11 September 2013

யாசகமும் ஒரு வாசகமும்

யாசகம் பெரிய கதை இல்லை. அதற்காக, அதைக் கதையே இல்லை என்று சிலர் சொல்வதையும் நான் ஏற்கவுமில்லை. ஆனால் பலருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுடன் வாதம் செய்யவும் நான் தயாராய் இல்லை. காரணம். ஒரு கதை ஒருவருக்குப் பிடிப்பதும் பிடிக்காததும் கதையை மட்டுமே பொறுத்த விஷயமில்லை. படிப்பவனையும் அவனது முதிர்ச்சியையும் பொறுத்தது.

//95ல் உயிர்த்தெழுதல் புத்தகத்திற்கு ஒருவர் விமர்சனம் என்கிற பெயரில் உயிர்த்தெழுதல் குல்லா போன்றவையெல்லாம் கதைகளா என்று கேட்டிருந்தார். அவரை நேரில் சந்திக்க நேர்ந்தபோது முதலில் அவை என்னவென்றாவது உங்களுக்குப் புரிந்ததா? அப்புறம்தானே அவை மீதான உங்கள் அபிப்ராயத்தைக்கூற முடியும். இதெல்லாம் உனக்கு பத்து வருஷம் கழிச்சிப் புரிஞ்ச்சா புரியலாம் என்றேன்.

அந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டு, விமலாதித்த மாமல்லனை ட்ரைவ் இன்னில் பார்க்க நேர்ந்தபோது சண்டைக்கே வந்துவிட்டார். ஆனால் இப்போது படித்துப் பார்க்கையில் அவை நன்றாக இருக்கின்றன என்று 2004ல் அவரே எழுதியிருக்கிறார் என்பதை. இணையத்தில் எழுதத்தொடங்கியதும் நன்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதால் தெரியவந்தது. அவர் இப்போது பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர். பத்து வருடம் கழித்தாவது அவருக்குப் புரிந்ததும் அதைப் பாசாங்கின்றி தன் தளத்தில் அவர் ஒப்புக்கொண்டார் என்பதும்தான் எனக்கு மகிழ்ச்சி.//

//கிட்டத்தட்ட இதே கேள்வியை இருபத்தியோராம் வயதில் திஜாவின் கதை ஒன்றைக்குறித்து அவரிடம் கேட்கப்போய் அவர் சொன்ன பதில், எல்லாத்தையும் ஒரே மாதிரி எழுத முடியுமா, ஒண்ணு நன்னா வரும் ஒண்ணு சுமாரா இருக்கும்.//
கை முறுக்கும் கைமுறுக்கும்

“எல்லாத்தையும் ஒரே மாதிரி எழுத முடியுமா, ஒண்ணு நன்னா வரும் ஒண்ணு சுமாரா இருக்கும்.” தி.ஜாவின் மேற்குறிப்பிட்ட எதிர்வினை இயல்பானதாகவும் இருக்கலாம் அல்லது இதைப்போய் என்ன நச்நச்சுனு பேசிண்டு என்கிற முதிர்ச்சியின் சாதுர்ய முற்றுப்புள்ளியாகவும் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

பொதுவாக நான் எழுதுவது எல்லாமே எனக்காகவும் என் கதை என் விருப்பப்படி எழுதப்பட்டிருந்தாலும் பிரசுர சாத்தியம் உண்டு என்கிற உத்த்ரவாதமுள்ள சிறுபத்திரிகைகளுக்காகவும் மட்டுமே. சிறு அளவு வாசகர்களைக் கொண்டிருப்பது மட்டுமே சிறுபத்திரிகைக்கான தகுதி அல்ல என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது என்னை ஈர்த்திருக்கவும் வேண்டும்.

இந்தியாவில் அமெரிக்காவில் இருப்பதெல்லாம் ஜனநாயகமா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உடையவர்களுக்குக் கூட இணைய ஜனநாயகத்தைப் பற்றி எந்தவித அபிப்ராய பேதமும் இருக்காது என்றே நினைக்கிறேன். எவர் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்திருப்பதுகூட இலக்கிய விவாதத்தில் ஈடுபடவதற்கான தகுதிகளில் ஒன்று இணையத்தில்.

நாடகீயமாய் கதையைச் சொல்வது ஒரு வகை. எளிய வாசகர்களை மிக எளிதாய் ஈர்க்கவல்ல, எழுத்தின் ஆரம்பப் படிநிலை. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகள் இருப்பது மேலோட்டப் பார்வைக்குத் தெரியாமல், ஏமாற்றும் எளிமையுடன் படைப்பது எழுத்தாளனுக்கு சவால் # வாசக முதிர்ச்சி படிப்பதாலன்று செரிப்பதால் வருவது

என்று எழுதினால் தமக்கான எதிர்வினையாக எண்ணி தலப்பா கட்டை இறுக்கிக் கொண்டு களத்தில் இறங்க இணைய திராவிட ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.

பெரியாருக்குப் பிறகு திராவிடத்தின் ஒரே பிரதிநிதியாக தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்து டான் குயிக்ஸாட் யுவகிருஷ்ணாவுக்குப் பார்த்த இடமெங்கும் பார்ப்பான்தான் தெரிகிறான். உத்தம வைஷ்ணவனுக்குக் கூட இந்த அளவுக்குப் பெருமாள் தெரிவாரா என்பது சந்தேகம்.

[//ஊரே ஒன்றுதிரண்டு கரித்துக் கொட்டினாலும் தண்ணீருக்குள் மூழ்கிவிடாமல் தலையை மேலேயே வைத்துக் கொண்டிருக்கும் சாமர்த்தியம். இந்த வித்தை யார் கற்றுக்கொடுத்து வந்தது? எல்லாம் ஜீனில் இருக்கிறது. பிராமணாளுக்கு ரிசர்வேஷன் கேட்பதில் நியாயமேயில்லை. மட்டுமல்ல நம்மவர்களின் சுய மரியாதைக்கே அது இழுக்கு என்றும் அவருக்குத் தோன்றியது. //

என்பது மாதிரி பார்ப்பன பெருமை பேசும் பரப்பரசியலை புறம் தள்ளி விட்டு,  ]

காட்டப்பட்ட சலுகைக்கு நன்று கூறுவது நாகரிகம்.

ஒரு கதையில் ஆசிரியர் கூற்று எது கதாபாத்திரத்தின் கூற்று எது என்பதுகூடத் தெரியாமல், புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி இருப்பதைவிட இணையத்தை துறப்பது மேல்.

இதே கூத்துதான் நிறம் கதைக்கும் நேர்ந்தது. அதில் இரட்டை நாயணங்களளின் கச்சேரி வேறு. எனது அலுவலக தலித் நண்பருக்குப் எந்தப் பிரச்சனையையும் கொடுக்காத அந்தக் கதைக்காக, ஏதோ திண்ணியத்தில் திணித்தவனே நான்தான் என்பது போல சித்தரிக்கப்பட்டேன்.

பிராமணப் பெருமை அல்லது பிராமணப் புழுக்கம் பேசுவது ஆசிரியனா? அல்லது கதா பாத்திரமா என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டாமா? எழுதப்பட்டிருப்பது ஆசிரியனின் உள்ளக் கிடக்கையானால் அவன் என்ன மயித்துக்கு இணையத்தில் இயங்குகையில் புனைவு திவிர்த்த இணைய இயக்கத்தில் ஏன் இந்துத்வாவை எதிர்க்கிறான். தமிழ் பிராமினை தமிழ் ஹிந்து தளங்களின் அசட்டுத்தனங்களை ஏன் கிண்டலடிக்கிறான். ஆர்.எஸ்.எஸை, மோடியை ஏன் எதிர்க்கிறான் என்று கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்களா? சிந்திப்பது லெவலுக்கு மீறிய காரியம் என்றால் குறைந்தது யோசிக்கக்கூடவா முடை. நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள, நடைபாதைக் கடைகளில் விரிக்கப்பட்டிருக்கும் பெரியார் அம்பேத்கார் பேட்ஜுகள் போதாவா என்ன?

புனைவு வேறு அ-புனைவு வேறு என்று இவர்களே ஜெயமோகனுக்குக் கன்செஷன் கொடுத்து எல்லா வாந்திகளையும் சகஜமாய் செரித்துக் கொள்வதைப் போல எழுத்து என்பது எழுத்தாளனுக்குத் ‘திறமை’ அன்று. அது வேலை இல்லை, அவனது வாழ்க்கை. எழுதாத போதிலும் உள்ளூர எழுதிக்கொண்டு இருப்பவனே எழுத்தாளன்.

மாத்வாளைப் பத்தி எழுதறீங்க சந்தோஷம், ஒரு தடவையாவுது ராயரைப் பத்தி நல்லா எழுத மாட்டீங்களா நரசிம்மன் என்ற அலுவலகத்து மாத்துவப் பெண்மணி விருப்ப வேலைத் துறப்பில் சென்றுவிட்டாலும் இன்னமும் சென்னையில்தான் இருக்கிறார்.

தலித்துக்கு, ஒரு தலித் பொறுக்கியைக் கதா பாத்திரமாகச் சித்தரித்தது ஒட்டுமொத்த தலித்துகளைப் பற்றி சித்தரித்தது அல்ல என்று புரிந்து கொள்ளும் முதிர்ச்சி உள்ளது. ஆனால், உள்ளூர ஜாதி துவேஷம் பாராட்டும் ராயரை போர்வையில் சித்தரித்ததும் அதிகாரப் பேராசையில் தேவாங்கு பிடிக்கப்போகும் சூர்ய நாராயண் ராவை ’குல்லா’வில் காட்டியதும் மாத்வப் பெண்மணிக்கு வலிக்கிறது.

1981ல் போர்வை எழுதியபோது இந்த இனைய பெரியார் அம்பேதகாரிஸ்ட் வாட்ச்சுகள் எல்லாம் பிற்காலத்தில் அவதரித்து நம்மைப் பாராட்ட வேண்டும் என்கிற தீர்க்க தரிசன விழைவோடா எழுதினேன். இத்துனைக்கும் சிறு பத்திரிகைகள் பெரும்பாலும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலம் அது.

அல்லது, நாயக்கர் கூட்டத்துக்குப் போகிற சூனா மானா கோஷ்டி ’கோனாம் பயலுக்கு’ ஓடிப்போன மாட்டைக் கண்டுபிடிக்க ஏன் சோழி உருட்டி  ஜோசியம் பார்த்து உதவுகிறாய் என்கிற பார்த்தசாரதி கோயில் பட்டரிடம், சாத்திர சம்பிரதாயங்களுடன் வாழ்ந்துகொண்டே,பூணூல் போட்டுண்டிருந்தா பிராமணனா? இல்லே போட்டவாளுக்குப் பொறந்துட்டா ப்ராமணனா? எனக் கேட்கும்  ராயரைப் படைத்தது என் ஃபேட்டின் எரரா?

மூடர்கள் ஜாதி எல்லைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

[//ஊரே ஒன்றுதிரண்டு கரித்துக் கொட்டினாலும் தண்ணீருக்குள் மூழ்கிவிடாமல் தலையை மேலேயே வைத்துக் கொண்டிருக்கும் சாமர்த்தியம். இந்த வித்தை யார் கற்றுக்கொடுத்து வந்தது? எல்லாம் ஜீனில் இருக்கிறது. பிராமணாளுக்கு ரிசர்வேஷன் கேட்பதில் நியாயமேயில்லை. மட்டுமல்ல நம்மவர்களின் சுய மரியாதைக்கே அது இழுக்கு என்றும் அவருக்குத் தோன்றியது. //

என்பது மாதிரி பார்ப்பன பெருமை பேசும் பரப்பரசியலை புறம் தள்ளி விட்டு,  ]

இது பிராமணப் பெருமை என்பதில் என்ன சந்தேகம்? ஆனால் இது, இதை எழுதிய ஆசிரியனின்  பிராமணப் பெருமையா அல்லது பிராமண கதா பாத்திரத்தின் ஜாதிப் பெருமையை இதன் மூலம் காட்ட, எழுதப்பட்டதா என்று பார்ப்பதற்கு முதலில் கண்ணில் கட்டி இருக்கும் கருப்புப் பட்டையைக் கழற்றா வேண்டும்.

பிராமணன் பிராமணப் பெருமையை பேசுவது தானே இயல்பு. அல்லாது அவன் என்ன தேவர் அல்லது க்ஷத்திரிய குல வன்னியர் பெருமையைப் பேசுவானா?

இதற்குக் குழுமக் கொழுந்தொன்று எடுத்துக் கொடுக்கிறது.

//குடும்பமாய் சேர்ந்து மோசடி செய்யும் கும்பல். இது பிராமணணாய் இருப்பதற்கான வாய்ப்புகூட குறைவுதான். இப்போதெல்லாம், எவன் வேண்டுமானாலும் அச்சு அசலாய் பேசிவிட முடிகிற அளவுக்கு பிராமண பாஷை மிமிக்ரி போலல்லவா ஆகிவிட்டது.//

இதன் பின்னால் தெரிவிக்க விரும்புவது, பிராமணர்கள் தவறு/மோசடி செய்யமாட்டார்கள் என்ற அரிய கருத்து என்பது யுவகிருஷ்ணா அறியவில்லையா :)//

கதா பாத்திரம் தான் எடுத்த, பணம் தரக்கூடாது என்கிற நிலையை நியாயப் படுத்திக் கொள்ள ’பிரமணன புருஷோத்தமன் என்று சொல்லாத குறையாய் பாராட்டிய அதே நபரை பிராமணனாகவே இருக்க முடியாது என்பதை தனக்குத்தானே தனது ஜாதீய மனப்பான்மையுடன் சொல்லிக் கொள்வது, கதாபாத்திரத்தின் ஜாதிச் சாய்வை அம்பலப் படுத்துவதா அல்லது ஆசிரியன் பீற்றிக் கொள்ளும் பெருமைக் கூற்றா?

இதற்கு இலக்கிய மேதாவி எனக்கு கொடுக்கும் சலுகைக்கு,

//அறிஞ்சிருக்கேன் சென்ஷி. இருந்தாலும் அவரை ரொம்ப போட்டு வாட்டுறதில் இஷ்டமில்லை.//

டெய்லி இவர் வீட்டில் இட்லி மாவு அரைத்துக் கொடுத்துதான் நான் கைமாறு செய்தாக வேண்டும்.

தலித் ஆதரவோ பிராமண எதிர்ப்போ வீராவேசமாய்க் காட்டுவதற்கும் அப்படிக் காட்டுவதாய் காட்டிக் கொள்வதற்கும் ஒரு கணினி அல்லது கைபேசி போதும். மூளையோ மனசாட்சியோ அவசியமில்லை.

சுய ஜாதி மத எதிர்ப்பைக் காட்டவும் குத்திக் கிழித்து அதன் குடலை உருவி இணைய வெளியில் தொங்கவிடவும் உங்களில் எத்துனை பேர் தயார். ஜாதி மத மறுப்பு என்பதன் பெயரால் பெரியார் அம்பேத்கார் படங்களை முன்னால் நிறுத்தி இணையத்தில் நீங்கள் செய்து கொண்டு இருப்பது, சுய ஜாதி மத மறுப்பா? இல்லை மறைப்பா? பார்ப்பண துவேசன் உங்களால் உதறமுடியாத சுய சாதி மத விருப்பை உலகுக்குத் தெரியாமல் மறைக்க உதவும் திரையா?

ஒரு ஜாதியின் மதத்தின் உள்ளார்ந்த ஜாதீயத்தை, மத வெறியை அந்த ஜாதியை மதத்தைச் சேர்ந்தவனால் மட்டுமே ஆத்மார்த்தமாய் அனுபவ ரீதியாய் துல்லியமாய் அம்பலப்படுத்த முடியும்.

தமிழில் இதை எத்துனை எழுத்தாளர்கள் செய்திருக்கிறார்கள் அல்லது இணையத்துப் புளிகளில் எத்துனைபேர் செய்திருக்கிறீர்கள் என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்.

NEFT என்பதற்கு பதிலாய் RTGS என்று எழுதி இருப்பது தெரியாமல் செய்த தவறுதான். பிளண்டர் அல்ல. ஏனெனில், இரண்டுமே வங்கிகளுக்குள் பணப் பரிமாற்றலுக்கான வழிகள்தாம். பரிமாற்றத்தின் அளவு மட்டுமே இரண்டுக்குள்ளும் இருக்கும் வேறுபாடு. ஒன்றை இன்னொன்றாகக் குழப்பிக்கொள்ள சுலபமாக இடம் கொடுப்பவை. http://rbi.org.in/scripts/FAQView.aspx?Id=65  ஒன்றில் பணப் பரிமாற்றமும் இன்னொன்றில் கடன் பரிமாற்றமும் இருந்தால்தான் பிளண்டர் என்று சொல்ல முடியும். ஆனாலும் தவறு தவறுதான் திருத்திக்கொண்டுவிட்டேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆகஸ்டு 21ல்தான் இந்த பிளாகின் டொமைன் பெயரை 702.50 பைசா கட்டி நீட்டித்தேன். 2.50 பைசா கமிசன். வாசு பாலாஜியும் ஃபேஸ்புக்கில் ரவிஷங்கர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் தவறைச் சுட்டிக்காட்டியபின் வங்கிக் கண்ணுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன் NEFT என்றுதான் இருக்கிறது.
https://plus.google.com/u/0/106350265610730534245/posts/8shQQbp5aff

இதைத் தவிர வாசு பாலாஜி குறைகள் என்று கூகுள்+ல் கூறியிருப்பவை யாவும் மைய்ய இழையையே விட்டுவிட்டு மட்டையைப் பற்றிக் கொண்டு எனக்கு எட்டு பெயர்கள் எனவே வெங்கடேச ஐயரின் வங்கி அக்கவுண்ட் பெயர் வெங்கடேஷ் என்று இருக்கக்கூடாதா எனகிற ரீதியில் மல்லாடுபவை. நான் குறை கண்டுபிடிக்கிறேன் என்பதற்காக எனக்கு வவ்வவ்வே காட்டுபவை. இலக்கிய வாசகன் பொருட்படுத்தக்கூடியவை அல்ல.

யாசகம் படிச்சிட்டேன் நல்லா இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா பாப்பாரக் கதையா போடறாங்கனு சொல்லிடுவாங்கப்பா என்று சில நாட்களுக்குமுன் சிரித்துக்கொண்டே சொன்ன காலச்சுவடு சுகுமாரன் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி. படிச்சேன் எனக்குப் பிடிச்சிருக்குங்க. பயன்படுத்திக்கிறேன். திராவிட வாசிப்புக்கு அப்படிதான் தெரியும் என நிறம் கதைக்குக் கூறிய உயிர்மெய் மனுஷ்ய புத்திரன் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி.

நான் வெறும் கண்ணாடிதரிசிதான் என்பதால் இரண்டு பத்திரிகை ஆசிரியர்களுக்குமே தனிப்பட பிடித்திருந்தாலும் இரண்டு கதைகளையுமே என் தளத்தில்தான் வெளியிட முடிந்தது. இரண்டுக்குமே காக்கரே மோக்கரே என்றுதான் கூச்சல் எழுந்தது.

எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்
நன்றி: http://www.luckylookonline.com/