30 November 2014

ருத்ரைய்யா மறைவின் வெளிச்சமும் எழுத்தாளர் இறப்பின் இருட்டடிப்பும்

புக்ஃபேர் புற்றீசல் 'இலக்கிய'த்துடன் ஒப்பிடவே முடியாத உயரத்தில் இருப்பவை அவள் அப்படித்தானும் உதிரிப்பூக்களும் பருத்திவீரனும் ஆடுகளமும். 


தரமாய் எழுதி சாதிப்பதையும் தரமான சினிமா எடுத்து சாதிப்பதையும் ஒப்பிடுவதே அடிப்படையில் அபத்தம். 

இருவருக்கும் சிந்திப்பதற்கு செலவில்லை என்பதோடு முடிந்துவிடுகிறது ஒப்பீடு.

இலக்கியத்தை எழுதிமுடித்த பேப்பரை அச்சேற்ற எந்தப் பதிப்பகமும் முன்வரவில்லை கையிலும் பணமில்லை என்றால்கூட இன்றைக்குக் கவலையில்லை, எழுத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள வேண்டிய கட்டாயமின்றி எழுதியதை வெளியிட இருக்கவே இருக்கிறது 'இலவச' இணையம்.

சினிமா எடுக்கப் பணம் தேவை. எண்ணிப்பார்க்கவும் எண்ணி பார்க்கவும் முடியாத அளவிலான பணம் தேவை.

எண்ணத்தை எழுத்தாக்க எழுதுபவன் மட்டுமே போதும்.

சினிமாவில் நினைத்ததை நினைத்தபடி கொண்டுவர எத்தனைக் காரணிகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்.

நம் புத்தகத்தை வெளியிட, ஒரு பதிப்பாளரை சரிக்கட்ட, இணையத்தில் லைக் ஜால்ராவே போதுமானது.

இன்றல்ல என்றும் சினிமா எடுப்பது, அதுவும் 'விற்க முடியாத' சினிமாவை எடுக்க ஒரு தயாரிப்பாளரைப் பிடிப்பதே அரும் சாதனை. 

இதன் காரணமாகவே, தாம் நினைத்த சினிமாவை எடுக்க சகலவிதமான சமரசங்களை செய்துகொண்டாலும் தாம் எடுத்த சினிமாவில் சமரசமின்றி சாதித்தவர்கள், இலக்கியத்தில் சாதித்தோரைவிடவும் பெரிய சாதனையாளர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

நாமிருக்கும் துறை எழுத்து எனவே எழுத்தாளன் தெய்வ கடாக்ஷம் பெற்றவன். பதிப்பாளர் தெய்வம். அவர் சொல்லுக்கு அப்பீல் ஏது!