17 January 2017

கரையாத நினைவுகள்

இன்று, ஏறக்குறைய ஏழரை மணியளவில் தொடங்கி, புத்தகக் கண்காட்சியின் ஒரு வரிசையைக் கூட விடாது சுற்றி வந்தேன் - நான் எவ்வளவு பிரபலம் என்பதை எனக்கு நானே தெரிந்துகொள்ள. குறைந்தபட்சம் என்னை யாரேனும் அடையாளமாவது தெரிந்துகொள்கிறார்களா அட்லீஸ்ட் யாரோ போல் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்கிற சந்தேகக் குறியேனும் எந்த முகத்திலாவது தெரிகிறதா என எதிர்படும் முகங்களையெல்லாம் துழாவியபடி சென்றுகொண்டிருந்தேன். டைகூட அடிக்க வக்கில்லாத இந்தத் தாடிக்காரப் பயல் நம்மை ஏன் இப்படிப் பார்க்கிறான் என்கிற ஐயத்தைத்தான் காண முடிந்தது. முன்றில் கடையைக் கடந்தபோது, கருப்பி டி சர்ட் அணிந்த இளைஞர் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சள் டி சர்ட்டிடம் குனிந்தது தெரிந்தது என் பிரமையாகக்கூட இருக்கலாம். எல்லோரும் என் தலை தட்டுப்பட்டதுமே எண்பது தொண்ணூறடி தூரத்திலேயே, என்னைத் தெரியாத பாவனையை மிகுந்த பிரயாசையுடன் தங்கள் முகங்களில் அணிந்து கொள்வதாக பாவித்துக் கொள்வதுதான் எவ்வளவு இதமாக இருக்கிறது. 

வெளியே போ என என் ஜியோ பிடறி பிடித்து உந்த, தினப்படிக் குலுக்கல் நெருங்கிக்கொண்டிருக்கிறது என புத்தகக் கண்காட்சி அலறிக்கொண்டு இருக்கையில் வெளியில் வந்தேன். ஆவின் தென்படவே அருகில் சென்றேன். உள்ளே தெரிந்த முகமாக ஒரு கண்ணாடி தெரியவே ஹலோ என்றேன். சார் என்று கை நீட்டுகையில் கேபிள் சங்கள் என்று தெளிவாகிவிட்டது. அருகிலிருந்தவரையும் பிரபாகரன் ப்ரொஃபைலில் இருப்பவர் என்று தெரிந்துவிட்டது பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை எனினும். 

ஒரு பட்டர் ஸ்காட்ச் 

பிரபாகரன் ப்ரொபைல், ஒரு கப்பை எடுத்து வைத்தார். 

எவ்வளவு 

எழுத்தாளர் கிட்டயெல்லாம் காசு வாங்கறதில்லை 

நீங்க வேற சும்மா இருங்க. ஒண்ணுல்லாம் நமக்கு எங்க பத்தும் இன்னோண்ணும் குடுங்க என்று 50 ரூபாயை நீட்டினேன். இரண்டாவதையும் எடுத்து வைத்தார். 

முதலில் வைத்ததே கொஞ்சம் இளகியது போல் இருக்கவே, இதை முடிச்சிட்டு வாங்க்கிறேன் என்றேன். 

சேர் எடுத்துப் போட்டார் கடைக்காரர் 

கேபிள் ஏற்கெனவே வெளியில் வந்து நின்றுகொண்டிருந்தார் 

பேசிக்கொண்டு இருக்கையில், பிரெளன் கலரில் விறைப்பாய் நிற்கும் சேலையணிந்த பெண்மணியொருவர் கடைக்கு வந்தார் 

எழுந்து நின்று நீங்க சித்ராதானே என்றேன் 

ஆமா ஆனா நீங்க யார்னு தெரியலையே என்றார் 

என்னை யார்னு இப்ப சொன்னாலும் உங்களுக்குத் தெரியாது என்றபடி

பச்சையப்பாஸ்ல படிச்சீங்க இல்லே 

ஆமா 

உங்க அப்பா பச்சையப்பாஸ் ப்ரொஃபசர் இல்லையா 

ஆமா 

நாம ரெண்டு மூணு தடவை மீட் பண்ணியிருக்கோம், அப்பவும் உங்களுக்கு அடையாளம் தெரியலை. வாணி மகால்ல ஒரு தடவை சோ மீட்டிங் வந்திருந்தீங்க இல்லே... 

ஞாபகம் இல்லையே... என்றபடி அவர் சிரிப்பது பக்கவாட்டுக் கன்னக் கதுப்பில் தெரிந்தது. 

அந்த மீட்டிங், நக்ஸலைட்டுகள் மீதான அடக்குமுறைக்கு எதிராய் மனித உரிமைக்காக PUCL கூட்டியிருந்த கூட்டம் என்று நினைவு, அதில் சோ சுருதி பேதமாகப் பேசியிருந்தார்.

அப்பறம் ஒரு தடவை டிரைவின் எதிர்ல ரோடைக் கிராஸ் பண்ணும்போது ரோடு நடுல உங்க பக்கத்துல நான் இருந்தேன். என்னைத் தெரியிதானு கேட்டேன். கூலிங்கிளாசைக் கழட்டுங்கன்னு சொன்னீங்க. கழட்டின அப்பறமும் உங்கலுக்கு என்னை அடையாளம் தெரியலை 

சிரித்துக்கொண்டே சுத்தமா ஞாபகமில்லை என்றபடி ஐஸ்கிரீமுடன் சென்றுவிட்டார் 

ஏற்கெனவே பணம் கொடுத்துவிட்டிருந்த இன்னொரு பட்டர் ஸ்காட்ச்சையும் கேட்டு வாங்கி உட்கார்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தேன் 

இப்போது இரு ஆண்கள் ஐஸ்கிரீம் வாங்க வந்தனர். அதில் ஊதா கோடுகள் போட்ட சட்டை அணிந்திருந்தவரைப் பார்த்து, நீங்க இண்டியன் எக்ஸ்பிரஸ்தானே என்றேன் 

ஆமாம் 

உங்க பேர் ரங்கராஜன்தானே

ஆமாம்

எவ்ளோ வருசம் முன்ன பார்த்தது. ஆனா அப்பப்ப நிறைய இடங்கள்ல பாத்திருக்கேன் 

உங்களையும் நிறைய இடங்கள்ல பாத்திருக்கேன் என்றார் அவர் 

80களிலிருந்து டிரைவின் உட்பட நிறைய இடங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அவரிடம் பேசுவதென்னவோ இதுவே முதல் முறை. ஞாநி அவரைப் பற்றி, நேர்மையான பத்திரிகையாளர், 80களின் நக்சலைட் - தேவாரம் அடக்குமுறை சமயங்களில் துணிச்சலாக ரிப்போர்ட் செய்த நேர்மையான மனிதர் என உயர்வாகக் கூறி உருவாகியிருந்த பிம்பம் அசாதாரணமானது. பலூன் நாடகத்தில் வரும் நிருபர் பாத்திரத்துக்கு,  அவரே முன்மாதிரி என ஞாநி கூறியதாகக் கூட ஒரு நினைவு என்று சங்கிலியாய் போய்க்கொண்டிருந்ததில் மெளனமாகியிருந்தேன்.

உங்க வேலைக்கு ஆட்கள் முகங்களை நினைவு வெச்சிக்க வேண்டியது ரொம்ப முக்கியமில்லை அதான் இவ்ளோ கரெக்டா ஞாபகம் வெச்சுக்கிட்டு இருக்கீங்க என்றார் கேபிள் சங்கர் 

இன்னோரு பட்டர் ஸ்காட்ச் என்று வாங்கி சாப்பிட்டபடி, அட நீங்க வேற நான் கஜினி சூர்யாவாட்டம். எதுவும் நினைவு இருக்காது. அதனாலதான் போற எடத்துலல்லாம் போட்டோ எடுத்து வெச்சுக்குவேன் என்றேன். 

ஒலா போல ஒரு கால் டாக்ஸி சற்றுத் தொலைவில் வந்து நின்றது. டிக்கியைத் திறந்து பிரெளன் கலர் சாரி அணிந்திருந்த பெண்மணி தலையில் கட்டிய கர்ச்சீப்புடன் எதையோ வைத்துக் கொண்டிருந்தார். அருகில் உதாக் கலர் சட்டை. 

அந்த லேடி இங்க வந்து ஐஸ்கிரீம் வாங்கின சித்ரா மாதிரியே இல்லே என்றேன். 

அவங்களேதான், கால் டக்ஸியை வரவழைச்சிருக்காங்க என்றார் கேபிள். 

டிக்கி மூடப்பட்டதும் இருவரும் ஏரிக்கொள்ள வண்டி கிளம்பிற்று.

கிளம்பும் போது கேபிளின் நண்பர், நான் கேஆர்பி செந்தில் என்றார். தெரியும் என்றேன். அவர் முகம் பிரபாகரன் ப்ரொபைலுடன் பதிவாகி இருந்த அளவுக்கு அவரது பெயராகப் பதிவாகியிருக்கவில்லை என்பதுதான் உண்மை. 2011 புத்தகக் கண்காட்சியில் அவரேவோ அல்லது அவரது நண்பரிடம் சொல்லியோ கேண்ட்டீனில் பச்சை சட்டையணிந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் நான் ஒ வென சிரிக்கிற போட்டோவை, நீள ஜூம் லென்ஸ் பொருத்தப்பட்ட காமிரவில் எடுத்த நிகழ்வுடன் மூளையடுக்கில் இவரை இணைத்து வைத்திருக்கிறது மனம்.

வீட்டுக்கு வந்து, என்ன உணவு என்றேன். தோசை என்றாள். இரண்டு போதும் என்றேன். வெளியில் ஏதாவது சாப்பிட்டு விட்டீர்களா என்றாள். மூன்று கப் ஐஸ்கிரீம் என்றேன். மூன்று நாட்களாக, தலைவலி ஜலதோஷம் என வாயைத் திறந்து அரற்றிக்கொண்டிருந்தது மறந்துவிட்டதா என்று வாய் மீது கையை வைத்துக் கொண்டாள்.

அது மட்டுமல்ல, அதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததுகூட மறந்துவிட்டது. இதை எழுதிப் பதிவேற்றி, ,மடிக் கணினியையும் அணைத்து விட்ட பின்புதான் இது நினைவுக்கு வந்து, இப்போது இடையில், கடைசி பத்திக்கு முன்னால் இதை செருகிக்கொண்டு இருக்கிறேன்.

எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாலோ எப்பொதாவது எழுதுவதாலோ மட்டுமே ஒருவன் எழுத்தாளன் இல்லை. எப்போதும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சுமந்துகொண்டு இருப்பது அறியாமல் வாழ்ந்துகொண்டு இருப்பதால் மட்டுமே ஒருவன் எழுத்தாளனாக இருக்கிறான். எழுதாத காலங்களிலும் அவன் எழுதிக்கொண்டே இருக்கிறான். அதனால்தான் எழுதும்போது, அவனையும் அறியாது, அவன் வாழ்வின் ஏதேதோ விஷயங்கள், மேலெழுந்து வந்து சரியான இடங்களில் கனகச்சிதமாக அமர்ந்துகொள்கின்றன.