30 January 2024

ஓஎம்மாரும் ஓல்டு மெட்ராஸும்

ஒருவாரமாகவே என் Mac Adapter படுத்திக்கொண்டுதானிருந்தது. அதற்காக அதைக் கோபித்துக்கொள்வதும் நியாயமில்லை. 2018 ஜனவரியில் வாங்கியது 2023 டிசம்பர் வரை ஓடாய் உழைத்திருக்கிறது. அதுவும் 'கசடறதபற'வை வேர்டுக்கு கன்வர்ட் பண்ண ஆரம்பித்ததில் இருந்தே 24 மணிநேரமும் ஆனிலேயே இருந்துகொண்டு இருக்கிறது.

வேறு வாங்க வேண்டியதுதான் வேறு வழியில்லை என்று அமேஸானில் தேடினேன். என்னிடம் இருப்பதே அங்கு அச்சு அசலாக இருந்தது. 

https://amzn.to/497eMMc

அதுவும் 29 ஏ கிடைக்கும் ஏன்றதும் ஹைய்யா என இருந்ததை தள்ளுவண்டியில் போட்டுவிட்டு நேற்று பார்த்தால் 30ஆம் தேதி என்றது. எனக்கோ நாளைக்கே வேண்டும் என்பதால் நேற்று இரவு முழுக்க IPlanet, BSR Mall, பூர்விகா, ரிலையன்ஸ் ஸ்டோர், iPhone Doctor என்று ஓஎம்மாரில் சுற்றி அலைந்தேன் எந்தப் பயனுமில்லை.

IPlanetல் ஒரிஜினல் 7,500 என்றான். 

(போடாங்கொ) என்னிடம் இருந்ததைக் காட்டி

இது 2018 பொங்கலன்று அன்பளிப்பாய் வந்த Macbook Airக்கு மாட்டுப்பொங்கலன்று போய் ரிச்சி தெருவில் 2000 ரூபாய்க்கு வாங்கியது; இன்றுவரை வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினேன். வெளியில் வந்து நண்பருக்கு போன் அடித்தால், 

'அவன் என்ன ஆப்பிள்காரன். ஆழ்வார்பேட்டைக்குப் போனால் எடுத்ததும் கேட்பதே, ஒருஜினலா டூப்ளிகேட்டா, ரெண்டும் இருக்கு எது வேணும்' என்பதுதானே என்றார். கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் ரிப்பேருக்கே ஆப்பிளுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுபவர் என்பதால் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.

சோழிங்கநல்லூரிலேயே இருக்கும் ஐபோன் டாக்டர் என்று போர்டு போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த சிறுவன் சுப்ஹான் அரை மணி நேரத்தில் மேக்புக்குடன் வாருங்கள் என்று அனுப்பிவைத்தான். என்னடா இவன் எதுவும் சொல்லாமல் மொட்டையாக மேக் அடாப்டர் என்கிறானே என்று சற்றே அவநம்பிக்கையாக இருந்தாலும் அவன் சொன்னவிதம் நம்பிக்கையளிப்பதாக இருந்ததால் 'வந்து சாப்ட்டுக்கலாம்' என்று மேக் புக்கை எடுத்து முதுகுப் பையில் போட்டுக்கொண்டு போனேன். திறந்து பார்த்தப் பெட்டிகளில் ஒன்றில் எல்லாம் லேட்டஸ்ட் மாடல். போட்டோ அனுப்பியிருக்கக்கூடாதா என்றேன். ஆமா அனுப்பியிருக்கணும் என்று என்னைவிட அதிகமாக அசடு வழிந்தான். இரவே, நாளை ரிச்சித் தெருதான். தீனி வெளியில்தான் என்று முடிவெடுத்துக்கொண்டேன். வரும்போது அடையாரில் கே பி நம்பூதிரி சால்ட் பேஸ்ட் வாங்கிவரவேண்டும் என்பதும் வேறு வீட்டு வேலையாகச் சேர்ந்துகொண்டது.

காலையில் எழுந்ததும் 12, 12:30 வாக்கில் கிளம்பினேன். வழியில், வெள்ளைச் சட்டை கறுப்பு பாண்ட் அணிந்த கருத்த இளைஞர்களிடம் பேர்லல் அடித்ததைத் தட்டிக்கேட்கப்போக ஒரு ஓத்தா பஞ்சாயத்து காரணமாக ரிச்சி தெருவுக்குப் போகும்போது ஒன்றரை ஒன்றேமுக்கால் ஆகிவிட்டது. நரசிங்கபுரம் தெருவுக்குப் போனால் 2018ல் வாங்கிய கடையின் முகம் பிடிபடவில்லை. காசினோ தியேட்டர் இருக்கும் தெருவிலேயே இருக்கிற, சற்றே உள்ளே வளையும் கடை கண்டிப்பாக இல்லை. அதற்கு அடுத்ததா அதற்கும் அடுத்ததா என்று கையில் அடாப்டருடன் உள்ளே போனால் இல்லை என்கிற பதில் குறுக்கு மறுக்குத் தலையாட்டலாய் வந்தது. எதற்கும் முதல் கடையிலேயே கேட்போம் என்று மனமேயின்று உள்ளே நுழைந்தால்வாங்கிப் பார்த்துவிட்டு,

'டூப்ளிகேட்தான் கிடைக்கும்' என்றது கல்லா. 

டூப்ளிகேட் என்பது ரொம்ப அல்பமாகப் படவே, கொஞ்சம் மரியாதையாக இருக்கட்டும் என்று,

'ஃபர்ஸ்ட் காப்பி ஓகே' என்றேன். 

போனில் டி டிப் கனெக்டர் என்று சொல்வது காதில் விழுந்ததும் உயிர் வந்தது, இனி அலையவேண்டியதில்லை என்று.

கொஞ்சம் உட்காருங்கள் என்றார், ஐநூறு ரூபாய்களை எண்ணிக்கொண்டிருந்த அந்த ஒல்லியான ஆசாமி. என்ன மர்மமோ, மார்வாடிகள் குஜராத்திகள் எல்லாம் - அவர்களது பெண்கள் திருமணமாவதற்கு முன் ஒடிசலாக இருப்பதைப்போலவே - இளமையில் ஒல்லியாகவே இருக்கிறார்கள்.  எண்ணிக்கொண்டிருந்த நோட்டுக்கள் எப்படியும் இருநூறுக்கும் மேல் இருக்கும் என்று தோன்றிற்று. பணம் எண்ணுவதுதான் இருப்பதிலேயே சிறந்த உடல்பயிற்சியோ என்னவோ. இரண்டு மணிக்கேவா இவ்வளவு பிசினஸ் நடந்துவிட்டிருக்கும் என்று வியப்பாக இருந்தது. கூட்டமும் அப்படியொன்றும் இல்லை. ஆனால் ஆட்கள் வந்துகொண்டும் வந்தவர்கள் கேட்டதை வாங்கிக்கொண்டு போய்க்கொண்டும் இருந்தார்கள்.

வந்ததை அருகருகே வைத்துப் பார்த்தேன். அச்சு அசலாக அதே. கூடுதலாக இதில் கம்பெனி பெயர் இருந்தது கொஞ்சம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எல்லாவற்றிலும் வந்தாயிற்று இதில் மட்டும் என்ன என்று டூப்ளிகேட்டை லீகலாக்கிவிட்டிருக்கவேண்டும். 

கையோடு கொண்டுபோயிருந்த MacBook Airல் பொருத்தினேன். ஒரிஜினல் இல்லை என்பது ஒரு விஷயமேயில்லை என்பதைப்போல, ஃபர்ஸ்ட் காப்பி 1500 ரூபாய்க்குப் பழுதில்லை என்று ஆரஞ்சு பச்சையாகி பளிச்சென்று சொன்னது. 

பழைய அடாப்டரில், முனை கிளிப்புக்குள்ளே இன்னும் கலையாமல் 13/1/2018 என்று பால் பென்னில் எழுதி இருந்ததைக் காட்டி இதே போல் போட்டுத் தருவீர்களா என்று கேட்டேன். 

அட அல்பமே, விற்பது டூப்ளிகேட்டாக இருந்தாலும் பக்காவாக GST கட்டி நாங்கள் எவ்வளவு முன்னேறிவிட்டோம், இன்னும் பர்மா பஜார் 'அட்டு' 'அசி' என்று சொல்லிக்கொண்டு இருப்பதைப்போலவே நீயும் இருக்கிறாயே என்பதைப்போல கடைப்பெயர் முகவரியுடன் ப்ரிண்ட் அவுட் எடுத்த பேப்பரில் சாப்பா குத்தி பெற்றுக்கொண்டேன் என்று என்னைக் கையெழுத்தைப் போட வைத்து பில்லை கையில் கொடுத்தார்கள். டூப்ளிகேட் அடாப்டரில் கம்பெனி பெயர் இல்லாதபோது பில்லும் இல்லை. டூப்ளிகேட் இப்போது லீகலாகிவிட்டதுபோல. ஒரிஜினல் ஆப்பிளிலேயே டூப்ளிகேட்டும் விற்பதாய் நண்பர் சொன்னது உண்மை வெறும் வதந்தி இல்லை என்று பட்டது.

வெளியில் வந்து கடையை அண்ணாந்து பார்த்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். இதை எப்போதாவது படிக்கிற யாருக்காவது என்றாவது பயன்படக்கூடும் என்று. 

மவுண்ட்ரோடு பிலாலுக்கு வந்து 'பட்டர் நானும் சிக்கன் லபப்தார் நீயும்' என்று ஆர்டர் பண்ணிவிட்டு அவை வருவதற்குள் அவசர அவசரமாக அமேஸானில் ஆர்டர் பண்ணியிருந்ததை கேன்ஸல் செய்தேன். 

காரணத்தைச் சொல் என்று ஆப்ஷனில், 'இதைவிட வேறொரு இடத்தில் மலிவாகக் கிடைக்கிறது' என்று இருந்ததைத் தேர்வு செய்து அனுப்பிவைத்தேன். 

மூன்றிலிருந்து ஐந்து வேலை நாட்களுக்குள் பணம் வாப்பஸ் என்றது. 

வந்த சிக்கன் வழக்கத்தைவிடவும் மென்மையாக இருந்தது.