06 October 2013

பார்ப்பதும் படிப்பதும்

Post by Vijayabhaskar Vijay. Sunday, October 6, 2013 at 7:42 am

1. ஆட்டோக்காரர் பையன் சூப்பிக் குடித்தால் இவர் மகளுக்கு வியாதி தொத்திவிடக்கூடும் என்று கவலைப்படுகிறவர், முதலில் 'அவனுக்குத் தண்ணி வேண்டுமா இல்லையா' என்பதைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை

2. சுந்தர ராமசாமியின் ஜேஜே, குஷ்டரோகிக்கு (அவனைக் கணக்கில் எடுக்காமல், ’அவமரியாதையாக’) பிச்சையாக விசிறி எறியும் காசை ஏற்க மறுத்து ’குஷ்டம்’ தின்று விரல்களற்றுப்போன மொட்டைக் கையால் தள்ளிவிடுகிறான்

3.கொஞ்சநாட்கள் முன்புகூட சுந்தர ராமசாமியின் படத்தைப் ப்ரொஃபைல் படமாய் வைத்திருந்த விஜயபாஸ்கர் விஜய், ஜேஜேவைக் கண்டிப்பாகப் படித்திருப்பார் என்பதால், குட்மார்னிங் சொல்ல இன்றைக்கு ஜேஜே சிலகுறிப்புகளில் இருந்து முக்கியமான பகுதியைத் திருடி புனைந்ததுதான் இது என்று ராஜ சுந்தரராஜன் & கோ போல இதை கும்மியடிக்க முடியுமா? குடும்பத்துடன் அவர் பயணப்பட்ட ஆட்டோ நம்பர் கொடுத்தால்தான் ஏற்பீர்களா?

4. நிகழ்வுகள்,வெவ்வேறு கலவையில், வண்ணமயமாகவும் கருப்பு வெள்ளையாகவும் நிறமற்றும் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதுதான் மனித வாழ்க்கை. நிகழ்வுகள் ஆழ்மனதில் படிந்து நின்றால் அனுபவம். இதில் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும் அவனவன் ’பார்வை’க்கு ஏற்பத்தான் அவனவன் எழுத்தும் இருக்கும்.

இனி பதிவுக்குள் செல்லலாம்.

5.ஆட்டோக்காரரின் 4 வயது குட்டிப் பையனுக்கு தாகமில்லை என்றில்லை,வெளியாள் கொடுப்பது நல்ல நீர்தானா என்கிற ஐயம் காரணமாகக்கூட - ஆய்ந்து தர்க்க ரீதியாய் சொல்லத் தெரிகிற வயதில்லை, குழந்தைதான் எனினும் - மறுத்திருக்கலாம்.

6. ராஜ சுந்தரராஜன் & கோ விமர்சனம் போல நான் காற்றிலிருந்து பிடிக்கவில்லை,எழுதப்பட்டிருப்பதில் இருந்துதான் இதை எடுக்கிறேன். அந்நியன் கொடுத்தபோது வேண்டாம் என மறுத்த குழந்தை, ஆட்டோக்கார அப்பா கொடுத்ததும் தட்டாமல் குடிக்கிறானே அதுவே என் அனுமானத்துக்கான ஆதாரம். என் அனுமானம் இங்கு எழுத்தாய் இல்லை. சம்பவத்தில் இருக்கிற இதை, ’எழுதியவர்’ ’இதை’ உணர்ந்துதான் எழுதினாரா என்றுகூடத் தெரியாது. ஆனால் அது 'சம்பவத்திலேயே' இருக்கிறது.

7. ஆட்டோ டிரைவர்தான் ஆனாலும் அவர் கேன் தண்ணீர்தான் உபயோகிக்கிறார் என்று அடிக்கோடு இடாமல் எழுதி இருப்பதால் படிக்கிற நம் முகத்தில் வந்து அறையவில்லை. வெகுஜன எழுத்தாளராக ஜெமோகன் இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் டிராமா பண்ணி முழ நீளத்துக்கு ஆட்டோக்காரனுக்குள் புகுந்து பேயாய்ப் பேசித்தீர்த்துவிடுவார் என்பதால் அவர் பெரிய எழுத்தாளர். கைதிகள் கதையில் எவனெவன் என்னென்ன பேசுகிறான் என்பதே இதற்கு சாட்சியம். போலீஸ்காரராய் அ.மார்க்ஸ் அவதாரம் எடுத்து வந்ததுபோல பண்ணையாரின் குரூரத்தை போலீஸ் வாயினால் மெலோடிராமா ஆக்கப்படுவதே இணைய இலக்கியப் படிப்பாளிகளிகளை பப்பாளிப்பழம் சைசுக்கு வாய் பிளக்க வைத்துவிடப் போதுமானது. பெருசு பெருசாய் நிறைய பக்கங்கள் எழுதினால் பெரிய எழுத்தாளர். நடந்த நிகழ்விலேயே ’இருப்பதை’ப் பார்க்கத் தெரிகிற சூட்சுமம் எழுத்தாளனுக்கு அவசியம்.இணைய இலக்கணத்தின்படி சிறுகதை என்றால் இறுதியில் எழுத்தாளன் ட்விஸ்ட் ஆடிக் காட்ட வேண்டும். இணைய வாசகப் பெருந்தகை அவர்களைக் கதையின் கடைசி வரி வரையிலும் ஊகிக்கவிடாதபடி சுவாரசியம் குன்றாமல் கதையைக் கொண்டு சென்றால்தான் அவர் சூப்பர் இலக்கியம் என்பார். அந்தக் கதைக்கு சஸ்பென்ஸ் முக்கியமா? சஸ்பென்ஸ் அந்தக் கதைக்கு இயல்பாய் அமையுமா? அதற்கு அந்தக் கதை இடம் கொடுக்குமா? அந்தக் கதையின் மையம் எது? அது எங்கே குவிகிறது என்பதைப் பற்றியெல்லாம் எவனுக்கு அக்கறை? சஸ்பென்சுக்கும் ‘சுவாரசிய’த்துக்கும் முதன்மை கொடுப்பவனுக்கு ஏன் சத்யஜித் ராய்? சுஜாதாவும் ஆனந்த விடகடனும் போதாதா?

8. 'தந்தையின் சைக்கோ சேஃப்ட்டி' என்பதைப் பாராட்டும் அங்கீகரிக்கும் ஒப்புக்கொள்ளும் இயல்பான  கமெண்ட்டுகளைப் பாருங்கள்.

9. அறிவாளிப் பூச்சு இல்லாமல் நடந்தது நடந்தபடி எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்தமட்டில் நேர்மையைப் பாராட்ட வேண்டும். ஆனால் இந்த ‘நேர்மைக்கு’ப் பின்னால் இருக்கிற ’தன்’னைக் குடைந்து கொள்ளும் தைரியமும் தன்னையும் தள்ளி நின்று பார்க்கிற தீட்சண்யமும் இருப்பதுதான் ’எழுத்தாளன்’ என்று ஒருவரை நான் மதிப்பதற்கான அடிப்படைத் தகுதி. எழுத்தாளனின் ’பார்வை’யை ஜெயகாந்தன் போல மலைப்பிரசங்கம் செய்தால்தான் ‘பெரும்பான்மை’க்குப் புரியும் என்பதுதான் தமிழ் இலக்கியத்தின் தலை எழுத்து. பாறாங்கல் பெருசு வைரம் சிருசு. சைசுக்கு ஏற்ற பிரைசு.

10.  'தந்தையின் சைக்கோ சேஃப்ட்டி' என்கிற வெளிப்பாடு, படிக்கும் எந்த மத்தியதர வர்க்க மனிதனையும் ஆகர்ஷிக்கும் உணர்வு நெகிழ்ச்சி. ஏனெனில் அதில் அவன் தன்னைக் காண்கிறான். தன்னைக் காண்பதாலேயே அது தவறு என்று அவனுக்குத் தோன்ற வாய்ப்பேது. தன் குழந்தை என்று வந்தபின் அது அப்படித்தான். அதிலென்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் படிப்பவர் பார்வை.  இதன் மறுபுறத்தை அல்லது ஆட்டோக்காரனின் கோணத்தில், வாசகனை ‘இதை’ப் பார்க்கச் செய்வது எப்படி? பிராமணப் பார்வையில் எழுதியே கட்டுப்பெட்டி சிந்தனையை வெளிக்கொணர்ந்தால் அதை அம்பலப்படுத்துதல்லாகப் புரிந்துகொள்ளாமல், பிராமணனுக்கு சார்பான எழுத்தாளனின் பார்வை என்று எடுத்துக்கொள்ளும் முதுமக்கள் தாழியங்கள் நிறைந்த  இணையத்தில் நுட்ப எழுத்தையும் நுண் வாசிப்பையும் எதிர்பார்ப்பது அதீதம். 

11. 'தந்தையின் சைக்கோ சேஃப்ட்டி' ‘முடிவெட்டிக் கொண்டபின் குளித்தல்’ ஆகியவற்றை, சுகாதர 'நியாயப்படுத்தலுடன்'இன்னும் கொஞ்சம் கிராமம்வரை நீட்டினால் 'இரட்டை டம்ளரை’க்கூட நியாயப்படுத்தும் விபரீதத்தில் போய் நிற்கும். என் பிறப்பை வைத்து, ஆரிய சமாஜ அனுதாபி என்று எனக்குப் பட்டம் கட்டிக் கழுதைமேல் ஏற்றுவது எளிது. ஆத்ம சுத்தியுடன் அவரவர் சுயத்தை வகுந்து பார்த்துக்கொள்வது அத்துனை எளிதன்று.

12. சிரைப்பும் சிராய்ப்பும் கட்டுரைக்கு பாலு என்கிற அலுவலக நண்பரிடம் இருந்து வந்த மின்னஞ்சலைக் கீழே தருகிறேன்.

Sep 25 (11 days ago)
to me
பாலு has sent you a link to a blog:

திராவிடர்களும் குளிக்கின்றனர், முடி வெட்டிக் கொன்ட பின்.

Blog: மாமல்லன்
Post: சிரைப்பும் சிராய்ப்பும்
Link: http://www.maamallan.com/2013/09/blog-post_25.html 

13. எப்படி தலித் இலக்கியத்தை தலித்துதான் எழுதமுடியுமோ அதுபோல தலித்தின் வலியை தலித்தால்தான் பாசாங்கின்றி உள்ளது உள்ளதுபோல் புரிந்துகொள்ளவும் முடியும். ஏகப்பட்ட பிற்போக்குப் பிரச்சனைகளை திராவிட ஸ்தூபிகளுக்கு உண்டாக்கிய   ’நிறம்’ இந்த நண்பருக்கு எந்த பிரச்சனையையும் உண்டாக்கவில்லை. ஒரு தலித்தை, வெற்று பந்தா பேர்வழியாய் சித்தரிப்பது ஒட்டுமொத்த தலித் சமூகத்தைக் குறிப்பதோ அல்லது அதன் குறியீடோ இல்லை என்று புரிந்துகொள்ளும் பக்குவம் இவருக்கு இருக்கிறது. ஒரு தலித்தைப் பொறுக்கியாய் சித்தரிப்பது சிரச்சேதம் கொடுக்கப்படவேண்டிய குற்றமில்லை எனவும் இவரால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம் இவர் தலித் ஆவேசம் கட்டி ஆடவுமில்லை ஆடிக் காட்டவேண்டிய ’பிராண்டு’ நிர்பந்தமும் இவருக்கு இல்லை. எஸ்.ஆர்.ஸ்ரீநிவாசன் என்கிற அச்சு அசலான பிராமணப் பெயரின் சுருக்கம் பரவலாகத் தட்டுப்படும் எஸ்.ஆர்.எஸ் என்பது. குருட்டுக் குறியீட்டுப் பார்வை இதை ஆர்.எஸ்.எஸ் என்பதன் குறியீடாய்ப் பார்ப்பது கோமாளித்தனம் இல்லையா? இணையத்தின் சவுண்டு பார்ட்டிகள், திராவிடனாய் இருந்தும் நீங்கள் திமுக இல்லையென்றால் அம்மா கட்சி. ஐயிராக வேறு இருந்துவிட்டால் உங்களை அம்மா சோ மோடி கூட்டணிக்காரர் என்று முத்திரை குத்தி சோலி முடித்துவிடும் அளவுக்கு அபரிமித அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள். 

14. முந்தாநாள், பிராமணன் தன்னைத் தவிர எல்லோரையும் ஒட்டுமொத்தமாய் இழிவு செய்தான். அவனுடன் போராடி தன் சுயமரியாதையை வென்ற திராவிடன் இன்று அதை தலித்துக்குத்தர மறுக்கிறான் என்கிற யதார்த்தை எழுதுபவன் திராவிட எதிரியாய் ஆக்கப்படுவதற்குபதில் கெளடில்ய சாதுர்யத்துடன் பார்ப்பன அடிவருடியாய் ஆக்கப்பட்டு காறித் துப்பப்படுவான். என்ன ஏது என்று விசாரிக்காமல், எழுதியதையும் படிக்காமல், தொண்டையைக் கமறிக்கொண்டு பெருங்கூட்டம் வரிசைகட்ட ஆரம்பிக்கும். எழுதுவதால் மட்டும் ஒருவன் எழுத்தாளன் ஆகிவிடமுடியாது. எழுத்துக்குப் பின்னால் ஏராளமான சுய விமர்சனம் இருந்தாக வேண்டும். சுய விமர்சனம் உள்ளவனுக்கு எவனைப் பற்றியும் விமர்சிக்கும் உரிமையில்லையா என்ன?

15. கண்டதைக் கண்டதோடு முடிந்து அடிப்படையே இல்லாமல் சந்தர்ப்ப தேவைக்கேற்ப சாதகமாகவும் பாதகமாகவும் உளறி, விரல் விட்டு, ஊரைக்கூட்டி வாந்தியெடுப்பதற்குப் பெயர் இங்கே விமர்சனம் அதையொட்டி கும்மியடிப்பதற்குப் பெயர் விவாதம்.

16. படித்ததைப் பட்டியலிட்டு பீற்றிக்கொள்ளலாம். ’செரித்த’ பட்டியல் இரவலாய்க் கிடைக்குமா என்ன?