04 March 2017

உள்ளும் வெளியும்

‪2005-06ஆக இருக்கலாம். நான், சினிமாட்டோகிராபர் நண்பனான தரன் என்கிற ஶ்ரீதர், 80களில் சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயின்ற கிறிஸ்டோபர், டிராட்ஸ்கி மருது என்று தினம் சந்திக்கும் டிரைவ்-இன் ஜமா. ‬

மருதுவுக்கு மெய்ல் ஐடி உருவாக்கிக்கொடுக்க அவரது நந்தனம் டவரில் இருந்த வீட்டுக்குச் சென்றிருந்த போது, நீண்டகால இடைவெளிக்குப் பின், தற்செயலாக அறிவுமதியை சந்திக்க நேர்ந்தது. தம் 'பாப்பாவின்' கணினியில் ஏதோ பிரச்சனை என்றார். அதற்கென்ன என்று, ஆர் எஸ் எஸ்ஸோ பிஜேபி அலுவலகமோ அதற்குப் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டிற்கு சென்று முடிந்தவரை சரி செய்து கொடுக்கப் பார்த்தேன். ‬

‪இப்படி எதோ ஒரு உதவியை வைத்து - எனக்கோ அவர்களுக்கோ - ஓரிரு நாட்கள் ஜொலிக்கும் உறவு அப்படியே அமர்ந்துவிடும். ஆனால் ஒருபோதும் அணைந்துவிடாது. எப்போது போவேன் எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது. என்னை இப்படியே ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டனர் என் நண்பர்கள். ‬

‪அறிவுமதியை அவரது இல்லத்தில் சந்தித்த போது, முதல் முதலில் அவர் இருந்த ஆள்வார்பேட்டை வீட்டில், அவர் மனைவி வற்றலுடன் பரிமாற உணவு உண்டதை நினைவுகூர்ந்தேன். இங்கிருக்கும் அவர் மனைவிக்கு சுத்தமாக நினைவில்லை. அப்போது, அறிவுமதி தரமணியில் இருந்த தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில்லோ பிஎச்டியோ செய்துகொண்டு இருந்தார் என்று நினைக்கிறேன். (அது, வைரமுத்து சினிமாவுக்குள் நுழைய முயன்றுகொண்டிருந்த நேரம்). ‬

‪அடேங்கப்பா எந்த காலத்தில் இருந்தது அந்த லைன் வீடு என்று பெருமூச்செரிந்து வியந்தார். அந்த வீடு, ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை மடத்துக்குக் கீழே இருக்கும் பிள்ளையார் கோயிலில் இருந்து உள்ளே செல்லும் குறுக்கு சந்தில் இருந்தது.

‪தொடர்ந்தார் போல் இப்படிக் கொஞ்ச நாட்கள் அறிவுமதியை சந்தித்துக் கொண்ட இன்னொரு காலகட்டத்தின் இன்னொரு இடம், 'ஐயப்ப சீசன் டைரக்டர்' தசதரனின் சுண்ணாம்பே பார்த்திராத சுவர் கொண்ட எல்டாம்ஸ் ரோடு மொட்டைமாடி. ‬அங்குதான் கண்ணதாசன் எழுதிக்கொடுத்திருந்த பாடலை நேரடியாகப் பார்த்தது. கையெழுத்து பஞ்சுவுடையதாக இருக்க வேண்டும். ஒரு பாடலுக்கு ஏழெட்டுப் பாடலுக்கு எழுதிக்கொடுத்ததைப் போல ஏகப்பட்ட வரிகள். எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் போல மானாவாரியாக இருந்தன. 

சினிமாவில் உங்களுடைய காட்சிகளை வரிகளை பெயரே போடாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்களே எனக் கேட்டதற்கு ஜெயகாந்தன் சொன்னார், இல்லாதவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று.

‪அடிக்கடி அறிவுமதியை சந்திப்பது அரிதாகி அவர் வெவ்வேறு இடம் பெயர்ந்து யார்யாருடனோ இருந்துகொண்டிருக்க, சிறுகதைத் தொகுப்புகளெல்லாம் வெளியாகி குற்றிலக்கிய உழக்கில் நானும் ஒரு முக்கியமான இளம் எழுத்தாளன் என்று ஆகிவிட்டிருந்தேன். தேனாம்பேட்டை SIET அருகிலிருக்கும் ஆனந்தா ஆபீஸ் செண்ட்டரில் (இந்த அலுவலகம்தான் 94ல் எழுதிய பந்தாட்டம் கதையில் வருவது) இருந்த அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த, பின் 80களில் ஒரு நாள், எதிரிலிருந்த பஸ் நிறுத்தத்தில், அறிவுமதியைப் பார்க்க நேர்ந்தது. அப்போது அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தார் அல்லது பட வேலைகள் இல்லாத நேரத்தில் அன்னம் மீராவுடன் திரிந்துகொண்டு இருந்தார். ஆளாகும் முன் எல்லோருமே திரிந்துகொண்டேதான் இருந்தாக வேண்டும். ‬சினிமாவில் மட்டும் ஆயுசு முழுக்க அல்லாடித் திரிந்துகொண்டே இருப்பவர்கள் ஏராளம். ஆளாபவர்கள் ஆகக் குறைவு.

‪கல்லூரிப் போட்டிகள்ல கவிதை எழுதிக்கிட்டு இருந்த சின்ன பையனா பாத்த மாமல்லன் நாலஞ்சி வருடங்களுக்குள்ளையே எப்படி இப்படி ஒரு கலைஞனா ஆகிட்டேனு ஆச்சரியமா இருக்கு. இதைப் பத்தி ஒரு முன்னுரைலகூட எழுதியிருக்கேன் என்றார் அறிவுமதி. அந்த பஸ்டாப்பில் எங்கள் இருவரைத் தவிர எங்கள் இருவரின் பெயர்களகூட எவருக்கும் தெரிந்திருக்காது என்பதில் எங்கள் இருவருக்குமே அப்போது சந்தேகம் இருந்திருக்காது.‬

‪தீவிர இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த சமயமாதலால், அவர் அவ்வளவு மரியாதையுடன் பாராட்டினாலும் மு மேத்தா அறிவுமதி வைரமுத்து அக்கினிபுத்திரன் என்கிற நபர்களெல்லாம் வெறும் காமெடிப் பெயர்களாகியிருந்த காலமாதலால் அசிரத்தையாகவே இருந்தேன். ‬

‪குப்பைனு ஒரு கதை எழுதியிருக்கியே அதை எடுத்தா பிரமாதமா வரும். போஸ்டர் ஒட்டி மீதமிருக்கிற பசைவாளியைக் கவுத்தி அந்தப் பையன் தெருவுல சொட்டு சொட்டா விட்டுகிட்டுப் போறது திரைல விஷுவலா  எப்படி வரும் தெரியுமா என்றார் ‬

‪அறிவுமதி அது 80 எலெக்‌ஷனுக்கப்பறம் நுங்கம்பாக்கம் மாங்காடு ஐயர் தெருவுல இருந்தப்பப் பாத்ததை எழுதின முதல் கதை. ரொம்ப சுமாரான கதை என்றேன்.

‪இல்லை சினிமாவா பண்ண அந்தக் கதைல நிறைய இருக்கு. டைரக்டர்கிட்டக்கூட எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன் ‬என்றார்

‪இதற்குள் மீரா பற்றி ஏதோ பேச்சு வர, தருமு சிவராமுவுக்கு (பிரமிளுக்கு) புக்கு போடறதை விட்டுட்டுக் கண்டதையும் போட்டுக்கிட்டிருக்கான் என்று வண்டைவண்டையாகத் திட்டத் தொடங்கிவிட்டேன். புண்டை என்கிற வார்த்தையைக் கேட்டதும்தான் எங்களுக்குள் ஏதோ சண்டை என்று எங்கள் இருவரையும் சீந்தி பார்க்கவே தொடங்கிற்று அந்த பஸ்நிறுத்த உலகம். 

நல்ல இலக்கியவாதியா இருந்துக்கிட்டு இப்படி அசிங்கமா பேசலாமா என்றார். போய்யா பொக்கெ நீயும் உன் சர்ட்டிபிகேட்டும் என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு டிரைவ்-இன் நோக்கி வேகமாக சைக்கிளை மிதிக்கக் தொடங்கினேன். ‬

‪இப்பொது சொல்ல வந்தது மேற்குறிப்பிட்ட எவையுமே இல்லை. இதுபோல சந்தித்த பல முறைகளில் ஒருமுறை அறிவுமதி கூறியது நினைவுக்கு வரவே அதைச் சொல்லத்தான் நான் இதையே எழுத ஆரம்பித்தேன்.‬

‪அதாவது, பாரதிராஜா அலுவலக வரவேற்பறையில் அறிவுமதி அமர்ந்திருக்கையில், நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருந்த இரண்டு பெண்கள், முன்பின் தெரியாத, மென்மைக்குப் பெயர்போன அறிவுமதியிடம், இப்படிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்களாம்,

‪வேணும்னா தப்புகிப்புகூட செஞ்சிக்கிங்க ஸார் ஆனா படத்துல சான்ஸ் குடுங்க ஸார் ‬

‪உள்ளே நுழைய ஆளாக அவர்கள் கெஞ்சினார்கள் 

ஆளான பின்பும் தக்கவைத்துக்கொள்ள, ‪உள்ளே நுழைத்துக் கொண்டு இவர்கள் கொஞ்சுகிறார்கள் ‬

‪சினிமாவில் எல்லாமே காசுக்காகதான் காசுக்காக மட்டும்தான் ‬

‪அதனால்தான் ஷோபாக்களும் சிலுக்குகளும் ஓஹோவென்று பேரும் புகழும் பணமும் பார்த்த பின்பும் வெறுமையின் துக்கம் தாளாமல் ஒரு நாள் தூக்கில் தொங்கிவிடுகிறார்கள்‬