13 September 2012

காகிதப் புலி

அன்பான கவின் மலர் வணக்கம்.

தாங்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி கண்டேன்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியம் என்பது என் நிலைப்பாடு. மின்சாரம் இரண்டாம்பட்சம்தான், ஆயுதப் பயன்பாட்டுதான் அதன் முதன்மையான நோக்கம் என்றாலும்கூட கூடங்குளம் அவசியம் என்பது என் கருத்து.

அணுகுண்டு என்பது காகிதப்புலி என்று கூறிய மாவோவின் தேசம் அடுக்கி வைத்திருக்கும் காகிதப்புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒருவர் முற்போக்காளராய் இருக்க வேண்டுமென்றால், உலகெங்கும் தானாகவோ அல்லது இன்னொரு வல்லரசின் அணுக்குடையின் பாதுகாப்பிலோ இருந்துகொண்டு மற்ற நாட்டை அணுகுண்டு செய்யாதே என்று பெரிய நாடுகள் சொல்லுவதைப்போல, இந்நாட்டின் குடிமகனாய் இருந்துகொண்டு இந்தியா மட்டும் அணு உற்பத்தி செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டும். அப்படிக் கூவினால்தான் அவர்கள் அஃ மார்க் இந்திய முற்போக்காளர்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். முற்போக்காளனாய் இருக்க வேண்டும் என்பதில் எனக்குப்பெரிய ஆர்வமும் இல்லை. பிற்போக்காளனாய் பேட்ஜ் குத்தப்படாலும் என் மனதுக்கு சரியென்றுபடுவதைக் எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் கூறிவிட்டுப்போவதே எனக்கு உகந்ததாக இருக்கிறது.

<condemning the police action against the idinthakarai protesters>

இந்த அரசு என்றில்லை எந்த அரசும், உலகில் உள்ள எல்லா நாட்டின் அரசுகளும், தாம் சரி என்று நினைப்பதைத்தான் அமல்படுத்துகின்றன. போலி ஜனநாயக நாடு என்று முற்போக்காளர்களால் வசைபாடப்படும் இந்தியாவிலாவது முற்றுகைப் போராட்டத்திற்கு முன்தினம் வரை பல மாதங்களாய் போராட்டம் நடத்த முடிந்தது. முற்போக்கு அறிவுசீவிகளால் ஆராதிக்கப்படும் எத்துனை நாடுகளில் இது சாத்தியம் என்பதை தனிமனிதனாக என்னால் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு இயங்கமுடியாதபடி செய்யுங்கள் என்று பாதிரிமார் ஆசீர்வதித்து அனுப்பிவைப்பதை மக்கள் போராட்டமாகவோ  அமைதியான அறவழிப்போராட்டமாகவோ என்னால் ஏற்கமுடியவில்லை. மத போதகர்கள் முன்நின்று வழிநடத்த புனிதகாரியம்போல் போராடுபவர்களுடன் விவாதித்து விளங்கவைப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. இதன்காரணமாகவே இடிந்தகரை மக்கள் அப்பாவிகள் என்பது திண்ணமாகிறது.

கைக்குழந்தைகளுடன் பெண்களை முன்நிறுத்தி ஆயுத சீருடைப் படைகளோடு சமர்புரிவதென்பது கடல்கடந்த களத்தில் தொடங்கி சிலவருடங்களாக ’தந்திரோபாயமாக’ அமலுக்கு வந்துவிட்டது. போராளிகள் இவர்களைப் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தலாம். ஆனால் முன்னேறவிடாமல் அரசு தடுக்க முனையக்கூடாது. ஒரு தரப்பு சடாரென கட்டு மீறும் தருணத்தால் ஏற்படும் விளைவுகளின்போது இது வன்முறையாக சித்தரிக்க வசதியாகப் பயன்படுகிறது. பெண்கள் போராடக்கூடாதா என்று கேட்டால் கூடாது என்று சொல்ல நான் யார். ஆனால் போராட்டம் என்பது முற்றுகையிட்டு அணுமின் நிலையத்தை முடக்குவது என்று வந்தபின் போராளி என்பவர் ஆணோ பெண்ணோ அதன் விளைவுகளையும் சந்திக்கத் தயாராகத்தானே இருந்தாக வேண்டும். கடலையே வாழ்களனாகக்கொண்ட தீரமிக்க மீனவர்களாகப் போராளிகள் இருந்தால் போலீசின் பாடு திண்டாட்டம்தான். சாதாரண சீக்கியனை சமாதானபடுத்தி புரியவைக்க எவ்வளவு காலம் பிடித்தது என்பது சரித்திரம்.

<demanding closure of KKNPP.>

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடச்சொல்லும் போராட்டம் எதற்காக? அணுமின் நிலையம், கூடங்குளம் பகுதி மக்களை கதிர்வீச்சு ஆபத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்கிற அனுமான பயத்தை அதீதமாகத் தூண்டிவிட்டதன் விளைவு என்றே நினைக்கிறேன். அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு இல்லவே இல்லை என்று யாரும் கூறவில்லை. ஆனால் அது கட்டுக்குள் இருக்கும் என்றும் அந்த வட்டாரத்திற்கே அதனால் ஆபத்து என்பது வெறும் அனுமான அதீதபயம் மட்டுமே என்றும்தான் கூறப்படுகிறது. 

சில மாதங்கள் முன்பு அலுவலக வேலை நிமித்தமாய் ஏக்கர் கணக்கில் பரந்துகிடக்கும் கல்பாக்கம் அணுமின் நிலைய வட்டாரத்திற்குள் செல்ல நேர்ந்தது. சென்னை சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து வரவேண்டிய ஃபேக்ஸுக்காக மதியத்திலிருந்து மாலைவரை காத்திருக்கவேண்டி இருந்தது. அழைத்துச்சென்ற வண்டியோட்டுநரிடம் கதிர்வீச்சு பற்றி பேச்சுக் கொடுத்தேன். 

கதிர்வீச்சு அபாயம் எல்லாம் இங்க எப்புடிங்க இருக்கு? 

அதைக் கண்காணிக்கன்னு ஸ்பெசலா மெசினே இருக்கு சார். 

அட அப்பிடியா? எங்க இருக்கு? பாக்க முடியுமா? 

உள்ற இருக்கு சார். இங்கெல்லாம்கூட கதிர்வீச்சு இருக்கலாம். ஆனா பாதிக்கிற அளவைவிட உலைக்கூடத்துக்கு வெளில ரொம்ப குறைவாதான் இருக்கும்னு சொல்றாங்க. 

கதிர்வீச்சுன்னா என்னங்க கண்ணெரிச்சல் ஒடம்புவலி இதுமாதிரி என்ன அறிகுறி இருக்கும்? 

தெரியலை சார்.

தெரியாதவரைக்கும் நல்லது. இதுவேற நம்மள பாதிச்சி, தெரிஞ்சிக்கணுமா? டச் உட் என்று தொட்டுக்கொள்ள அருகில் மரம்கூட இல்லை. காலடியிலோ கடல் மண். ஜீப்பையே மரமாக நினைத்துதான் தொட்டுக்கொள்ளவேண்டி இருந்தது.

மெயின் பில்டிங்குக்குள்ள போய் வேலை செய்யறவங்களுக்கு, கதிர்வீச்சு பாதிப்பு இருக்கான்னு ரெகுலர் செக்கப் இருக்கு. அவங்க உடம்புல கதிர்வீச்சு, எந்த எடத்துல எந்த அளவுல தாக்கப் பட்டிருக்குங்கறதை அங்கயே இருக்கற கருவி காட்டிடும். அப்படித் தாக்குதலுக்கு ஆளானவங்களுக்கு உடனே ஆஃப் கொடுத்து ட்ரீட்மெண்ட் குடுக்கறாங்க. முழுக்க குணமாக எவ்ளோ நாள் தேவைப்படுதோ அவ்ளோ நாளைக்கு ட்ரீட்மெண்டு உண்டு. கதிர்வீச்சு பாதிப்பு இல்லவே இல்லைனு சொன்னா அது முழு பொய். அதே சமயம் உசுருக்கே ஆபத்துன்னு சொல்றதும் உடான்சு. அப்படி இருந்தா எத்தினி லட்சம் குடுத்தாலும் யார் சார்  இங்க வேலை செய்ய வருவாங்க. நீங்களே பக்கறீங்களே எத்தனை ஆயிரம்பேர் வேலை செய்யறாங்க. இவங்கள்ளாம் என்ன எதுவுமே தெரியாத படிக்காத கூலியாளுங்களா? பெரும்பாலானவங்க என்ஜினியர்களும் சயிண்டிஸ்டுகளும்தான் இல்லீங்களா? 

பெரிய அதிகாரிங்களுக்குன்னு ஸ்பெஷல் பாதுகாப்பு உடை  எதாவுது  இருக்குமோ? 

உள்ள போய்ட்டுவர எல்லாருக்கும் ஒரே மாதிரி பாதுகாப்புதான் சார். யாருக்கு வேணா அது அடிக்கலாம். பெருசு சிறுசுன்னுல்லாம் கதிர்வீச்சுக்கு என்னா சார் தெரியும்? 

நீங்க உள்ள போயிருக்கீங்களா?

அது எங்கியோ பூமிக்கு அடில பதினாலு பதினஞ்சு மீட்டர் அடில இருக்கு சார். பள்ளம் தோண்டின காலத்துல போனது. நிலையம் முழுசா வேலை செய்ய ஆரம்பிச்ச பெறகு வேலியக்கூட நாம்பள்ளாம் தாண்ட முடியாது சார். 

கேக்கறனேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க, உங்குளுக்கு இதுவரைக்கும் கதிர்வீச்சு பட்டுருக்கா? 

ஏன் கேக்கறீங்க? என்னடா இங்க நிக்கறமே நமக்கு எதுனா ஆயிடுமோன்னு பயமா இருக்கா சார்? பில்டிங்குலேந்து நாமதான் 100, 150 அடி தள்ளி நிக்கிறமே. கவலைப்படாதீங்க. ஃபேக்ஸ் இருக்கற இந்த டெம்ரரி ஆபீசு இங்க வந்தே எட்டு வருஷம் ஆகுது. அந்தப் பொண்ணுக்கு, இங்க வேலைக்கு வந்த பெறகுதான் கல்யாணமே ஆச்சு. ரெண்டு பசங்க இருக்குது.

இவ்ளோ பக்கத்துல இருந்துகிட்டு சாதாரண சிவிலியன்ஸ் இவ்ளோபேரு பயப்படாம வேலை செய்யிறது பெரிய விஷயம்தான். 

ஹாஹ்ஹாஹ்ஹா சார் இந்த ஏரியாவை விடுங்க. மெயின் பில்டிங்குக்குள்ள போனாக்கூட கதிர்வீச்சு தாக்கியேதீரும்னு ஒன்னும் கட்டாயம் இல்லை. எத்தினியோ ஆபீசருங்க என்ஜினியருங்க டெய்லி உள்ள போய் வந்துகிட்டுத்தான் இருக்காங்க. எல்லாருக்கும் எப்பவும் கதிர்வீச்சு தாக்கிகிட்டா இருக்கு. ஆனா யாரை வேணா எப்ப வேணா தாக்கலாம்ங்கற அபாயம் இருக்கறது என்னவோ நெசம். ஆனா அந்த ஸ்பாட்டுலேந்து தள்ளி வரவர கதிர்வீச்சோட கடுமை குறைஞ்சுகிட்டே வரும்கறதும் உண்மைதான். இல்லேன்னா கல்பாக்கம் குடியிருப்புல இவ்ளோ காலம் புள்ளகுட்டிங்களோட வந்து செட்டிலாயிருப்பனா சார். 

நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஓரிரண்டு கிலோமீட்டர்கள் தள்ளிதான் வளாகத்து மதிற்சுவரே இருக்கிறது. அதற்கும் தள்ளிதான் கல்பாக்கம் ஊரும் குடியிருப்புகளும் இருக்கின்றன. கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஐந்து அடுக்கு ’பாதுகாப்பு’களுடனும்தான் அந்த நிலையம் பல வருடங்களாய் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

அணு ஆயுதம் எப்படி தவிர்க்கமுடியாத அவசியமோ அதற்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக, நோ ஃபர்ஸ்ட் யூஸ் என்கிற இந்தியாவின் அணு கொள்கையும் மனிதகுலத்திற்கு அதிமுக்கியம் என்று தோன்றியது.

அலகில் நெற்கதிர் ஏந்திய குருவி பதித்த இரும்புக் கதவுகளைக் கடந்து  கல்பாக்கத்தைவிட்டுக் கிளம்பும்போது மூட்டமாய் இருந்தது.ஊரைக் கடந்ததும் வண்டி வேகமெடுக்க மூட்டம் கருக்கத்தொடங்கி மழையாக வலுத்தது. செங்கல்பட்டை மிகநெருங்கியபோது மழை நின்று வானம் திறந்துகொண்டது. மாலைச் சூரியன் மகிந்தரா வண்டியின் கண்ணாடி வழியாக முகத்துக்கு நேராய் பளீரிட்டுக் கூச வைத்தது. பக்கவாட்டுப் பார்வையாய் டிரைவரைப் பார்த்தேன். கட்டப்பட்டுக்கொண்டே இருந்த பாலத்தின் அடியில் சேறாகி குட்டையும் குளமுமாய் இருந்த சாலையின் போக்குவரத்து நெரிசலில் அவர் கவனம் குவிந்திருந்தது. ஐஃபோனில் மணி பார்த்தேன். 6.20ஐப் பிடித்துவிடலாம்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது கண் எரிவது போலத் தோன்றியது. நின்றிருந்த ரயிலைப்பிடிக்க விரைந்தவன் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்தேன். என்னை இறக்கிவிட்ட ஜீப் ஆட்டோ நிறுத்தத்தை சுற்றிக்கொண்டு, பயணச்சீட்டு அலுவலகத்திற்கு எதிரிலிருந்த வேக தடுப்பான் மேல் மந்தமாய் ஏறி இறங்கி கதிர்வீச்சை நோக்கி விரைவது தெரிந்தது.

ரயிலில் ஏறி அமர்ந்து வெகுநேரம் கழித்தும் காரணமற்று கைகளை மாறி மாறி துடைத்துக்கொண்டிருந்தேன் என்பதை, எதிரிலிருந்தவரின் விநோத பார்வை உணர்த்தவே, வெளிப்புறம் விரைந்து மறையும் மரங்களை வெட்கத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

*

ஞானியும் மூடனும்