27 September 2015

சிறுகதையா இந்த வாழ்க்கை


முச்சந்தியொன்றில் நெடு நேரமாய் நின்றிருந்தேன். இரவு ஏறிக்கொண்டே இருந்தது. எதிர்ப்புறமிருந்து நண்பர்கள் வரவேண்டும். வந்துகொண்டு இருக்கிறோம் என்று கைபேசியில் சொல்லிக்கொண்டு இருந்தார்களே தவிர வந்தபாடில்லை. பக்கவாட்டில் திடீரென ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். திக்கென்றது. எப்போது எங்கிருந்து அங்கு வந்து நின்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நின்றிருந்தது வசீகரித்தது. அவர் காலருகில் டிரம் போன்ற ஒரு தோல் கருவி இருந்தது. 

இரண்டு சிற்றூர்களுக்கு இடைப்பட்ட இருண்ட பிரதேசத்தில் தூர வெளிச்சத்திட்டுகள். நெடுஞ்சாலையில் வந்து போய்க்கொண்டிருந்த வண்டிகளின் பிரகாசித்து மங்கும் வெளிச்சத்தில் அருகில் நின்றிருந்த ஆள் ஒரு சிலை போலத் தோன்றினார். 

வலது கையில் இருந்த ஐபோனை கைகட்டிக்கொள்பவன் போல இடது புஜத்துக்கு எடுத்துச் சென்றேன். தலையைத் திருப்பாமல் ஒரக்கண்னால் போனில் மஞ்சள் கட்டம் வந்து மறைந்ததை உறுதி செய்துகொண்டேன். கட்டை விரலை போட்டோ எடுக்க அழுத்தும் பட்டன் மீது அழுந்தாமல் நேராய் இருக்குமாறு ஆயத்தப்படுத்திக் கொண்டேன். நேரெதிராய் இருந்தால்கூட படம் எடுக்கிறேன் என்கிற ஐயம் எதிராளிக்கு வந்துவிடாத வண்ணம் அதே சமயம் துல்லியம் கெடாமலும் படம் எடுக்கப் பழகியிருந்தேன். சும்மா சவாலாக ஆரம்பித்தது, தொழிலில் பெரிய அளவில் உதவிகரமாய் இருந்தது. வலது புறம் காரோ வேனோ வருவதைக் கண்டதும் புலன்கள் கூர்த்தன போதுமான வெளிச்சம் கிடைத்துவிட்டதாய்த் தோன்றியதும் எதையும் பார்க்காது நேராய் பார்த்தபடி நின்றிருப்பவன் போல அடுத்தடுத்து அழுத்தினேன். கார் தனக்கு வலது புறமாய் எங்களுக்கு எதிர் சாலையில் திரும்பிச் சென்றுவிட்டது. ஐபோனைப் பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. அனிச்சையாய் இடதுபுறம் பார்த்தேன். அந்தச் சிலை ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தது. சுவடு பதிக்காது போய்க்கொண்டு இருப்பதற்கான பொதுவான கையேட்டின் ஆரம்ப வரியே அநாவசியமாய் அந்நியரிடம் பேச்சு கொடுக்காதே. கண்ணுக்குக் கண் பார்ப்பதைத் தவிர். இவ்விரண்டின் காரணமாகவும் உன் உருவம் அடுத்தவர் மனதில் பதியும் வாய்ப்பு அதிகம். ஆனால் எழுத்தாள தரித்திரம் பேசாமல் எப்படி பிழைத்துக் கிடக்க முடியும். போதாக் குறைக்கு டிரம் வேறு பேசு பேசு என்று பிடறி பிடித்து உந்திக்கொண்டு இருந்தது. மெட்ராஸ்காரனாய் தோன்றிவிடாதவண்ணம் பேச்சைத் தொடங்குவதற்குக் கொஞ்சம் தயாரிப்பு தேவைப்பட்டது. சாதாரணமாய் அருகில் போய் நின்றுகொண்டேன். 

இது டேப்பா டிரம்மா (அப்பாவியாய்க் காட்டிக்கொண்டால் அடுத்தவரைத் திருப்தி படுத்தலாம் என்பது பால பாடம் ஆனால் இதுவே என்னை மெட்ராஸ்காரனாய்க் காட்டிக்கொடுத்துவிடுமோ)

டிரம்மு. டேப்புனா ஒரு பக்கம் ஓப்பனாயிருக்கும் 

ஆ ஆ. (டேப்பு கற்றுக் கொள்வது பேஸ்புக்கில் முற்போக்காளர்களின் புதிய மோஸ்தர் என்றெல்லாம் அச்சு பிச்சென ட்விட்டர் போல உளறி வைக்காதே) 

...........

நல்ல விசயமா கெட்ட விசயமா (அப்பா ஷ தவிர்த்துவிட்டது பெரிய சாதனை சென்னையிலிருந்து அட்லீஸ்ட் செங்கல்பட்டுக்கு வந்தாயிற்று)

கெட்ட விசயம்தான் 

........... (கொக்கி போட்டாயிற்று அவரே தொடர்வார் பொறுமை பொறுமையாய் இரு) 

சிறுவயசு ஆளு. அதுக்குதான் போயிக்கிட்டு இருக்கு 

........... (அடுத்து அவர் ஊர் பெயரைத்தான் கேட்பார். உளறாமல் எப்படி சமாளிப்பது என்று யோசி உஷார்) 

எந்த ஊரு 

(அடச்சே கேட்டே விட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு பஸ் பெரும் சத்தத்துடன் கடந்து சென்றது அதிருஷ்டம்) அஸபிஸபா. ம்.

ஆ எந்தப் பக்கம் 

ம் மதுர பக்கம் 

அங்கல்லாம் இது உண்டில்ல 

ம் ம் (தலை ஆட்டலே போதும்) 

.........

நீங்க ஒருத்தர்தானா. ஒரு டிரம்மே போதுமா. 

வித விதமா இருக்கும். செலவங்க ஒரு டிரம் போதும்னுவாங்க. அஞ்சு டிரம் பத்து டிரம் பார்ட்டிலாம் உண்டு. 

ஓ 

ஆட்டமெல்லாம் கூட உண்டு அந்த பார்டி தனி. குறவன் குறத்திலாம் ஆட்டமெல்லாம் கூட உண்டு. 

உங்களை போட்டோ எடுத்திருக்கேன் 

எப்போ 

இப்போ. கொஞ்ச நேரம் முன்ன 

எ அரும்மையா இருக்கு எப்ப எடுத்தீங்க தெரியவே இல்ல. முகம் பூரித்துச் சிரித்தார். அவார்டு கிடைத்ததைப் போல இருந்தது. ஆனால் வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளாமல் அமரிக்கையாய் அவர் பாராட்டை ஏற்றுக்கொண்டவனாய் ஐபோனில் மும்முரமானேன். அவராக எதாவது பேசட்டும் என்று. அந்தச் சிற்றூரில் 3G இல்லை. கிடைத்த 2Gயில் பேஸ்புக் அதிசயமாய்த் திறந்தது. நான் எதோ அதி மும்முரமாய் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதாய் நினைத்திருக்க வேண்டும். அவர் அமைதியாகிவிட்டார். கொஞ்ச நேரத்திலேயே ஃபேஸ்புக்கில் மூழ்கிப்போனேன். 

திடுப்பென விழித்தவனாய் திருதிருவெனச் சுற்று முற்றும் பார்த்தேன். தூரத்தில் அதே வெளிச்சத் திட்டுகள். என்னைத் தவிர அருகாமையில் எவரும் இல்லை. ஐபோனைப் பார்த்தேன். அதில் இருந்தார் அவர் சிலையாக.