20 October 2010

அர ச்சீற்றம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா?
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா

***

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம் பட்ட
சாலைக் கென்னை
அனுப்பு முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் சார்

***

யோசனை

உனக்கென்ன தோன்றுது?
கருத்துக்கு மாறாக போலீசார்கள்
கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது?
வருத்தத்துக்காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவி பாடச் சொன்னால்
போச்சு

***

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

***

8

தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்
தூக்கத்துக்கப்புறம் யாருடா சித்தர்?
தூக்கத்துக்கப்புறம் என்னான்னு கேளு
தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு

மேலே இருக்கும் கவிதைகளை எழுதியவரின் பெயர் ஞானக்கூத்தன்
8 ம் நெம்பர் கவிதையில் இருக்கும் பொறுப்பற்ற தன்மையைப் பார்த்தீர்களா! இது வெறும் பொறுப்பற்ற தன்மை மட்டும்தானா? இந்தக் கவிதையைப் படிப்பவர்கள் பெண்களாக இருக்கலாம் குழந்தைகளாக இருக்கலாம் ஏன் ஆண்களாகவும் இருக்கலாம். முதலில் இது கவிதைதானா?
சித்தர் என்று சொல்வதில் இந்துத்துவா ஆர்எஸ்எஸ் பார்ப்பணீய ஆணாதிக்க வெறிதானே தெரிகிறது.
ஏதோ இவருக்கு மட்டுமே இருப்பது போல தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு எனச் சொல்வது உயர்சாதீய நோய்க்கூறான மனநிலை அல்லவா?
தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகளா? இல்லையா?
இலக்கியம் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் வன்புணர்ச்சி அல்லாமல் இது வேறு என்ன?
இது எப்போது எழுதப்பட்டது என்பதல்ல பிரச்சனை. எழுதப்பட்டிருக்கிறது என்பதே பிரச்சனை அல்லவா?
இன்னும் இந்தக் கண்றாவி, கவிதை என்கிற பெயரால் சமூகத்தை மாசுபடுத்திக் கொண்டுதானே இருக்கிறது. 1970ல் எழுதினால் என்ன இல்லையேல் 1960ல் எழுதினால் என்ன இன்றைக்கும் இது வன்புணர்ச்சியை நிகழ்த்தி கொண்டுதானே இருக்கிறது.
இதை எழுதிய இந்த ஞானக்கூத்தன் என்கிற ஆளை என்ன செய்யலாம். இவர் அலுவலகத்திறகுப் போய் இந்தக் கவிதையை இவரை வைத்தே நடித்துக் காட்டலாம் என்றால் இவர் ஓய்வு பெற்றுவிட்டதாகக் கேள்விப் படுகிறோம். ஐயங்கார் பார்ப்பண திரைப்பட நடிகன் கமல்காசனிடம் மருதநாயகம் படத்திற்கான கைகட்டி கதை இலாக்காவில் கூலி வாங்கிப் பணியாற்றினார் என அங்கே போகலாம் என்றால் அந்தப்படமே கேன்சல் ஆகிவிட்டதாகக் கேள்விப்படுகிறோம்.
திருவல்லிக்கேணி பார்ப்பண அக்கிரகார சந்துகளில் ஏதோ ஒன்றில் இருப்பதாகவேக் கேள்விப்படுகிறோம். ஒத்த கருத்துடைய சமூக உணர்வுடைய அனைவரையும் ஒன்றுதிரட்டி யாரேனும் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு காலை 6 மணிக்கு ஞாயிறாக இருந்தால் நல்லது (நமக்கு எல்லோருக்கும்கூட அது ஓய்வுதினம்தானே) இவர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யலாம். இந்தக் கவிதையை ஜெராக்ஸ் எடுத்து அவர் வீட்டை சுற்றியிருக்கும் வீடுகளில் இந்த ஆபாஸத்தைப் படிக்கக் கொடுத்து கருத்து கேட்கலாம். தெருமுனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட்டில் கவிதையைப் படிக்கக்கொடுத்து அவர்கள் எல்லோரும் பேண்ட் அணிந்திருப்பார்கள் என்பதால் அவர்களுள் கைலிகட்டிய ஒருவரையேனும் தூக்கிக் காட்டச் சொல்லலாம். இவர் எழுதியிருக்கும் கவிதையைப் போல அண்டை அயலாரை எல்லாம் இவருக்குத் தூக்கிக் காட்டச் சொல்லாம்.
போராட விருப்பமுள்ளவர்களில் எல்லோருமே எந்திரன் படத்திற்கு டிக்கெட் புக் செய்திருப்பதாய்க் கேள்விப்படுகிறோம் எனவே இவரது அடுத்த புத்தக வெளியீட்டு விழாவில் இவருக்குத் தூக்கிக்காட்டும் போராட்டத்தை வைத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் இவர் எழுதுவது குறைந்துவிட்டதாகவும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு இவர் புத்தகம் எதுவும் வரப்போவதில்லை எனவும் கேள்விப்படுகிறோம் எனவே இவர் தலைமைதாங்கும் அல்லது பேசும் அதுவும் இல்லையெனில் குறைந்தபட்சம் இவர் பார்வையாளராய்க் கலந்து கொள்ளும் இலக்கியக்கூட்டத்தில் நமது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.
நாம் ஒரு சமூகப்பொறுப்புள்ள அமைப்பு. நாம் இந்துத்துவா வெறியர்களான பால்தாக்ரே உதவ் தாக்ரே ராஜ் தாக்ரே மற்றும் தலிபான்களைப்போல கொள்கையற்ற கும்பல் அல்ல. நமக்கென தெளிவானதொரு கொள்கையும் அதற்கு அர்ப்பணிப்புகள் செய்ய நீங்களும் அடைய வேண்டிய இலக்கும் தெளிவாகக் கொண்டு நடக்கின்றோம். ஆகவேதான் நமக்குப் பெண்களிடம் இருந்தும் பேராதவு பெருகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்திருக்கின்றனர். முதல் உறுப்பினராக முழுநேர நிறுவண செயலாளராக நான் நியமித்துகொண்டிருக்கிறேன். அடுத்த உறுப்பினரான உங்களை தேர்வு செய்திருக்கிறேன். உங்களுக்கு ஆபீஸ் பேங்க் ஐடி ஜோலிகள் அதிகம் இருந்தால் பரவாயில்லை உங்களுக்கு பதிலாக மற்றொரு நபரை நியமிப்பது உங்கள் சமூகப்பொறுப்பு.
இன்றில்லை எனினும் என்றேனும் இந்த ஞானக்கூத்தன் மாட்டாமலா போய்விடுவார். அன்னிக்கி இருக்குடி உனக்கு! கவுஜயா எழுதற கவுஜ! தூக்கிக்காட்றேன் தெரியுதா பாரு கவுஜ. நரநர நரநர.