05 January 2022

பனாவும் புனாவும்

பனா சார். கிண்டிலில் புத்தகம் வாங்குவது எப்படி?

அமேஸானில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா?

இல்லையே. 

அமேஸானில் இதுவரை எதுவுமே வாங்கியதில்லையா?

ஏன் வாங்காமல். ஏகப்பட்டதை வாங்கியிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எதையாவது வாங்கிக்கொண்டேதானே இருக்கிறேன். 

அதற்கு யூசர் ஐடி பாஸ்வேர்ட் இருக்கிறதா?

இது என்ன கேள்வி. அது இல்லாமலா. 

அதுதான் உங்களது அமேஸான் ஐடி. அதுவேதான் கிண்டிலுக்கும் ஐடி. 

அட! 

ஆம். கிழக்கு பத்ரி புத்தகமும் ஒரு பண்டம் என்றபோது ஆவேசப்பட்ட நிறைய முண்டங்களில் நானும் ஒன்று. புக்கும் ஒரு பண்டம் என்கிறான் அமேஸான். 

ஆமாம். அமேஸானில் உங்கள் ஐடியில் லாகின் செய்து கொள்ளுங்கள். 

லாக் அவுட் செய்தால்தானே லாகின் செய்ய. அதும் பாட்டுக்கும் எப்போதும் லாகின் ஆகியேதான் கிடக்கிறது. 

நல்லது. அமேஸானில் எப்படிப் பொருள் வாங்குகிறீர்கள். 

கூகுள் போல பொருளின் பெயரை அடித்துத்தான்.

அதே போல கிண்டில் புத்தகத்தின் பெயரை எப்போதாவது அடித்துத் தேடியது உண்டா

ஹிஹிஹி இல்லை. 

நானே ஒன்றிரண்டைத் தவிர என் கிண்டில் புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாகக் கொடுத்திருக்கிறேனே. 

தெரியும் தெரியும். நான் கூட எல்லாவற்றிற்கும் தவறாமல் லைக் போட்டிருக்கிறேன். கசடதபற’ இதழ்களை கிண்டிலுக்குக் கொண்டுவந்ததெல்லாம் தமிழுக்கு நீங்கள் ஆற்றிய பெரும் சேவை தியாகம் என்றெல்லாம் கூட கமெண்ட் போட்டிருக்கிறேன். 

ஆனால் ஒரு இலவச கிண்டில் புத்தகத்தைக் கூட டவுன்லோட் செய்ததில்லை அப்படித்தானே. 

அது... வந்து... ஆனால் உங்கள் கதைகளை காலச்சுவடில் உங்கள் ப்ளாகில் என்று கிடைத்தபோதெல்லாம் படித்திருக்கிறேன். 

ஆக இலக்கிய வாசகர்தான். ஆனால் மெனக்கெடாமல் கிடைத்தால் படிப்பீர்கள். அப்படித்தானே. 

அப்படியும் சொல்லலாம். தேடிப் படிக்கிற தீவிர இலக்கிய வாசகன்தான். ஆனால் இந்தக் கிண்டில்தான் தெரியாது. 

பரவாயில்லை. பொருள் வாங்குவதைப் போலவே amazon.in ல் உங்களுக்கு வேண்டிய புத்தகத்தின் பெயரை அடித்துத் தேடுங்கள். என்ன வாங்குவதாக இருக்கிறீர்கள். 

ரெண்டு கிலோ தக்காளி ரெண்டு கிலோ பெரிய வெங்காயம் ஒரு கிலோ உருளைக் கிழங்கு ஒரு இம்போர்ட்டட் சவர பிளேடு. 

இவற்றுடன் கூட எதாவது கிண்டில் புத்தகம்?

அப்கோர்ஸ் அப்கோர்ஸ் உங்கள் புத்தகம். 

எது

அதான் லேட்டஸ்டாகப் போட்டிருக்கிறீர்களே. தினமும் அப்டேட் கூடக் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்களே. எழுத்துக் கொலை வெர்சன் 2.0 

ஓகே. தக்காளி வெங்காயம் சவர பிளேடெல்லாம் வங்கிவிட்டீர்களா 

ஓ 

ஓகே. அதே இடத்தில் எழுத்துக் கலை – 2 என்று அடியுங்கள். 

ஓகே. ஆடித்தாயிற்று. அட! புத்தகம்! 

இடதுபக்கம் புத்தகம்தக்காளி படத்துக்கு எதிர்ப்பக்கம் cart என்று இருப்பதைப் போல புத்தகத்துக்கு எதிர்பக்கம் buy என்று இருக்கிறதா. 

ஆமாம். 

ரைட். அதற்குக் கீழே deliver to என்று இருக்கிறதா. 

ஆமாம். இருக்கிறது. 

அதில் என்ன இருக்கிறது. 

Kindle cloud reader என்று இருக்கிறது. 

உங்களிடம் கிண்டில் கருவி இருக்கிறதா. 

ஓ இருக்கிறதே. என் மகளிடம் இருக்கிறது. நான்தான் வாங்கிக் கொடுத்தேன். 

நல்லது அதை எடுங்கள். 

முடியாதே. 

ஏன். 

அவள் ராஜஸ்தானில் அல்லவா படித்துக்கொண்டு இருக்கிறாள். 

ஓகே. கிண்டில் ரீடராக இருந்தால் செட்டிங்ஸில் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் செய்யும்படி போட்டாலே, கிண்டில் புத்தகத்தில் ஒரே ஒரு வார்த்தை மாறினாலும் தானாகவே புதிய வெர்ஷனாக மாற்றி வைத்துக்கொள்ளும். 

ஓ. 

உங்களிடம்தான் இல்லையே. சரி கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். உங்களிடம் இருப்பது கம்ப்யூட்டரா மொபைலா. 

இரண்டுமே இருக்கின்றன. 

உங்கள் கம்ப்யூட்டர் PCயா Macஆ மொபைல் ஐபோனா ஆன்ட்ராய்டா என்பதற்கு ஏற்றார்போல இங்கே கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளவும்https://www.amazon.in/gp/digital/fiona/kcp-landing-page

ஓகே அப்புறம். 

அப்புறமென்ன சவர பிளேடு வாங்குவதைப் போல உங்கள் அமேஸான் அக்கவுண்ட்டில் இருந்து எழுத்துக் கலை – 2 என்று அடியுங்கள். 

அடித்தாயிற்று அப்புறம். 

கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்தபின் இப்போது Buy கீழே இருக்கும் deliver to வில் your kindle library என்று இருக்கிறதா? 

ஆமாம். 

அதை அழுத்தினால் எதாவது தெரிகிறதா. 

ஆமாம் என் பெயர் போட்டு கிண்டில் PC என்று காட்டுகிறது. 

அதில்தானே கிண்டில் ஆப்பை நிறுவி இருக்கிறீர்கள். அதான் அதைக் காட்டுகிறது. இப்போது Buyயை அழுத்தி 49 ரூபாய் கொடுத்து எழுத்துக் கலை – 2ஐ வாங்கிக்கொள்ளுங்கள். தினமும் நான் இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு கதையும் குறிப்புமாகப் போட்டு  அப்டேட் செய்யச் செய்ய, டெலீட் செய்து திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள். 

ஐயையோ ஒவ்வொரு தடவையும் 49 ரூபாயா. 

இல்லை. ஒருமுறை வாங்கியதை எத்தனை தடவை வாங்கினாலும் காசே கேட்கமாட்டான். கிண்டில் கருவியாக இருந்தால் இந்தத் தொல்லைகூடக் கிடையாது, செட்டிங்ஸில் செட்பண்ணிவிட்டால் ஆட்டோமேடிக்காக அப்டேட் ஆகிவிடும். ஆப்பில் அந்த வசதி இல்லை என்பதால் டெலீட் செய்துதான் திரும்ப டவுன்லோட் செய்துகொள்லவேண்டி இருக்கிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

மன்னிப்பாவது மண்ணாங்கட்டியாவது. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளர். நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியங்கள் எவ்வளவு மகத்தானவை. இதற்கெல்லாம் கைமாறாக சொத்தையே எழுதிவைக்கலாம். ஆனால் நீங்களோ எதையுமே எதிர்பார்க்காதவர். உங்களை நான் மன்னிப்பவாதவது. இதைக் கட்டாயமாக வாங்கிக் கொள்கிறேன். அப்புறம் ஒரு சின்ன உதவி. 

சொல்லுங்கள்.

ஏதோ ஒரு ஆப்பில் கிண்டில் புத்தகங்கள் அனைத்தையும் PDF ஆக இலவசமாகவே டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்கிறார்களே அதைப் பற்றியும் இப்படி விரிவாக விளக்கமாக எழுதமுடியுமா. இப்போது என்ன கேட்டுவிட்டேன் என்று இப்படிக் கேவலமாகத் திட்டுகிறீர்கள். எழுத்தாளர் என்று உங்கள் மீது வைத்திருந்த மரியாதையே போயிற்று. நீங்களும் ஆயிற்று உங்கள் புத்தகமும் ஆயிற்று. ஒரு புனாவும் வேண்டாம். அதிலும் உங்கள் இலக்கிய புனா வேண்டவே வேண்டாம்.