25 September 2013

சிரைப்பும் சிராய்ப்பும்

முடி வெட்டினேன் என்று சொன்னால் கை நீட்டச்சொல்லி அந்த காலத்தில் பிரம்பால் அடி கொடுப்பார் தமிழ் வாத்தியார்.

நீ என்ன அம்பட்டனா முடிவெட்டறதுக்கு? முடிவெட்டிகிட்டு வந்தேன்னு சொல்லு. 

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து அதன் ஆரவார அலை ஃப்ரென்ச்சு முலாம் பூசப்பட்ட புதுச்சேரியின் காலையும் நனைத்துக்கொண்டு இருந்த காலம்.

தமிழாசிரியர் என்ன ஜாதி என்று தெரியாது. அவரது கவலையும் ஜாதி குறித்ததல்ல. இலக்கணம் குறித்தது. செய்பொருள் செயப்படுபொருள் குறித்தது. ஆனால் அன்று ‘அம்பட்டன்’ என்கிற வார்த்தை சர்வசாதாரனமாகப் பயன்பாட்டில் இருந்தது. இன்று அப்படிச் சொல்வது அதுவும் பொதுவில் நாலு பேர் கேட்க நகரத்தில் சொல்வது நாகரிகமாக உடையணிந்த நமக்கு இழிவு என்பது பெரும்பாலோருக்குக் தெரிந்திருக்கிறது.

ஆனால் முடிவெட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் எதோ இழவு வீட்டுக்குப் போய் வந்ததைப் போல, எதன் மீதும் யார் மீதும் பட்டுக்கொள்ளாமல் பாத்ரூமுக்குள் போய், சட்டைத் துணிமணிகளை எல்லாம் நனைத்து, - லக்ஷ்மி என்பதாலோ என்னவோ பர்ஸ் மட்டும் விதிவிலக்கு - முதல் காரியமாய் குளித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பது என்று ஏன் செய்கிறோம்? என் அனுபவ எல்லைக்குள் இது பிராமணர்களிடம் இன்றும் இருக்கிற நடைமுறை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். முடிவெட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே தினந்தோறும் குளிக்கும் நேரத்தில் குளிக்காமல் கப்படித்துக் கொண்டு முடிவெட்டிக் கொள்வரிசையில் காய்வோரும் உண்டு. வழக்கம் போல எழுந்ததும் குளித்து முடித்து கமகமவென சுத்தமாக இருந்தாலும் முடிவெட்டிக் கொண்டபின் இன்னொருமுறை குளிப்போரும் உண்டு. மத்திய அரசு தலைமை குமாஸ்தாவாக இருந்தாலும் சண்டை என்று வந்துவிட்டால், சும்பக்கூதி கழுதக்கூதி என்று கூச்சமில்லாமல் கத்திக்கொண்டு தண்ணிபோட்ட ரிக்‌ஷாக் காரனுடன் சரிக்கு சரியாய் மல்லுக்கு நின்ற கடப்பா கிருஷ்ணா ராவ் அவர்களின் இளைய புத்திரனாய் அவதரித்த சக்ரபாணி ராவ்கூட கடுமையான ஜலதோஷ காலங்களிலும் முடிவெட்டிக்கொண்டபின் குளிக்காமல் இருந்ததே இல்லை.

இது விஷயமாய் திராவிடர்களின் நடைமுறை என்ன அதிலும் குறிப்பாக முற்போக்கு திராவிடர்கள் இல்லங்களில் இது வேறு விதமாய் இருக்கக்கூடுமா அல்லது குடும்பத்தில் வேறுவிதமான பழக்கவழக்கம் இருந்தாலும் கடவுள் மேட்டர் போல குறைந்தபட்சம் தம்மளவில் ‘முழுகாமல்’ இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அவா. இது விஷயத்தில் அவா போலத்தான் இருப்பார்கள் இவா என்பது என் உள்ளார்ந்த எண்ணம்.

இதற்கு மறுப்பாய்,அது அப்படி இல்லை, முடி வெட்டப்படும்போது மேலெல்லாம் விழுந்து ஒட்டிக்கொள்ளும் எவ்வளவு உதறினாலும் போகாது. உண்ணும் போது முடி உள்ளே சென்று வயிற்றுப் போக்கை வரவழைத்துவிடும் போன்ற அறிவியல் ரீதியான சுகாதார ரீதியான சப்பைக் கட்டெல்லாம் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். மரத்தடியில் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டா முடிவெட்டிக் கொள்கிறோம் மேலெல்லாம் விழுந்து பாசிபோல் ஒட்டிக்கொள்ள? ஏசி சலூனில் கழுத்தைச் சுற்றி இறுக்கிப் பொன்னாடை அல்லவா போர்த்தப்படுகிறது. வெட்டி முடிந்ததும் வெப்பக் காற்றில் அல்லவா நம் தலை கோதிவிடப்படுகிறது. எத்துனைமுறை முடிவெட்டும் முன்பும் பின்புமாக நம் தலை மசாஜ் செய்யப்படுகிறது? அந்த சுகத்தில் ரொங்கிப்போய் கடைவாயில் நீர் கோடாகாதோர் எத்துனைபேர் இருப்பார்கள்? பூப்போன்ற பிரஷ் பூனைக் கொஞ்சலாய் முகம் முழுக்க வருடியபிற்பாடு, அநேகமாக வெட்டப்பட்ட முடி ஒன்றுகூட இருக்காது ஆனாலும் ஏன் முடிவெட்டிக் கொண்டபின் குளிக்கிறோம்? பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததை அனிச்சையாகக் கடைபிடிக்கிறோமா? அவர்கள் பூடகமாகச் சொல்லிக் கொடுத்ததுதான் என்ன? நமது அத்துனைக் கேவலங்களுக்கும் கலாச்சார ரீதியான தர்க்க ரீதியான காரணங்களை எல்லா மடத்தலைவர்களும் கற்பித்துவைத்துப் போயிருக்கின்றனர். எல்லா மடத்தனங்களுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளதாய் நம்பும் இந்து மதம். அந்தகாலத்துல இதுக்காகதான் அதெல்லாம் பண்ணி வெச்சா என்று இதில் பீத்தைப் பெருமிதம் வேறு. கோமணமும் லங்கோடும் டைட்டா இருக்கும்னு அந்த காலத்துல ஒரு அர்த்தத்தோடதானே கட்டிண்டா என்று வியாக்கியானம் பேசிக்கொண்டே சுன்னி மசுத்துக்கு குரோக்கடைல் ஜாக்கி விஐபி ஜட்டி எதற்காக?

மாசாமாசம் துணியைக் கட்டிண்டு திரியவேண்டியதுதானே. ஏகத்துக்கும் காசை செலவழிச்சிண்டு எதுக்கு நாப்கின்? உடம்பு முழுக்க வேக்ஸிங் பண்ணிக்கொண்டாலும் வீட்டுப் பெண்கள் குளிப்பதில்லையே ஏன்? உடல் முழுக்க முளைத்திருக்கும் முடிகளை மழித்துவிடும் அழகு நிலைய பெண்கள் எல்லா ஜாதியில் இருந்தும் படித்துவிட்டு வருகிறார்கள் என்பதுதான் காரனமா?

எத்துனைபேர் இருந்தாலும் எனக்கு முடிவெட்டிக் கொள்ள குமார் இருந்தால்தான் ஆயிற்று. இல்லை என்றால், போனால் போகிறது என்று இரண்டாம் பட்சமாகத்தான், ’சாரி சார் நான் எப்பிடி சார் டிப்ஸ் வாங்கறது’ என கையைப் பின்னுக்கு இழுக்கும் கடை முதலாளியிடம் தலையைக் கொடுப்பேன். இருவருமே இல்லாத நாளாக இருந்தால், கடுமையான தலைவலியில் இருந்தாலும் நோ கட்டிங். இப்படியாகக் கடை முதலாளியிடம் தலையைக் கொடுத்த தினமொன்றி நடந்த உரையாடல்.

குமார் எங்க?

பொண்ணு பாக்கப் போயிருக்காரு சார்.

அப்படியா வெரிகுட்

எங்க சார். அவுரும் எவ்ளோ காலமா பாத்துகிட்டுதான் இருக்காரு ஒன்னும் செட்டாவலை,

ஏங்க?

அவுருகூடப் பரவாயில்லை. அவங்க வீட்டுலதான் ஓவர் டிமாண்டு.

....

நாம என்ன படிச்சி முடிச்சி கவர்மெண்ட்டு உத்தியோகமா பாக்கறோம். இதக்குடு அத்தைக் குடுனு கேக்க.

...

நாம என்ன வேலை பாக்கறோம்கறது நெனப்புல இருக்க வேணாமா?

ஏன் இந்த வேலைக்கு என்ன?

ஆமா நமக்கு நாமே வேணா சொல்லி சமாதானப்படுத்திக்கலாம்.

ஏங்க! நெஜமாவே கேக்கறேன். ஏழெட்டு பேருக்குப் படியளக்கற பகவானுங்க நீங்க.

சார் எனக்காகப் பேசாதீங்க. நீங்களும் நானுமா முக்கியம். சொசைட்டி எப்பிடிப் பாக்குதுங்கறது இல்ல முக்கியம்? கார்லையே வந்தாலும் பார்பர் பார்பர்தானே சார்.

அப்பா போனபிறகு முடிவெட்டிக் கொண்டபின் நான் குளித்ததில்லை. அம்மா கிடந்து அடித்துக் கொள்வாள். அதெல்லாம் முடியாது பே பே என்பதுதான் பதில். சமயங்களில் அலுவலக நேரத்திலேயே, சும்மா பக்கத்துத் தெருவில் பொருள்வாங்கப் போவதுபோல, பர்மிஷன் போட்டும் போடாமலும் போய் முடிவெட்டிக் கொண்டு வந்துவிடுவேன். திருமணமான புதிதில் மனைவிக்குக் கலவரமாக இருந்திருக்கக்கூடும். முடி வெட்டப்பட்ட இடம் தலைதானே, சுத்தம் மட்டும்தான் காரணம் என்றால் அந்த இடத்தை மட்டும் கழுவிக் கொண்டால் போயிற்று என்று வாஷ்பேசினில் தலைக்கு மட்டும் குளித்துக் காண்பித்துத் துவட்டிக்கொண்டேன் ஒரு முறை. அதன் பிறகு அதைப் பற்றிய பேச்சே இல்லை. நான் கட்டிக் கொண்டிருப்பது பிராமணனைத்தானா என்று உரத்த சிந்தனை எப்போதாவது சிரிப்புப் பூச்சுடன் ஒலிப்பதோடு சரி. கோவிலுக்குச் சென்ற நாகம்மையை இருட்டில் போய் மிரட்டினார் என்ற முற்போக்காளர் பஜனை, பெரியார் புராணக் கீர்த்தனையா என்ன மேடைக்கு மட்டும் விஸ்தாரமாகப் பாடிக்காட்டிப் பெண்டாட்டியிடம் மூச்சுகூடக் காட்டாமல் மெளனத்தில் புதைக்க?

திருச்சி அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில் இருந்தபோது, பெரும்பாலும் புதுச்சேரி நிறுவனங்களில்தான் அலுவல். கம்பெனிகள் எல்லாமே 15-20 கிலோமீட்டருக்குக் குறையாமல் பயணப்படவேண்டிய தொலைவில் இருந்தன என்பதால், டியூப்ளே வீதியில் இருக்கும் சாய்பாபா கெஸ்ட்  ஹவுஸிற்கு கார் வந்துவிடும். கம்பெனிக்காரருக்கு முன் சீட்டு பின்புறம் அதிகாரியும் நானும் சக ஊழியருமாக இடுங்கி உட்கார்ந்து செல்லவேண்டி இருக்கும்.

ஒரு நாள் காலையில் அலுவலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டு இருக்கும்போது,அடுத்த அறையில் தங்கியிருந்த,முசிறிக்கு அருகாமையிலிருந்த கிராமத்தைச் சேர்ந்த, வயதிலும் சர்வீசிலும் மூத்தவரான சக ஊழியர் அறைக்குள் வந்தார்.

நரசிம்மன் வண்டில இன்னக்கி நீங்க நடுவுல உக்காருங்க.

என்னங்க நீங்க, தம்மடிக்கிறதுக்காகத்தான கதவுப்பக்கம் ஒக்காறரேன். தம்மடிக்காம வரது ரொம்ப கஷ்டங்க. நடுவுலலாம் ஒக்கார நம்பளால முடியாது.

சும்மா சின்ன புள்ளையாட்டம் அடம் புடிக்கக்கூடாது. சொன்னா கேட்டுக்கணும்.

ஏன்?

வண்டி குலுங்கல்ல, லேசா மேல பட்டதுக்கே ஏதோ சேறு பட்டாப்புல கார்லேந்து எறங்கினதும் வேணும்னே ஏழெட்டு தடவை தொடச்சிகிட்டாரு அந்தாளு. இனிமே நீங்க எங்க ரெண்டுபேருக்கும் நடுவுலதான் ஒக்காறரீங்க.

இத்துனைக்கும் அதிகாரி அசைவப் பிள்ளை. அவர் ஊர் உரையூரோ துறையூரோ குணசீலமோ தமிழ்நாட்டின் எதோ ஒரு ஊர்.

அவர்கூட முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்ததும் தவறாமல் தலைக்குக் குளிப்பவராய் இருப்பாராய் இருக்கும். அதற்குக்கூட சுகாதாரம்தான் காரணம் என்று சொல்வாராய் இருக்கும்.