23 June 2016

இந்த சாமி நம்ம சாமிடா

நல்லி குப்புசாமிக்கடுத்து எல்லோரையும் மதிப்பவராகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவருமாகவும் நம் காலத்து FB நாயகனாக இலக்கியத்தில் வலம் வரும் இன்னொரு ஆளுமை மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமிஜி அவர்கள். 

இந்த புத்தகக் கன்காட்சியில் காலச்சுவடு வெளியிடும் சார்வாகன் கதைகளை வாங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். தொகுப்பாசிரியர் ஜி குப்புசாமி என்பதைப் பார்த்ததும் சற்று மிரண்டேன் எனினும் கனவுக்கதை சார்வாகனுக்காக இந்தத் தியாகத்தைக் கூடச் செய்யாவிட்டால் எப்படி என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

பொதுவாக எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் நான் கடைசியாகப் படிப்பது முன்னுரையைத்தான். கைபடாத பரிபூரண கன்னி மனதுடன் புத்தகத்துக்குள் நுழைய வேண்டும் என்கிற புனித எண்ணமன்றி விசேஷ காரணம் வேறு எதுவுமில்லை.

என் அறியாமை காரணமாக, தொகுப்பாசிரியர் என்பதனால் பாவம் அரசாங்க ஆடிட் வேலைக்கு நடுவில், சம்பளமில்லா லீவ் போட்டு, உ.வே.சா போல ஊரூராய்த் தேடி அலைந்து தொகுத்திருக்கிறார் என்றுதான் ஆரம்பத்தில் எண்ணிவிட்டேன். அட்லீஸ்ட் இப்படியாவது ஒரு சான்ஸ் கிடைத்து பாராட்டி வைத்தால்,

//"Fuck with me again, you're history. Capiche?"//

//“ஒருமுறை என்னுடன் புணர்ந்துதான் பாரேன். நீ சரித்திரமாகி விடுவாய்.  கப்பீ. . . . . ஸி?”//

எழுத்தாளர்களுக்கு எடிட்டர் தேவை முடிந்தால் முழி பெயர்ப்பாளர்களுக்கும்

என்று பதிவு செய்வதற்கு முன்பு போல, மறுபடியும் ஃபேஸ்புக்கில் லைக் போட ஆரம்பிக்க மாட்டாரா என்கிற நப்பாசையும் ஒரு காரணம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 

நற்றினையின் சார்வாகன் கதைகள் முழு தொகுப்பிலிருந்து, 13 கதைகளை எடுத்துத் தொகுத்துத் தொகுப்பாசிரியர் ஆகி இருப்பது, குப்புசாமிஜி அவர்களின் வாழ்விலோர் திருநாள். முழிபெயர்ப்புகளுடன்கூட, இலக்கியத் தொப்பியில் செருகிக்கொள்ளக் கிடைத்த இன்னொரு இறகு.

சரி முழுத்தொகுப்பு எப்போதோ போட்டு இப்போது அச்சில் இல்லை போல என்று எப்படியாவது பாராட்டிவிடலாம் அதற்கு முன் எதற்கும் ஒருமுறை இணையத்தைப் பார்த்துவிடலாம் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் போனால் என் ஆசையில் மண். நற்றிணையின் சார்வாக கதைகள் முழுத்தொகுப்பு ஆன்லைனிலேயே கிடைக்கிறது.
இதெல்லாம் சின்ன விஷயம். போகட்டும் தொகுப்புரையாவது அதிருஷ்டவசமாக நன்றாக இருந்து பாராட்ட ஒரு வாய்ப்பைத் தந்துவிடாதா என படிக்கத்தொடங்கினால், மூன்றரை பக்கங்களுக்குள் கிடைக்கிற அத்தனையும் முத்துக்கள்.


//அந்தக் காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருந்த வேறெந்த எழுத்தாளரோடும் ஒப்பிடமுடியாத தனி வகையினராகத்தான் சார்வாகன் இருந்திருக்கிறார்// 

//தனி வகையினராக// என்பது கடைசி நிமிடத்தில் ரொம்ப அபத்தமாக இருப்பதை யாரோ கண்டுபிடித்துப் பின் அட்டையில் மாற்றிவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் பின்னட்டையில் கீழ்க்கண்டவாறல்லவா இருக்கிறது.

சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். 

***

மொழித்தேர்ச்சியின் விளைவாக அமைந்த தவறில்லாத செறிவான உரைநடையும் பொருத்தமான சொற்தேர்வுகளும்.

//தவறில்லாத செறிவான உரைநடை// தவறின்றித் தமிழ் எழுதுவதும் எழுதவேண்டும் என்பதும் அடிப்படை அவசியம் இல்லையா தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளரான சார்வாகன், தமிழைத் ’தவறில்லாமல் எழுதி இருப்பவர்’ என்று குப்புசாமி ஜியால் பாராட்டப்பட என்ன தவம் செய்திருக்க வேண்டும்.  

***

அடுத்து வருவதுதான் மொழிபெயர்ப்பாளர் ஜல்லி குப்புசாமியாகவும் ஜோதிட சிரோமணியாகவும் ஒருசேர பரிமளிக்கும் இடம். 

//உலகப் புகழ்பெற்ற தொழுநோய் அறுவைசிகிச்சை நிபுணராக இருந்தவர் தனது  தீவிரப் பணிகளுக்கிடையே எழுதிய கதைகளையும் அதே தீவிரத் தன்மையுடன் படைத்திருப்பது எழுத்தை அவர் இளைப்பாறலுக்கான கேந்திரமாகக் கருதாததை உணர்த்துகிறது.//

மருத்துவத் துறையில் பெரும் சாதனையைப் படைத்தவர் இலக்கியத்தில் அச்சுபிச்சு என்று எழுதி இருந்தால்தானே அய்யைய்யே என்ன இது இப்படி என்று முகஞ்சுளிக்க வேண்டும்.  அப்படி சார்வாகன் செய்திருந்தால், இவர் கிளாசிக் தொகுப்பாசிரயராக ஆகியிருக்கத்தான் முடியுமா. பாராட்டுகிறேன் பேர்வழி என்று இப்படியெல்லாமா இலக்கியத்தில் ஜல்லியடிப்பது.
இளைப்பாரலுக்கான இடமாக என்று எழுதினால் நெம்ப சப்பென்று இருக்கும் இலக்கியமாக ஒரு இதுவாக இருக்க வேண்டாமா என்று கேந்திரமாக என்று எழுதுவது கெத்தான இலக்கிய நடை. 

***

தவறில்லாமல் தமிழ் எழுதியிருக்கிறார் என்று சார்வாகனுக்குச் சான்றிதழ் அளிக்கும் முன்பாக, அவர் என்று எழுதிவிட்டுக் கூடவே, தன்னை என்று எழுதுவதைத் தவிர்த்திருக்க வேண்டாமா. குப்புசாமிஜி என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறார். பாவம் அவர் கை சரக்கே அவ்வளவுதான் என்பதற்கான ஆதாரம் மூன்றரைப் பக்கம் முழுவதிலும் விரவிக்கிடக்கிறது.

அவன் - தன்னை 
அவர் - தம்மை

//தன்னை அர்ப்பணித்திருந்த அவர்// 

//அவரது எள்ளல் தொனி தன்னையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.// 
//தன் இயல்புக்குப் பொருத்தமான புனைபெயரை வரித்துக்கொண்டிருப்பவர்// 



//தன்னையும் பிறரையும் காயப்படுத்தாத பகடி இலக்கிய வகைமையில் உன்னதமான இடத்தைக் கொண்டிருப்பது// 

என்று எழுதவேண்டும் என்பது பால பாடமில்லாவிட்டாலும் பள்ளிப்பாடமில்லையா. இப்படிக் கிடப்பது ஏராளம். எல்லாவற்றையும் எடுத்து ஒட்டிக்கொண்டிருப்பது வெட்டி வேலை.

***

//தன்னையும் பிறரையும் காயப்படுத்தாத பகடி இலக்கிய வகைமையில் உன்னதமான இடத்தைக் கொண்டிருப்பது//

தன்னைக் காயப்படுத்தும் பகடியை யாராவது எழுதியிருக்கிறார்களா அல்லது சுயவதை விரும்பியாக இல்லாத நார்மல் மனிதன் எவனும் எழுதியிருக்க முடியுமா. அதையும்தான் கொஞ்சம் காட்டுங்களேன் என்று கேட்பது குப்புசாமிஜியிடம் ரொம்ப காமெடி செய்வதாக ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டி இருக்கிறது.

***

//சிக்கலான அறுவை சிகிச்சை முறையைக் (Srinivasan Technique) கண்டுபிடித்த அதே மனம்தான்// 

சி.பி.ஸ்னோ கட்டுரையின் கருத்துருவை எடுத்துக்கொண்டு, அதற்குள் சார்வாகனை மடக்கித் திணிக்கப் பார்ப்பது மேற்கோள் டாம்பீகம். 

கலைஞனின் மனம் என்று உயர்த்திச் சொல்வதற்காக, புதிய அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூளை என்று சொல்வதைத் தவிர்த்து மனம் என்று எழுதி ஒப்பேற்றுவது, கட்டுச்சோற்றுக் கல்வியறிவு. 

*** 

//’உத்தரீயம்’, ‘நாதப்பிரும்மம்’ போன்ற கதைகளின் நவீனத்துவம் இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடியதே// 

//இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடியதே// என்பது, சாதனையாளரை கெளரவிக்கும் வெளிப்பாடா. இல்லை இவரது மொழி வெளிப்பாட்டின் போதாமையா. 

***

இது என்ன கத்துக்குட்டி புத்தகத்துக்கான அறிமுகமா, புத்தகத்தோடு முன்னுரையும் அசட்டுத்தனமாய் இருந்தால் என்ன குடியா முழுகிவிடும் என்பதற்கு. 

ஆழம் அனுபவம் அறிவு பார்வை படைப்பாற்றல் போன்றவற்றில் ஒன்றுகூட இல்லாமல் உன்னதம் செரிவு தீவிரம் தொனி தனித்துவம் வகைமை போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரவி ஃபேஸ்புக் போஸ்ட் போல போடப்படுவது, இலக்கியப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதியானதா.

இதை எழுத குப்புசாமி ஜிக்கு இருக்கிற ஒரே தகுதி, இவரும் சார்வாகனைப் போல ஆரணியைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர வேறு என்ன.