13 July 2016

மொக்கை சூழ் இணைய உலகு

பெருமாள்முருகன் விவகாரத்தில் உன்னத இலக்கியம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய், ஊரே ஊளையிட்டுக் கதறியபோதுதான், 1994க்குப் பிறகு  உண்மையிலேயே எழுதுவதற்கான உந்துதலைப் பெற்றேன்.

2010ல் எழுத்துக்குத் திரும்ப வர அலுவலகத்தால் நிர்பந்திக்கப்பட்டதில் இருந்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த 2015 பொங்கல் வரை எழுதியவற்றை எல்லாம், எதையும் கதையாக எழுத முடியும் என இணையத்துக்குக் காட்ட எழுதியவையாகவே கணக்கில் எடுப்பேனேயன்றி என் தரத்து இலக்கியமாக அல்ல. 

ஆக பெருமாள்முருகன் போன்ற ஒரு சாதாரண எழுத்தாளர், இலக்கியமாக ஒன்றைப் பார்க்கவும் தெரியாமல் ஆக்கவும் தெரியாமல் இழுத்துவிட்டுக் கொண்ட பிரச்சனை காரணமாக, எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று அறிவித்ததால் மட்டுமே உயர்ந்த இலக்கியவாதியாகக் கொண்டாடப்படுவதைக் காணச் சகியாது எழுந்த ஆவேசமே, அதுகாரும் ஏன் ஒன்று இலக்கியமில்லை இன்னொன்று எப்படி இலக்கியம் ஆகிறது என்று விமர்சகனாக எழுதிவந்த என்னை தரமான இலக்கியம் எது என்று காட்ட என்னையே படைக்கும்படி உந்திற்று. 

எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப் படாத என் பிறவிக் குணத்தைப் போலவே, என் படைப்பைப் பற்றி விதந்தோதிக்கொள்ளாத என் இயல்பான அடக்கத்தையும் இப்போது கைவிடச் செய்துவிட்டன இந்த உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பும் அதன் பின்வினைகளாக ஊடகங்களில் ஊதப்பட்டுக்கொண்டு இருப்பவையும். எழுதத் தெரியாமல் முதிர்ச்சியற்று எழுதி மாட்டிக்கொண்ட ஒன்றுக்கு, உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளித்துவிட்டதாலேயே அது உயரிய இலக்கியமாகிவிடுமா என்ன. இலக்கியத்தின் தரத்தைத் தீர்மானிக்கவென்று இனிமேல் புதிதாக சட்டமியற்றினால்தான் உண்டு. 

மாதொருபாகனை நான் இன்னும்கூட முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் அங்குமிங்குமாகக் கண்ணில்பட்ட இடங்களே இலக்கியத்துக்கு சம்மந்தமேயில்லாத கண்றாவிகளாக இருக்கின்றன. எனவே நாவல் பற்றிய விமர்சனத்தைத் தனியாக வைத்துக் கொள்ளலாம்.  

கோபுரம் - திருச்செங்கோடு

பெருமாள்முருகன் எழுதுவதை நிறுத்திக்கொண்டதால் இலக்கியம் அஸ்தமித்துவிட்டதைப் போல இணையத்தில் கிளப்பப்பட்ட மாயையே என்னை கோபுரம் கதையை எழுத வைத்தது.

மாதொருபாகனும் பெருமாள்முருகனும் போக இந்துத்வர்களின் இன்னொரு எதிர்ப்பு இலக்கான காலச்சுவடிலேயே அந்தக் கதை வெளிவந்தும் ஏன் எந்த எதிர்ப்பும் எழவில்லை. 

கோவில், ஓவியன், தெய்வச்  சிலை சிதைப்பு, கலவரம் என இந்துத்துவர்களை சீண்ட இவை போதாவா என்ன. எல்லாம் இருந்தும் அதற்கு மூன்று மாதங்கள் முன்பாக அவர்கள் கொளுத்திய புத்தகத்தைப் பதிப்பித்த, அவர்கள் கட்டோடு வெறுக்கும் பத்திரிகையிலேயே இந்தக் கதை வெளிவந்தும் எப்படி இந்துத்துவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை.

அவர்களுக்கு ஆகாதவை அனைத்தும் இருந்தாலும் என் கதையில் எவர் குறித்தும் நேரடி அடையாளங்கள் எவையுமில்லை. என் கவனம், அது எந்த கோவில் எந்த ஊர் எந்த ஜனம் என்பதில் கிடைக்கும் உடனடி விற்பனை ஈர்ப்பில் இல்லை. 

மாதொருபாகனில் குழந்தையில்லா பிரச்சனையின் தீவிரம் கிளுகிளுப்புடன் கேவலமாக சித்தரிக்கப்பட்டு ஊர் அடையாளம் ஜாதி அடையாளம் என்று எல்லாம் முதிற்சியற்ற அப்பட்டத்துடன் எழுதப்பட்டு எதிர்ப்பு எழுந்ததும் ஐயையோ மதவெறி ஜாதிவெறி என்று கூவுவதில் ஏதும் அர்த்தமிருக்கிறதா. 

இன்னும் சொல்லப்போனால் என் கதை, ஓவியக் கலைஞன் ஊரைவிட்டு விரட்டியதன் கறை உங்களை சந்ததிகளுக்கும் தொடரும் என்கிறது. இந்துத்வ வெறியர்களை வெறுப்பேற்றி வெறியேற்ற இது ஒன்றே போதாதா. இருந்தும் ஏன் எதிர்ப்பு எழவில்லை. உயர் நிலைக்குச் செல்லும் இலக்கியம் ஒருபோதும் வெட்டி அடையாளங்களில் கவனம் செலுத்தாது ஒட்டுமொத்த மானுடத்துக்காய் விரியும். இதுவே எழுத்தாளனைக் கலைஞனாக்கும் ஓட்டைக் காசுக்கும் பெறாத விருதுகளல்ல.

காளகஸ்தி கோபுரம் இடியில் பிளந்ததிலிருந்து பற்றிக்கொண்ட பொறி, 2011ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற தினத்தின் களியாட்டத்தை பெஸண்ட் நகர் பீச்சில் நண்பர்களுடன் கொண்டாடியபோது, ஒரு கோடாய் சொன்னதில் இருந்து உள்ளே உருண்டு திரண்டு 2015 ஜனவரியில் மாதொருபாகன் விவகாரம் நிகழ்ந்ததையடுத்து எழுதத் தொடங்கி இரண்டு மூன்று விதமாய் எழுதிப்பார்த்து மார்ச்சில் முடித்து ஏப்ரல் காலச்சுவடில் கோபுரமாக வெளியானது தற்செயல் காரியமாய்த் தோன்றுகிறதா. 
பரிசு - மாதொருபாகன்

குழந்தையின்மையை வைத்து மாதொருபாகனைப்போல் அகழ்வாராச்சிக் கதை பண்ணுவதற்கும் அனுபவத்தை இலக்கியமாக்குவதற்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள படிக்க வேண்டிய கதை கல்கியில் வெளியான பரிசு. இதுவும் மாதொருபாகனின் மொண்ணைத்தனத்துக்கு எதிராக எழுந்த வேகத்தில் வெளிப்பட்டதுதான். கலைஞனின் முனைப்பு எங்கே குவியும் எதில் குவிய வேண்டும் என்பதை இலக்கிய மாணவர்கள் உணர இது உதவக்கூடும். 

கோடு - கொட்டு 

பெருமாள்முருகன் அரசியல் கதைகள் எழுதுபவர் எனச்சொல்லி கொட்டு என்கிற கதையில் சாதி முரணை நேரடியாகக் கதையாக்கி இருக்கிறார் என்பதாக நண்பர் தொடங்கிய உரையாடல் அது இலக்கியமாகிறதா இல்லையா என்பது மட்டுமே என் அக்கறை என்கிற விவாதமாகி, கைபேசியாய் இருந்ததால் கைகலப்பின்றி அன்றோடு என்னுடனான உறவை நண்பர் முறித்துக்கொண்டார். இலக்கியத்துக்காக உயிரையே கொடுப்போர் இருக்கும் உலகில் நட்பென்ன பெரிய விஷயம்.

அந்த அற்புத முற்போக்கு பிட்நோட்டீஸ் இதுதா
இதையே பூமணி எழுதியிருந்தால் இப்படிக் க்ரூடாக இல்லாது வாழ்வின் நறுக்கக்கப்பட்ட ஒரு துண்டாகத்தான் காட்டியிருப்பார் என்று என்னால் உறுதியாய்க் கூற முடியும். . ஆனால் முற்போக்கு அரிதாரத்தை வலிந்து பூசிக் கொண்டவர்களால் வசதியாய் வாழ்ந்தபடி நக்ஸல்பாரியாய் வாழ்வது போல இப்படி பம்மாத்து மட்டுமே செய்யமுடியும்.

எப்படியும் நீயும் தலித்தில்லை நானும் முஸ்லீமில்லை ஆனால், உன்னைப் போல் அல்லாது வாழ்வைக் காட்டி அவற்றிடைப்பட்ட முரணைக் காட்டி, சம்மந்தப்பட்டவனின் மனதை விகசிக்க வைக்கும் இலக்கியமாக்க என்னால் முடியும் என்கிற உந்துதலில் எழுதப்பட்ட கதையே தி இந்து தீபாவளி மலரில் வெளியான கோடு.

நான் எழுதுவதை நிறுத்துவதற்குச் சற்று முன்பாக எழுத வந்த பெருமாள்முருகனைப்போய் புண்படுத்துவதல்ல என் நோக்கம். பாவம் அவருக்கு நான் ஏன் அவரது எழுத்தை இந்த அளவுக்கு எதிர்க்கிறேன் என்பதுகூடத் தெரிய வாய்ப்பில்லை. அதை சரியாகப் புரிந்துகொள்வதுகூட அவருக்கு சிரமமாக இருக்கக்கூடும்.

இதுவரை ஒரு முன்னுரைகூட எழுதிக்கொண்டவனில்லை. என் கதைகளைப் பற்றி இவ்வளவு சொல்லிக்கொண்டதேக்கூடக் கூச்சமாகத்தான் இருக்கிறது. இலக்கியமறியா மொக்கை சூழ் இணைய உலகில் இதை எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. தேர்ந்த வாசகன் இதற்காக என்னை மன்னிக்கட்டும்.