11 May 2013

துப்பு அறிய வாரீகளா மிஸ்டர் ஜெயமோகன்!

சற்றுமுன் , ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த சுட்டியின் வழியாக, ஜெயமோகனின் இணையத்தின் வெறுப்பரசியல் படிக்க நேர்ந்தது.

// இணையத்தின் வெறுப்பரசியல்

இணையம், எதிர்வினைகள் May 10, 2013

அன்புள்ள ஜே,

தற்சமயம் நான் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் மென்பொறியாளனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தின் மூலமாக உங்களின் வாசகனாக ஆனவர்களில் நானும் ஒருவன். சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் நான். கடந்த மூன்று வருடங்களாக உங்கள் தளம் பற்றி அறிந்தபிறகு உங்களின் கதை, கட்டுரை மற்றும் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

சமீப காலமாக என் மனதில் எழுந்துள்ள தமிழ் எழுத்தாளர்களின் (உங்களையும் மற்றும் சிலரையும் தவிர்த்து) மீதான வெறுப்பே உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது. சக எழுத்தாளனை ஏளனம் செய்வதில் அப்படி என்ன விருப்பம் அவர்களுக்கு . அதற்கு பதிலாக அவர்கள் கதை கட்டுரை என்று எதாவது எழுதினாலாவது உபயோகமாக இருக்கும். நீங்கள் அவைகளைக் கண்டுகொள்வதில்லை என்றாலும் வாசகர்களாகிய எங்களுக்கு வெறுப்பாக உள்ளது. இதில் எதாவது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் உள்ளதா?
தெளிவுபடுத்தினால் சந்தோசமடைவேன்.

அன்புடன்,
குமரேசன்
அட்லாண்டா

அன்புள்ள குமரேசன்

இலக்கியவாதிகளிடையே வெறுப்பும் கசப்பும் எல்லாக் காலத்திலும் உள்ளதுதான். உலகம் முழுக்க . லத்தீனமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ உள்ள அளவுக்கு வெறுப்பு இங்கே இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

புராதன சம்ஸ்கிருத உவமை. விளக்கு தனக்குக் கீழே உள்ள நிழலின் இருட்டை மட்டும் நீக்கிக் கொள்ள முடியாது. இலக்கியம் என்பது எவ்வகையிலும் ஒரு நுட்பமான அகங்காரச்செயல்பாடு. நான் இந்தக்கருத்தை நம்புகிறேன், இதுவே சரி என நினைக்கிறேன் என ஒருவன் நம்பும்போதே அவன் எழுதுகிறான்.

அந்த அகங்காரம் காரணமாக அவன் பிற கருத்துக்களுடன் மோதுகிறான். அங்கும் அகங்காரம் இருப்பதனால் அது வெறுப்பாக மாறுகிறது. ஆனால் கருத்துக்கள் மோதாமல் ஒரு சூழலில் இலக்கியமோ சிந்தனையோ வளராது. எனவே இதை ஒரு கொந்தளிப்பின் நுரை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

எது பிரச்சினை என்றால் எழுத்தாளர் அல்லாதவர்கள், கருத்துத்தளத்தில் அல்லது படைப்புத்தளத்தில் எதையுமே அளிக்கமுடியாதவர்கள், உள்ளே புகுந்து வசைபாடி ஏளனம் செய்து உருவாக்கும் புழுதிதான். அது கருத்தியக்கத்தையே அழித்துவிடும்.

அப்படி சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே நுழைவது அச்சு ஊடகத்தில் வடிகட்டப்பட்டுத் தடுக்கப்பட்டது. இணையம் அதற்கு மையவாசலையே திறந்து வைத்துள்ளது. ஓர் எழுத்தாளனின் ஒரு வரியைக்கூட வாசிக்காத ஒரு ஆசாமி இரவுபகலாக அவனை வைதுகொண்டே இருக்கலாம். அந்த எழுத்தாளனின் பெயர் அதில் இருப்பதனாலேயே அவனை வாசிப்பவர்களில் ஒருசாரார் அந்த வசைகளை நோக்கி இணையத்தேடிப்பொறிகளால் அனுப்பப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

விளைவாக எந்த விவாதத்திலும் சாரமற்ற அந்தக் கூச்சலும் கலந்துவிடும். அதைவிட முக்கியமாக அந்த ஆசாமியைப்போலவே வாசிப்பற்ற, அடிப்படை அறிவுத்தகுதியற்ற பிறர் உள்ளே வருகையில் அவர்களுக்கு அந்த ஆசாமிமீது அதிக ஈர்ப்பு உருவாகும். இன்னும் சொல்லப்போனால் நம் சூழலில் எதையும் உழைத்துத் தெரிந்துகொள்ளாமல் கருத்துத் தெரிவிப்பர்களே அதிகமென்பதனால் அந்த வகையினரின் பேச்சுக்களை ஒட்டியே அதிகம் பொதுவிவாதம் நிகழக்கூடும்.

ஏதோ ஒரு கட்டத்தில் அந்த ஆசாமி தன்னை அந்த எழுத்தாளனின் எதிரி என்றும் மறுதரப்பு என்றும் நினைத்துக்கொள்ள ஆரம்பிப்பான். இந்த அபத்தம்தான் இன்றைய மிகப்பெரிய சிக்கல். இணையவிவாதங்களில் மிகப்பெரும்பகுதி வெற்றுச்சக்கையாக இருப்பது இவர்களால்தான். உண்மையில் நான் பலர் எந்த அடிப்படையில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் கருத்துக்கள் சொல்கிறார்கள் என்று பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

தொழில்நுட்பம் கொண்டுவந்த இந்த புதிய நிகழ்வைப் புரிந்துகொண்டு இவ்வகை செயல்பாடுகளை முழுக்க உதாசீனம் செய்வதன் வழியாகவே இதை நாம் தாண்டிச்செல்லமுடியும். வேறுவழியே இல்லை.

ஜெ //

***

வேலை நிமித்தம், 08.05.2013 புதன் அன்று அலுவலகத்தில் தங்க நேர்ந்து. முறுக்கிய வேலைக்கிடையில் தளர்த்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பில், ஃபேஸ்புக்கை எட்டிப்பார்க்கப்போக, 12.57  AM (09.05.2013)க்கு வந்த தனிச் செய்தியொன்றைக் காண நேர்ந்தது.

எழுதியது ஏதோவொரு சிசு என்பதால், அதன் பெயரோ அடையாளமோ தெரியாவண்ணம், கீழ்க்கண்டவாறு எழுதி வியாழன், 09  மே காலை 7.21AMக்கு  ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன்.

//நான் புதிதாக ஒரு நாவ்ல் எழுதியுள்ளேன். தாங்கள் ஒரு விமர்சனம் எழுத முடியுமா ? முகவரி கொடுத்தால் நானே நாவலினை அனுப்பி வைக்கிறேன்//

- ஃபேஸ்புக்கில் வந்த தனிச்செய்தி.

/நான் புதிதாக ஒரு நாவ்ல் எழுதியுள்ளேன்./

எவராலும் ’பழைய நாவல்’ எழுத இயலாது. புதிதாக எழுதி இருந்தால் வாழ்த்து.

/தாங்கள் ஒரு விமர்சனம் எழுத முடியுமா ?/

இரண்டு கேட்காமல்விட்டமைக்கு நன்றி.

/முகவரி கொடுத்தால் நானே நாவலினை அனுப்பி வைக்கிறேன்/

’நாவலை’ அனுப்பி வைக்க வேண்டாம். ’நாவலினை’ அனுப்பி வைத்துவிடவே வேண்டாம்.

மன்னிக்கவும் நாளிதழ் படிப்பதே அரிதாகும் அளவுக்கு அலுவலக வேலை. எழுதி நாளாகிவிட்ட என் தளமே இதற்கு சாட்சி.

முதலில் தமிழ் எழுதப் பார்ப்போம். பிறகு நாவல் எழுத முயற்சிப்போம்.


இரண்டு நாட்களாய் தொடர்ந்த அலுவல் ஒருவழியாய் முடிய இன்றிரவு வீடு வந்தேன். 

நாலரை வாக்கில் தூக்கம் அறுந்து எழுந்து உட்கார்ந்து, சாவகாசமாக இணையத்தைத் துழாவினால், ஃபேஸ்புக்கில், ஜெயமோகனின் மேற்குறிப்பிட்ட தத்துவார்த்த உளவியல் அறச்சீற்ற பதிலை http://www.facebook.com/krishna.moorthi.3386/posts/388304434619112 இதிலிருக்கும் சுட்டி வழியே படிக்க நேர்ந்தது.

இந்த சிசு வியாழன் 09, மே அரும்பத்தொடங்கிய நள்ளிரவில் 12.57AMக்கு எனக்கு அனுப்பியிருந்த தனிச்செய்தி இதுதான்.
எல்லாம் அறிந்த ஏகாம்பரேஸ்வரர் ஜெயமோகனுக்கு இணையத்தின் இந்த முகம் தெரியுமா?

பிகு: காலை நடைக்குக் கிளம்புகிறேன். விஷ்ணுபுர அடியாட்கள், இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் பெஸண்ட் நகர் பீச்சுபக்கம் வந்தால் என்னை அடிக்கலாம்.