26 March 2017

யுத்தம்அப்புறம் எப்படி, இந்தியனாக இருக்கும் எனக்குப் புரிகிற, ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை கதை, இலங்கையராக இருந்தும் உங்களுக்குப் புரியவில்லை. 

இதற்கு, என் வயதும் அனுபவமும் இலங்கைப் போரை ஆரம்பம் முதலே பார்த்துக்கொண்டு இருப்பவன் போன்ற காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணம் வேறு. 

இலக்கியத்தை, விகடன் குமுதம் பேஸ்புக் போல விறுவிறுவெனப் படிக்காதீர்கள். வார்த்தைகளைப் படிக்காதீர்கள். பொறுமையாய்ப் பொருளைப் படியுங்கள். கண்ணால் படிக்காதீர்கள். மனதாலும் இதயத்தாலும் மூளையாலும் படியுங்கள். 

என் 19 வயதில் 'மாதக் கடைசியின் மாலைப் பொழுதில்' என்கிற சின்னஞ்சிறு கதையொன்றை எழுதி, அது ஞாநி, நம்பிராஜன் எல்லாம் வேலை பார்த்த, இந்துமதி ஆசிரியராக இருந்த அஸ்வினி வாரப் பத்திரிகையில் பிரசுரமும் ஆகிற்று. 

மிதந்து கொண்டிருந்த என்னை, விக்ரமாதித்யன் கேட்டார், புதுமைப்பித்தனைப் பதித்திருக்கிறீர்களா என்று. 

ஒன்றிரண்டு என்றேன். பொடிப்பயல் ஆயிற்றே என்கிறக் கருணை சிறிதுமின்றி, புதுமைப்பித்தனைக்கூடப் படிக்காம எழுத வந்துடறீங்க இப்ப வரவங்கள்லாம் என்று செருப்பால் அடித்துத் தரையில் வீழ்த்தினார். அவமானம் தாங்காமல் உள்ளூர அழுதபடி எழுதுவதை நிறுத்தினேன். 

ஆனால் அந்த ஒரு வருடம் முழுக்க நவீன தமிழ் இலக்கியப் புத்த வாசிப்பில் மட்டுமே ஈடுபட்டேன். கல்லூரில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டு இருந்தவன், ஒரு வருடத்தில் இரண்டு செமஸ்டரில் அத்தனைப் பேப்பரிலும் பெய்லானேன். அடுத்த வருட செமஸ்டரில் ஒரே அடியில் 17 பேப்பர்களையும் எழுதி பாசானேன். இன்னமும் டிகிரி இல்லை என்பது வேறு விஷயம்.

ஒரே வருடத்தில் மீண்டும் எழுதத் தொடங்கினேன். இப்போது பழைய மாமல்லனை உடைத்துக்கொண்டு புதிய மாமல்லன் முளைத்திருந்தான். முதலிரண்டு கதைகளிலேயே, சுஜாதா அசோகமித்திரன் ஜானகிராமன் சுரேஷ்குமார இந்திரஜித் க்ரியா ராமகிருஷ்ணன் திலீப்குமார் போன்ற விநோதக் கலவையால் இளம் நம்பிக்கையாக அடையாளம் காணப்பட்டேன். 

அன்று மட்டும் நம்பிராஜன் என்னை பாலகன் ஆயிற்றே பாவம் என தடவிக் கொடுத்திருந்தால் நானும் இன்னொரு பாலகுமாரனாகி ஆனந்தவிகடன் எழுத்தாளன் ஆகியிருப்பேன். ஆனந்தவிகடனுக்குக் கதை எழுதுவதற்கும் ஆனந்தவிகடனில் நம் கதை வருவதற்குமான வித்தியாசம் இதுதான். 

அதே போல பெரியவர்கள் போய் ஏனிப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று பெரியமனுஷன் போலப் புறக்கணிப்பது நமக்குப் பேரிழப்பு என்பது போகப்பொகத்தான் புரியும். எந்தச் சண்டையிலும் சண்டை போக எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். நமக்குக் கிடைக்கும். இவர்களென்ன தெருச்சண்டையா போடுகிறார்கள். அவரவர் நம்பும் விழுமியங்களுக்காக அல்லவா அடித்துக் கொள்கிறார்கள். எந்தச் சண்டையிலும் ஆயிரம் உள் நோக்கங்கள் இருந்தாலும் அவற்றினூடாக தர்க்க அறிவும் படைப்பின் நுணுக்கங்களும் கொட்டிக் கிடக்கும். சண்டையில் தெறிக்கும் கெட்ட வார்த்தைகளைக் கண்டு மிரள்வதோ, அநாகரிகம் என அசூயை கொண்டு விலகுவதாலோ இழப்பு நமக்குதான். அதைத் தவிர்த்துவிட்டு, அடிப்படையில் என்ன சொல்லப்படுகிறது என்பதைக் கவனிப்பதே, இளைஞர்களின் எதிர்காலத்துக்கான உரம். 

இலக்கியவதிகளில் பெரும்பாலோர் நன்கு அட்சர சுத்தமாகக் கெட்டவார்த்தை பேசக்கூடியவர்கள் தனிப்பேச்சில். இதெல்லாம் வெறும் மேல்பூச்சு. தற்காப்புக் கவசம். நாகரிக ஒப்பனை சற்றும் கலைக்காத கெளரவ நரிகளின் விஷ வீரியம் சாதாரணமானதன்று. 

வெகுஜன பத்திரிகை வெளியில் எந்தப் பிரபலமாவது எந்தப் பிரபலத்தையாவது விமர்சனமாவது செய்கிறானா என்று கவனியுங்கள். இவன் அவனுக்கு இரண்டு மாலை போட்டால் அவன் பதிலுக்கு இவனுக்கு நாலு மாலையாகப் போடுவதைப் பார்த்து நாம் ஆவென வாய்பிளந்து உளமாரப் புளகித்து கைதட்டி மகிழ்வோம் அடடா மேதமையை மேதமைப் பாராட்டுகிறதே என்று. 

இலக்கியத்தில் காசே கிடையாது. இருப்பதோ ஈகோ மட்டுமே. அதைத் தொட்டதும் எந்த பல்லியும் எகிறிக் குதிக்கிறது. அலங்கார தோரணை கிழிபடுவது சாதா ரணமல்ல, மரணாவஸ்தை. 

இதற்கும் வாசிப்புக்கும் என்ன சம்மந்தம் என்றால், படைப்பைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் வெ.சாவும் பிரமிளும் கசடறதபற எழுத்தாளர்களும் வானம்பாடி கோஷ்டியும் அடித்துக்கொண்டதில்தான் எனக்குக் கிடைத்தன. பத்துப் பதினைந்து வயதுப் பையனாக இருந்தபோது, நடந்த சண்டைகளையெல்லாம், 20-21 வயதில் தேடித்தேடி படித்திருக்கிறேன். 

படைப்பு பற்றிய பல வாசல்கள் எனக்குத் திறந்தது இவற்றிலிருந்துதான். 

இலக்கியம் கூட யுத்தம்தான். இலக்கியத்தை வசப்படுத்த நிகழ்த்த வேண்டியது சாதாரன யுத்தமல்ல. இலக்கியத்துக்காக வாழ்வையே பணயம் வைத்து மாண்டவர்கள் எண்ணிக்கை எத்தனையோ. இங்கே காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிது.

இலக்கிய வாசிப்புக்கு இதெல்லாம் தேவையா என்றால், இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பதுதான் என் பதில். 

உங்கள் நாட்டில் பிறந்த எங்கள் நாட்டு மகாகவியுடன் இதை முடிப்பதே பொருத்தம். 

எல்லை 

கருகித்தான் விறகு 
தீயாகும். 

அதிராத தந்தி 
இசைக்குமா? 

ஆனாலும் 
அதிர்கிற தந்தியில் 
தூசி குந்தாது. 

கொசு 
நெருப்பில் மொய்க்காது. 

-பிரமிள் (எழுத்து செப். 1965)