20 October 2016

பிரேதத்தைக் கிளப்பிவிட்ட பிதாமகருக்கு

சி.என். அண்ணாதுரையை விட நான் மோசமான எழுத்தாளன் இல்லை என்பதை திரு கருணாநிதியே ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன். மாமல்லனிடமும் நேரடியாகக் கேட்கிறேன். அண்ணாத்துரையை விட நான் மோசமான எழுத்தாளர் இல்லைதானே? 
- சாரு நிவேதிதா அந்நியன் - 2

அண்ணாத்துரையின் செவ்வாழையை கல்லூரியில் படித்த நினைவு. இணையத்தில் தேடி, திரும்பவும் படித்துவிடுகிறேன். 

திர்லோக்புரி படித்ததில்லை.

புதிய தூதர் அவதரித்திருக்கிறார் என அன்னிபெஸண்ட் அம்மையார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை அறிவிக்க இருந்ததைப் போல, தமிழின் ஒரே ஒரிஜினல் அறிவுச்சுடர் என உங்களால் தமிழ் இலக்கிய சிந்தனை உலகுக்கு அறிவித்து அளிக்கப்பட்ட பிரேம், 'ஸீரோ டிகிரியே’ தன்னுடையதுதான் என ஏதோ ஒரு பேட்டியில் கூறியதும்தான் விழித்துக்கொண்டேன் என தாங்கள் என்னிடம் போனில் கூறியதைப் போல, அவர் இந்த திர்லோக்புரிக்கு உரிமை கொண்டாட மாட்டார் என உங்களால் உறுதியாய்க் கூறமுடியுமா. 

திலீப்குமார் எழுதிய மூங்கில் குருத்து அப்படியே தாஸ்தாவெஸ்கியின் தரம் என்று, 81-82 வாக்கில் திலீப் குடியிருந்த திருவல்லிக்கேணி வீட்டு அங்கணத்தில், நாம் மூவரும் உட்கார்ந்திருக்கையில் நீங்கள் கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அடிக்கொரு தடவை திட்டிக்கொண்டிருந்தாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இது நோபல் பரிசுக் கவிஞர் என்று நீங்கள் மனுஷ்ய புத்திரனை சொல்லிக்கொண்டு இருப்பதும் இன்றிலிருந்து உன் பெயர் லக்ஷ்மி சரவணகுமார் இல்லை தாஸ்தாவெஸ்கி என்று கூட்டத்தில் அறிவிப்பதும் போன்ற பல காமெடிகளை கடந்த 40 வருடங்களாய்த் தொடர்ந்து செய்து வருவதே உங்களை எவரும் சீரியஸாய் எடுத்துக்கொள்ளாததற்கு முதன்மையான காரணம் என்பதை இன்னுமா உங்களால் உணரமுடியவில்லை.

செவ்வாழை - திர்லோக்புரி இரண்டையும் படித்துவிட்டு கண்டிப்பாக எழுதுகிறேன் சாரு - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு இது குறித்து புகார் கடிதம் எழுதாமல் பிரேமை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனெனில் ஓலா டிரைவர் விவகாரத்திலேயே ஏதோ சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருப்பதைப் போல், என்னைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஏற்கெனவே என்னை மிரட்டியிருக்கிறது இந்தப் பிரேதம். விசிகக்காரர்கள் என்னையும் குஷ்பு போல ஒட ஓட விரட்டி ஊரூராய் வழக்கு தொடுத்தால் என் கதி என்ன ஆவது. உங்களைப் போல் உதவிக்குத் தற்கொலைப் படையெல்லாம் இருப்பவனா நான். கொஞ்சம் கருணையுடன் யோசித்துப் பாருங்கள். இதை ஏன் என்னிடம் சொல்கிறாய் என்கிறீர்களா. இந்தப் பிரேதத்தைக் கிளப்பிவிட்டதோடு அல்லாமல் இதற்காகப் பிரத்தியேகமாகப் பத்திரிகையெல்லாம் நடத்திய பிதாமகரே நீங்கள்தான் என்று கேள்விப்பட்டேன் சாரு.

நாற்பது ஆண்டுகளாய், இப்படிக் காலாண்டு அரையாண்டுக்கு ஒருமுறை எதையவது எவனையாவது கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கும் ஒருவரை எவர்தான் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் சாரு. இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் நேரடியாய்க் கேட்டுவிட்டதற்காக அண்ணாத்துரையின் செவ்வாழையை முதலில் படித்துவிடுகிறேன்.