02 November 2013

ஒரு பிடுங்கி உத்தியோகம்!

# g+ இளவஞ்சி நன்மாறன்7:59 AM+1 


***

ஒரு பிடுங்கி உத்தியோகம்
- ஞானக்கூத்தன் [தவளைகள் (5)]

அலுவலகத்துக்கு அப்பால் நான் யார் என்பதும் என் அப்பாவுக்கு எங்கெங்கே மச்சங்கள் இருந்தன என்பதும்கூட என் அலுவலகத்துக்குத் தெரியும். என் புத்தகங்கள் அலுவலக அலமாரியிலேயே இருக்கின்றன.

பெரும்பாலும் பிரீமியர் ஏஜென்சிகள், ஊழியர்களைத் தம் வேலைக்காரர்களாய் நடந்துவதில்லை. காரியம் மட்டுமே அவற்றின் குறிக்கோள், வறட்டு கெடுபிடியன்று. அவற்றின் அதிகாரிகள், மனமுவந்த, 24 மணிநேர சுதந்திரக் கொத்தடிமைகள்.

மேலும், கூர்ந்து கவனித்தால், காரியம் நடக்கும் முன் ஓர் அசைகூட என் எழுத்தில் வெளிப்பட்டிருக்காது. ஏனெனில், என்ன நடக்கப் போகிறதென, சாத்தியப்படுத்தப் போகிறவர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை. வண்டியோட்டுனருக்கேகூட (அர்ப்பணிப்பின் அங்கீகரிப்பாய் மூவரில் இருவர் ஜனாதிபதி பரிசால் கெளரவிக்கப்பட்டவர்கள்) எந்த ஏரியாவுக்குப் போகப்போகிறோம் என்பது என்ஜின் உயிர்த்த பின்னரே தெரியவரும்.    குழு அதிகாரிகளுக்கு, அவரவர்க்கான கண்ணிகள் மட்டுமே காட்டப்படும். ஒட்டுமொத்த படமும் அறிந்த உயர் அதிகாரிகள் ஓரிருவர் இருந்தாலே அதிகம்.

மத்திய அரசுத் துறைதான் ஆனால், அரசியல் / அதிகாரத் தலையீடுகள் அநேகமாகக் கிடையாது. அப்படியே அழைப்பு வந்தாலும் கண்டிப்பாகச் செய்கிறோம் என கண்ணியமாய்க் கூறிவிட்டு, தொலைபேசி துண்டிக்கப்பட்டதும் எதுவுமே நடவாததுபோல், சட்டப்படி ஆகவேண்டிய காரியத்தைப் பார்த்துக்கொண்டு செல்பவர்கள் என்பதால் மறு அழைப்பு வருவது அபூர்வம். எப்போது வேண்டுமானாலும் இட மாற்றலுக்குத் தயாராய் இருக்கும் சமரசமற்ற நேர்மையான உயர் அதிகாரிகள் விரும்பி வரும் இடம் என்பதால் குறுக்கீடுகள் கிடையாது. 

கிரிமினல்கள் மட்டுமன்று, அதிகாரிகளின் நடவடிக்கைகளும் கண்காணிப்பில் இருந்துகொண்டே இருக்குமிடம்.

இதெல்லாம் வேண்டாமே என மேலதிகாரி நினைப்பதுபோல் சிறு சம்சயம் தோன்றும்போதே இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு வெளியேறிவிடுவேன் - மேலதிகாரி வாய் திறந்து சொல்லவேண்டிய அவசியமில்லை. இணையத்தைவிட இங்கு விரியும் இருள் உலகின் வண்ணப் பாத்திரங்களின் இண்டு இடுக்குகள்தாம் தேடல் உள்ள மனிதனாக எனக்கு முக்கியம். இதையெல்லாம் எழுத முடிகிறதா இல்லையா என்பது இரண்டாம்பட்சம்.

ஓய்வுபெற்ற பின்னும் இங்கே நாம் ஊழியம் செய்தோம் எனப் பெருமையுடன் நினைத்துப் பார்த்துக்கொள்ளத்தக்க அலுவலகம் என்பதில் ஐயமில்லை.