18 September 2012

உலை

உலை என்றால் 
புகையும் கொதிக்கும் கசியும் 
இன்றில்லை எனினும் என்றேனும் ஒருநாள் 
உயிருக்கே ஆபத்து 
எனவே மூடு!

கோஷமிட்டு 
கும்பி கொதிக்க உட்கார்ந்தது 
கடலோடிக் கூட்டம். 

காலம் கரைந்துகொண்டே இருந்தது 
கட்டிடம் எழும்பிக்கொண்டே இருந்தது.

அறை விழுந்தால் 
மறு கன்னத்தைக் காட்டு எனச்சொன்ன 
கர்த்தரின் போதனையில் சலித்த சாமியார்கள் 
முற்றுகையிடு என்று முழங்கினர்.
உடுக்கடி உச்சாடணத்தில் முறுக்கேறி 
உலைநோக்கி முன்னேறிற்று பெருங்கூட்டம்.

தடுக்கப்பார்த்த சீருடைக்கும் 
முடுக்கிவிடப்பட்ட முண்டாக்களுக்கும் நடுவே,
கரை மணலில் 
தர்க்கம் பலியாக 
தன்மானமாய் வெடித்தது தடியடி. 

கண்ணீர்ப்புகைக் குண்டு கடலைக் கரித்தது 
ஊடகங்கள்வழி அறிவுஜீவிகள் வீட்டு 
வரவேற்பறைகளில் கண்ணீராய் கசிந்தது
ஆன்மாவின் அறக்குரலாய் 
கண்டணக் கையெழுத்து பெருகத்தொடங்கிற்று. 

அந்த கையொப்பத்தில் சுழிப்பு சரியில்லை 
இதற்கு சுழியே சரியில்லை 
அது முழிக்கும் முழியே சரியில்லை 
புகைச்சல் குமைந்து குலைப்பாகி 
காதைக் குடையத் தொடங்கிற்று. 

உண்மை,
உலை புகைந்து கசிந்தால் 
ஒருவருக்கல்ல
ஒவ்வொருவருக்குமே ஆபத்துதான் 

ஆகவே,
அவரவர் உலையை 
புகையாமல் கொதிக்காமல் கசியாமல் 
பார்த்துக்கொள்ளுங்கள்

அணு உலையை
அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ளும்