31 July 2016

போயாவும் பாயாவும்

நேற்றும் இன்றுமாக, பிணையில் அந்த ஓலா ஓட்டுநர் வெளியில் வரவேண்டுமே என்கிற கவலையும் காரியங்களுமாகவே கழிந்தன. நேற்று மதியமே கிடைத்திருக்க வேண்டிய பெயில் வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கை காரணமாக தாமதமாகி பாண்டு மூவ் ஆகி, ஆலந்தூர் கோர்ட்டிலிருந்து புழலை நோக்கிப் புறப்படவே, ஏறக்குறைய ஏழு மணி ஆகிவிட்டது. சிறையின் உயர்மட்டத் தொடர்புகள் வரை தனிப்பட்ட ரீதியில் கைபேசி வழியே தொடர்புகொண்டும் தயார் நிலைக்குத் முன்னேற்பாடுகள் செய்தும்கூட, யதார்த்தத்தில் காலையில்தான் வெளியில் வர முடியும் என்றாகிவிட்டது. 

காலையில் தாமதமாக எழுந்து, வந்தாயிற்றா என்று  விசாரித்தால், காலையில் 7.20லிருந்தே சிறை வாயிலில் காத்திருப்பதாகவும் இன்னும் வரவில்லை என்றும் செய்தி கிடைத்தது. ஹைகோர்ட் நண்பர்கள் வாயிலாக உள்ளே தொடர்புகொண்டால் அன்றைக்கு 140 பிணைக் கைதிகள் விடுதலை ஆகவேதான் தாமதமாகிறது எனத் தெரிய வந்தது. 

போனதையும் வந்ததையும் போனதையும் போய் வந்ததையும் தனியே பார்க்கலாம். அவரவர் வாழ்க்கைக்கு வருவோம். 

காலையிலிருந்து, மனைவி அவள் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டி ஆஸ்பித்திரிக்குப் போயிருப்பதால், உணவில்லா எங்கள் விட்டு ஜன்னல் காக்கையாக நானும் காய்ந்து கிடந்தேன். காபியை சமைத்துக் குடித்து பிபி மாத்திரையைப் போட்டுக்கொள்ளும் தினப்படிக் கடமையை நேற்றைப்போல் சேதாரம் எதுவுமின்றி செய்து முடித்து இணையத்தைத் துழாவியபடி இருந்தால் மாலை ஆறு மணியை நெருங்கிக்கொண்டு இருந்தது. எனவே, வயிறு தன் இருப்பை ஒலியெழுப்பிக் காட்டத் தொடங்கிற்று. 

வழக்கம்போல பிள்ளையாரைப் பார்த்துவிட்டு திருவான்மியூர் நோக்கி அணிச்சையாய்ப் போகத் தொடங்கியவன், பிரேக் அடித்து, தி இந்து சமஸுக்கு போன் அடித்து, நன்றாக இருக்குமென்று திருவான்மியூரில் ஏதோ ஒரு கடையைச் சொன்னீரே பெயரென்ன என்று கேட்டேன். 

ஜெயந்தி தியேட்டர் அருகில் இருக்கும் சிட்டி கேட் ஓட்டல் என்றார். அங்கே ஆப்பமும் பாயாவும் தம்மை என்றுமே ஏமாற்றியதில்லையென்றும் மற்ற வகைகளுக்குத் தாம் உத்தரவாதமில்லை எனவும் கூறினார்.

சரி என்று பைக்கைக் கிளப்பப் போனால், அறிஞர் அ மார்க்ஸ் சாயலில் தலை முழுக்க பொல்லென வெளுத்த கட்டை குட்டையான உருவத்துடன் பெரிய மனிதரொருவர் எதிரில் வந்துகொண்டு இருந்தார். ஆனால் அவர் பார்வையோ மார்ச் பாஸ்ட்டில், பிரமுகப் பந்தலைக் கடக்கையில் ஐஸ் ரைட் ஆகிவிடுவது போல இருந்தது. அப்புறம்தான் அவருக்குக் கொஞ்சம் பக்கத்தில் சட்டை பேண்ட் போட்ட இளம் பெண் வருவது கண்ணில் பட்டது. பிறவி ஜொள்ளனான என் இயல்பு காரணமாக, முதலில் அந்தப் பெண்தான் என் கண்ணில் பட்டிருக்க வேண்டியத்தான் நியாயம். ஆனால் இந்தப் போர்க்கள மூடு காரணமாகவோ என்னவோ அறிவுச் சுரப்பியின் சாயலில் இருந்தவர்தான் முதலில் பதிந்தார். அவரோ கண்களிலேயே இன்ச்சு டேப் வைத்திருந்தவர்போல சாவகாசமாய் அளந்துகொண்டிருந்தார். அவரது ஃபேஸ்புக் ஐடியைக் கேட்க எண்ணுவதற்குள் இருவரும் என்னைக் கடந்துவிட்டனர். ஷூ போட்டும் அவர் கோலாப்பூர் தட்டைச் செருப்பணிந்திருந்த அந்த இளம் பெண்ணின் தோளுக்குக்கூட வரவில்லை. ஃபேஸ்புக்கில் ஆண்டி படங்களுக்கு நைஸ்மா லைக் போட்டு, பெண்டிர் பதிவுகளில் கமெண்ட்டுகளில் பாய்ண்ட் பாய்ண்டாகப் பெண்ணியம் பேசுவாராய் இருப்பார் அவர். ஆனால் நானோ பெண்களை ‘மிக வேறுக்கும்’ காமக் கொடூரன் எனச் சொல்லக் கூடும் இணைய உலகம்.

புதுச்சேரி வ.உ.சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கையில், பள்ளி விட்ட பின்பும், வெளியில் கதை பேசுவது போன்ற பாவனையில் அரை டிரவுசர்களில் கும்பலாக நின்றுகொண்டு இருப்போம். அதே மாதாக்கோவில் தெருவில் எதிர் சாரியில் சற்றே தள்ளி இருந்த இமாக்குலேட் பெண்கள் பள்ளி விட்டுச் செல்லும் வயதொத்த சிறுமிகளை பத்திரமாய், இன்ச்சு டேப்பற்ற பார்வைக் காவல் தொடர வீட்டுக்கு அனுப்பி வைப்போம். ஒரு நாள் அதிலொன்று, என்னைப் பார்த்துக் கூறிற்று, கண்ணைப் பாரு கொள்ளிக் கண்ணு என்று. அது யதார்த்த வாழ்க்கை. என்னதான் யாதார்த்தம் இப்படி இருந்தாலும் கவிதையில் அதை அப்படியே எழுத முடியுமா. எங்கள் தமிழ் ஆசிரியர் இரா. திருமுருகன் கீழ்க்கண்ட கலிங்கத்துப் பரணி பாடலை,

முருகிற் சிவந்த கழுநீரும் 
   முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
   செம்பொற் கபாடம் திறமினோ.

எங்களது மேற்படி எஸ்கார்ட் மேட்டரை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்கியதும் அந்தக் கொள்ளிக் கண் மேட்டரும், திருவான்மியூர் சிக்னல் நோக்கிய எல்.பி ரோடு டிராஃபிக்கிலும் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது. 

முன்னால் இருந்த காருக்கும் பக்கத்தில் சிக்னலுக்காக நின்றிருந்த ஸ்கார்ப்பியோவுக்கும் இருந்த இடைவெளியில் என் பைக்கை வளைத்துப் புகுந்தேன். ஸ்கார்ப்பியோ ஹார்ன் அடித்து அலறிற்று. புகுந்து முன்னால் சென்று நின்று திரும்பிப் பார்த்தால், வண்டிக்குள் இருந்து ஸ்டாலின் படம் வெளியில் பார்த்துக் கொண்டிருக்க டிரைவர் நாக்கைத் துருத்திக் காட்டித் திட்டுவது தெரிந்தது. 

இன்னா என்றேன் முகத்தை அஷ்டகோணலாக்கி வெறுப்பை உமிழ்ந்தபடி.

கதவைத் திறந்து டிரைவர் கத்தினான். 

எதுக்குப் பூர்ற. 

வண்டி மேல பட்டுதா. இறங்கி வந்து பாத்து சொல்லு என்று திரும்பக் கத்தினேன். 

அப்படி வேகமா எங்க பொவப்போறே இந்த டிராபிக் ஜாம்ல. 

எங்கப் போனா உனக்கென்ன முன்னாடி எவ்ளோ கேப்பு வேஸ்டா இருக்கு என்றேன். 

இந்த ஸ்கார்ப்பியோ தாராளமாய் போகக்கூடிய இடைவெளி இருந்ததாலேயே என்னால் உள்ளே நுழைய முடிந்தது என்பதோடு அல்லாது அந்த வண்டிக்கு முன்னால் கிட்டத்தட்ட 50-60 அடிகளுக்கு சாலை காலியாக இருந்தது இவ்வளவு நெரிசலில் எவ்வளவு கிரிமினல் வேஸ்ட் என்று தோன்றியது. டிஃப்ராக்மெண்டேஷனெல்லாம் விண்டோஸுக்கு மட்டும்தானா. அந்த கேப்பில் பின்னாலிருக்கும் எவ்வளவு வண்டிகள் முன்னால் சென்று நின்றிருக்க முடிந்திருக்கும். தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் யார் இந்த தரித்திரம். ஸ்டாலின் என்ன முன் இருக்கையில் உட்காரும் விருப்பமுள்ள களைஞர்கூட இதற்காகக் கோபப் பட்டிருக்க மாட்டார். ஓடுகிற வண்டிகூட இல்லை அது. நின்றுகொண்டு இருக்கும் வண்டி. அதில் என் காற்றுக்கூடப் படவில்லை. கட்சிக் கொடியும் படமும் வைத்துவிட்டால் இவனுக்கு சாலையே சொந்தமா என்று கையாலாகாதக் கோபம்தான் வந்தது.

மீடியனை ஒட்டி ஸ்கார்ப்பியோ நின்றிருந்ததால், நல்ல காலமாய் அந்த டிரைவரால் கத்தும் அளவுக்கே கதவைத் திறக்க முடிந்ததே தவிர இறங்கும் அளவுக்குத் திறக்க முடியவில்லை. எனவேதான், சரிதான் போயா என்று நான் சொன்னதற்காக இன்று நான் கொல்லப்படாமல் தப்பித்தேன். காலையில் இருந்தே எதுவும் சாப்பிடாது இருந்த காரணத்தால் காருக்குள் இருந்தபடியே என்னை அடிக்க உயர்த்திய அவன் கையில் ஆயுதம் இருந்ததா என்று கவனிக்கக்கூட தெம்பில்லாமல் நான் குலை நடுங்கிப் போனேன்.

இப்போது நினைத்தாலும் அந்த டிரைவரின் கண்களில் தெரிந்த கொடூரக் கொலைகாரப் பார்வை இன்றிரவு என்னைத் தூங்க விடுமா என்று தெரியவில்லை. 

அம்மா அரசின் காவலர்கள் யாரும் கண்ணில் படுகிறார்களா என்று சுற்றுமுற்றும் தேடினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை டிராபிக் தெரிந்ததே தவிர ஒரு டிராபிக் போலீஸ் கூடத் தெரியவில்லை. இரவு கூட இல்லை. மாலை 6:30 மணிக்கே சென்னையின் நெரிசலில் இதுபோன்ற கறுத்த மிருகங்களிடமிருந்து உயிர் தப்பிக்க ஒவ்வொரு நாளும் எவ்வளவு பெரிய அதிருஷ்டம் வேண்டி இருக்கிறது

என்று, இன்று பேஸ்புக்கில் பதிவு தேத்த வேண்டும் என்று  மனதுக்குள் ஓட்டியபடி, கிடைக்கிற கேப்பில் புகுந்து புகுந்து S2 தியாகராஜா சினிமா வரை வந்துவிட்டேன். அசைவற்ற மரம் செடி கொடிகளாக நின்றிருந்த டிராபிக் நெரிசலில், நடுச் சாலையில் என் பக்கத்தில் பைக்கில் இருந்த இரு இளைஞர்களிடம் கேட்டேன்,

கேட்ங்கற ஓட்டல் எங்க

சிட்டி கேட்டா. அதோ சிக்னலாண்ட இருக்கு. ஆனா அங்க யூ டர்ன் கிடையாது 

யூ டர்ன்லாம் ஒரு மேட்டரா. அப்பிடீக்காப் போறாப்பல போயி, போலீஸ் இல்லேனா கேப்புல திரும்பிட வேண்டீதுதான். கேப் கெடைக்கலேனா நேரா போயி கட் பண்ணிக்க வேண்டீதுதான். 

ஆமாமா என்றனர் இருவரும் மெல்ல சிரித்தபடி இந்த வயசுல இப்படியும் ஒன்றா என நினைத்திருக்கக்கூடும்

இப்பதான் ஒரு ஸ்கார்ப்பியோவோட தகறாறு. இவ்ளோ டிராபிக்ல உள்ள பூறக் கூடாதாம். மீசை இல்லாம கொஞ்சம் வெள்ளையா வேற இருந்தா சாம்பார்னு நினைச்சுடறாங்க. நாம என்னடான்னா பாயா எங்கடாக் கிடைக்கும்னு தேடிப் போயிக்கிட்டு இருக்கோம். 

சார் சூப்பர் சார் என்று ஃபேஸ்புக் கமெண்ட் போல அடித்து விட்டு, பைக்கிலிருந்தபடியே விழுந்து விழுந்து விலா வலிக்க சிரிக்கத் தொடங்கினர் அந்த இரண்டு திராவிட இளைஞர்களும்.