இரண்டு நாட்கள் முன் வெளியான சக்கரம் நாவலின் 71ஆம் அத்தியாயம் யுத்த பூமி.
பாபா ஆம்தே 1985-86ல் ஒருங்கிணைத்த, பாரத் ஜோடோ அபியான் என்கிற கன்யாகுமரியிலிருந்து - காஷ்மீருக்குச் செல்கிற நிட் இண்டியா சைக்கிள் ரேலியில் பங்கேற்க, ஆபீஸில் அதிகாரபூர்வமாக அனுமதி வாங்குவதால் நரசிம்மனாகவும் உச்சரிக்கக் கஷ்டமாக இருப்பதால் நர்ஸியாக சுருக்கப்பட்டும் கிளம்பும் முன்பே கடிதத் தொடர்பிலிருந்த சுந்தர ராமசாமி மாமல்லன் என்று குறிப்பிடுவதாலும் இதில் வரும் பிரதான பாத்திரம் விமலாதித்த மாமல்லனாகவும் இருக்கிறது.40 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களில் இலக்கியத்தில் பரவலாக அறியப்பட்டவர்கள் நிஜப் பெயரோடு வருவதால் அரிச்சுவடிகளுக்கு அவர்களைப் பாத்திரங்களாக ஏற்கமுடியவில்லை.
ஆனால், 'உண்மை மனிதர்களின் கதைகள்' என்று அட்டையிலேயே அறிவித்துவிட்டு இன்னார் இன்னார் என்று வம்பு பேசிக்கொள்ள வசதியாக எழுதப்பட்டிருப்பவற்றைக் கதைகளாக ஏற்பதில் எந்தத் தடையும் இல்லை. இப்போது இலவச வெளிநாட்டு விசா வேறு ஜிலுஜிலுப்பதால் அவை புனைவா இல்லையா என்கிற கேள்வியே எழாது.
நிஜத்தில் இருந்த, இருந்துகொண்டிருக்கிற மனிதர்களோடு நிகழ்ந்தவை எப்படிக் கதையாகும்? அவற்றை நினைவுக் குறிப்புகள் என்றுதானே சொல்லமுடியும். கற்பனை இல்லாததை எப்படி நாவல் என்று ஏற்பது? எனவே ஆபீஸ், நாவல் இல்லை என்று தமக்கே உரிய தன்னம்பிக்கையோடு அடித்துச் சொல்கின்றன அப்ரசண்டிகள்.
தொடக்கத்தில் குறிப்பிட்ட சக்கரம் நாவலின் அத்தியாயத்தை எழுதும்போது வரிசையாக ஆர்மி டிரக்குகள் சைக்கிள் ரேலியை முந்திக்கொண்டு செல்லும் நடந்த காட்சி வந்தது. அத்தியாயத்தின் தலைப்பு யுத்த பூமி. (தலைப்பை வைத்துவிட்டு அத்தியாயத்தை எழுதுவதில்லை. பெரும்பாலும் டம்மி தலைப்புடன் ஆரம்பித்து எழுதிச் செல்கையில் அத்தியாத்தின் தீமுக்கேற்ப தலைப்பு உருவாவதே சாதாரணமாக நடப்பது. அதனால்தான் ஒருமுறை மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் கேட்டார் - ஃபைல் தலைப்பு ஒன்றாகவும் அத்தியாயத்தின் தலைப்பு வேறாகவும் இருக்கிறதே எதை வைத்துக்கொள்ள என்று)
ஆர்மி டிரக்குகள் செல்கிற காட்சியை விவரிக்க ஆரம்பிக்கையில், நாவலை எழுதிக்கொண்டிருக்கிற விமலாதித்த மாமல்லனுக்கு
நானும் இந்தக் குருவியும் சுமந்துகொண்டு பறக்கிறோம்
நான் போரை அது அமைதியை
என்கிற ஆனந்த்தின் கவிதை வரி நினைவுக்கு வருகிறது.
இதை 40 வருடங்களுக்கு முன்னால் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிற நர்ஸி என்கிற விமலாதித்த மாமல்லனுக்குத் தோன்றுவதாக நாவலாசிரியனான விமலாதித்த மாமல்லன் இன்று எழுதுகிறான். இது அன்று தோன்றவில்லை என்பதே உண்மை. ஆனால், தோன்றியிருக்க வாய்ப்புண்டா என்றால் இலக்கியமாகவே திரிந்துகொண்டிருந்தவனுக்கு அதுவும் 4, 5 ஆண்டுகள் முன் படித்தது நினைவுக்கு வருவது நியாயமே என்பதை ஏற்பதில் எதிரிகளுக்குக்கூட மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
ஆபீஸில், 40 வருடங்கள் முன்னால் இருந்த மெட்ராஸை அப்படியே படைப்பதென்பது 'புற' விவரிப்பில் மட்டுமன்று; அவன் இவன் என்று வருகிற பாத்திரத்தின் எண்ண ஓட்டங்களை அப்படி நினைத்திருக்க சாத்தியமுண்டா என்று அதன் 'அக'த்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டு எழுதுவதே அந்தப் பாத்திரத்திற்கு நம்பகத் தன்மையைக் கொடுக்கும். தரத்தில், வாசகனிடத்தில் படைப்பு ஏற்படுத்தும் நம்பகத்தன்மை முக்கியப் பங்குவகிக்கிறது.
சக்கரம் நாவலில் இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக, பள்ளியில் படித்த பானிபட், குருக்ஷேத்திரம் என வழியில் வந்த இடங்களெல்லாம் ஒன்றைத்தொட்டு ஒன்றாய் கிளைக்கிற எண்ணங்கள், மளமளவென்று முதல் டிராப்ட்டில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டன.
எவ்வளவு பார்த்துப் பார்த்து எழுதியும் சில நாட்கள் முன்னால்தான் தெரியவந்த - 1982ல் நடக்கிற ஆபீஸ் நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் நடந்துவிட்ட 'ஃபாண்ட்டா கோளாறு' - சக்கரத்தில் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற இரட்டிப்பு எச்சரிக்கையுணர்வோடு, மேற்கண்ட வரிகள் அவருடையதுதானே என்பதையும் வரிகள் சரிதானா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள கவிஞர் ஆனந்த்தைத் தொடர்புகொண்டேன்.
'அது எந்தில்லே. தேவதச்சன். நா பறவைனு எழுதியிருக்கேன். கொஞ்சம் டைம் குடுத்தா தேடித்தரேன், தேவதச்சன் நம்பர் வேணா அனுப்பறேன்' என்றார்.
'பறப்பது எப்படி என்று பறவையிடம் கேட்டேன்.' நீங்க எழுதினதுதானே. இல்ல மாலன்தா'
'நாந்தான். நீ பறந்துகிட்டுதான் இருக்கேனு பறவை சொல்லும் இவன் தொப்புனு விழுந்துடுவான்' என்று சொல்லிச் சிரித்தார் ஆனந்த்.
ஆனந்த்துடையதைப்போலவே தேவதச்சன் எண்ணும் என்னிடமே இருந்தது. அவரிடம் கேட்டேன். வரிகள் தன்னுடையவைதான் என்றார்.
இருவரிடமும் அந்த வரிகள் எந்த சந்தர்ப்பத்திற்குத் தேவைப்படுகிறது என்பதையும் கொஞ்சம் சொன்னேன்.
உறுதிசெய்துகொண்டது அந்த வரி யாருடையது என்பதை மட்டுமன்று. அது, (சைக்கிள் ரேலி போன 71ஆம் அத்தியாயம் நடக்கிற) 1986க்கு முன்னால் வெளியானதா என்பதையும் சேர்த்தே கேட்டுக்கொண்டேன்.
ஏனென்றால், இரண்டு மூன்று வாரம் முன்னால்தான் 1977ல் ஜனதா ஆட்சியிலேயே தடைசெய்யப்பட்ட ஃபாண்ட்டா எப்படி 80களில் வரமுடியும் என்று ஆதார சுட்டியை அனுப்பிக் கேட்டிருந்த ஜி குப்புசாமியிடம் அவமானப்பட்டிருந்தேன். அதை சரிக்கட்ட அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒழுங்கு என்கிற சக்கரம் நாவலின் 68ஆம் அத்தியாயத்தில் வருகிற கடைக் காட்சியில் மொழிபெயர்ப்பாளர் இன்று சொன்னதை கர்னல் ரேகே என்கிற பாத்திரம் அன்று சொல்வதாக செருகி, அதைப் பார்த்து நர்ஸியோடு சண்டையில் இருக்கும் சுஜாதா என்கிற பாத்திரம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரிப்பதாக எழுதி சரிக்கட்டினேன். அது மூன்று வாரம் முன்பு நடந்த கதை.
என் அதிருஷ்டம், சற்று நேரத்திலேயே அவரவர் கைமணல் என்கிற ஆனந்த் - தேவதச்சன் கவிதைத் தொகுப்பின் கிரெடிட் பேஜையும் நான் கேட்ட கவிதை வெளியாகியிருந்த பக்கத்தையும் அனுப்பிவைத்துவிட்டார் தேவதச்சன்.
இந்தச் சிட்டுக் குருவியும் நானும் சுமந்து செல்கிறோம்
நான் போரை, அது அமைதியை
என்கிற சரியான வரிகள் கிடைத்துவிட்டன. முதல் பதிப்பு ஜனவரி 1981ல் வெளியாகியிருக்கிறது. அப்பாடா என்று ஆசுவாசமாகிற்று.
நடந்ததை நடக்கும்போதே குறித்துவைத்தல் டயரி. நடந்ததை நினைவுகூர்தல் நினைவுக் குறிப்பு. 40 வருடங்கள் முன்பு நடந்தவற்றை வைத்து 1152 பக்கங்கள், இப்படி நடந்திருக்குமா என்கிற சந்தேகமே வாசகனுக்கு எழாதபடி, அப்படித்தான் நடந்தது என்று சம்பந்தப்பட்ட பாத்திரங்களே நம்பும்படி எழுதுவது கற்பனையில்லாமல் எப்படி சாத்தியம்? அது, மறு உருவாக்கமன்றி வேறென்ன? கதைகள் என்ன காற்றிலிருந்தா எழுதப்படுகின்றன. எல்லாமே கற்பனையும் அனுபவமும் ஏதேதோ விகிதத்தில் கலந்து செய்யப்பட்டவைதானே. இதெல்லாம் எழுத ஆரம்பிக்கிற எவனுக்கும் தெரிந்திருக்கவேண்டிய விஷயங்கள். இதுகூடத் தெரியாமல் இருப்பவர்கள் உளறிவைப்பதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பது நேரவிரயம் என்று தெரிந்தும் ஏன் எழுதவேண்டும் என்பது நியாயமான கேள்விதான்.
இலக்கியத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிற யாருக்கேனும் உபயோகமாக இருக்கும் என்கிற மூடநம்பிக்கையில்தான் இதையெல்லாம் எழுதிவைக்க வேண்டியிருக்கிறது.