28 April 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


ஜெயகாந்தனாகிய ஜெயகாந்தனாகிய ஜெயகாந்தனாகிய நான்னு சொல்லிகிட்டுக் கால் மேல காலைத் தூக்கிப் போட்டுகிட்டு உக்காந்தா உங்களால என்னா செஞ்சிட முடியும். இது என் இடம். இங்க என்னை யார் கேள்வி கேக்க முடியும். ஆனா நல்லா இருக்குமா. நான் சொல்லக்கூடாது. ஜெயகாந்தனாகிய இவன்னு நீங்க சொல்லணும். அதான் எனக்கு மரியாத.

யருமே எதையுமே கேட்கப்போவதில்லை கேட்க முடியாது அல்லது கேட்க மாட்டார்கள் என்பதற்காக மட்டுமே ஒன்றைச் செய்வது அல்லது செய்யலாம் என்று எண்ணுவதற்குப் பெயர் சுய மரியாதை அன்று ப்படிச் செய்வது எதன் மீதும் மரியாதையற்ற செயலாகும்.

என் இடம் என் இடம்ங்கறது, இந்த மடத்துக்கு நான் வாடகை குடுக்
குறேங்கறதால இதை என் இடம்னு சொந்தம் கொண்டாடிக்கிறதுக்கு சமானம். எழுத்தாளன் என்கிற ஸ்தானம் சுயார்ஜிதம்தான் எனினும் அது க்களால் மனமுவந்து அவனுக்கு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். அரசன் அதிகாரத்தால் எடுத்துக் கொள்பவன். கலைஞன் சமூகத்துக்குக் கலையை அளிப்பதால் எடுத்துக்கொள்ளும் பாத்யதை உள்ளவன். ஆனாலும் சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமாகிப் பெறுகையில்தான் அவன் மக்களின் கலைஞன் ஆகிறான்.

பேச்சு இப்படிப் பின்னிப்பின்னி போய்க்கொண்டே இருக்கும். எங்கு எப்படித் தொடங்கிற்று எங்கு எப்படி முடிந்தது என்பதைப் பற்றி சபைக்கென்ன கவலை. ஆங்காங்கே தன்னிச்சையாய் விழும் வீச்சுகளை எற்கிறோமோ இல்லையோ ரசிக்காமல் இருக்க முடியாது. பாதி நாடகீய மேடைப்பேச்சும் மீதி அச்சில் ஏற்ற முடியா காற்றில் வீசும் ஏச்சுமாய் போய்க்கொண்டிருக்கும்.

வாசகன் படிப்பு வாசனையே இல்லாதவன் இருவரிடமும் இருக்கும் பொதுவான ஜெயகாந்தனின் பிம்பம் திமிர் பிடித்தவர், யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எடுத்தெரிந்து பேசிவிடக்கூடியவர் என்பதுதான். அது குறித்து அது போன்ற ஆட்களிடத்தில் மரபு சார்ந்த சமூகம் அசூயை கொள்வதே இயல்பு. ஆனால் அதற்கு நேரெதிராய் அவரது திமிர், ஆண்மையின் எழுத்து ஆளுமையின் கம்பீரமாய் பார்க்கப்பட்டது. எல்லோரும் ஆதரிக்கும் ஒரு விசயத்துக்கு ஜெயகாந்தன் எதிர் கோணம் எடுப்பார். அதை தர்க்க ரீதியாய் நிறுவவும் செய்வார். எல்லா சமயங்களிலும் அவர் சொல்வது சரியாய் இருக்காது எனினும் அதற்கு அவர் பயன் படுத்தும் உவமைகளும் உருவகக் கதைகளும் சரம்சரமாய் வந்து விழும் வார்த்தைப் பிரயோகங்களும் கருத்தை ஏற்காத எதிர் தரப்பையும் ரசிக்க வைக்கும். சுழன்று சுழன்று ஒன்றிலிருந்து ஒன்றாய் விரியும் கருத்தொட்டம் ஆஹா ஆஹாவென சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கும். அவரது கதைகளைப் போலவே அவர் உரையாடலுக்கானவர் அல்ல. பிரசங்கி. அவர் பேச நாம் கேட்க ஒத்திசைவோடு இருந்தால்தான் சபை களை கட்டும். இங்கு நான் மட்டும் பிரசங்கிப்பேன் நீ கேள் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. எழுத்தாளர்களில் எழுத்தாளர்களையும் வாசகரையும் பேசவிட்டுக் கேட்பவர்கள் அரிது. ஆனால் அதை யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஜெயகாந்தனின் இந்தப் பிரகடணம் அவரிருக்கும் இடத்தின் காற்றில்கூட எழுதப்பட்டிருக்கும். அது சரி அவர் பேசி நாம் கேட்க விருப்பமுள்ளவந்தானே அங்கே போகவும் செய்கிறான்.

வெறும் சந்தத்துக்காகவும் சத்தத்துக்காகப் பேசுவதுமே ஃபேஷனாய் இருந்த திமுக மேடைப்பேச்சுக்கு எதிர்மாறாய் தர்க்க பூர்வமாய் வீச்சரிவாள் போல் வேகத்துடன் வந்து விழுந்தது அவரது தமிழ்.

நீங்களா இந்து மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள். என்ன அபத்தம். உங்களையல்லவா இந்து மதம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.

என்று அதிகார பூர்வ இந்துத்துவர்களைப் பார்த்து பரிகசிக்க இணையமில்லா காலத்தில் எத்தனைப் பேரால் முடிந்திருக்கும்.

ஜெயகாந்தனின் கர்ஜிக்கும் எதிர்க்குரல் எப்போதும் எதிரியின் மீதான காழ்ப்பு மண்டிய குரலாய் இருந்ததில்லை என்பதும் அவரது திமிர் சிலாகிப்பாய் ரசிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம்.

உண்மையில் பார்க்கப் போனால் ‘திமிர்’ பிடித்த ஜெயகாந்தன், ஒருபோதும் உயர்ந்ததை உதாசீனப் படுத்தியவரில்லை.

டெல்லில ஃபில்ம் ஃபெஸ்டிவல். முதல் நாள்லேந்தே நம்ம படத்துக்குதான் தேசிய விருதுன்னு எல்லாரும் வாழ்த்து சொல்லிகிட்டு இருக்காங்க. நம்ம உசரம் நமக்குத் தெரியாதா. அடப் போங்கைய்யானு கியூல நிக்கிறேன். எங்க?

சாருலதாவுக்கு.

ஹாஹ்ஹாஹ்ஹா ஒய் நீர் சரியான ஆளுங்கானும். ஆமா என் படம் இன்னோரு தியேட்டர்ல ஓடிகிட்டு இருக்கு. நானோ வரிசையில் ஒரு பார்வையாளனாய் தரிசனத்துக்காக நிற்கும் பக்தனாய் பரவசத்துடன் சாருலதா பார்க்க நின்றிருந்தேன். ஸத்யஜித் ரே அவரு என்னா உயரம் சாருலதா முன்னாடி நாம எங்க. என்னா படம் எப்பேர்ப்பட்ட படம் அது.

கைகளைத் தூக்கிக் கூப்பிக் கண்மூடியிருந்த ஜெகேவுக்காகக் காத்திருந்தது கனன்றுகொண்டிருந்த கஞ்சா சிலும்பி. சபை மெளனத்தில் மூழ்கியிருந்தது.

மோகா குத்திரிக்காலக் கொண்டா

சபையின் உதவியாளராயிருக்கும் மோகன் கத்தரிக்கோலைக் கொண்டுவந்தார்.

என்ன அப்படிப் பாக்கறீங்க. கத்த்ரிக்கோலை கத்தரிக்கோல்னே எத்தனை காலத்துக்கு சொல்லிகிட்டு இருக்கறது போரடிக்காதா அதான்.

அதான் ஊத்திகிட்டு இருக்கேன்ல எல்லாருக்கும் அது என்ன உம்ம கிளாசை மட்டும் முன்னாடி நீட்டிகிட்டு. வயதான பெரியவரைக் கடிந்து கொள்கிறாரே என தோன்றுவது முதல் முறை பார்க்க நேர்கிறவருக்கு ஜீரணிக்க சற்று சிரமமாகக்கூட இருக்கும். ஏனெனில் பாலனும் ஒவ்வொரு நாளும் காலி கிளாசை முன்னால் நீட்டுவதும் அதற்கு ஜேகே ஒவ்வொரு முறையும் இதையே போரடிக்காமல் சொல்லுவதும் போகப்போகப் பழகிவிடும்.

கோபத்தில் திட்டுவதும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சுவதும் சபையின் குருவுக்கு சகஜம். இங்க நிறைய தடவை நிறைய பேருக்கு மெமோ குடுக்கப்பட்டிருக்கு. கொடுத்த மெமோ சபை முடியும்போது இங்கேயே கிழித்துப் போடப்படும். ஹாஹ்ஹஹ்ஹா. சந்தோஷத்தின் உச்சத்தில் வரங்கள்கூட கொடுக்கப்படும்.

குருவை சீடன் ஒரு டீயில புடிச்ச கதை தெரியுமா. உமக்கு சொல்லியிருக்கேனா.

இல்ல ஜேகே.

விவேகானந்தர் ஒரு நாள் ரொம்ப பிரியமாயிட்டாரு. சிக்கன் பிரியாணி சாப்ட்டுட்டு சிகரெட் பிடிப்பாரு விவேகானந்தர் தெரியுமா. அப்படி ஒரு நாள் ரொம்ப குஷியா இருந்தப்ப உனக்கு என்ன வரம் வேணும் கேள்னாரு. நம்ப மோகா போல இருந்த உதவியாளனை. அவன் என்ன கேட்டான் தெரியுமா.

ஆழ்வார்பேட்டை தெருவைப் பார்த்த கதவுக்காய் அமர்ந்திருந்த லெனின் அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்தார். நெடுநாளைய அங்கத்தினரான அவர் பலமுறை கேட்டிருப்பாராயிருக்கும் அந்தக் கதையை.

விவேகானந்தர் கேட்டார் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்.

டெய்லி நீங்க காலைல எழுந்ததும் குடிக்கிற டீ என் கையால குடுக்கறதா இருக்கனும் குருவேன்னான் சீடன்.

கெட்டியா புடிச்சிகிட்டான். தான் இருக்கும்வரை அவனைக் கூட வெச்சிகிட்டே ஆகணுமில்ல விவேகானந்தர். 

விவேகானந்தர் வேஷம் போட்டா உங்குளுக்குக் கச்சிதமா இருக்கும். இதை சொன்னது ’உம்ம’ சுந்தர ராமசாமி தெரியுமா ஓய்.

அடுத்த முறை சுந்தர ராமசாமியைப் பார்க்க நேர்ந்தபோது என்னுடைய முதல் கேள்வி வேறு என்னவாய் இருந்திருக்க முடியும். விவேகானந்தர் மாதிரி இருக்கீங்கனு ஜெயகாந்தனை சொன்னீங்களா ராமசாமி.

ம். சொல்லியிருப்பேன். ஆமா ரெண்டு பேருக்குமே சதுரமா வெட்டி வெச்சாப்புல முக அமைப்பு இல்லியோ.

அநேகமாய் ஆழ்வார்ப்பேட்டை மடத்துக்கு வந்து செல்லாத ஒரு காலகட்டத்து இலக்கியவாதிகளே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ஜேகே ஜி நாகராஜனோட… யாரோ ஒருவர் ஆரம்பித்தார் ஒரு நாள்.

நான் கடைசியா அவனைப் பார்த்தது ரயில்ல. சுத்தியும் எச்சியும் கோழையுமா கக்கூஸ்கிட்ட சுருண்டு கிடந்தான்.

சுருக்கென்றது. இவ்வளவு இன்சென்சிடிவா என்று துணுக்குற்றது மனம். ஆனால் ஜி.என்னின் கடைசி காலத்தின் உறைந்த சட்டகம் அதுதான் என்பதை எப்படி மறுப்பது.

என்னா உயரம் என்னா ஆகிருதி. என்னா படிப்பு. ஜீனியஸ். நாகராஜன் வகுப்பெடுக்கிறார்னு மதுரை சினிமா தியேட்டர்கள்ல ஸ்டில் போடுவாங்க. சராயத்தையும் கஞ்சாவையும் அடிச்சிகிட்டு நான் சொல்றேன். எழுத்தாளனுக்கு எதாவது ஒரு போதை வேணும். ஆனா போதை அவனுக்கு அடிமையா இருக்கணும் எப்போ அவன் அதுக்கு அடிமை ஆகறானோ அதோட அவன் ஆட்டம் காலி. அதுக்கு சரியான வாழ்ந்து சீரழிஞ்சி செத்த உதாரணம் நாகராஜன்.

ஆனா அவர் எழுத்து ரத்தமும் சதையுமாய் ஆனதுதில்லையா ஜேகே.

எழுத்து ரத்தமும் சதையும்தான் ஆனா அவர் வாழ்க்கை சொறியும் சிரங்குமா ஆயிடுச்சே.

அவ்வளவுதான். அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள்தான் எதிர் தரப்பின் சதிராட்டம் என்று அமைதியடைய வேண்டியதுதான் என்று தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டேன். என் மெளனத்தைப் படித்தவராய் ஜெயகாந்தன் தொடர்ந்தார்.

எழுத்தாளன், நிஜமாவே எழுதாளனா இருக்கிறவன் சின்ன வயசுலையே செத்துறணும். இல்லாட்டி சீரழிஞ்சி போயிருவான். நல்ல காலம் பாரதி சின்ன வயசுலையே செத்துப் போனான். இல்லாட்டி கோடம்பாக்கத்துல சினிமாவுக்குப் பாட்டெழுத சான்ஸ் கேட்டு சின்னாபின்னமாயிருப்பான்.

ஆல மரம் ஆல மரம் 
  பாலூத்தும் ஆல மரம்
காலத்தின் கோல மெல்லாம் 
  கண்டுணர்ந்து நின்ற மரம்.