07 April 2017

படித்த டாக்டர்களும் படிக்காத மெக்கானிக்கும்

பேலியோ உணவு முறைக்கு வந்து, இருபது நாள் கூட ஆகாமல் திடீரென்று சில தினங்கள் முன்பாக ஒரு நாள் பிபி மாத்திரை எடுப்பதை நிறுத்திவிட்டேன். 

கடைசியாக, அடையாரில் இருக்கும் எங்கள் டாக்டரிடம்  21.07.2016 அன்று பார்த்துக்கொண்டதுபடி என் பிபி 120/80.

நவம்பர் 2013ல் பிபி வந்தபோது எடுத்த ரீடிங் 180/90. அதாவது, கிட்டத்தட்ட 15-20 தினங்களாக, இரவு பகலாக கேஸ் காபந்து கைது ரிமாண்ட் என்று போதுமான தூக்கமின்றி,  தலை சூடாகிக்கொண்டே இருந்து, ஒரு நாள் இரவு திடீரென ஜுரம் ஓவராகி, பெஸண்ட்நகர் சந்தோஷ் ஹாஸ்பிடலுக்குப் போய் ஐஸ் வைத்து ஜுரம் இறக்கி, பிபி இருக்கிறது எனக்கூறிக் கொடுத்த மாத்திரையை, தொடர்ந்து எடுத்துக்கொள்ளச் சொல்லாததால் விட்டுவிட்டு, திரும்ப ஜுரம் வரவே அடையார் மருத்துவரிடம் சென்று காட்டியபோது எடுத்த ரீடிங் 180/90. 

அவர் முதலில் பத்து பைசா மாத்திரையை எழுதிக் கொடுத்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து திடுப்பென ஒரு நாள் கால் வீங்கவே, ஓடிப்போனேன். நோன் கல்ப்ரிட் என்று கூறி 5 ரூபாய் மாத்திரையாக மாற்றிக் கொடுத்தார்.

இது பிபி மாத்திரையோட சைடு எஃபெக்டா டாக்டர்

ஆமாம். இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் குடுக்குறோம்னா, பெரிய ஆபத்து வராமக் காப்பாத்த இது மாதிரி சின்ன பிராபளம்ஸ் பரவாயில்லேங்கிறதால குடுக்குறோம்.

அடுத்துக் கொடுத்த மாத்திரைதான் பேலியோவுக்கு வந்து பிபி மாத்திரையை விடும்வரை எடுத்துக்கொண்டு இருந்தது. இந்த மாத்திரையில் எந்த சைடு எபெக்டும் இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன் பிளட் ரிப்போர்ட் வரும்வரை. அதைப் பார்த்த பின்புதானே தெரிகிறது ‘சின்ன பிராப்ளமாக’ கிட்னி வீக்காகி இருப்பது.

2013ல் எங்கள் வீட்டருகில் இருக்கும் மருந்துக் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கையில், மனைவி தனக்கும் பிபி இருக்கிறதென்று டாக்டர் கூறிவிட்டாரே என வருத்தமாய் சொல்ல, அவர் ஸ்ரீ ஸ்ரீயின் யோகா வகுப்புகளுக்குத் தாம் போகத் தொடங்கி, பிபி முற்றிலுமாகக் குணமாகிவிட்டதாகக் கூறினார். 

ப்ச். அவரையெல்லாம் நம்புவது முட்டாள்தனம் என்றேன் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஸ்ரீ ஸ்ரீயின் புகைப்படத்தைப் பர்த்தபடி

அப்ப யோகா பண்ணி மாத்திரையை விட்ட நாங்கள்ளாம் முட்டாளுங்களா என்றார் 

எதுவும் பேச முடியாமல் நான் அமைதியாக இருந்துவிட்டேன் 

அடுத்த செக்கப்பில் அடையார் டாக்டரிடம் பிபியை குணப்படுத்த முடியாதா எனக் கேட்டபோது, பிபி சுகர்ங்கிறதெல்லாம், வியாதி இல்லை. கண்டிஷன். அது வராதவரை ஒகே. வந்துட்டா அதைக் கட்டுக்குள்ளதான் வச்சிக்கதான் முடியுமே தவிர, நிரந்தரமா குணப்படுத்தல்லாம் முடியாது என்றார் 

மனைவி யோகா கிளாஸ் போகலாமா. நிறைய பேர் யோகா போய் பிபியிலிருந்து வெளியேறி இருக்கிறார்களே எனக் கேட்டதற்கு, இப்பல்லாம் எல்லாருக்கும் யோகா ஃபேஷனாயிடுச்சி என்று கூறிவிட்டார் டாக்டர். ஆனால் மோடி ஆட்சி வந்து அலுவலக குடியிருப்பிலேயே இலவச யோகா வகுப்புகள் தொடங்கப் பட்டபின் ரெகுலராக சென்றுவந்து கொண்டு இருக்கிறாள். அவளுடன் கூட யோகா பயிலும் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரையைக் குறைத்து முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். மனைவிக்குதான் நிறுத்துகிற அளவுக்கு இன்னும் தைரியம் வரவில்லை - சக்கரையை முற்றாக நிறுத்தி மூன்று நாளுக்கு ஒருமுறை கைக்குத்தல் அரிசி தின்னும் அளவுக்கு கட்டுபாட்டுக்கு வந்தும்

நான் இந்த உணவு முறைக்கு மாறியபின், எங்கள் அலுவலக ஸ்டெனோவின் கணவரும் இது போன்றதொரு உணவுமுறைக்கு மாறி ஒரு மாதம் ஆனபின், அவர்களது அலுவலகம் மூலம் அப்போல்லோவில் அடுத்த செக்கப்புக்காகப் போக நேர்ந்தபோது, சோதித்துப் பார்த்தவர்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், சென்ற ரிப்போர்ட்டை ஒப்பிட்டால் உங்கள் பிபி சுகர் எல்லாம் நார்மலுக்கு வந்துவிட்டதே, என்று ஆச்சரியப்பட்டு விட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அது பேலியோவின் ஒரகத்தியோ என்னவோ எதோ ஒரு பெயரைச் சொன்னார். 

அவருக்கு ஒரு மாதம் என்றால் எழுத்தாளன் அசாதாரணன் இல்லையா அவனுக்கு இருபது நாள் போதாதா என்று, எப்போதும் போல மேஷ ராசி அவசரக் குடுக்கையாக, இரண்டாம் தேதியிலிருந்து பிபி மாத்திரையை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டேன். ஆனால் எச்சரிக்கையுடன் பிபி மாத்திரையும் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையும் கையுமாகவே இருந்தேன். காலை இரவு என முதல் நாளும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இரவிலுமாக வெவ்வேறு டாக்டர்களிடம் பிபியை சோதித்துக் கொண்டு இருந்தேன். தொடர்ந்து 140/90லேயே இருந்தது. 

முதலில் பார்த்த, எல்டாம்ஸ் ரோடிலிருந்த இளம் டாக்டர் பெண்மணி பிபி பார்த்துவிட்டு 140/90 நார்மல்தான். பிபி மாத்திரை எடுக்கிறீர்களா என்றார். ஆமாம். ஆனால் நேற்று முதல் நிறுத்தியிருக்கிறேன், கடைசியாக எடுத்தது முந்தாநாள், பேலியோவில் இருப்பதால் மாத்திரையை விட்டுப் பார்க்கலாமே என்கிற ஒரு முயற்சிதான், மாத்திரை போடாமல் எனக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லையே விட்டுவிடலாமா என்று கேட்டேன். உங்கள் வயது என்ன என்றார். 57 என்றதும் இன்னோரு நாள் பாருங்க. கொஞ்சம் அசவுகரியமா இருந்தாக்கூட மாத்திரையைப் போட்டுருங்க என்றார். 

அன்றிரவே, வீட்டிற்கு வந்ததும் பர்முடாஸுக்கு மாறி, இடுப்புப் பெளச்சையும் எடுத்துக் கட்டிக்கொண்டு பெஸண்ட்நகரிலிருக்கும் டாக்டரிடம் சென்றேன். இவர் 55 வயது மதிக்கத்தக்க மனிதர். உள்ளே நுழைந்ததும் என்ன என்பதுபோல் ஏற இறங்கப் பார்த்தார். 

பிபி செக் பண்ணணும் 

எப்படி வந்தீங்க ஜாகிங் போய்ட்டா நடந்தா 

இல்லை பைக்லதான் 

நடந்து வந்திருந்தா ஒரு பத்து நிமிஷம் உக்காரணும் பைக்லனா பரவாயில்லை என்றபடி என்ன வயசு எனக் கேட்டார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு, 136/90 நார்மல்தான் என்றார். மதியம் மூன்று மணி வாக்கில் எடுத்தபோது 140/90 இருந்தது என்றேன். வெயில்ல கொஞ்சம் தூக்கிக் காட்டும், மாத்திரை போடறீங்களா என்றார் 

ஆமாம் போடறேன் ஆனா ரெண்டு நாளா நிறுத்தியிருக்கேன் என்று ஏன் எப்படி என்கிற பேலியோ புராணத்தைக் கூறினேன் 

நீங்க சொல்றதுபடிப் பார்த்தா இதுல எல்லாமே நேச்சுரல் உணவுகளா இருக்குங்கிறது நல்ல விஷயம் என்றார் 

முப்பது கொடுத்தேன். ஐம்பது, பரவாயில்ல குடுங்க என்று வாங்கிக்கொண்டார். பேலியோ பற்றி அவருக்கு சொன்னதற்கு எனக்கு எதாவது கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியுமா எனவே, இருபது ரூபாய் சலுகையே எதேஷ்டம் என்று கிளம்பிவிட்டேன் 

அடுத்த நாள் இரவு, இவர் எங்கேப் போகப் போகிறார் என அசால்டால் பைக் எடுக்காமல் நடந்து சென்றதில், அவர் கிளினிக் மூடியிருந்தது. சாஸ்திரிநகரிலிருக்கும் மருத்துவமனையொன்றை விசாரித்துக்கொண்டு, வந்த பிக்கில் லிஃப்ட் கேட்டுப் பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்றேன். அங்கிருந்த இரண்டு நர்சுகளில் ஒருவர், வந்த விஷயத்தைச் சொன்னதும் கொஞ்சம் உக்காருங்க ஒரு அஞ்சு நிமிஷம் என்றார். 

130/90 

நேற்றிரவு, அஞ்சப்பரில் மட்டன் சுக்கா அடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, அவசியமே இல்லாமல் மைலாப்பூரெல்லாம் சென்று டாக்டரைத் தேடி அலைந்து, முகமறியாதவர் கூறிய அடையாளப்படி குறிப்பிட்ட குட்டி தெருவிற்குள் சென்றதும், அடடா இது ஏற்கெனவே வீட்டு சோதனைக்காகச் சென்றிருந்த சந்தாயிற்றே, வேண்டியவர்கள் கண்ணில் படாதிருக்க வேண்டுமே என்கிற வியாகூலத்துடன், டாக்டர் கூட இல்லையோ என ஐயப்படும்படியாக யாருமற்று இருந்த கிளினிக்கின் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தால் நம்மைப் போலவே வாட்ஸப்பையோ பேஸ்புக்கையோ ஃப்ரீயாக நோண்டிக்கொண்டிருந்தார் டாக்டர். 

எஸ் 

பிபி செக் பண்ணணும் 

உங்களுக்கு பிபி இருக்கா 

இருந்துது இப்ப இல்ல. அதான் இப்ப எப்படி இருக்குனு செக் பண்ணணும் 

சுகர் இருக்கா 

இல்லை 

மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்களா 

சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். பேலியோவுக்குப் போனப்பறம் இப்பதான் சாப்பிடறதை விட்டிருக்கேன் 

பேலியோ எல்லா கிம்மிக்கு. எப்பலேந்து மாத்திரை சாப்படறீங்க 

2013 நவம்பர்லேந்து 

மூனரை வருஷமா உங்க பாடி மாத்திரைக்குப் பழகிப்போயிருக்கும். அதை டேப்பர் பண்ணி கொண்டாந்து நிறுத்தணுமே தவிர இப்படி அப்ரப்டா நிறுத்தக் கூடாது என்றபடியே பிபி சோதித்துவிட்டு

140/96. பிபி இருக்கு நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும் என்றார்

ரெண்டு மூணு நாளா 140/90 தாங்க இருந்துது. நேத்து நைட்டு 130/90 தானே இருந்துது

இல்லை. உங்களுக்கு பிபி இருக்கு மாத்திரை சாப்பிட்டே ஆகணும். 

மாத்திரையை நிறுத்தி நாலஞ்சு நாள் ஆகியும் டிஸ்கம்ஃபர்ட் ஒண்ணும் இல்லையே டாக்டர்

டிஸ்கம்ஃபர்ட்னா என்ன மீன் பண்றீங்க. தலை சுத்தறது தள்ளாடறதா. இதையெல்லம் பிபி காட்டணும்ங்கிற கட்டாயமே இல்லை. ராத்திரி படுத்திருக்கும்போது கூட என்றபடி கையை - வெண்ணிற ஆடைக்கு வடிவேலு காட்டுவதைப் போல - சைகையில் காட்டினார்.

இல்லை பேலியோ டயட்ல 

பேலியோலாம் சும்மா கிம்மிக்குங்க. எப்ப பேலியோவுக்குப் போலாம்னா, உங்களுக்கு பிபி இருக்குனு டையக்னோஸ் பண்ணி இன்னும் நீங்க மாத்திரை எடுத்துக்க ஆரம்பிக்கலைனு வெச்சிக்குங்க அந்த ஸ்டேஜ்ல பேலியோ டயட்டுக்குப் போயி மத்திரையே போடாம இருந்துட்டீங்கனா அப்ப ஓகே 

அப்ப மட்டும் என்னய்யா ஓகே, வெண்ண. அதான் பிபி கண்டிஷனுக்கு பாடி வந்துருச்சே. அப்ப மட்டும் எப்படி பேலியோல பிபி சரியாயிரும். அதான் பேலியோ கிம்மிக் ஆச்சே என்று வவ்வவ்வே காட்ட, அவரென்ன ஜெயமோகனா இல்லை பேஸ்புக் கார்புரட்டு வைக்கோலா. இந்த வெட்டியுடன் என்ன பேச்சு என ஒரு இருபது ரூபய் நோட்டையும் எலெக்ட்ரானிக் ஸ்டோர்போல இருக்கும் பாண்ட் பாக்கெட்டைத் துழாவிக் கிடைத்த பத்து ரூபாய் வில்லையையும் கொடுத்தேன்.  

நூறு ரூபாய். அடுத்த தடவை வரும்போது குடுங்க என்று அதையும் வாங்கி மேசை டிராயரில் போட்டுக் கொண்டார், அவரை அழித்து பழைய என்னை இரண்டு செய்யலாம் எனும்படியாக, வெகு விரைவில் பேலியோவுக்கு வந்தே தீரவேண்டிய கேஸ் என்கிற சைசில் இருந்த, என்னைவிடப் பத்து வயது குறைவான முகத்தோற்றம் கொண்ட, என் வயதைக் கூடக் கேட்கிற அக்கறையில்லாத அந்த டாக்டர்.


வீட்டிற்கு வந்து, மைலாப்பூர் விஷயத்தைச் சொன்னதும் மனைவியின் முகம் பேயறைந்ததைப் போல் வெளிறிற்று. அடச்சீ வா நீயும் என்கூட என அவளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு, பெஸண்ட்நகர் டாக்டரிடம் சென்றேன். இப்பதான வந்தீங்க என்றார். முந்தாநாள் என்றேன். 140/90 நார்மல்தான், ஒரு மாசம் கழிச்சியில்லே வரேன்னீங்க என்றார். இல்லை இந்த சமயத்துல கொஞ்சம் கான்ஸ்டண்ட்டா மானிட்டர் பண்ணிக்கலாமேனுதான்... எத்தனை நாளைக்கு ஒரு தடவை செக் பண்ணிக்கலாம் டாக்டர் என்றேன். மூணு நாளைக்கு ஒரு தடவை போதும் என்றார். 

1989ல் M-80 வாங்கிய புதிதில், சஃபையர் பங்கில் பெட்ரோலுக்கு நின்றிருக்கையில், மைலேஜ் அதிகம் கொடுக்கும் என யாரோ ஒரு விற்பனையாளர் கூறியதைக் கேட்டு டப்பாவில் எழுதப்பட்டிருந்ததைப் படித்து வாங்கியதுதான் நியூலான். அதன் பிறகு சேத்தக், விக்டர், ஃப்ளேம், ட்விஸ்டர் கிளாமர் என அத்தனை வண்டிக்கும் தவறாமல் போட்டுக்கொண்டு இருப்பது நியூலான். முதன்முறையாக போட்டபின் அடுத்த சர்வீஸின்போது மெக்கானிக்கிடம் அதைப் பற்றிக் கூறினேன். அவரிடமிருந்து வந்த முதல் வார்த்தையே அதெல்லாம் போட்டா இன்ஜின் கெட்டுரும் சார். 

அந்த வண்டியை அடி அடி என அடித்து, 50-60 ஆயிரம் ஓடியதும் ரீபோர் செய்யலாம் என்றார் மெக்கானிக். விலை விசாரித்துவிட்டு, புது போரே போட்டுறலாம் என்று முடிவெடுத்தேன். பழயதைக் கழற்றிப் பார்த்த அதே மெக்கானிக்கின் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தை என்னா சார் போர் கண்ணாடியாட்டம் சும்மா பளபளனு இருக்குது.