06 November 2013

கொம்பு

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், உலகம் அறியாமல், இலக்கியவாதிகளின் அசட்டைச் சிரிப்புக்கு ஆளாகி, விடுதலைக்குள் முடங்கி கிடந்தது பல்லாண்டு காலம். 

ஐம்பதை எட்டப்போகிற வயதில் பெரியார் அறிமுகப்படுத்தியதை அவரது நூற்றாண்டில் தமிழக அரசு அமல்படுத்துவதாய் அறிவித்தார் எம் ஜி ஆர்.

கம்பாசிடகர்கள் மீது கொண்ட கருணையினாலும் காலத்தின் மீது கொண்ட காமத்தினாலும் தமிழ் டைப்ரைட்டரை வாங்கி, சுயமாக டைப்படிக்கக் கற்றுக்கொண்டார் சுஜாதா. தமிழில் தட்டச்சப் பழகும்போதே ’பெரியார் பாதையை’ விரிவுபடுத்துவது பற்றி உரக்க யோசிக்கத் தொடங்கினார்.

சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டுப் திடுப்பென ஒரு நாள் பெரியார் பாதையில் நடக்கத் தொடங்கிற்று முரசொலி. வைராக்கியமாய் மாறாது நின்ற குமுதமும் சீர்திருத்தத் தமிழை ஆரம்பப் பள்ளியில் படித்துப் பழகிவிட்ட தலைமுறையைக் காரணம் காட்டி, கடைசியாகத் தன்னைக் கரெக்ட் பண்ணிக்கொண்டது. 

1983ல் ’அறியாத முகங்கள்’ அச்சடிக்கச் சென்றபோது, மயிலை முண்டக்கண்ணி அம்மன் தெருவிலிருந்த அச்சகத்தில் பழைய தமிழா சீர்திருத்தத் தமிழா இரண்டுவிதமான கோர்ப்பும் உண்டு என்று உரிமையாளர் கூறியபோது, நம்பிராஜன் சாட்சியாய், பெரியாரை சாய்ஸில் விட்டுவிட்டேன்.

1986ல் ‘முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்’ பதிப்பிக்கும் சமயத்தில் சி.மோகன் எதிரில், சாய்சே இல்லை தம்மிடம் இருப்பதே தற்போதையத் தமிழ் மட்டும்தான் என்று கூறிவிட்டார் தி.நகர் அச்சகக்காரர்.

எனக்குத்தெரிந்து, மீட்சி 1986 வரை எழுத்துச் சீர்திருத்தத்துக்கு மனம் திரும்பவில்லை.

தலைப்பையே மாற்றியாக வேண்டிய கட்டாயத்துக்குட்பட்ட கணையாழி எப்போது தன்னை சீர்திருத்திக் கொண்டது? எனக்கும் இலக்கியத்துக்கும் டச்சில்லாது போன இடைக்காலத்தில் எப்போதேனும் நிகழ்ந்திருக்கவேண்டும். 

அச்சுக் கோர்ப்புப் பலகைக் குழிகளில் குற்றுயிராய்க் கிடந்து, கணினி யுகத்தில் இறுதியடைந்துவிட்ட கொம்புகள், கையால் எழுத நேரும் அபூர்வ தருணங்களில் கைமீறி எட்டிப் பார்த்து இளிக்கின்றன இன்னமும்.

வையாபுரிப் பிள்ளை, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என வசைபாடப்பட்டவர்கள் என்று பட்டியலிட்டு அவர்களோடு ஈஷிக் கொண்டு போஸ்கொடுக்க முயலும் ஜெயமோகன், இவர்களெல்லாம் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று நடைமுறைப் படுத்தியவர்களா?ஆம் எனில் எப்போதிருந்து? தமிழக அரசு அமல்படுத்துவதற்கு முன்னரா பின்னரா எவ்வளவு பின்னால் என்பதையும் தெளிவுபடுத்தலாம். 

இன்று இந்தக் கட்டுரைக்காக மட்டுமே ”ஈ.வெ.ரா அவர்கள்” என்று குறிப்பிடும் இந்த தீர்க்க தரிசின சந்தர்ப்பவாத பார்ட்டி, குறைந்தபட்சம், பிரசித்திபெற்ற தம் பல்க் பல்க்கான கடிதங்களில் எப்போதிருந்து பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்தினார் என்று சொல்வாரா? 


1935ல் பெரியார் அறிமுகப்படுத்தியதை, அரசும் வெகுஜனப் பத்திரிகைகளும்கூட ஏற்றுக்கொண்ட பின்னும் 80களில்கூட அமல்படுத்தத் தயாராய் இல்லாத ஜெயமோகன் தமிழின் எழுத்துருவையே மாற்ற சிந்திப்பதாய் சொல்லிக் கொள்வதைப் போன்ற போலித்தனம் வேறு உண்டா?

இணையம் கணினியை ஆதாரமாகக் கொண்டு இயங்குவதால், கணினித் தமிழில் ’கொம்பு’ இல்லாததால் வலுக்கட்டாயமாய் சீர்திருத்தப்பட்ட இலக்கியவாதிகளில் ஜெயமோகனும் ஒருவர் என்பதுதானே உண்மை?

சீர்திருத்தமெல்லாம் கவனத்தை ஈர்க்காது எனவே, ஹிந்துவுக்காக முழுப்புரட்சி  செய்யும் நக்ஸலைட் ஆகிவிட்டார் போலும்.

செடியின் கிளைகளைக் கழித்தால் விரவி வளர்ந்த மரமாகும். தானும் கழிப்பேன் எனக்காட்டிக் கொள்ள வேரையே அழிக்கச் சொல்கிறார் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=41494