13 October 2016

பகிரங்க பங்கம்

இந்த நதிக்கு எந்த ---- புனிதமும் கிடையாது…
லைக் 119 ஷேர் 1 வாழ்த்துக் கமெண்ட்ஸ் 23

//ஆனால் எதிர்பாராத தண்டவாளத்தில் எதிர்வரும் ரயில் தான் வாழ்க்கை.// 

சட்டெனப் பார்த்தால் கவித்துவப் போலித் தோற்றம் காட்டும் இந்த வரி யோசித்துப் பார்த்தால் பொருளற்றதாகப் போய்விடும். ஆனால் பெரும்பாலோர், லோகாதய விசயங்களைத் தாண்டி யோசனையை விரயம் செய்வதில்லை என்பதாலேயே இப்படியான எழுத்துகள் இன்று இலக்கியமாக ஃபேஸ்புக்கில் உலா வந்துகொண்டு இருக்கின்றன. 

எதிரில் டிரெயின் வருவது தெரிந்தும் தற்கொலை பண்ணிக்கொள்ள முடிவெடுத்தவளைத் தவிர வேறு எவளாக இருந்தாலும் விலகி ஓடிவிட மாட்டாளா. உவமை உவமேயங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எழுத்தாளர்களுக்கு இருப்பதைபோல கீபோர்டுகளுக்கு இல்லைதானே. தண்டவாளம் ரயில் செல்வதற்கானது அதில் மனிதர்கள் நடப்பது தவறு என்பதுதானே வரைமுறை. தண்டவாளம் என்பதே ஒழுங்கு நியதி சார்ந்ததல்லவா. 

’எதிர்பாராத தண்டவாளத்தில் எதிர்வரும் ரயில் தான் வாழ்க்கை’ என்று எழுதிய பிறகு, 

//அதில் நசுக்கப்பட்டு சிதையும் விழுமியங்களின் கனம் பலசமயங்களில் மனஅழுத்தத்தையே எனக்கு கொடுத்திருக்கின்றன.// 

என்பது அபத்தம் இல்லையா. விழுமியங்கள் என்று மனித வாழ்க்கையில் இருப்பதைத்தானே குறிப்பிடுகிறார். அந்த வாழ்க்கையைத்தான் ஏற்கெனவே டிரெயின் என்று சொல்லியாயிற்றே. எதிரெதிரில் இரண்டு ரயில்கள் மோதி நசுக்கப்பட்டதில் சிதைந்து சின்னாபின்னமாகி இருப்பது இவரது மொழி வெளிப்பாடு இல்லையா.

சிந்தித்தல் எல்லோருக்கும் சாத்தியமில்லை அதைவிட அசாத்தியம், சிந்தனையை மொழியில் பிடித்துச் செதுக்கி சிற்பமாக்கி நிறுத்துதல். உளியும் கையுமாய் 25-30 வருடங்களாய்த் தொடர்ந்து அம்மி கொத்திக்கொண்டிருத்தல், துரதிருஷ்டவசமாய் ஒருவரை சிற்பியாக்கிவிடுவதில்லை.

முகமூடிகளையே ”முகமெனக் கருதும் நுட்பம்” என்னவொரு வெளிப்பாடு. 

//இப்படியான தயக்கங்களோடும் சுயதீர்ப்புகளாலும் சிக்கிப் புணரும் வாழ்வில் உண்மையும் உண்மை சித்திரங்களும் பதிவு செய்வதன் முக்கியத்துவம் எனக்குப் புலப்படுகிறது.// 

ஜெயகாந்தன் போல மீசையை முறுக்கி ஏற்ற இறக்கத்தைக் காட்டும் முன்னால், வார்த்தைகளைக் கொஞ்சம் சுத்தியலால் தட்டி, உம்களையும் ஓம்களையும் சீராக்கப் பாருங்கள். இப்படி எழுதுவது, ஒரு காலில் கக்கூஸ் செருப்பும் மறு காலில் ஹை ஹீல்ஸ் ஷூவும் அணிந்து அழகிப்போட்டியில் நடந்துகாட்டுவது போல இருக்கிறது.

//இதன் உச்சகட்ட சூட்சமமே இதில் பல இடங்களில் என்னை அடையாளப்படுத்தி இருக்கிறேன்.//

எங்கோ தொடங்கி பைத்தியம்போல் எங்கோ அலைகிற வாக்கியம், 

எனக்கொரு மகன் பிறப்பான் - அவன் 
என்னைப் போலவே இருப்பான்

பின்னே பக்கத்து வீட்டுக்காரன் போலவா இருப்பான் என்கிற திமுக மேடைப்பேச்சை நினைவுபடுத்துகிறது. 

கதைகூட இல்லை இவை கட்டுரை. இதில் முழுக்க முழுக்க எழுத்தாளர் தெரிந்தே ஆகவேண்டியது அடிப்படை இல்லையா. இதற்குப் போய் ஏதோ சமூக சேவை செய்வதைப் போல ஏனிந்த பில்டப்பு.

//அதுவே இதன் நேர்மையாகவும் உருமாறுகிறது.//

தூங்கி எழுந்ததும் சிறுநீர் முட்டுவதைப் போல எழுத்தில் நேர்மை முட்டிக்கொண்டு இருக்க வேண்டியது எந்த எழுத்தாளருக்கும் அத்யாவசியமான ஒன்றல்லவா. 

//என் வாழ்வில் சந்தித்த பெண்கள் பற்றிய சித்திரங்களை மீண்டும் வரைந்த போது என் மனதை நடுங்க வைத்தப் பெண்கள் இவர்கள்// 

சந்தித்த பெண்களைத்தானே கட்டுரையாய் எழுதி இருக்கிறார். சந்தித்தபோது குடும்பச் சித்திரமாக இருந்து தொடருக்காகத் தூரிகையைத் தூக்கியதும் திகில் படமாகத் தெரியத் தொடங்கிவிட்டார்கள் போலும். 

//முரண்களை ஸ்நேகத்தோடு பகிரும் நட்பின் மதிப்பு விலையற்றது.//

ஸ்நேகம் நட்பு இரண்டும் எவ்வளவு தூரதூரமான வார்த்தைகள், வாழ்க்கை ரயில் மோதி நசுக்கப்பட்ட விழுமிய சொம்புகள் போல.

ஆடம்பர வார்த்தைகளாலான முகப்பூச்சு கலைக்கப்பட்டால், அனர்த்தம் அம்பலப்பட்டுவிடும். 

//இருவம் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பது எத்தனை ஆச்சர்யமானதாய் கேட்கும் போது இருந்தது.// 

இருவம் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதைக் கேட்க நேர்ந்த போது ஆச்சரியமாய் இருந்தது - இப்படி இருக்க வேண்டும் இந்த வாக்கியம் என்கிற கூறு எழுத்தாளினிக்குத்தான் இல்லை. அதைச் சொல்லித் திருத்துமளவுக்கு, பதிப்பாளருக்காவது மொழி அறிவு இருக்க வேண்டும். டைட்டில் கிடைத்தால் போதும் மீதியை அச்சாபீஸ் பார்த்துக்கொள்ளும் என எழுதிக் கொடுக்கப்பட்டதைப் பார்க்கக்கூட செய்யாமல் அப்படியே அனுப்பி வைப்பதே தமிழில் பதிப்புத் தொழில் என்று ஆகிவிட்டது.

//இந்த கட்டுரைகளில் பொய் எதுவுமே இல்லை. அதனால் நீங்கள் புனிதம் என்று கருதிய விஷயங்கள், மனிதர்கள் பற்றிய சித்திரங்கள் அதற்கு பங்கம் விளைவிக்க கூடும்.//  

”அதற்கு பங்கம் விளைவிக்க கூடும்”. எதற்கு, பொய்யே இல்லாத இந்தக் கட்டுரைகளுக்கா.

மொதல்ல செண்ட்டன்ஸ ஒழுங்கா எழுதக் கத்துக்கோம்மா அப்பால கட்டுரை எழுதி அதை புக்கா போட்டு விக்க வேற செய்வியாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.