்துகொள்ளாமல் கெளரவமாக வாழ இந்தத் தொகை மிக முக்கியமானதாக இருக்கும். எனவே, 30.06.2020க்குமுன் வேலையை விடுவது விவேகமில்லை. 

கலைஞர்களாவதற்
கில்லை குமாஸ்தாக்கள்.

என்றார் விக்ரமாதித்யன். 

ஆனால் சமரசமற்ற எழுத்து பிச்சையெடுக்கவைக்கத்தான் லாயக்கு என்பதற்கு அவரது கவிதைப் புலம்பல்களே சாட்சியங்களாக நிற்கின்றன. 

துரதிருஷ்டவசமாக இப்படித்தான் இருக்கின்றன எழுத்தும் இலக்கியமும். எதிர்காலத்தில் எழுதிப் பிழைக்குமளவுக்கு அமேஸான் உதவக்கூடும். ஆனால் அதுகூட ஏன்போன்ற எப்போதாவது எழுதுபவனுக்கு -எழுதாமலே எழுத்தாளனாக வாழ்வதில் இன்புற்றிருக்க எண்ணுபவனுக்கு உதவாது.

எனவே இந்த ஒருமாத லீவ் முடிந்ததும் 21ஆம் தேதி சமத்தாக ஆபீஸுக்குப் போய்விடுவேன். 14-21 சென்னை உலகத் திரைப்பட விழா. அதற்குமுன் விமலாதித்த மாமல்லன் கதைகள் அச்சுப் புத்தகத்தைக் கொண்டுவந்தாகவேண்டும். புத்தக வேலை முடிந்தும் இன்னும் முகப்பு வேலை முழுமையடையவில்லை. நமக்கு அமையும் அட்டை வடிவமைப்பாளரும் கலைஞராக அமைந்துவிட்டதால் பொறுமையாகத்தான் இருந்தாகவேண்டியிருக்கிறது. டிஸ்கவரி புக்ஸ் வெளியிடவிருக்கும் தவிப்பு சிறுகதைத் தொகுதியின் இறுதி வேலைகளை முடித்தாகவேண்டும். காலச்சுவடு வெளியிடவிருக்கும், தி இந்துவில் தொடராக வெளியான புனைவு என்னும் புதிர் கட்டுரைத் தொகுப்பில், வடிவமைப்பாளரிடம் முகப்பு மட்டுமே முடிவாகவேண்டும். இத்தனைக்குமிடையில் ஒரு சிறுகதையேனும் எழுதிவிடவேண்டும் விடுப்பெடுத்ததை நியாயப்படுத்தும்விதமாக.

இன்னுமிருக்கிற பத்து நாட்களில் எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு, அமேஸானில் அவர்களது eBookகுகளை வெளியிடுவது தொடர்பாக  என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுவதும் தள்ளுவதும் அவரவர் விருப்பம். சரியெனப்படுவதை மட்டுமே பேசத்தெரிந்த காட்டுமிராண்டி நான் என்பதால் என்னை வெளிப்படையாகத் தொடர்புகொள்வது உங்களின் பொதுவாழ்வு நட்பில் பலவிரிசல்களை ஏற்படுத்திவிடக்கூடும். குறிப்பாக, எதையுமே முதிர்ச்சியுடன் அணுகத் தெரியாத தற்குறிகளான ஆப் பாயில் ஆண்ட்டிகளிடம்.

ஆனால் கவலைப்படவேண்டாம். நான் ரகசியம் காப்பேன். இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன். ஓலா விவகாரத்தில் நடந்த அயோக்கித்தனத்துக்கு எதிராக நான் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, ஓட்டுனருக்கு உதவ வாரிக் கொடுத்தவர்களின் பெயர்ப் பட்டியலை நான் இன்றுவரை வெளியிடவே இல்லை. வெளியிட்டால் பல பொதுவெளி உறவுகள் சிதையும் என்பது எனக்குத் தெரியும். எனவே என்றைக்கும் அதை வெளியிடப்போவதுமில்லை. ஒரு லைக் போட்டாலே பிளாக்பண்ணப்பட்டுவிடக்கூடிய அளவுக்குக் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பில் பிசிரடிக்க நான் காரணமாக இருந்துவிடக் கூடாதல்லவா. போகவும் ஆப் பாயில் ஆண்ட்டிகளால் பிளாக் பண்ணப்பட்டால் எழுத்தாளர்களில் பலர் உயிர்தரித்திருப்பீர்களா என்பதற்கே  உத்தரவாதமில்லை என்பதும் உண்மையல்லவா. எனவே என்னுடன் கூடவே அதுவும் போய்ச்சேர்ந்துவிடும் என்று உறுதியளிக்கிறேன். அதைப்போலவேதான் இந்த அமேஸான் eBook விவகாரத்தையும் என் உதவியால் நடந்தது என்பதையும் யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை லீவ் போட்டு ராப்பகலாய் எழுதி கைக்காசை நட்டப்பட்டு, சின்மயி விவகாரத்தைப் புத்தகமாகப் போட்டதையும் ஓலா விவகாரத்தில் உண்மையை உரக்கக்கூறி, நிதி திரட்டி, கைதான ஓட்டுனருக்குக் கார் வாங்க உதவியதையும் எழுத்துக்கு ராயல்டி இல்லாமல், பதிப்பகங்களுக்குக் கொத்தடிமைகளாக உழைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உதவுவதையும் ஒரேமாதிரியாகத்தான் பார்க்கிறேன் எதோ என்னாலானது என்று.