04 October 2013

சினிமா சேட்டும் சிறுமியின் சேட்டும் இணையத்து குற்றச்சாட்டும்

1984 செப்டெம்பரில் எழுதப்பட்ட சிறுகதை சிறுமி கொண்டுவந்த மலர்

அதில் வரும் சேட்டு கதாபாத்திரம் கொச்சையாகத் தமிழ் பேசும். ஒரே சொல்லை அடுத்த வரியிலேயே அச்சொல்லின் நிழல்கோடாக மாற்றிப் பேசும். அந்தத் தமிழ், தமிழ் சினிமாவில் வரும் சேட்டு பாத்திரங்கள் பேசுவது போல இருக்கிறது. அதைப் பார்த்துதான் நான் இதை எழுதிவிட்டேன் என்று ஒரு கும்பல் 2011ல் என்னை ஓட்டியது. சரி தமாஷ்தானே என்று முதலில் சும்மா இருந்தேன். 

நான் நார்த் மெட்ராசிலேயே பிறந்து வளர்ந்தவன். இதற்கு முந்தைய ஜென்மத்தில்கூட என் ஜாகை அங்கேதான். நான் மட்டுமல்ல எங்கள் பாட்டன் பூட்டன் எல்லோரிடமும் விசாரித்து விட்டேன். யாருமே சேட்டுகள் இப்படிப் பேசி பார்த்ததில்லையாம் என்று பரமார்த்த குருக்களிடமிருந்து வேறு ஆய்வுரை. 

1984ல் எனக்கு 24 வயது. அப்போது இவர்களில் பெரும்பான்மையோருக்கு என்ன வயதிருக்கக்கூடும்? ஏராளமானோர் இடுப்பில் ஒடியாணம் அணியத் தொடங்கி இருப்பார்களா என்பதே சந்தேகம். 

இறவாமை வேண்டி சதா காலமும் இறந்த காலத்தில் வாழ்பவன் இலக்கியவாதி. அவனது நினைவுகளுக்கே அவன் வடிவம் கொடுக்கிறான். அவனது அனுபவத்துக்கும் அது கருக்கொள்வதற்கும் உருவாகி உருவமடைவதற்குமான கால இடைவெளி கற்பனைக்கெட்டாதது. சிருஷ்டி, சில சமயம் அடுத்த ஒரு மணி நேரத்திலும் நிகழலாம் இரண்டு மாமாங்கம் கழித்தும் நடக்கலாம். எழுதுபவன் அவன்தான் எனினும் எழுத்து அவன் கட்டுக்குள் இருப்பதாக அவனேகூட ஆணவம் கொள்ள முடியாது. அது நிகழ்வதற்கான தருணத்தை அவன் அல்ல அது முடிவு செய்கிறது.

பைலட் தியேட்டர் எதிரில் இருக்கும் கேஃப் அமீனில் வைத்து பிரமிளிடம் கேட்டேன். படைப்பு பிரக்ஞைபூர்வமானதா இல்லை நினைவிலி நிலையா என்கிற பொருளில். ’செமி கான்ஷியஸ்’ பளிச்சென பதில் வந்தது கவியிடம் இருந்து.

கண்ணனின் கல்யாணத்தை மதியம் எட்டிப் பார்த்தவன், சுந்தர ராமசாமி எவ்வளவு கட்டாயப்படுத்தியும் உணவருந்த அடமாய் மருத்துவிட்டேன். காரணம், அப்போது சிநேகிதி ஒருத்தியை, அவளுக்கு இருந்த கட்டி கேன்சர் அல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்ளும் சிகிச்சைக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ள அவளை சம்மதிக்க வைக்க 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்த தினம் அது. அவள் ஒருவழியாய் சம்மதித்தது மறுதினம்தான். ஆனால் திருமணத்துக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண்ணன் மற்றும் அவனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தேன். யுவன் சந்திரசேகரைப் பார்த்தது அப்போதுதான் என்று பிற்பாடு இன்னொரு சுரா குடும்ப திருமண நிகழ்வொன்றில் அவர் நினைவுறுத்தினார்.

ஏ.வி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தின் புல்வெளியில் அமர்ந்து கொண்டு, ஜோசியப் பைத்தியமாய் நானிருந்த காலமாதலால், எவ்வளவு இழுத்தாலும் என் பேச்சு அப்போதைய கிலுகிலுப்பையான ஜோசியத்தையொட்டியே இருந்தது. அங்கிருந்த கவிஞர் ஆனந்த் தாமும் ஒரு காலத்தில் எந்தப் பொருளையும் கிரகங்களாய்ப் பார்த்துத் திரிந்ததுண்டு எனக்கூறி, பால் ரத்தம் என்பதால் அதை செவ்வாயாகப் பார்த்ததை எண்ணி நகைப்புடன் உரையாடியபடி இடையில், வானத்து நட்சத்திரங்களை விரிவாக விளக்கிக் கொண்டு இருந்தார். 

அதே போல் ஆனால் முற்றிலும் வேறுபட்ட காலத்தில் 1980-81 வாக்கில் செங்கல்பட்டு வல்லம் கிராமத்துச் சேரியில், ம.க.இ.கவிலிருந்து விலகிய/விலக்கப்பட்ட, பம்மலில் இருந்த பரமேஸ்வரன் மற்றும் அவர்கள் நாடகக் குழுவில் பெல்ச்சி நாடகத்துக்குக் கட்டியக்காரனாய் நடிக்கச் சென்றிருந்த போது, கல்பாக்கத்தில் பொறியாளராய் வேலை பார்த்த நல்ஸலைட் அனுதாபியொருவர் விண்மீன்கள் பற்றி விவரித்துக் கொண்டு இருந்தார். அந்த சம்பவம் குறுநாவலாக, ’இருட்டும் இருபது சக்கரங்களும்’ என்கிற தலைப்பு மட்டும் கட்டிக்கொண்டு இன்னமும் உள்ளே தங்கி இருக்கிறது. 

ஆனந்தின் தந்தை, ப.சிதம்பரம் அவகளின் சகோதரர் லெட்சுமணன் அவர்களின் இலக்கியச் சிந்தனைக்குத் தவறாது வந்ததன் மூலமாய் எனக்கு நண்பரானவர். அவர் ஜெயகாந்தனின் நண்பரும்கூட என்பது தெரியவர - ஆள்வார்ப்பேட்டை மடத்தில் புகைநடுவே போதையில் அதை ஜெயகாந்தனும் உறுதி செய்ய - இன்னமும் நெருக்கமானார். பரபரப்பு காலங்களில் பின் இரவில் எழுதும் பழக்கமுள்ள ஜேகே, பகலில் ஊர்சுற்றிப் பொழுதைக் கழிக்கச் செல்லும் நண்பர்களின் அலுவலகங்களில் ஒன்று ஆனந்த் தந்தையின் அலுவலகம். பொதுவாக பழைய சரித்திர நாயகர்களுடன் பழகிய பெரியவர்களை சந்திக்க நேர்ந்தால், எழுத்தின் எழுத்தாளர்களின் கூறுகளைத் தெரிந்து கொள்ளும் வெறியில் அவ்வளவு சுலபத்தில் அவர்களை விடுபவனில்லை. 

அவர்களும் பகிர்ந்துகொள்ளும் சுவாரசியத்தில் எதையாவது சொல்லி என் துருவலில் மாட்டிக் கொள்வதும் உண்டு. 

ஜெயகாந்தனின் பேச்சு ஒன்றைக் குறிப்பிட்டு ஆனந்த் அப்பா கூறினார்.

இதே இலக்கியச் சிந்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில்தான் கு. அழகிரிசாமியின் இரங்கல் கூட்டமும் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஜெயகாந்தன் கூறினார். கடந்த கூட்டத்தில் பேசும் போது பூமிக்கு நாம் வந்த வரிசைப் பட்டியல் தெரியும் ஆனால் போகப் போகிற பட்டியல் யாருக்குத் தெரியும் என்று கூறினேன். எதிரில் அமர்ந்திருந்த அழகிரிசாமி ஒற்றைக் கையால் பெஞ்சைத் தட்டினார். அது நடந்து அதிக காலம் ஆகிவிடவில்லை. இன்று துரதிருஷ்டவசமாக அவரது இரங்கல் கூட்டத்தில் பேசவேண்டியதாகிவிட்டது. இதை அன்று நானும் எதிர்பார்க்கவில்லை அவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

கு. அழகிரிசாமி பென்ச்சைத் தட்டியது எந்தக் கையால்? என்று நான் கேட்டதும் பாவம் ஆனந்தின் தந்தை இடதா வலதா எனக் குழம்பி, என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க. அவர் எனக்கு ரொம்ப நல்ல ஃப்ரெண்டு சார். விபத்துல எந்த கையை இழந்தார்னு கூட நினைவுக்கு வரமாட்டேங்கறதே என்று நினைவுபடுத்திக் கொள்ள குற்ற உணர்வில் அவஸ்தைப் பட்டார். எவ்வளவு மெனக்கெட்டும் அவரால் உறுதியாகச் சொல்ல முடியாமைக்கு, என்ன சார் இது நெருங்கிப் பழகினவாளோட நினைவுகூட இவ்வளவுதானா என துக்கப்பட்டார். அழகிரிசாமியைத் தெரியாது என்றாலும் அவர் மகன் சாரங்கனை நன்றாகத் தெரியும்தான். ஆனால் அவனிடம் கேட்கக்கூடிய விஷயமா இது? இல்லை சுந்தர ராமசாமியிடம் கேட்கக் கூடிய இலக்கிய சந்தேகமா இது?

ஆனந்தின் அப்பா, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், பைலட் தியேட்டர் சுவரை ஒட்டிய சந்தை அடுத்து இருந்த பச்சையும் நீலமுமாய் பெயிண்ட் அடித்த கம்பி போட்ட இரட்டைக் கதவிருந்த வீட்டில் குடி இருந்தார். குறைந்தபட்சம் அப்படித்தான் என் நினைவில் பதிந்து இருக்கிறது. அவர் இருந்த வீட்டின் கதவு. அவரிடம் ஒருமுறைகூட கன்னடத்தில் பேசியதில்லை. அதற்கு முக்கியமான காரணம், பால்யத்தில் பேசிய இரண்டாவது மொழியான கன்னடம், அம்மா பழகி தவறாகப் பேசிவிடமாட்டோம் என்று தைரியமாகப் பேசத் தொடங்கியதால் எங்கள் எட்டடிக் குச்சில் ஆட்சிமொழியாகிவிட்டிருந்த மராட்டி அப்பா போனபிறகும் ஒட்டிக் கொண்டு இருந்ததனால் அப்போது கன்னடம் மறந்து விட்டிருந்தது என்பதுதான். 

ஆனந்த் அப்பா குடியிருந்த வீட்டுக்கு நான்கைந்து கடைகள் தள்ளி, ஷட்டர் போட்டு மூடப்பட்டிருந்த மசாஜ் பார்லர் படிக்கட்டில்தான், 1983 டிசம்பரில் நடந்த அறியாத முகங்கள் வெளியீட்டுக் கூட்டத்தின் இரவன்று புத்தகம் விற்றுக் கிடைத்த காசில் நானும் நம்பியும் துரையும் குடித்துவிட்டு மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருக்கும்போதுதான் நஹி நஹி ரட்சகி யை விக்ரமாதித்யன் சொல்ல துரை எழுதினான். நல்லவேளையாய் அப்போது பேங்க்கில் வேலை செய்துகொண்டு பகுதி நேர நக்ஸலைட்டாய் இருந்ததனால் வீராச்சாமி என்கிற பிரக்ஞை ரங்கராஜன், எழுத்தாளர்களை தெருவில் எதிர்கொண்டால் சிரித்து உரையாடும் அளவில் முற்றாமல் இருந்த காலம் அது.

கண்ணன் திருமணத்துக்கு முந்தைய இரவில் ஜோசியப் பேச்சோடு பேச்சாக, தமது தாத்தா சோழி உருட்டி ஜோசியம் பார்த்து, காணாமற் போன மாடுகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர் என்று குறிப்பிட்டார் ஆனந்த். 92ல் ஆனந்த் கூறிய இந்த ஒற்றை வரிதான் 94கில் டிரைவ் இன் ஓட்டல் செல்ஃப் சர்வீசில் சோழிகளாய் உருவாகிக் கொண்டு இருந்தது. எழுத்துக்கிடையில் சிகரெட் பற்றவைத்துக்கோண்டு நிமிர்ந்தவன் கண்ணில், அங்கிருந்த பெட்டிக்கடையில் ஆனந்த் சிகரெட் வாங்குவது பட்டது. ஓடிப்போய், நினைவிருக்கிறதா, இரவில் ஏவிஎம் மண்டபப் புல்வெளியில் அமர்ந்திருக்கையில், சோழி உருட்டி ஜோசியம் சொன்ன உங்கள் தாத்தா பற்றிக் கூறியது. அந்த ஒற்றை வரியுடன் என் பல்யப் பருவ திருவல்லிக்கேணி நினைவுகளும் சேர்ந்துகொள்ள சோழிகள் என்கிற குறுநாவலை எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்று படபடத்தேன். மலர்ந்த முகத்துடன் எழுதுங்கள் இளைமைக்கால நினைவுகள் எப்போதும் நன்றாக வரும் என்று கூறிவிட்டு அகன்றார். இத்துனைக்கும் அவரது அப்பாவுடன் கழித்த நாட்கள் அளவுக்கு ஆனந்துடன் அதிகம் பழகியதில்லை.

இதெல்லாம் இப்போது ஏன் என்கிறீர்களா? 

சன் செய்திகளில், தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பேசிய தமிழை நான் கேட்டதால் வந்த வினை. 1984 கிடக்கட்டும். வடக்கத்திக்காரர்கள், இப்போது பேசுகிற தமிழையாவது கேட்டிருப்பார்களா பரமார்த்த குருவின் சீடர்கள் என்கிற கேள்வி எழுந்தது. பிரவீன் குமார் எந்த தமிழ் சினிமாவைப் பார்த்து, வடக்கத்தி முலாம் பூசிய தமிழைக் கற்றுக் கொண்டார் எனவும் கேட்கத் தோன்றியது. 

கடந்த ஒன்பது மாதங்களில் காதைக் குடையும் ஜெயின் தமிழ்களையும் மார்வாடித் தமிழ்களையும் எவ்வளவு கேட்டாயிற்று. இன்னமும் ஐயமிருப்போர் அடையார் காந்திநகர் சர்வீஸ் லேனில் இருக்கும் நட்ஸ் & ஸ்பைசிஸ் கல்லாவில் இருப்பவரிடமோ அல்லது செளகார் பேட்டை கோவிந்தப்ப தெருவிலிருக்கும் அகர்வால் பவன் எதிரிலிருக்கும் மளிகைக் கடை முதலாளிகளிடமோ பேசிப்பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் சேட்டுத் தமிழ் எப்படி இருக்கும் என்று. வட்டார வழக்கு மொழிக்கும் மொழிச்சிதைவுக்கும் வேறுபாடு இல்லையா?தப்பு கண்டுபிடிப்பது தவறில்லை. முடிந்தவரை சரியாகக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். 

84ல் எழுதப்பட்ட சிறுமி கொண்டுவந்த மலரின் கூறுகள் நினைவில் நிகழ்ந்தது அதற்கு எத்துனை ஆண்டுகள் முன்பாக இருக்கக்கூடும். அந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் தெலுகு பெந்தகொஸ்தே சச்சுக்கு எதிர்ப்புறமுள்ள கேசவ் சாட்டில் கூடும் ‘சேட்டு’ப் பசங்களிடம் காற்புள்ளியாக ஓத்தா கலந்த தமிழ் ஹிந்தியாக ஒலிப்பதையும் ஸ்டார் தியேட்டரில் ’சீதா ஜாகே ஒரு தையகடெ வரும்’ ஆக எப்படி உருமாறுகிறது என்பதையும் அறிய, கைகளும் அவற்றில் விரல்களும் இருக்கிற தகுதி மட்டுமே போதுமா? 

எல்லா புலன்களும் தனித்துவம் வாய்ந்தவையாக இருப்பதுதான் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதற்கான அடிப்படைத் தகுதி, வெத்துக்கு நட்டுக்கொண்டு நிற்பதல்ல.