13 August 2013

நம்பினால் நம்புங்கள்

அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர்களில் பலர், அவர் மறைவுக்குப் பின் திமுகவை விட்டு மட்டுமல்லாது அரசியலில் இருந்தே விலகினர். அதற்குக் காரணம், எதற்கும் கருணாநிதிதான் காரணம் என்றாகிவிட்ட தற்காலம் போலல்லாது, இளம் கருணாநிதியின் முதிர்ச்சியற்ற அதிரடிப் போக்கும் பழைய ஆட்கள் ஒதுங்கி நின்றதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். அறத்திற்கு அப்பாற்பட்டு நடைமுறைப் பார்வையில் பழைய மதிப்பீடுகள், மதிப்பிடப்படத் தொடங்கிய காலம்.

திமுகவிலிருந்து அப்படி ஒதுங்கிக் கொண்டவர்களில் ஒருவர் என் சக ஊழியரின் உறவினர் என்பது பேச்சுவாக்கில் தெரியவந்தது. கருணாநிதி அவர்களே நேரில் சென்று கட்சியில் இயங்க அழைத்தும் ’நான் அண்ணாவுக்காகக் கட்சிக்கு வந்தவன், அவர் இல்லாத கட்சியில் என்னால் எப்படி இயங்கமுடியும்’ என்று தவிர்த்திருக்கிறார் நாசூக்காக. ஆனாலும் அடிப்படையில் திமுககாரராகவே வாழ்ந்திருக்கிறார். 

அண்ணாவுடன் அல்லது அண்ணாவிடம் அவர் என்னவிதமான தொடர்பில், நெருக்கத்தில் இருந்தார், அவரது பெயர் என்ன என்பது போன்ற எளிய விபரங்களைக் கூடப் பகிர முடியாதபடி, நண்பரின் நிபந்தனை கட்டிப்போடுகிறது. இது அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த நிகழ்வு என்பதும். அவர் இப்போது இல்லை எனினும் பொது வாழ்வே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவர் பெயர் பொதுவில் இழுபடவேண்டாமே என்கிற நண்பரின் வேண்டுகோள் காரணமாகவும் அவரது அடையாளத்தை முழுமையாகத் தவிர்க்கவேண்டி இருக்கிறது.

என்ன இருந்தாலும் பிரமுகர் அல்லவா என்று சேரன் & தாமினி, கனகா & தந்தைபோல் சந்தியில்தான் குடும்பம் நடத்தவேண்டும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பதும் முறையில்லைதானே. எனினும் அவருக்கு ஏதேனும் பெயர் கொடுக்காமல் எப்படி அவரைக் குறிப்பிடுவது? பெயர்களை தமிழுக்கு சீர்திருத்தி வைத்துக்கொள்ளும் மோஸ்தர் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் தந்தை வைத்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. பெயரிலா இருக்கிறது கொள்கை என்று இயற்பெயருடன் வாழ்ந்த ராமசாமிக்கு, பெரியார் என்கிற பட்டப்பெயர் தானாகவந்து ஒட்டிக்கொள்ளவில்லையா அதுபோல, வாசக வசதிக்காக அவரைப் பெரியவர் என்று மட்டுமே குறிப்பிடுவதுகூட, பலவிதத்திலும் பொருத்தம்தான்.

பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.

போனை வைத்த பெரியவர், ’வேறு எவரேனும் இதைச் சொல்லி இருந்தால் - நான் ஏற்கவில்லை எனினும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அந்த நேரத்தைத் தவிர்த்து இருப்பேன். எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், ராவுகாலத்தைத் தவிர்த்திருந்தால் அசம்பாவிதமும் ஒருவேளை தவிர்க்கப்பட்டு இருக்குமோ என்று எவர் மனமேனும் உறுத்தக்கூடும் எனவே அதைக் கருத்தில் கொண்டேனும் அவர்கள் விருப்பத்தை ஏற்று நடக்கலாம். அது ஒன்றும் பெரிய குற்றமுமில்லை. மூட நம்பிக்கைகளை விடச்சொல்வதே மனித மேன்மைக்குதானே. மூச்சுக்கு மூச்சு மூட நம்பிக்கை எனப் பேசிக்கொண்டு இவன் போய் ராவுகாலம் எனச் சொன்னால் எப்படி? இவனோடு நமக்கென்ன சம்மந்தம்’ என்று, பெண் பார்க்கப் போக இருந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார். 

இது எப்போது நடந்தது ரொம்ப முன்பாகவா என்று நண்பரிடம் கேட்டேன். சேச்சே அவரது மகன் என்னைவிட ஓரிரு வருடங்கள் பெரியவன். இது இப்போதுதான், இரண்டாயிரத்தில் நடந்தது என்றார் நண்பர்.

நானும் நண்பருமாக, பெரியவரின் பெயரையும் திராவிட இயக்கத்தின் மற்றும் அண்ணாவின் முக்கியமான சில அடையாளங்களையும் போட்டு கூகுளில் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை.

அவர் இருந்திருந்தால் நேரில் சந்தித்திருக்கலாம் என்றேன். இருந்துகொண்டுதான் இருக்கிறார் பலரிடத்திலும் என்றார். பத்துவருடங்கள் முன்பாகதான்,சென்னையில் இருக்கும் பெயர்பெற்ற மருத்துவமனைக்கு தம்மை அவர் கொடுத்திருந்திருக்கிறார்.