11 September 2016

கூலி இல்லாத வேலையும் ஓஸி விருந்து ஓம்பலும்

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும் - சாரு நிவேதிதா

எழுத்தாளனுக்குக் கூலி சம்பளம் ராயல்டி போன்ற பிரச்சனைகள் என்று வருகையில், இவை தமுஎகச போன்ற எழுத்தாள சங்கங்கள் எடுத்தாள வேண்டிய பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை அல்லது அப்படி இவற்றைப் பார்த்து தமிழ்ச்செல்வன் கருப்பு கருணாக்களிடம் பிராது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை சாருவே ஒப்புக்கொள்வார். நாம் முற்போக்கு எழுத்தாளர்களே இல்லை என்பது அடைப்படை விஷயம். அங்கேயே அடிபட்டு விடுவோம். அடுத்தது ஆயிரம்தான் நாம் அடிக்கடி சந்தித்து அன்பொழுக ஆரத்தழுவிப் பேசிக்கொண்டாலும் சாருவுக்கு நானோ எனக்கு சாருவோ முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்க எழுத்தாளரே இல்லை என்பதே ஏழேழு ஜென்ம உண்மை. இருந்தாலும் எழுத்தாளனாக என்னையும் மதித்து, சுட்டியை அனுப்பி வைத்துக் கேட்டுக்கொண்டதால், இதை எழுதவேண்டி உள்ளது. 

சில வருடங்கள் முன்பு பழைய நண்பரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு பார்த்துப் பல வருடங்களாயிற்றே என்று சென்றிருந்தேன். இணையத்தில் மட்டுமே எல்லோரையும் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். விழா முடிந்தபின் ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டுக் கூறினார். ’அப்பா படிச்சிப் பாரு உனக்குப் புடிச்சிருந்தா எழுது பிடிக்கலேனா விட்டுறு. எழுதியே ஆகணும்னு ஒண்ணும் கட்டாயமில்லே’. - இது கலை ரசனை சம்மந்தப்பட்ட பிரச்சனை

ஆனால் சாரு எழுப்பும் ’எழுத்தாளனின் ஊதியப் பிரச்சனையில்’ சம்மந்தப் பட்டிருப்பது கலை அல்ல வணிகம்.

வணிகம் என்று வந்தபின் அதில் லாபம் தேவை விற்பனை என்பவையே ஆதார விஷயங்களாகி விடுகிறன. கலை மேதமைக்கு இங்கே வேலையில்லை என்பது முகத்தில் அறையும் உண்மை. 

இதற்கு இளையராஜாவைவிட மிகப்பெரிய பிரத்தியட்ச எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியுமா. ’ராக தேவனின்’ என்று நடிக நடிகையரைவிட பெரிய அளவு கட்டவுட் வைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன. அவர் இருந்தால் போதும் படம் விற்றுவிடும் - அவரால் படம் விற்கும் - அவர் இருந்தாலும் பரவாயில்லை படம் விற்றுவிட வாய்ப்புண்டு என்கிற நிலை மாற்றங்களில், கலை மேதமை எள்ளளவும் குன்றாதிருந்தாலும் அவரது தேவையைப் பொறுத்துதானே சினிமாவில் அவரது ’தேவை’ தீர்மானிக்கப் படுகிறது. 

ஒரு இயக்குநருக்கு முதல் படத்தில் சம்பளம் என்ன. முதல் பட வாய்ப்புக் கொடுத்ததைவிட என்ன பெரிய சம்பளம் என்பதாக அல்லவா சினிமாத் துறையில் தயாரிப்பாளர்களால் பார்க்கப் படுகிறது. சின்ன முணுமுணுப்புகூட இன்றி அது அறிமுக டைரக்டர்களால் ஏற்றுக்கொள்ளவும் படுகிறது. 

குமுதத்தை உடைத்துக்கொண்டு சுஜாதாவும் பாலகுமாரனும் உள்ளே நுழைகையில் அவர்களது இருப்பென்ன, அவர்களின் பெயரில் தொடரை அறிவித்தால் சர்க்குலேஷன் அதிகரிக்கும் என்கிறபோது அவர்களின் நிலை என்ன. உச்சத்தில் இருக்கையில் மட்டுமே ‘கலைஞன்’ வைத்ததே சட்டம் என்கிற அளவில்தான் கலை அம்சத்தின் மதிப்பு கமர்சியலாக எடைபோடப் படுகிறது. 

நான் கலைஞன் நான் எழுத்தாளன் என்று நாம் மட்டுமே கூவி என்ன பயன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பவா செல்லதுரையோ இளங்கோ கல்லாணையோ அல்லது பேருக்கு யாரோ ஒருவர் ஒரு பேச்சுக்கு திருப்பூர் கிருஷ்ணனோ அல்லது அட்லீஸ்ட் விருட்சம் அழகிய சிங்கரோ இருந்தாலும் பாதகமில்லை நிகழ்ச்சி நல்லபடியாக நிகழ்ந்து நிறைவேறிவிடும் என்கிறபோது சாருவுக்கான பிரத்தியேக தேவை என்ன இருக்கிறது. சாருவின் வாசகர் வட்டத்துக்குள்ளோ அல்லது சாருவின் விமர்சக வட்டத்திற்குள்ளோ சாருவின் இடம் இன்றியமையாததாக இருப்பதைப் போன்ற ஒரு நிலை ஊடகங்களில் ஏற்பட்டால் மட்டுமே சாருவின் கனவு ஊதியத்தைப் பெறுவதென்பது நிறைவேறும் சாத்தியம் உண்டு, மற்றபடி சொக்கனின் ஆதரவையும் பெருந்தேவியின் ஆதரவையும் வைத்து, அரைத்த மாவையே அரைத்து அதிகபட்சமாக இன்னும் இரண்டு பதிவு தேற்றிக் கொள்ளலாம் என்பதல்லாவா நிஜம்.

அசோகமித்திரனின் நானும் ஜே ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமா படம் 81-82 வாக்கில் குமுதத்தில் வெளியாகி இருந்தது. ஏதோ ஒரு கூட்டத்தில், ’பால்யூ பார்த்தது’ எழுதிக்கொண்டிருந்த ஆசாமியோ பாரிவள்ளலோ யாரோ ஒருவர், ’கதைக்கு நல்ல ரெஸ்பான்ஸ். கீப் இட் அப்’ என்றாராம். சொன்னவர், பாவம் ’ஏழை எழுத்தாளர்’ அசோகமித்திரனின் இதயத்தில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிடும் நல்ல எண்ணத்தில்தான் சொல்லி இருக்க வேண்டும். அதை அவர் அடுத்தவரிடம் கைத்த சிரிப்புடன் சொல்லிக்கொள்ள வேண்டிய நிலையில் அல்லவா வைத்திருந்தது தமிழ் இலக்கியம்.

அதைப் போலவே, விகடன் போன்ற வணிகப் பத்திரிகையில், இது போன்ற கதைகள் வரவே முடியாத காலம் என இருந்தது இப்போதேனும் மாறி, இது போன்ற கதைகளும் வரலாம் அதனால் சர்குலேஷனுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை என்கிற தாராளமயமாக்கல் நிகழ்ந்துள்ளதே என்று மகிழ வேண்டிய அவல நிலை அல்லவா இருக்கிறது. அட்லீஸ்ட் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் பெரிய மனது வைத்து உம் கதையையும் பிரசுரிக்கிறோமே அதற்கே நீர் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்காமல் இருக்கிறார்களே ஏதோ அந்த மட்டுக்கும் மகிழ்ச்சி என்றுதான் இலக்கிய எழுத்தாளன் அடிவயிற்றிலிருந்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதானே இன்றைக்கும் இருக்கும் யதார்த்த நிலை. வாசகன் பெரிய அளவில் மாறி இருக்கிறானோ இல்லையோ குறைந்தபட்சம் பத்திரிகைகளில் வேலை பார்க்கும் இளைஞர்கள், எழுத்தாளன் தன் கதையைத் தன் இஷ்டப்படி எழுதலாம் என்கிற அளவுக்கு ரசனை உள்ளவர்களாக இருக்கிறார்களே என்றல்லவா மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. 

மற்றபடிக்கு, ஃபேஸ்புக் எழுத்தாள சிந்தனையாளர்களான ராஜன் குறை கிருஷ்ணன் வெங்கடேஷ் சக்ரவர்த்தி பழைய பிரேதமான பிரேம் உட்பட எல்லோருமே MRP நிர்ணயிக்க முடியாத மேதைகள் என்பதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை.

வணிக வெளியில், சாலமன் பாப்பையா தமது அடுத்த பட்டிமன்றத்தில் ஃபூக்கோ தெரிதான்னா என்னான்னு தெரியுதா என்று சாருவைக் கலாய்க்காமல் இருந்தால் போதாதா. ஆனால், பாப்பையா எப்படி, அவர் நிறத்தைப் பற்றியும் கவலைப் படாது, சோறு போடும் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் கவலைப்படாது, அங்கவை சங்கவைகளுடன் பளகலாம் வாங்க டைப்பில் ஜோக்கடித்து கூலி பெற்றாரோ, அதே போல இந்த ஃபூக்கோ தெரிதா ஜோக்குக்கும் ஆரவாரச் சிரிப்பொலி எழுந்தால் அவரது ஊதியம் உயர்த்தப்படும் என்பதுதானே கசப்பான யதார்த்தம். 

வேலைக்கான ஊதியத்தை சாரு கேட்பது நியாயம்தான். ஆனால் தேவைக்கான ஊதியத்தை வணிகம் அல்லவா நிர்ணயிக்கிறது.