18 October 2010

கம்யூனிஸ்ட்டு எந்திரன்கள்

”யப்பா சர்கோசி என்ன எழவு வேணுமோ கொடுத்து தொலைப்பா டெய்லி கொய்யோன் கொய்யொன்னு ஸ்ட்ரைக் பன்றானுங்க”
இதுதான் என்னால் ரி-ட்விட்டப் பட்ட ட்விட்.
ஒருவனுக்கு பிடித்த ட்விட்டை ரி-ட்விட் செய்ய முன் அனுமதி எந்த மரத்தடியில் வாங்க வேண்டும்?
சர்காஸமாக ஒருவர் ட்விட் எழுதினால் ரி-ட்விட்டக் கூடாது என்பது எந்த மண்டபத்து சட்டம்? அதை  மட்டுமே  ரி-டிவிட்டுவது, உள்நோக்கம் கொண்டதா.
ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை ரி-ட்விட் கொடுத்துவிடும் எனில் அதைப்பற்றிய முதல் கவலை யாருக்கு இருக்க வேண்டும்? அந்த கவலை இருக்கிற பட்சத்தில், ட்விட்டரே அதை இயற்றாமல் இருந்திருப்பாரே.
ட்விட்டில் சர்கோசி என்றுதான் இருந்தது சர்காஸம் என்றில்லை. ட்விட்டர் தனது முன்னனுமதி இன்றி ரி-ட்விட்டக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்திருந்து, அதை மதியாமல் ரி-ட்விட்டினால் தவறு.
இதுகூட நம் போன்ற மாக்களுக்குதான் பொருந்தும்.
பாட்டாளி மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வை உய்விப்பதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு அனுதினமும் இணையத்தின் கட்டற்ற வெளியில், ட்விட்டர் சந்துகளில், பஸ்ஸின் பதுங்கு குழிகளில் போராடிக் கொண்டிருக்கும், லட்சக்கணக்கில்  சம்பளம்  வாங்கிக்  கொண்டு அலுவலகத்தின் ஓஸி இண்டர்நெட்டில் புரட்சித்துக் கர்ஜிக்கும் போராளிகளுக்கு இது பொருந்தாது.
ஏனெனில்  எல்லா  இடத்திலும்  வியாபித்தபடி, உலாவரும்  உக்கிரக் கண்களின் பார்வையில் எல்லாமே பொதுவெளிதான். எதையும் யாரையும் எப்படி வேண்டுமெனினும் நாங்கள் மட்டுமே விமர்சிப்போம். எதிர்வினை அல்லது எதிர் கேள்வி கேட்டால் ஆட்டோக்களில் வந்து முஷ்டி உயர்த்தி, கோஷமிட்டு மிரட்டி கொத்தாகத் தூக்கிக் கொண்டு போவோம். பிட் நோட்டீஸ் விநியோகித்து தட்டி பிடித்து வீட்டை காலி செய்ய வைப்போம்.
இன்றுவருமோ நாளக்கே வருமோ அல்லது
மறென்றுவருமோ யானறியேன் என்கோவே - துன்றுமல
வெம்மாயை வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்
- ராமலிங்க சுவாமிகள்
பாவம், இன்னக்கி  நாளைக்கி  அல்லது  என்னைக்குமே  புரட்சி  வராது, அதுவும் அஃமார்க் நம்ம ப்றாண்ட் புரட்சி வந்தால் மட்டுமே புரட்சி வந்ததா அர்த்தம்னு போராடிகிட்டு இருக்கிறவங்களை என்ன சொல்றது.
ராமலிங்கருக்கு சும்மா இருக்கறது உச்சம்
நம்பளவாளுக்கு  புரட்சி  பத்தி  விவாதிச்சி, கிண்டலா  அடிக்கிறே  இரு வெச்சிக்கிறேன்னு, கரவம் கட்டி எல்லாரையும் புடம் போட்டுண்டு பொழுத ஓட்றதே பெரும் புரட்சி.
பாட்டாளிவர்க்க சர்வாதிகார புரட்சி அரசாங்கம் அமையும் முன்னாலையே இணையவெளியில்  இவ்ளோ  கெடுபிடி. அரசு  அதிகாரத்தைக்  கைப்பற்றி அரசும் அமைந்துவிட்டால் நேரா சிரச்சேதம் தானோ?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஃபாஸிஸ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப் பட்டு, கையகப்படுத்தப் பட்ட கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள்  மட்டும்  குறிப்பாக  சினிமாவின் பொற்கால பூமியாகத் திகழ்ந்தது ஒரு ஆச்சரியம்.
ரஷ்யாவில “மேதைகள்லாம் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா க்யூல வந்துண்டிருந்தா என  குதூகலத்துடன் முறுவலித்து, இலக்கியத்திற்கு சுந்தர  ராமசாமி  குறிப்பிடும்  புரட்சிக்கு  முந்தைய காலகட்டம்  போல, சினிமாவிற்கு ஐரோப்பிய  கம்யூனிஸ்ட்  ஆட்சிகளின்  இந்தக் காலகட்டம்.
வெட்டிவந்து நட்ட செடி எதுவாயினும் மண்ணிலும் இருக்கிறதல்லாவா மகத்துவம்.
50 லிருந்து 70 கள் வரை நாட்டுக்கு நாலு பேர் என கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் மட்டுமே மேதை-இயக்குநர்கள் சினிக்காவியங்கள் படைத்துக் கொண்டு இருந்தார்கள். அதில் ஹங்கேரியிலிருந்து மட்டுமே உலகத்தரத்திற்கு  பத்து  இயக்குநர்கள். கம்யூனிஸ்ட்  நாடுகள்  என்பதால் தயாரிப்பு தணிக்கை எல்லாம் கமிசாரின் கைகளில்.
இருந்தும் நிறைய படங்கள் கம்யூனிஸ்ட் ஆட்சிகளை விமர்சித்தவை.
1982ல் வேலைக்கு சேர்ந்து ஆறுமாதம் ஆவதற்குள் ஆஃபீசில பிரச்சனை. கடைநிலை குமாஸ்தா என்கிற புடுக்காண்டி பதவியை ராஜினாமா செய்து காவியுடைக் கால்நடைப் பயணம் சமயங்களில் பஸ்ஸிலும். முதல்முறை வண்ணதாச திருப்பல். மறுமுறை ராமசாமி திருப்பல். ஆறுமாத தண்டனை மாற்றலில் ஈரோடில் சிட்சை அனுபவித்து மெட்ராஸ் திரும்ப  க்வார்ட்டர்ஸ்  தொங்கலில். தில்லி  மட்டுமே  க்வார்ட்டர்ஸை தக்கவைக்கும். LTCயில்  தில்லி பயணம். பேராசிரியர் ரவீந்திரன் ஜாகையில் 3 நாள் விருந்தாளித் தங்கல். வெங்கட் சாமிநாதன் சந்திப்பு. சாரு நிவேதிதாவை  சந்திக்க  பஸ்  பயணம். அது சாரு  மஜும்தாரின்  சே குவேராவின் ஆர்வலராக சாரு இருந்த காலம். குளிருக்கு இரவலாய்க் கொடுக்கப்பட்ட டி ஷர்ட்டில் கதகதத்த இரவுப் பேச்சில் சாரு சொல்லி பார்த்த க்யூபன் படம் Death of a Bureaucrat (1966) Film Director: Tomás Gutiérrez Alea

இறந்துவிட்ட உழைக்கும் வர்க்க யூனியன் தலைவனின் உடலுடன், அவனுக்குக் காண்பிக்கும் மரியாதையாக யூனியன் கார்டும் சேர்த்துப் புதைக்கப்பட்டு விடுகிறது. யூனியன் கார்டு இல்லாமல் எப்படி பென்ஷன் கிடைக்கும். அட்டையைக்  திரும்ப எடுக்க நடக்கும் அல்லாட்டம்தான் படம். அரசு எந்திரத்தை இந்த அளவிற்கு விமர்சித்து அதையும் அரசே திரைப்படமாக எடுப்பதென்பது அதுவும் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில் சாதாரண விஷயமா?
க்யூபா மேல் இருந்த கம்யூனிஸ்ட் காண்டு காரணமாக இந்தப்படம் ’கட்டற்ற கருத்து சுதந்திர’ அமெரிக்காவில் வெளியிடப்பட 14 வருஷங்கள் காத்திருக்க  வேண்டியதாயிற்று. ஆம்  1980ல்தான்  அமெரிக்காவில் திரையிடப்பட்டது. தேர்தலே நடத்தாத க்யூபா தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டதை அமெரிக்காவில் பார்க்கத் தடை. ஏன்?
இந்தப்படம்  அமெரிக்காவில்  66லேயே  திரையிடப்பட்டால்  ’கருத்துச் சுதந்திரம்  கருவறுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் க்யூபா என்கிற  பிரச்சாரம் என்னாவது.
காக்காவுக்கு மட்டுமில்லே எல்லாருக்குமே தன் குஞ்சு மட்டும்தான் பொன் குஞ்சு
இன்றைய இலக்கியவாதிகள் தாமே ஊதிப்பெருக்கிய பலூன் பிம்பங்களை உண்மையெனத்  தாமே  நம்பத்தொடங்கி, சுய எள்ளலற்றுப் போய்விட்டனர். அவர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் இணைய கம்யூனிஸ்ட்டுகள் இலக்கியவாதிகளுக்கு  எந்தவிதத்தில்  மாறுபட்டு  இருக்கின்றனர். வீங்கிப் போன விபரீதம்.
பார்ப்பணர்கள் இலக்கியத்தைக் கையாண்ட போது ’இலக்கியம் ஆபாசமற்று, ரொம்ப ஆச்சாரமாக இருந்தது.
போடாங்கொய்யால என்று பாரதியும் புதுமைப்பித்தனும் வந்து கீறிவிட்ட பிறகுதான் தமிழ் இலக்கியத்திற்கு சிங்கப்பல் முளைத்தது.
நியோ பார்ப்பணர்கள் கம்யூனிஸத்தை மொத்த குத்தகை எடுத்தபின் கப்சிப் கபர்தார் கார்ல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் எல்லாம் எங்களொட காப்பி ரைட் எவனும் பர்மிஷன் வாங்காம கவிதை கதைல எல்லாம் விமர்சிக்கக் கூடாது, மவனே கொன்னுடுவோம்.
வாட்டர் படத்தை எடுக்கவிடாமல் ஹிந்துத்வா கும்பல் பண்ணியது மட்டும்தான் அராஜகமா?
ஆச்சார இலக்கியம் போல ஆச்சார கம்யூனிஸம்.
சினிமா எந்திரன் போல கம்யூனிஸ்ட்டு எந்திரன்கள்