26 September 2010

மூன்று கவிதைகள் - மரத்தடி புதுசு காகம்

மரத்தடி

அராஜகம் செய்து
பல்லியை அடித்தால்
நியாயத்தின் வெற்றி

அராஜகம் செய்யும்
பருந்திடம் அடிபட்டால்
தியாகத்தின் வெற்றி



புதுசு

பூந் துடைப்பம் வாங்கினேன்
வீடு பெருக்க

நைஸான குப்பையும்
நறுவிசாய் போகுமாம்

விற்கும்போது
தாடிக்காரன் சொன்னான்
பீடிக்காரனும் சொன்னான்

இருந்த குப்பையை
துடைப்பம் பெருக்கிற்று
துடைப்பம் போட்ட குப்பையை
எந்த துடைப்பம் பெருக்கும்?

தவிக்கும்போது
தாடிக்காரனையும் காணோம்
பீடிக்காரனையும் காணோம்



காகம்

கரைவது காகத்தின் பிறவிக் குணம்

கும்பல் சேர்க்க குரல் கொடுக்கும்
அடிவயிற்றிலிருந்து

தன்குரலின் நாராசம் தெரியாதது

வாய் இருக்கும் காது கிடையாது
தலையில் இருக்கும் ஓட்டைகளைக்
கருணையுடன் நாம்தான்
காதாய் கருதிக்கொள்ள வேண்டும்

வினவ மட்டுமே தெரியும்
விவாதித்தால்
விடையளிக்கும் பாவனையில்
திரும்ப ரெண்டு வினவும்

பொதுவெளி எல்லோருக்குமானது
என்கிற விவஸ்தையற்றது

வருவோர் போவோர் மேல்
வெட்கமின்றி எச்சமிடும்

அடச்சீய் என்று விலகினால்
வெற்றிவெற்றி என ஆர்ப்பரிக்கும்

மரக்கிளையில் உட்கார்ந்திருப்பதால்
மரமே தனது என தர்கிக்கும்

மரம் முழுக்க கூடுகட்ட
திட்டமிடும் அறிவிக்கும்
மரம் பட்டால் சுள்ளி
சுள்ளியிலே கூடு
என கோஷிக்கும்

கூட்டிற்கே ஆதாரம் மரம்
ஒற்றைப் பார்வை சரியல்ல
எனச் சொன்னால்
உன் பார்வை சரியா என வினவும்
அதற்கு நூறு அர்த்தம் கற்பிக்கும்

அசந்தால்
நம்மையும் தலைசாய்த்து
ஓரப் பார்வைக்கு தயாராக்கும்

காக்கைக்கு
காலாகாலமாய் குயில் பகை
வறட்டுக் கட்டைக் குரலுக்கு
கனவு குழைத்த குரல் அசூயை

கல்லால் அடிக்காதீர்
சொல்லால் விரட்டாதீர்
ச்சூ என்றால் போய்விடும்

என்ன
கொஞ்சம் தள்ளிப்போய் கரையும்

கதவடைப்பது தவிர வழியில்லை
காதடைப்பது தவிர மார்க்கமில்லை

ஏனெனில்
கரைவது காகத்தின் பிறவிக் குணம்