03 May 2026

கொத்தடிமைத் தமிழ்

//என்னுடைய கணிப்புஎன்னுடைய 31-ஆண்டு ஊடக அனுபவத்தின் அடிப்படையில் நான் ஈட்டிய பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியல் அடிப்படை மட்டுமே.// 

பார்க்க ஜேம்ஸ் பாண்ட் போல் இருந்தாலும் ஜேம்ஸ் வசந்தனுக்கு  எப்படியும் 60க்கு மேல் இருக்கும். பிஷப் ஹீபர், ஜமால் முகமது கல்லூரிகளில் தமிழே படிக்கவில்லை என்றாலும் பள்ளி சிபிஎஸ்ஸி இல்லையென்றால் குறைந்தது ஒரு பாடமாகவாவது தமிழ் இருந்திருக்கும். பாடமாகத் தமிழே படித்ததில்லை என்றாலும் கரிஸ்மாக்கு ஸ்பெல்லிங் என்ன. அதை எப்படி உச்சரிக்கக்கூடாது என்று பேஸ்புக்கில் வகுப்பு எடுப்பதால் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று எடுத்துக்கொள்ளலாம். 

தொடக்கத்தில் குறிப்பிட்டிருப்பதுஇவருடைய பேஸ்புக் பதிவின் இறுதியில் வருகிற ஒற்றை வாக்கியம். 

பள்ளிக் கல்வி திமுகவால் பெருமளவுக்குப் பாழ்படத் தொடங்கியிராத 70களின் தொடக்கத்தில் திராவிடர்களாக இருந்த ஆங்கில ஆசிரியர்கள்கூட, ஒரு வாக்கியத்தில் ஒரு முறை வந்த வார்த்தையைத் திரும்ப வராதபடி எழுதிப் பழகவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். ஆசிரியப் பணியைச் சிரத்தையோடு செய்த காலம் என்பதால் நான் படித்த பாண்டிச்சேரியைப் போலவே இவர் படித்த திருச்சியிலும்  கற்பித்திருப்பார்கள் என்றே கருதுகிறேன். 

ஒரு தடவை பயன்படுத்திய சொல்லை அதே சொற்றொடரில் மறுபடியும் எழுதாமல், அதற்கு இணையான வேறொன்றை உபயோகிக்க முயன்றால்தான் சொல்வளம் பெருகும் என்பதே உயர்நிலைப் பள்ளிகளிலேயே அப்படிப் பழக்குவதற்கான அடிப்படைக் காரணம். 

வந்த சொல்லே திரும்பத் திரும்ப வருகிற கதை கட்டுரைகளைப் படிக்கையில் அலுப்புத் தட்டும் என்பதற்காக மட்டுமின்றி எழுதுபவன்  வாசிப்பவன் இருவருக்குமே மொழி வளப்படும் என்பதாலும் சொற்களை 'பயன்படுத்துவது'என்று ஏற்கெனவே சொல்லியிருந்தால் 'உபயோகிப்பது' என்று எழுதுவது அவசியம். 

தமிழ் தமிழ் என்று கதறியபடி சந்தேகம் வந்தால் மகுடேஸ்வரனைத் தேடிச் செல்லும் அளவிற்குத் தூய தமிழ்ப் பற்றாளரான இவருடைய பற்றாமையை, ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்ப்போம். 

//என்னுடைய கணிப்புஎன்னுடைய 31-ஆண்டு ஊடக அனுபவத்தின் அடிப்படையில்// 

என்னுடைய என்று ஒரு வார்த்தை விட்டு, திரும்ப 'என்னுடைய' என எழுதுகிறார். 

புதுச்சேரியில் தவறிப்போய் தெருவில் எச்சில் துப்பினாலே, 'இஸ்கூல்ல வாத்தி உனக்கு இதைத்தான் சொல்லிக்குடுத்தானா' என்று பெரியவர்கள் ஆசிரியர்களைத் திட்டுவார்கள். இவர் இப்படி எழுதுவதையும் - ருசி பார்க்க எடுத்ததை நாக்கில் வைத்து நக்கிப் பார்த்துவிட்டு எல்லோரும் உண்பதாயிற்றே என்கிற நினைப்பேயில்லாமல் - விடியல் முதல்வர் மு க ஸ்டாலின் அந்தப் பாத்திரத்திலேயே கையை உதறியதையும் பார்த்தால் என்ன சொல்வார்களோ. 

திருச்சியில் தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் அஸ்திவாரத்தைச் சரியாகப் போடவில்லை. பாவம் இவரென்ன செய்வார். ஆங்கிலத்தில் படிக்கிற பழக்கம் இருந்தால்கூட இது தெரிந்திருக்குமே.

வந்த வார்த்தையையே வாக்கியத்தில் திரும்ப எழுதுவதைத்  தவிர்க்கவேண்டும் என்றால் இவரோ அதே சொற்றொடரில் 'அடிப்படை' என்கிற இரண்டாவது சொல்லையும் ரிப்பீட் செய்கிறார். 

சரிப்பா பேஸ்மெண்ட் வீக்கு போகட்டும். பில்டிங்காவது ஸ்ட்ராங்கா என்றால் அது இதைவிடவும் மோசமாக இருக்கிறது.

//31-ஆண்டு ஊடக அனுபவத்தின் அடிப்படையில் நான் ஈட்டிய பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியல் அடிப்படை மட்டுமே.// 

என்னவோ சரியாக இல்லை என்பதைப்போல இருக்கிறதல்லவா. என்ன கோளாறு, எங்கே பிரச்சனை  என்று பார்ட் பார்ட்டாகப் பிரித்துப்போட்டுப் பார்ப்போம்.

நீண்ட வாக்கியத்தை எழுதுவது எல்லோருக்கும் வந்துவிடாது. சிந்தனை ஓர்மையும் மொழி ஆளுகையும் இருப்போர்க்கே சாத்தியம். இரண்டுமே இல்லாதவர்களிடம் - கோடு போடாத தாளில் இடதுபுறம் எழுதத் தொடங்குகிற வரி வலக்கோடியைத் தொடும்போது சீசா பலகை மாதிரி ஏறியோ இறங்கியோ போய்விடுவதைப்போல - வாக்கியம் முழுமை அடையாமலே முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் முடிந்ததைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்து இப்படி இளித்துவிடும். 

என்ன கோளாறு?

//என்னுடைய கணிப்பு,// 

அடுத்து வருவது அவரது அனுபவத்தைப் பற்றிப் பேசுவதால் இன்னொரு //என்னுடைய// தேவையே இல்லை. அது போக //நான்// வேறு பின்னால் வருகிறது.

வாக்கியத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்கிற தெளிவு இருந்தால்தான் அதன் மையம் துலங்கும். குவிமையம் பற்றிய  தெளிவே தேர்ந்த வாக்கியங்களை உருவாக்கும். துல்லியமான வாக்கியங்களே இலக்கை நோக்கிய சீரான படிகள். ஒரு படி சரியாக இல்லாவிட்டால்கூட தடுமாற நேர்வதைப்போலமொழி சரளமின்றி இப்படி இடறிவிடும்.

//31-ஆண்டு ஊடக அனுபவத்தின் அடிப்படையில்// 

இது பீடிகை. மேட்டர் என்ன?

//நான் ஈட்டிய// 

சரி. ஈட்டியது என்ன?

//பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியல் அடிப்படை மட்டுமே.// 

கோளாறு எங்கே என்று தெரிகிறதா. சொல்ல வந்தது உட்காரவில்லை. இதற்கு முன்னால் இருக்கிற ஜாங்கிரி சுத்தலும் சேர்ந்து முழுமையற்ற சொற்றொடராக முனை கிடைக்காத நூல்கண்டாகத்  தவிக்கவிட்டுவிட்டது. 

//என்னுடைய கணிப்புஎன்னுடைய 31-ஆண்டு ஊடக அனுபவத்தின் அடிப்படையில் நான் ஈட்டிய பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியல் அடிப்படை மட்டுமே.//  

இதை இப்படி எழுதிப் பார்க்கலாமா.

31-ஆண்டு ஊடக அனுபவத்தில், பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்னுடைய கணிப்பு.

என்பதைச் சொல்லிவிட்டுபதிவில் இதற்கு முன்னதாக இவர் எழுதியிருக்கும் 

//விருப்பம் வேறுகணிப்பு வேறு.//

என்பதை இறுதியாக வைத்தால் 

31-ஆண்டு ஊடக அனுபவத்தில், பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்னுடைய கணிப்பு.

விருப்பம் வேறுகணிப்பு வேறு. - 

என்று முத்தாய்ப்போடு கச்சிதமாக அமைந்துவிட்டதா. 

அண்ணாவின் 'செவ்வாழை'களுக்குத் தரமாகத்  தமிழ் எழுதுவதென்பது குதிரைக் கொம்பு.  

உண்மை, வெறும் இகழ்ச்சியில்லை.