18 June 2016

அறைகூவல்

//ஒருவரின் பின்னூட்டக் கடிதத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போடுவது//

குரு ப்ரம்ஹா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ 
குரு சாக்ஷாத் பரப்ரம்ஹா தஸ்மைஸ்ரீ குரவே நமஹ 

ரீதியிலான தங்களது பின்னூட்டக் கடிதத்தை நான் என்ன ஜெயமோகனின் மெய்லில் இருந்தா திருடிவிட்டேன். அப்படி நான் செய்திருந்தால்தான் அது கிரைம். அதன் பேரில் புகார் அளிக்க சைபர் கிரைமுக்குப் போகலாம். அப்போதும் கூட எவர் வேண்டுமானாலும் போய்விட முடியாது. பாதிக்கப்பட்ட, மெயில் களவாடப்பட்ட ஜெயமோகன்தான் புகார் அளிக்க முடியும். 

குறைந்தபட்சமாக, அந்தப் பின்னூட்டக் கடிதத்தை ஜெயமோகனின் தளத்தில் அவர் தனிப்பட/ தனிப் பார்வைக்கு மட்டும் என்று பகிர்ந்திருந்தால்தான் தமது அந்தரங்கம் மீறல் என கோர்ட்டுப்படி ஏறலாம். உங்களது குரு வணக்கத்தை ஏறுக்கொண்டதோடு அல்லாமல் அவரே அதை ஊரறிய தமிழ்கூறு நல் உலகறிய பொது வெளியான தமது தளத்தில் பகிர்ந்த பிறகு, இந்த தளத்தில் இருக்கும் எதையும் யாரும் முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது என்று அவர் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத பட்சத்தில், அதை, உங்களது அந்தக் கடிதத்தை - நீங்கள் அப்படி குரு என்று கும்பிடுவதை, சுய மரியாதையிமை என விமர்சிக்கும் கிண்டலடிக்கும் உரிமை எவருக்கும் உண்டு - எவரையும் குருவே என்றழைக்கும் உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்களே சொல்லிக்கொண்டதைப்போல. 

//கிண்டலடிப்பதும் எந்தத் தரத்தைச் சார்ந்தது// 

மகா ஸ்வேதாதேவியின் தரத்தைச் சார்ந்ததுதான். இதிலென்ன சந்தேகம். குந்திக்கு பதிலாக வேங்கச்சவாரியில் குந்தியிருப்பது நீங்கள் என்பதால் விமர்சனத் தரத்தில் குந்தகம் நேர்ந்துவிடுமா.

மகாஸ்வேதா தேவி மீள் உருவாக்கம் செய்து மகாபாரதக் குந்தியை விமர்சித்ததை விமரிசையாகக் கொண்டாடி கதைச் சுருக்கத்தைத் தங்கள் வலைப்பூவில் போட்டுக்கொண்டபோது எங்கே போயிற்று உங்கள் தரம். 

ஆதிவாசிகளைத் தங்களுக்கு பதிலாக அரக்கு மாளிகையில் தங்க வைத்துக் சாகக் கொடுத்த பாண்டவர்களின் அயோக்கியத்தனத்துக்கு வாய்மூடி ஒத்துப்போன குந்தியின் கேவலமான சுயநலச் செயல்தானே ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’ கதையில் மகாஸ்வேதா தேவியால் விமர்சிக்கப் படுகிறது. 

உங்கள் ஆறு பேரின் மொழிபெயர்ப்புள்ள ’விவேக் ஷன்பேக்’கின் வேங்கைச் சவாரி புத்தகத்தின் முகப்பில் ஜெயமோகன் பெயரை மட்டும் போட்டு உங்களையும் சேர்த்து, இலக்கியப் பஞ்சத்தில் அடிபட்ட பஞ்ச பாண்டவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்து, ஜெயமோகனை ஹீரோவாக்கி உங்கள் ஐவரையும் ஸீரோவாக்கிய வம்சி பதிப்பகத்தை விமர்சித்ததுதானே என்னுடைய ஒற்றைவரி ட்விட். வம்சி செய்த இம்சையை விழுங்கிக்கொண்டு, நைஸாக என்னைக்காட்டி, மூடர் கூட்டத்திடம் இவன் எங்களை ஸீரோவாக்கிவிட்டான் ஸீரொவாக்கிவிட்டான் என்று பிலாக்கணம் வைக்கத் தொடங்கிவிட்டீர்கள். 

மகா ஸ்வேதாதேவியின் கதையில் பாண்டவர்களின் அக்கிரமத்துக்குத் துணைபோன குந்தியைப் போன்றவர்தானே நீங்களும். குந்தியை ஆதிவாசிப் பெண் வழியே மகா ஸ்வேதாதேவி விமர்சித்தால் இலக்கியத் தரம். சுய கெளரவமற்று வ்ம்சியை விமர்சிக்கத் துப்பின்றி நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி நீங்கள் துணை போவதை நான் விமர்சித்தால் கேடுகெட்டத் தரமா.

இலக்கிய உலகில் தனிநபர் துதிகளும் கூழைக் கும்பிடு போடும் கேவலங்களும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. எது விமர்சனம் இல்லை. ஜெயமோகனை ஹீரோவாக்கிய வம்சி உங்கள் ஐவரையும் ஸீரோவாக்கிவிட்டது என்கிற என் ட்விட் விமர்சனம் இல்லாமல் வேறென்ன. ஆதெள கீர்த்தனாரம்பத்திலே என்று 88 பக்கத்துக்கு ஜெயமோக பாகவதரைப் போல் எழுதினால்தான் விமர்சனமா. உங்களைப் போன்ற இலக்கியச் சிறார்களைத் தூக்கி அடிக்க ஒரு வரியை செலவிடுவதே என் தரத்துக்கு அதிகபட்சம். 

//இந்த மஞ்சள் பத்திரிகைப் போக்குத் தொடர்ந்தால்// 

இதிலெங்கே மஞ்சள் பத்திரிகைப் போக்கு இருக்கிறது. மஞ்சள் பத்திரிகை என்றால் என்னவென்று - என் ட்விட்டை அபத்தமாய்ப் புரிந்துகொண்டதைப் போல - என்னவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுவரை தங்களைப் பற்றி அவதூறாகவோ ஆபாசமாகவோ ஏதாவது எழுதி இருக்கிறேன் என்கிற ஆதாரத்தைக் காட்டிவிட்டு அப்புறம் என் போக்கை மஞ்சள் பத்திரிகைப் போக்கு என்பதல்லவா நியாயம் என்று கமிஷனர் ஆபீசில் கேட்டால் என்ன செய்வீர்கள்.

//க்ரைம் சார்ந்த பிரிவை அணுகவும் ஆயத்தமாய் இருக்கிறேன் என்றுதான் சொன்னேன்.// 

அடடே நேற்று சைபராக இருந்தது இப்போது க்ரைம் சார்ந்த பிரிவாக ஆகிவிட்டதா. என்னே அசுர வளர்ச்சி. தாயத்தைக் கட்டிக்கொண்டு போய் சூனியம் வைக்க ஆயத்தமாய் இருப்பது மட்டுமே போதாது. க்ரைம் பிராஞ்சில் புகார் கொடுக்க ஆதாரம் வேண்டும். பிரிண்ட் எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் புகார் அளிக்க வசதியாய், உங்களைக் குறித்து நான் எழுதும் அனைத்தையும் தொகுத்து சைபர் மேடம் என்று தனிப்பிரிவாக்கி என் தளத்திலேயே தொகுத்துத் தருகிறேன். 

//அது மிரட்டல் இல்லை.// 

வெறும் மிரட்டலில்லை நிஜம் என்கிறீர்களா. FIR போட, அவன் செய்த க்ரைம் என்னவென்று கேட்பார்கள். உங்களது விலைமதிப்பற்ற மூளையைக் களவாடப் பார்த்ததாய்க் கூறுங்கள். 

அக்கினியின் புத்திரன்கள் 
அத்தனையும் சாம்பல் 
என்றான் மகாகவி பிரமிள். நீங்களெல்லாம் ஒன்றுதிரண்டு அக்கினியை ஜெயமோகனாக்கிவிட ஒருமுகமாய் முடிவெடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. 

இலக்கியமெல்லாம் பெரிய ஆட்கள் விளையாட்டு. பந்து பொறுக்கிப்போடுவதுபோல் வார்த்தையைப் பொறுக்கி குருவே திருவே உருவே என மெய்லெழுதி பயிற்சி செய்து கொண்டிருக்கும் சிறுவர்களெல்லாம் குறுக்கே வரலாகாது. வார்த்தைப் பந்து வீச்சில் மூஞ்சி முகரையெல்லாம் எகிறிவிடும் அபாயகரமான இலக்கிய ஆட்டமிது. எச்சரிக்கை.

அறைகூவல்

இது
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம் பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம் போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத்தெரியாமல்
நீ
ஏந்தி நிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல்
நீறாகு!

- பிரமிள்

*
(1973)