25 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 2

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி

இந்த ஒரேயொரு வாக்கியத்தின் மூலம் உலகத்துக்குப் பல விஷயங்களைத் தெளிவு படுத்திவிட்டீர்கள் அய்யா வீரமணி அவர்களே!

நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்பதால் இது மட்டுமே உண்மை என்றும் இதைக் கேள்விக்கு உட்படுத்தவோ பகுத்து ஆராயவோ வேண்டிய அவசியமில்லை என்றும் ஹார்லிக்ஸ் போல அப்படியே சாப்பிடலாம் என்றும் எல்லோரும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

காரணம் தாங்களது பெயரும் பின்புலமும்.

//தந்தை பெரியார் அவர்கள் எங்கள் திரு மணத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குத்தான் - கொழுத்த ராகு காலத்தில்தான் நாங்கள் மாலையை மாற்றிக்கொண்டோம். // http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/66060-2013-08-22-10-03-03.html

இன்று பெரியார் இல்லை. பெரியார் இருந்த போது இருந்த திராவிடர் கழகத்தின் வீரியமும் இப்போது இல்லை என்பது ஊரரிந்த உண்மை. எப்படி எப்படி என்பதை அப்படி அப்படி விளக்குவதுதானே ஸ்ரீமான் நரசிம்ம அய்யங்கார் எழுதும் இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.

தங்களது பெயர்த்திகளின் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைத்து, ஒருவேளை அதில் அவர்களது வயது விபரத்தைப் பார்த்தால், 2000யிரத்தில் அவர்கள் அனைவருமே  10, 12, 14, 16, 17 வயதுகளில் இருக்கிற பட்சத்தில் மட்டுமே நீங்கள் சொன்ன வாக்கியம் உண்மையானதாக ஆகும். திருமணம் ஆகக்கூடிய பெயர்த்திகளே 2000த்தில் இல்லை எனும்போது ‘பெரியவருடனான’ தொலைபேசி உரையாடல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை அல்லவா?

வெகு சாதுர்யமாக ஒரே போடாய் போட்டுவிட்டீர்கள்.

நீங்கள் நினைத்தது நடந்துவிட்டது.

என் இணைய முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டதில் உங்கள் தொண்டர்களை விடவும் என் எதிரிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். அதிகம் எழுதாதவன் என்றாலும் எழுத்தாளன்களில் இவன் ஓரளவு நம்பகத்தன்மை உள்ளவன். உண்மைக்கு மாறாக எதுவும் பேசிவிடமாட்டான் என்று என் மீது நம்பிக்கை வைத்திருந்த கையளவிலான நண்பர்களுக்கும், என்ன இவன் இப்படி செய்துவிட்டானே என்று என் மீது மனவருத்தம்.

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// தி.க.வீரமணி

உங்களது இந்த சொற்றொடர் உண்மையாக இல்லாமலும் இருக்க வாய்ப்பு உண்டா என்று பார்ப்பது ஒன்றும் பகுத்தறிவுக்கு முரணான செயல் இல்லை அல்லவா? 

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

’என் வாய் தவிர’ என்று சொல்ல மாட்டீர்கள் என்கிற மூட நம்பிக்கையில் தொடர்கிறேன்.

நான் சொல்லப்போவதுதான் சத்தியம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இப்படியும் இருப்பதற்கான சாத்தியக்கூறு உண்டா இல்லையா என்று தர்க்கித்துப் பார்ப்பது ஒன்றும் தவறில்லை அல்லவா?

உங்கள் பிறந்த தேதி December 2, 1933

உங்களுக்குத் திருமணம் நடந்த ஆண்டு 1958

தங்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர் என விக்கிபீடியா தெரிவிக்கிறது. He married his wife Mohana in 1958 and has two sons and two daughters. http://en.wikipedia.org/wiki/K._Veeramani அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்கள் ஏதுமில்லை. முதல் குழந்தை பெண்ணா ஆணா என்பதோ, அல்லது முதல் பெயர்த்தி பிறந்தது எந்த வருடம் என்பதோ தெரியவில்லை. ஆகவே அனைத்தும் அனுமானத்தில்தான் கணக்கிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

நான் ’கேள்விப்பட்டு’ எழுதியிருந்த பெரியவருடனான தங்களது ராகு கால தொலைபேசி உரையாடல் நடந்தது 2000யிரத்தில் என்பது மட்டுமே எனக்குத் தெரியுமே தவிர எந்த மாதம் என்பது எனக்குத் தெரியாது. விபரம் கேட்க நண்பரையும் நாட முடியாது. இது விஷயமாய் பேசவே அவர் தயாரில்லை. இதையெல்லாம் எதிர்பார்த்தோ என்னவோ ஆரம்பத்திலேயே தங்களது உட்பட எல்லா பெர்களையும் தவிர்க்கச் சொன்னார். நடந்து 13 வருடங்கள் ஆன பின் எந்த மாதம் நடந்தது என இப்போது உங்களுக்கு நினைவிருக்கவும் வாய்ப்பில்லை.

2000யிரத்தில் தங்கள் வயது 66 - 67.

தாங்கள் பிறந்தது, வருடக் கடைசி (டிசம்பர் 2, 1933) என்பதையும் கணக்கில் கொண்டால் கூட 1958ல் 24 - 25 வயதில் தங்களுக்குத் திருமணம் நடந்திருக்கிறது.

எனவே தங்களது மூத்த குழந்தை மகளாக இருக்கிற பட்சத்தில், 1959 - 60 வாக்கில் அவர் பிறந்திருக்க வாய்ப்புண்டு. எனில் 2000யிரத்தில் அவருக்கு என்ன வயதிருக்கும்? 39 - 40  இருக்க வாய்ப்பு உண்டா இல்லையா?

சட்டப்படி பெண்ணின் திருமண வயதான 18ல் அதாவது 1978 வாக்கில் அவருக்குத் திருமணம் நடந்திருந்தால் 1979-80ஆம் ஆண்டில் அவருக்குப் பெண் மகவு பிறந்திருந்தால் 2000யிரத்தில் அவருக்கு என்ன வயதிருக்கக்கூடும்? 19ஆ 20ஆ? இது பெண்களுக்கான திருமண வயதா இல்லையா சார்?

தாங்களுக்கே 25 வயதில் ’சுருக்க’ கல்யாணம் ஆயுடுத்தே! வசதியான ஆத்துப் பொண் கொழந்தைக்கு சீக்கிரம் பண்ணிட மாட்டேளா? அதும் கொழந்தை 18 வயசுல இருக்கச்சையே வரன் தேடி வரதுனா,  பாக்கலாமேன்னு நெனச்சிருக்க மாட்டேளா? சும்மா சொல்லுங்கோ சுவாமின்!

ஆனால் பிராமணக் குடும்பங்களில் 18 வயது பெண்களுக்கான திருமண வயதில்லை என்பதுதான் யதார்த்தம். பாதி வசதியின்மை கால்வாசி ஜாதகம் பார்க்கும் மூட நம்பிக்கை. மீனம் மேஷம் பார்த்தே பெண்களைப் பேரிளம் பெண்களாய் ஆக்கிவிடும் பி்ராமண தாய் தந்தையர் ஏராளம். மீதி கால்வாசி, வேலைக்குப் போகும் பெண்ணின் சம்பளம் போய்விடுமே என்கிற பேசிக்கொள்ளாத சுயநலக் கலவரம். தலித்துகள் கிறித்துவத்துக்கு போவதைப் போல, சாதி ம்றுப்புத் திருமணங்களில் அரசு வேலையில் இருக்கும் பிராமணப் பெண்களில் சிலர் ஈடுபட இதுவும் ஒரு காரணம். ஆக கறை நல்லது என்பது போல ஜாதகம் பார்த்து காத்துக்கிடக்கும் மூட நம்பிக்கையின் காரணமாய் கலப்புத்திருமணங்கள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது நடைமுறையில்.

ஆனால் பெண் பிராமண ஜாதியை விட்டு வெளியாளைத் திருமணம் செய்துகொண்டு ’ஓடிவிட்டாள்’ என்பதற்காக, எந்த பிராமணனும் எவர் பிளாட்டையும் கொளுத்துவதில்லை. அவமானம் என்று உள்ளூரக் குமைந்தாலும் உயிரை மாய்த்துக் கொள்வதும் இல்லை. டிவி முன்னால் போய் நின்று ஒப்பாரி வைப்பதும் இல்லை. கலப்புத் திருமணம் செய்துகொண்டு தப்பித்தவறி ஒத்துப்போகவில்லை என்றால் அதிக பட்சமாக விவாக ரத்துதான் செய்கிறார்கள் என்பதையும் ’பார்ப்பனரல்லாத’ சமூகத்துக்கு, எடுத்துச் சொல்லுங்கள் ஆசிரியர்வாள்.

மனிதம் செத்து சாதி உயிர்க்கும் கலியுகம்.

இஸ்கூல்விட்டு பாப்பாரப்புள்ள வந்தா என்னா செய்யிது? கொஞ்சநேரம் வெளாடுது. வெளக்கு வெச்சதும் கைகால் கழுவிகிணு திருநூற இட்டுகினு ஒரு ஓரமா ஒக்காந்துகிணு பொஸ்தகத்த எடுத்து வெச்சிகிது. அதை யார்னா படினு சொல்றாங்களா?

வெளக்கு வெச்சா நம்மாளு என்ன பண்றான்? தண்ணியப் போட்டு தள்ளாடிகினு ஊட்டுக்கு வரான். நேரங்காலம் இல்லாம நம்பூட்டு புள்ள புழுதில வெள்ளாடிகிணு இருக்குது. அப்பனே பொறுப்பில்லாம இப்பிடி இருந்தா புள்ளக்கி எப்பிடி படிக்கோணுங்கற புத்திவரும்?

சேரிகள் சூழ்ந்த பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் இப்படிப் பேசியதாக பள்ளிப் பருவத்தில் கேள்விப்பட்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

பாப்பானால்தான் எல்லாம் ஆச்சு பாப்பானால்தான் எல்லாம் போச்சு என்கிற பஜனையைத் தங்குதடையின்றி நீங்கள் தொடருங்கள் - பெரியார் வழி என்று உரத்து கோஷமிட்டுக்கொண்டு.

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி

இப்போது, நீங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம் என்கிற முடிவுக்குதான் வரமுடியுமே தவிர, பகுத்து அறியும் அறிவு உள்ள எவரும் நீங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்கிற முடிவுக்கு வர முடியுமா எடிட்டர் சார்?

அப்படியே நான் அந்தப் பெரியவரின் பெயரை வெளிப்படையாய் சொல்லியே எழுதி இருந்தாலும் ஐயம் திரிபற அடித்துப் பேச, எப்போதும் உங்களுக்கிருந்த ஒரே வாய்ப்பு, அவர் எனது நண்பர்தான் ஆனால் அவருடன்  ’அப்படி ஒரு தொலைபேசி உரையாடலே நடக்கவில்லை’ என்பதுதான். யார் வந்து சாட்சி சொல்லப்போகிறார்கள், நடக்க இருந்து ரத்தாகிவிட்ட சம்பவத்தில்,  ஃபோனில் பேசியது மட்டும் நடந்தது என்று.

பிரச்சனையை எவ்விதமாய் சமாளிப்பது என்பது பற்றிய ஆசிரியர் - உதவி ஆசிரியர்களுக்கிடையிலான டிஸ்கஷன் பத்தலை. தொழில் ரீதியான ஆசாமிகளைத்தான் கூப்பிட்டாக வேண்டும்.

சற்றும் தர்க்கம் பிசகாதிருக்க, சாரு ஜெமோ எஸ்.ரா இவர்களில் ஒருவரை அல்லது எல்லோரையும் எதிர்கால விவாதத்துக்கு வைத்துக்கொள்ளும்படி சிபாரிசு செய்கிறேன். மூவருமே சினிமா டிஸ்கஷனில் நேரடி அனுபமுள்ள திறமைசாலிகள். ராயல்டிக்கே பெரிதாக பிரச்சனை பண்ணாத எழுத்தாளர்கள் என்பதால் சம்பள பாக்கிக்காக யூனியனுக்குக் கூடச் செல்ல மாட்டார்கள்.

பெரியவரின் பெயர்கூட சொல்லப்படாத நிலையில், ’அப்படி ஒரு தொலைபேசி உரையாடலே நடக்கவில்லை’ அது வெறும் நரசிம்ம அய்யங்கார்களின் கட்டுக்கதை என்று மறுப்பதற்கான வாய்ப்பு ரொம்பப் பிரகாசமாக இருந்தது உங்களுக்கு. நீங்கள் மட்டும் அந்த ரூட்டை எடுத்திருந்தால், அனுமானங்களின் அடிப்படையில்கூட என்னால் உங்கள் வியூகத்தை உடைத்து உண்மையை நெருங்கியிருக்க முடியாது. நேரடியாக களத்தில் இறங்கி வேலைக்கு லீவ் போட்டு வெயிலில் அலைந்து மோப்பநாய் போல் துப்பறிந்துதான் முயன்றிருக்கவேண்டி இருந்திருக்கும். ஆனால் அந்தப் பொன்னான வாய்ப்பைப் போயும் போயும் ஒரு பாப்பாரப் பயல் தனது நெட்புக்கிலிருந்தே நொறுக்கிவிடும் அளவுக்கு அநியாயமாகத் தவறவிட்டு விட்டீர்களே மானமிகு அய்யா!