27 December 2012

அலைபேசியில் வந்த அழைப்பு

பத்மாசினி காட்டிவரும் பயாஸ்கோப் எழுதியபின், பரவலான கவனத்தை ஈர்த்து, தமிழகத்து வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மற்றும் சின்மயியின் தாயார் மியூஜிகாலஜிஸ்ட்டு பத்மாசினி, இரு தரப்பாருக்கும் நன்மை விளையட்டும் என்கிற நல்லெண்ணத்துடன் அநேகமாக அனைத்து பத்திரிகைகளுக்கும் இதன் சுட்டியை அனுப்பி, மியூஸிக் சீசனாகவும் இருப்பதால், இதைப்பற்றி எழுதுவது, பரபரப்பு செய்தியாய் உங்களுக்கும் பயன்படும், எனவே முடிந்தால்  பாருங்கள் என விண்ணப்பித்து இருந்தேன். 

எவருக்குமே எந்த நட்டமும் விளைவிக்காத சத்-காரியத்தைச் செய்த திருப்தியில் மனம் பரிபூரண அமைதி கண்டது. சீசன் முடிய இன்னும் நாள் இருக்கிறதே என்று பொறுமையுடன் மற்ற கட்டுரைகள் எழுதுவதில் மும்முரமாய் இருந்தேன்.

இன்று மதியம், அலைபேசி உயிர்த்தது. ஒரு பத்திரிகையின் பெயர் ஒளிர ஒலித்தது.

வணக்கம்.

வணக்கம்.

உங்கள் கட்டுரையை இணையாசிரியர் பிரசுரிக்க இணங்கியுள்ளார்.

நன்றிங்க.

பெரியதாக உள்ளதால் அதை இரண்டு பக்கங்களுக்குள் சுருக்கித்தர இயலுமா?

’அந்த’ கட்டுரையே பத்திரிகையில் வெளியாக வேண்டும் என்பதல்ல, செய்தி பெரும்பான்மையான தமிழர்களிடம் சென்றடைவதன் மூலம் நல்லது நடக்க வேண்டும் என்பதே என் நோக்கம். சுருக்குவதை தாராளமாய் நீங்களே செய்து கொள்ளுங்கள். முடிந்தால் மூலம் இதுவென குறிப்பிட்டால்கூட போதும்.

வெளியிடுவது என ஆசிரியர் முடிவெடுக்கிற நிலையில், உங்கள் பெயரிலேயே வெளியாகும்.

நன்றி 

நன்றி

வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. காரணம், பொதுவாகவே வெகுஜன அச்சு ஊடகங்கள், ஒன்றில் வெளியானதை வேறொன்றில் பிரசுரிப்பதில்லை. சிறு பத்திரிகை மட்டுமே, காரியத்தின் முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் செய்யும் சாத்தியம் உண்டு.

இது மட்டும் நடந்தால், ட்விட்டாக NDTVகளும் வலைபாயுதேவாக விகடன்களும் இணைய வாசகர்களுக்குத் தூண்டில் போடுவதைப் போலன்றி, பெரும்பான்மை மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் அச்சு ஊடகம், தமிழின் சமூக வலைத்தளங்களுக்குத் தரும் மெய்யான அங்கீகாரமாக அமையக்கூடும்.

பொதுவாக வெகுஜன அச்சு ஊடகங்களை அணுகுபவனில்லை. அவற்றில் எழுதவே கூடாது என்கிற தீவிர கொள்கையெல்லாம் இல்லை. நான் எழுதி முடித்த கதையை எடிட் பண்ணுகிறேன் பேர்வழி என்று எவரும் இன்னொருமுறை எழுதக்கூடாது என்பது என் முன் நிபந்தனை. அதை அவர்களது ஈகோ ஏற்காது. எனவே இவ்வகையான எழுத்தை அதற்குரிய மரியாதையுடன் அணுகும் பத்திரிகை ஆசிரியர்களின் அழைப்புக்கு மட்டுமே பதில் மரியாதை செய்வது என் வழக்கம்.

இந்த ’பத்மாசினி பயாஸ்கோப்’கதையன்று. எல்லோரையும் சென்றடையவேண்டிய செய்தி. அம்பலத்தில் வைத்து விவாதித்து தீர்வு எட்டப்படவேண்டிய, இருபது வருடங்களாய் இழுபறியில் இருக்கும் பிரச்சனை.

இதைப் படிக்கும் மறுதரப்பு வாயூறும் மாயூரங்கள், எந்த பத்திரிகையாய் இருக்கும் என்று, எல்லா பத்திரிகைகளையும் தொடர்புகொண்டு, பேசிப்பேசியே இதைக் கவர் ஸ்டோரியாய் ஆக்கிவிடமாட்டார்களா என்கிற நப்பாசையில் விளைந்ததுதான் இந்த அலப்பறை.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

- திருவள்ளுவர் (காப்புரிமை @வாசுகி)