07 June 2024

சாம்பார்

திடீரெனப் பசியெடுத்தது இருவருக்கும். என்ன சமைப்பது என்று பிடிபடவில்லை என்பதோடு அவளுக்குக் கண்ணும் சொக்கவே, 'என்ன செய்யறது' என்றாள்.

‘BBயில் வரவழைத்த அல்மண்ட் ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் போயிற்று’ என்றேன்.
‘நீங்க சாப்ட்டுடுவீங்க. அது இனிப்பினிப்பா இருக்குமே’ என்றாள்.
இயல்பிலேயே எனக்கு இனிப்பு பிடிக்கும் - சுகர் இருந்தாலும். சுகரே இல்லை, தாராளமாய்த் தின்னலாம் என்றாலும் அவளுக்கு இனிப்பில் பெரிய ஈர்ப்பில்லை. அவளுக்கு, ‘உங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் பத்துமா’ என்கிற கவலை வேறு. சரியோ தப்போ ரொம்பவெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காமல் எதாவது ஒன்றைச் சட்டுபுட்டென முடிவெடுத்து இறங்கிவிடவேண்டும் என்பது என் அணுகுமுறை.
'சரி விடு. இருக்கவே இருக்கு ஸ்விக்கி. கீதத்துல இருந்து வரவழைச்சுடலாம்' என்றேன்.
‘அவன் ஒரு மணி நேரம் பண்ணுவானே. எனக்கு உப்மா கிப்மா பண்ணிக்கிறேன். உங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் இருக்கு. காலைல சேமியா உப்மா. எப்படியும் வைஸாக் போய்வந்த டிஏ கிளெய்ம் குடுக்க DRIக்குப் போறதால லஞ்ச்சை வெளில பார்த்துக்குங்க. வரும்போது திருவல்லிக்கேணில நெய் வாங்கிக்கிட்டு வந்துடுங்க’ என்று அடுத்த நாளுக்கான டிஏ இல்லாத 'டூர் ப்ரொக்ராமே' போட்டுவிட்டாள்.
தூங்கி எழுந்தால்தான் நாளை என்கிற அவநம்பிக்கைவாதியான நான், ‘அதெல்லாம் இல்லை’ என்று மொபைலை எடுத்து, ஸ்விக்கிக்குப் போய், எனக்கு பரோட்டா, ஆனியன் ரவா; அவளுக்கு ஊத்தப்பம், சாம்பார் வடை என்று ஆர்டர் போட்டுவிட்டேன்.
பிடிக்கும் என்றாலும் நான் சாம்பார் வடை போட்டுக்கொள்ளாததற்கு - சில நாட்களுக்கு முன், இரவு 11:30க்குமேல் வளாகத்திற்கு உள்ளேயே தெருநாய்க்கு சோறு போட்டுக்கொண்டிருந்த நாய் ஒன்றிடம் ‘போடுவதை கேட்டுக்கு வெளியில் போய் போடலாமே’ என்றதற்கு அது, ‘சாம்பார் தே பையா’ என்று என்னைப் பார்த்துக் குரைத்து வைத்திருந்ததுதான் காரணம் - இது ஒன்றும் புதிதில்லை. எல்லா இடங்களிலும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிற சொறிநாய்களின் குரைப்புதான். நானும் திருப்பிக் குரைக்கிற நாய்தான். ஆனால், இங்கே ஒரு சிக்கல் என்னவென்றால், நானும் அதற்கு இணையாகத் திருப்பிக் குரைத்து வைத்து அது புகார் அளித்தால், அன்றைய இரவை நான் போலீஸ் ஸ்டேஷனில் கழிக்கவேண்டி நேரிடும் என்பதால், ‘தே பசங்களா! உங்களால நான் கண்ட கண்ட நாய்ங்க கிட்டையும் தினம் தினம் எவ்வளவு திட்டு வாங்கவேண்டியிருக்குப் பாருங்கடா' என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த என் கோத்திர முன்னோர்களை மனதார சபித்தபடி வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டேன். திருப்பித் திட்டக்கூட முடியாததன் அழுத்தம் காரணமாகக் கொஞ்ச நாளுக்கு சாம்பார் பக்கமே போவதில்லை என்கிற வெறுப்பில் இருந்தேன். அதனால்தான், ரொம்பப் பிடித்தது என்றாலும் சாம்பார் வடையை எனக்கு ஆர்டர் செய்துகொள்ளவில்லை.
ஸ்விக்கி பார்ஸல் வந்தது.
பசியின் வேகத்தில், எப்போதும் எடுக்கிற போட்டோவைக்கூட எடுக்க மறந்து தின்னத்தொடங்கிவிட்டேன்.
இரண்டாவது விள்ளலிலேயே நினைவு வந்தது, அவசரத்தில் ஸ்விக்கி பையனை வெறுங்கையோடு அனுப்பிவிட்டோம் என்பது.
'போன தடவையே, ‘பீட்ஸா கொண்டாந்த பையன் முகத்தைப் பாக்கவே கஷ்டமா இருந்துது. அவ்வளவு டயர்டா இருந்தான். பாவம் இனிமே எப்பப்போய் சாப்பிடுவானோ. ஒண்ணுமே குடுக்காம பறந்து வாங்கித் திங்க ஆரம்பிச்சுட்டோம்னு சொன்னே, இந்தத் தடவையும் குடுக்காம விட்டுட்டோம் பாரு'
‘கரெக்ட். தப்புதான். நானும் மறந்துட்டேன். அடுத்த தடவை மறக்கவே கூடாது' என்று முழங்கையில் கிள்ளிக்கொண்டபடி தனது அட்டைப் பெட்டிகளைப் பிரிக்கத் தொடங்கினாள்.
‘இனிமே ஆர்டர் பண்ணின கையோட, பத்தோ இருவதோ எடுத்து டீப்பாய் மேல வெச்சுடு’ என்று உண்ணத் தொடங்கியவன், 'அடுத்த தடவை என்ன அடுத்த தடவை. அவன் போய் பத்து பன்னெண்டு நிமிஷம்தான ஆகியிருக்கும்' என்று எனக்கு நானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு போன் அடித்தேன்.
‘எங்கப்பா இருக்கே.’
‘கொஞ்சம் தள்ளி வந்துட்டேன் தாத்தா. சொல்லுங்க’ என்று எனக்கு அவன் நேராய் டபுள் புரமோஷன் கொடுத்துவிட்டான்.
பிரிப்பதை விட்டுவிட்டு எழுந்து ரூமுக்குப் போனவள், ‘பத்து இருவதே இல்லே. ஐம்பதாத்தான் இருக்கு’ என்று நோட்டைக் கொண்டுவந்து ரிமோட் அடியில் வைத்துவிட்டு சாம்பார் வடை இருக்கிற டப்பா மீது ஒட்டப்பட்டிருந்த செல்லோ டேப்புடன் மல்லுகட்ட ஆரம்பித்தவள், சட்டென நிறுத்தி, 'ஒரு செகண்ட் தல சுத்திடுத்து' என அசையாமல் நின்றுகொண்டிருந்துவிட்டு நாற்காலியில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
'அவன் வந்தப்பவே குடுத்திருந்தா 10, 20 ஓகே. பெட்ரோல் விக்கிற விலைக்கு, திரும்ப வரவெச்சுக் குடுக்கறதால ஃபைன் பெனால்ட்டியோட 50...' என்று சொல்லிக்கொண்டிருக்கையில் கேட்டுக்கு வெளியே நிழலாடியது.
கொடுத்துவிட்டு வந்ததும் மனைவி சொன்னாள், '500 ரூபாய்க்கு மேல ஆன பில்லுக்கு 50 ரூபா குடுக்கறதுதான் சரி. ராத்திரி நிம்மதியா தூங்கலாம்.'
என்ன காரணமோ. கீழே தெருநாய்கள் அண்ணாந்து வெற்று வெளியைப் பார்த்து திடீரென கும்பலாக ஊளையிட்டுக் குரைக்கத் தொடங்கின.
06.05.2024.