22 August 2013

கிளறலும் உளறலும்

@maamallan இப்படியே டகால்ட்டி கொடுங்க. ஏதோ தெரியாத்தனமா சோ மாதிரி உளறிக்கொட்டிட்டேன்னு ஒத்துக்கிட்டீங்கன்னா குறைஞ்சா போயிடுவீங்க?//

வயோதிகத்தால் எம் ஜி ஆர் இறந்தபோது, ஒருபுறம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மனம் பேதலித்த அப்பாவிகளின் தற்கொலைகள். மறுபுறம், அவர் பெயரால் எவரை அடித்து நொறுக்கினாலும் எதைக் கொள்ளையடித்தாலும் கேட்க நாதியில்லை என்கிற சட்டம் ஒழுங்கின் கையறு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கட்டற்ற வெறியின் ஆனந்த தாண்டவத்தை, ஆழ்மன துக்கத்தின் வெளிப்பாடாகக் காட்டிக்கொண்ட பொறுக்கி கும்பல், அண்ணாசாலையில் இருந்த கலைஞர் சிலையின் தலையைச் சிதைத்தது. மூளியான சிலை, சில நாட்கள் கேட்பாரற்று இருந்தது. எவரின் கருணையினாலோ துணி சுற்றிய நிலையில் பலநாட்கள் கிடந்தது. நெடுநாள் கழித்து பீடத்தோடு சேர்த்து அங்கிருந்து அகற்றப்பட்டது. தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் பெருமை சேர்க்காத இந்த சம்பவத்தின் பின்விளைவாய்,தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இரண்டு தலைவர்களுக்கிடையில் சுவாரசியமான வாக்குவாதம், இக்காலத்து ட்விட்டர் போல  மாற்றி மாற்றி விட்டுக்கொண்ட அறிக்கைகளின் மூலமாக நடந்தது. 

தமிழ் நாட்டில், திராவிட ஆட்சி தவிர்க்க முடியாததாய் ஆனபின் இருமை என்பதே இல்லாமற் போனது. ஆளும் கட்சித் தலைவர் எதிர்கட்சித் தலைவர் என்கிற இருமைகூட நிந்தனையாகப் பார்க்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் முக்கியஸ்தர்கள் எல்லோரையும் உள்ளூரப் பிடித்து ஆட்டத்தொடங்கியது. ஆள்பவர் தேவர். அடுத்து ஆள்வதற்காக வெயிட்டிங்கில் இருப்பவர் அசுரர். பொதுநலம் பேணும் பெரும்பாலான பிரமுகர்கள், ஒருவரோடு மட்டுமே நெருக்கமாய் இருக்கும் கொள்கையில் கண்ணும் கருத்துமாய் இருக்கத் தொடங்கினார்கள். அப்போதைக்குக் கொற்றவர் எவரோ, பொதுநலம் கருதி அவருடன் மட்டுமே அணுக்கமாய் இருப்பதோடு, அப்படி இருப்பதாகக் காட்டிக்கொள்வதிலும் தள்ளுமுள்ளு ஏற்படத்தொடங்கிற்று. ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அண்ணாவின் கூற்று இவ்விதத்தில் அமலுக்கு வந்து இன்று வரையிலும் நடப்பில் உள்ளது. எந்தெந்த சீசனில் போயஸ் தோட்டத்தையும் கோபாலபுரத்தையும் சுற்றிப் பறக்கத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது குருவிகளுக்குக் கூட ஐயம் திரிபற தெரிகையில் பிரமுகர்களுக்குத் தெரிவதில் என்ன ஆச்சரியம்? 

எம் ஜி ஆர் ஆட்சியில் இருந்த சமயம் அறக்கட்டளை மூலம் பல நல்ல காரியங்கள் செய்வதற்கு நிதியுதவிகள் பெறவேண்டிய நல்ல எண்ணத்தில், கொல்லூர் மூகாம்பிகை பக்தராய் எம் ஜி ஆர் அவர்கள் இருந்ததைப் பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என எம்ஜிஆருடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள். 

சிதைக்கப்பட்ட கலைஞரின் அந்தச் சிலை திராவிடர் கழகத்தால் வைக்கப்பட்டது அல்லது திறந்துவைக்கப்பட்டது அல்லது என்னவோ வகைப்பட்டதில் அந்தச் சிலையுடன் தி.கவுக்கு பாத்தியதை உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகவே வீரமணி அறிக்கை விட்டார். இந்த அறிக்கைகளை ரோஜா முத்தையா கன்னிமாரா போன்ற நூலகங்களுக்கெல்லாம் போய் தேடி எடுத்து முன்வைத்தால்தான் ஆயிற்று என சம்பந்தப்பட்ட இருவருமே அடம்பிடிக்காத பெரிய மனிதர்கள் என்கிற எனது மூட நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டு, என் 28ஆம் வயது நினைவின் சாராம்சத்திலிருந்து எழுதுகிறேன்.

வீரமணி: கலைஞரின் சிலையை திரும்ப அந்த இடத்திலேயே திராவிடர் கழகம் நிறுவும்.

கலைஞர்: சிலை வைக்கும்போதே அதில் எனக்கு விருப்பமில்லை என்றேன். விட்டுவிடுங்கள். போனது அப்படியே போகட்டும். எனக்கு சிலை வேண்டாம்.

வீரமணி: தி.க வைத்த சிலையை இப்போது வேண்டாம் என்று கலைஞர் சொல்வதற்கு, வாழும்போதே சிலை வைத்தால் முதல்வர் பதவி நிலைக்காது என்பது போன்ற விசேட காரணம்  ஏதும் இருக்கலாம்.

கலைஞர்: நான் திரும்பவும் முதல்வராக ஆகிவிடக்கூடாது என்கிற காரணத்தினால்தான் சிலை வைத்தே தீரவேண்டும் என வீரமணி அடம்பிடிக்கிறாரோ?

ஊர் இரண்டுபட்டால் கோமாளிக்குக் கொண்டாட்டம்தான் இல்லையா? உடனே சோ என்கிற பார்ப்பான் உள்ளே புகுந்தார். மூட நம்பிக்கைபற்றி வாய்கிழியப் பேசும் இரண்டு பகுத்தறிவுகள், ஒன்றோடொன்று எப்படி உரையாடிக்கொள்கின்றன பாரீர் என தமிழினத்தின் முழுமுதல் எதிரியான துக்ளக் பத்திரிகையில் எழுதி தன் அற்ப ஆரிய புத்தியைக் காட்டி உளறினார். 

ஏதோ தெரியாத்தனமா சோ மாதிரி உளறிக்கொட்டிட்டேன்னு ஒத்துக்கிட்டீங்கன்னா குறைஞ்சா போயிடுவீங்க? என்கிற யுவகிருஷ்ணாவின் வேண்டுதலை, இப்படி சம்மந்தா சம்மந்தமின்றி உளறிக் கொட்டாமல், வேறு எப்படித்தான் என்னால் நிறைவேற்ற முடியும்?