23 March 2014

ஐராவதம் - இறப்பும் துறப்பும்

ஐராவதம் என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.

இரண்டு நாட்கள் முன் இந்த வரியை மட்டும் எழுதிவிட்டு, மூன்று போட்டோக்களை மட்டும் எடுத்ததோடு சரி. வேலை அலைச்சல் காரணமாய் மேற்கொண்டு எழுதமுடியவில்லை.

ஐராவதத்தை, திருவல்லிக்கேணி இலக்கிய சத்சபையில் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். பொதுவாக சிரித்த முகம். அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேசுபவரில்லை எனத் தோன்றும் அமரிக்கை. நடையுடை பாவனைகள் காரணமாய், ரொம்ப முதிர்ந்த ஆழமான மனிதர் என்கிற அபிப்ராயமே அவரைப் பற்றி எவருக்கும் உருவாகக்கூடும்.

95ல் சந்திரமெளலியின் நவீன விருட்சத்தில் எனது அறியாத முகங்கள் இரண்டாம் பதிப்பு மற்றும் உயிர்த்தெழுதல் என இரண்டு புத்தகங்களுக்குமாய் சேர்த்து ஒரு அச்சுபிச்சு விமர்சனம் எழுதியிருந்தார். குறைகூறியது மட்டுமின்றி பாராட்டியதும் அப்படித்தான் இருந்தது. இன்றைய பதிவ எழுத்தாள கேங்குகள் போல் புத்தக விமர்சன மாநாடு பேரணியெல்லாம் நடத்தும் சூழல் அன்றில்லை. அன்றைய தமிழ் குற்றுயிர் இலக்கியச் சூழலில் எவராவது நம் எழுத்தைப் பற்றி எதையாவது எழுதிவிட்டாலே லாட்டரிச் சீட்டில் லட்சங்கள் அடித்தற்கு சமானம். இதில் எந்தக் குழுவிலும் சேராதவனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவன் சர்வதேச அநாதை.

க்ரியாவிலா அல்லது டிரைவ்-இன்னிலா என்று துல்லியமாய் நினைவில்லை. அவரை நேரில் சந்திக்க நேர்ந்தபோது, என் புத்தகங்கள் பற்றி, தாம் எழுதியிருந்த விமர்சனம் குறித்துக் குறிப்பிட்டுக் ’கோபம் இல்லையே’ என்றார் லேசாகச் சிரித்தபடி.

’உங்க அபிப்ராயத்தை நீங்க எழுதியிருக்கீங்க. அதுல கோபப்பட என்ன இருக்கு’ என்றேன். 

இத்துனை நாகரிகத்தை என்னிடம் எதிர்பாராதவர்போல் ஆச்சரியம் வெளிப்படையாய்த் தெரிய, பார்த்தார்.

’அதை நான் அப்படியே ஒத்துக்கறேனாங்கறது டோட்டலா வேற விஷயம்’ என்றேன் நகைத்தபடி.

’அதானே பாத்தேன். என்னடாது எதுர்ல இருக்கறது கேள்விப்பட்ட மாமல்லனாட்டமே இல்லையேனு பாத்தேன்’ என்றார் குலுங்கிச் சிரித்தபடி.

வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளூரக் கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் (89ல் எழுதிய நிழல் தவிர்த்து) எதுவுமே எழுதாமல் இருந்து, ஆறு மாதத்தில் எட்டு கதைகள் எழுதிவிட்டுத் திரும்பப் பதினாறு வருடங்கள் காணாமல் போகப்போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

எல்லாவற்றையும் ஒரே நிறையில் வைத்துப் பார்க்கும் இணையத்துக்கு கொண்டாடிக்கொண்டே இருக்க ஏதாவது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிடைத்தது இறப்பென்றாலும் பரவாயில்லை. வெகுஜன பிரமுகக் கலைஞனின் இறப்பிற்கு இணையம் காட்டும் ஆவேசம் புல்லரிக்க வைக்கிறது. உண்மையில் அவரவர் எழுத்துத் திறமையை இணையத்தில் வெளிப்படுத்திக் கொள்ளக் கிடைத்த  சிறந்த வாய்ப்பாய்தான்  அது உள்ளூரப் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவை வைத்து பேமசாவது அப்படியொன்றும் புதிய விஷயமில்லை

தமிழ் நாட்டைக் கலக்கிய ஷோபாவின் அகால தற்கொலை மரணம், அதுவரை கவியரங்குகளிலும் பழுப்புத்தாள்களில் பின்னடித்த பத்திரிகைகளிலும் மட்டுமே பிரபலமாகிக்கொண்டிருந்த வைரமுத்துவை, ஆனந்தவிகடன் அலுவலக வரவேற்பறையில் அப்போதைய ஆசிரியர் பாலசுப்பிரமணியனை சந்தித்தால்தான் ஆயிற்று என உள்ளிருப்புப் போராட்டம் நிகழ்த்தி, ஷோபா பற்றி, தான் சோறு தண்ணி இல்லாமல் எழுதிய கவிதை எனச் சொல்லி பிரசுரிக்க வைத்து சினிமா உலகில் லட்சம் விசிட்டிங் கார்டுகளாய் விநியோகித்துக் கொள்ளப் பயன்பட்டது.

சாவித்திரி இறந்த செய்தி கேட்ட பதற்றத்தில் லேம்ரெட்டாவின் செண்ட்டர் லாக்கைக்கூடத் திறக்க மறந்து ராயப்பேட்டையிலிருந்து அண்ணா நகருக்கு தெருக்களில் அப்படி இப்படி திருப்பாமலே உணர்ச்சிப் பெருக்கில் ஹாண்டில்பாரை நடுசெண்ட்டரில் நேராகப் பிடித்தபடி தம்மை மறந்து ஓட்டிச்சென்றதாய் எழுதினார் பாலகுமாரன். நம்ப பால குமாரிகள் இருக்கையில் நம்ப பாலகுமாரனுக்கு எழுத என்ன முடை?
செண்ட்டர் லாக் போடப்பட்டிருப்பின் இந்த வண்டியை சினிமாவில்கூட, ஓட்டுவது ரஜினியாகவே இருந்தாலும்கூட, சந்து பொந்து திரும்பாமல் ராயப்பேட்டையிலிருந்து அண்ணா நகருக்கு நேராக ஓட்டிக்கொண்டு செல்லவேண்டுமென்றால் ஹெலிகாப்டர் போல ஓட்டினால்தான் உண்டு. ஆனால் எழுத்தில் ஓட்டிக்காட்டினார் எழுத்துச் சித்தர். அவர் ஏணிப்படி ஏறுவதில் ஜித்தர் என நிரூபிக்க சாவித்திரியின் சாவு பயன்பட்டது.

உண்மையான எழுத்தென்பது எழுத்துகள் மூலம் உண்மையைச் சொல்ல முயல்வது. செழிப்பான கற்பனை என்பதன் பேரால் பொய்க்கு தூபம் போடுவதன்று.

எழுத்தின் மூலம் லோகாதய இலக்கு எதையும் அடையும் எவ்வித முகாந்திரமுமின்றி, தோன்றினால் தோன்றும்போது தோன்றியது போல் எழுதும் பேக்காக இருப்பதில் கிடைக்கும் ஆனந்தம் எல்லாம் அடைந்த ஃபேக்காக இருப்பதில் கிடைக்குமா? அவரவர்க்கு வேண்டியது அவரவர்க்குக் கிடைக்குமாய் இருக்கும்.

ஐராவதத்தின் எழுத்தென்று என்னிடம் இருப்பது இது மட்டுமே. 

உயிர்த்தெழுதல், அறியாத முகங்கள் தொகுப்புகளுக்கு  நவீன விருட்சத்தில் ஐராவதம் எழுதிய விமர்சனம்:

மீண்டும் எழுத வந்தவர்கள் எனக்குத் தெரிந்து இரண்டு பேர்கள்தான். ஒருவர் . பிச்சமூர்த்தி. மற்றொருவர் சுந்தரராமசாமிஇவர்கள் இருவரின் பிற்காலத்தில் எழுதிய கதைகளில் அறிவுபூர்வமான தத்துவச்செறிவுடன் கூடிய அம்சங்கள் அதிகம் இடம்பெற்று உணர்ச்சிகளும் சாதாரண வாழ்க்கை அனுபவங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இப்பொழுது விமலாதித்த மாமல்லன் சிலவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிறுகதை புனைய வந்துள்ளார்


அறியாத முகங்கள் என்ற பதினோரு கதைகள் அடங்கிய தொகுப்பு 1983 டிசம்பர் மாதம் முதல் பதிப்பாக வெளியாகி 1994 டிசம்பரில் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. உயிர்த்தெழுதல் என்ற ஏழுகதைகள் அடங்கிய தொகுப்பு டிசம்பர் 94-ல் முதல் பதிப்பு கண்டுள்ளது


அறியாத முகங்கள்:


முதல் கதையான இலை, ஒரு மாமி தன் வீட்டு கொல்லைப் புறத்தில் வளரும் ஒரு கறிவேப்பிலை மரத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டுவிடுவதை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்கிறது. கதை சொல்கிறவர் குரல் உயர்த்தாமல்கேலி கொப்பளிக்க கதை இயல்பாக நடத்தப்படுகிறது.


ஆனால் மாமா பற்றிய பகுதிகளில்த கவல்கள் உறுத்தலாக தம்மை வெளிக்காட்டியபடி நிற்கின்றன.


ரிடையர் ஆனதிலிருந்து தான் சாவகாசமாக பேப்பர் படிக்க முடிகிறது என்பதில் அவருக்கு பெரும் திருப்தி (பக்கம் 13)


தமக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி விடாமல் அதற்குள்ளேயே தம்மால் இயன்ற அளவிற்கு பௌருஷத்துடன் இருக்கப்பழகி அநேக ஆண்டுகளாகிவிட்டன அவருக்கு (பக்கம் 15)


காலையிலிருந்தே ஈஸிச்சேரும் பேப்பருமே கதி என்று கிடந்தவர் அன்று முழுக்கவும் அப்படியே இருக்க தீர்மானித்து விட்டிருக்க வேண்டும் (பக்கம் 20)


இந்த மூன்று வாக்கியங்களும் நீக்கப்பட்டிருந்தால் கதை மேலும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.


இழப்பு என்ற கதையில் வண்ண நிலவனின் பாதிப்பு தெரிகிறது. அறியாத முகங்கள், பெரியவர்கள் கதைகளில் முறையே அசோமித்திரன், பாலகுமாரன் பாதிப்பு தெரிகிறது.


போர்வை, தாஸில்தாரின் நாற்காலி, வலி ஆகிய கதைகள் திறம்பட எழுதப்பட்டு நம் கவனத்தை ஈர்க்கின்றன.


உயிர்த்தெழுதல்:


இரண்டாவது தொகுப்பான உயிர்த்தெழுதல் உக்கிரமும் தீவிரமுமான கதைகளை உள்ளடக்கியது. முதல் கதையான நிழல், மரபு வழிவந்த கதை சொல்லும் உத்திகளை கைவிட்டு இருண்ட உலகங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது அங்கு மொழியே தோற்றுப் போகிறது. சாவும் வாழ்வும் சந்திக்கின்றன. இருந்தாலும் பிரக்ஞை நிலையும் கரைந்து போகின்றன. ஊடுருவிச் செல்லும் வழித்தடம் மௌனம் என்ற குகைக்குள் நம்மை கொண்டு செலுத்துகிறது.


புள்ளிகள் என்ற கதையும் குறிப்பிட வேண்டியது. அழகான மனைவி வாய்க்கப்பெற்ற கமலபதி ராவ் அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் கேள்வியின்றித் தொடரும் அவலத்தை அப்பட்டமாய் சித்தரிக்கிறது.


உயிர்த்தெழுதல் கதைத் தொகுப்பில் ஆசிரியரின் மொழிப் பிரயோகம் முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.


எஸ்ரா பவுண்டு கவிதை பற்றி சொல்லும் வரி இங்கு பொருந்தகிறது. வார்த்தைகள் Charged with meaning என்கிறார். மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினின்பம் என்றாரே பாரதி. நெருப்பென்றால் வாய் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே லா. . ரா அதுபோலவே விமலாதித்த மாமல்லன் வார்த்தைகளை கவிதை அவற்றிற்கு தரும் கௌரவத்துடன் பயன்படுத்துகிறார்.


கோலரிட்ஜ் கவிஞன் பற்றிச் சொல்லானே 'மனிதனின் முழு ஆன்மாவையும் ஆட்டுவிக்கிறான். த்வனியும் ஜீவனும் கலந்து மிளிரச் செய்கிறான். இவை கற்பனை என்னும் மந்திர சக்தியால் ஒன்றுபடுகின்றன. ஒன்றுடன் ஒன்று பொருந்திவராத தன்மைகள் சம நிலையில் பிணைக்கப்படுகின்றன. அதிகபட்ச உணர்ச்சிகள் அதிகபட்ச ஒழுங்குடன் நம் கண்முன் நடனமாடுகின்றன. இந்த வரிகள் விமலாதித்த மாமல்லனின் நடையழகிற்கு முற்றிலும் பொருந்தும்.


ஸ்டெல்லா ப்ரூஸ், கண்ணன் மகேஷ், இரா. முருகன், கோபிகிருஷ்ணன், அனுராதா ரமணன் போன்ற நாவல், சிறுகதையாசிரியர்கள் ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் இந்த வரிசையில் இடம்பெறவில்லை என்றே நினைக்கிறேன். ஆசிரியர் உரை நடையில் கவிதையின் கச்சிதம், கம்பீரம், கலை நயம் இவற்றை விமலாதித்த மாமல்லன் பாங்குறவே பிரதிபலிக்கிறார்.


வால்டர் பெஞ்சமின் சொல்லுவான் நடந்த நிகழ்ச்சி, அனுபவம் என்ற அளவில் முடிந்துவிடுகிறது. நினைவில் கொள்ளும் நிகழ்ச்சியோ எல்லையற்றது; அதற்கு முந்திய அநேக விஷயங்களை அது தெளிவுபடுத்துகிறது; அதுபோலவே பின்வரப்போகும் எல்லா சமாசாரங்களையும் அது உள்ளடக்கியதாகிறது.' இந்த நிலைக்கு தன் கலை முயற்சிகளை உயர்த்தியிருக்கும் விமலாதித்த மாமல்லன் நம் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உரியவராகிறார்.