02 April 2014

இணைய இலக்கிய வாசிப்பு


பெருமாள் முருகன் காண்டாமணி என்று தவறாகச் சொன்னாரா, இல்லை இவர் அதை எழுத்துப் பிழையோடு மனதில் வாங்கிக்கொண்டாரா என்று தெரியலை. ஆனால் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை காண்டாமணி இல்லை கண்டாமணி 1966ல் கல்கி தீபாவளி மலரில் வெளியானது.

பெருமாள் முருகன் தவறாகச் சொல்லியோ அல்லது அவர் சரியாகச் சொல்லி இவர் தவறாகப் புரிந்துகொண்டு எழுதியிருப்பதுபோலவோ அந்தக் கதையின் முடிவும் கண்டாமணியைத் திரும்ப வாங்கிக்கொள்வதாக இல்லை. திரும்ப வாங்கிக்கொள்ள முயன்றும் முடியாமல் போவதாகத்தான் இருக்கிறது.

பாவ மன்னிப்பு அல்லது குற்றவுணர்விலிருந்து விடுபடல் வாரந்தர வாடிக்கையல்ல என்பதில் இருக்கிறது கதையின் கத்தி வெட்டு. அதுவும் கதையின் இறுதிப் பகுதியில் வருகிறது.

தயவுசெய்து கண்டாமணி கதையைப் படியுங்கள். 

தி.ஜா கதைகள் தொகுதி-1 ஐந்திணை 376வது பக்கம்.

எனக்கு ஒன்று புரியவில்லை.

பெருமாள் முருகன் சிறுகதை படியுங்கள் என்று எப்போதோ பேசி தி.ஜாவின் ஒரு சிறுகதையின் சுருக்கத்தைச் சொல்லி இருக்கிறார்

இவருக்கு அந்தக் கதையைப் படிக்கும் ஆர்வத்தைவிட எல்லோருக்கும் பயன்படும் என்பதன் பேரால் இணையத்தில் அதைப் பகிர்வதில்தான் அதிக ஆர்வம் இருக்கிறது.

எவ்வளவு படிக்கிறோம் என்பதில் குறியாயிருப்பதைவிட எவ்வளவு தோய்ந்து படிக்கிறோம் என்பதில் கவனத்தைக் குவிப்பதே நம்மை ஆழமாக்கும்.

காலையில் இந்தப் பதிவைப் படித்தவுடன் இதை எழுதத் தொடங்கினேன். அப்போது இதை 18-20 பேர் விரும்பியிருந்தனர். இப்போது கிட்டத்தட்ட 93 பேர் லைக் செய்திருக்கின்றனர். இன்னமும் காண்டாமணி என்றே இருப்பதைக் காண வருத்தமாய் இருக்கிறது. கோயிலில் கட்டப்படுவது கண்டாமணி என்பது இவர்களில் ஒருவருக்குக்கூடவா தெரியவில்லை. 
<2010-ல் ஈரோடு சங்கமம் நிகழ்வில் ‘சிறுகதைகளை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.


அப்போது - அதைப் பகிர்ந்திருந்தேன். இப்போது படிக்கையிலும் மிக உபயோகமாக உள்ளது.>

2010லும் இவர் கண்டாமணி சிறுகதையைப் படிக்கவில்லை. 2014லிலும் படிக்கவில்லை. ஒரு பதிவாகப் போடத்தான் பயன்படுகிறார் பாவம் தமிழின் தலையாய கலைஞனான தி. ஜானகிராமன்.
அசலைப் படியுங்கள். அதுதான் உண்மையான ஊட்டச்சத்து. ஆனால், அவர் சொன்னார் இவர் சொன்னார் என தப்பும் தவறுமான கதைச் சுருக்கத்திலேயே இதுபோல் காலம் தள்ளுவதாகத்தான் இருக்கிறது இணைய இலக்கிய வாசிப்பு.

இதில், ஓசியில்தான் படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்பவராய் இருந்தாலும் பரவாயில்லை. இலக்கியம் படிப்பவர்களுக்குக் கோயில் கட்டிக் கண்டாமணியடித்துக் கும்பிடவேண்டும்.  என்ன இருந்தாலும் நேரமொதுக்கிப் படிப்பதே இவர்கள் எழுத்தாளனுக்குச் செய்யும் பெரிய தியாகம் அல்லவா.