05 January 2014

சுயத்தைக் கண்டடையும் முயற்சியில் ஓர் ஆய்வாளன்

30வயதுக்காரர்கள் இருக்க வேண்டிய இடத்துக்கு 30 வருடம் சர்வீசை முடித்தவன் வந்திருப்பது முரண். ஆனால், அதுவே இதை எழுதும் வாய்ப்புக்கான சிறப்புத் தகுதியாய் அமைந்துவிட்டது. Excise Preventiveவை எட்டிப் பார்க்கவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று, இன்ஸ்பெக்டராகி 13 வருடங்களாய் ஏங்கியவனுக்குக் கமர்ஷியல் நார்க்காடிக்ஸ் கடத்தல் என்று பல களங்களில் இயங்க வாய்ப்பு கிடைத்திருப்பது அளப்பரிய அதிருஷ்டம். 

உள்ளே நுழைகையில் ஜேம்ஸ்பாண்ட்வேலை கிடைத்திருப்பதாக எண்ணிதான் கால் வைத்தேன். வந்த பிறகுதான் தெரிந்தது, இதுவொரு கால்பந்தாட்டம் என்று. இங்கே கோல் போடுவதுதான் முக்கியம். நான் கோல் போட்டேன் என்பது இரண்டாம்பட்சம்தான். ஒருவன்தான் கோல் போடமுடியும் என்பதால் அந்த கோல் அவனால் மட்டுமே போடப்பட்டது என்று பொருளில்லை என்கிற யதார்த்தம் உறைத்தது. அந்த கோலை அவன் போட எத்துனைக் கால்களும் எத்துனை மூளைகளும் அவன் பின்னால் ஓயாது ஓடிக்கொண்டு இருந்தன என்பதும் அவற்றின் உதவியின்றி எவராலும் இவ்வளவு பெரிய மைதானத்தில் களைப்பின்றி ஓடிக் களித்திருக்க முடியாது என்கிற புரிதலும் உண்டாயிற்று.

திட்டமிடலும் செயல்படுத்தலும் எதுவும் எதற்கும் குறைந்ததில்லை என்பதும் காரியம் வெற்றிபெற கரையும் நிழல்கள் எத்துனை என்பதும் இங்கு வந்த பின்புதான் தெரிய வந்தது. வெற்றி பெற்றபின் பெருமிதமாய் எவர் வேண்டுமானால் முகம் காட்டலாம். ஆனால் காரியம் வெற்றியடைய முகம் காட்டித் தன்னை முன்னிருத்தாமல் இருப்பதுதான் முக்கியம். 

எதிர்பாராமல் எதிரியை வெற்றிகொள்ளத்தான் எத்துனை விஷயங்களை எதிர்பார்த்து கணக்கில் எடுத்துக்கொண்டு திட்டமிடவேண்டி இருக்கிறது. எதிர்பாராமை குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, இந்த முகவரி இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டு வா அல்லது இப்படி ஒரு ஆள்/நிறுவனம் இங்கே இருக்கிறதா என மறைமுகமாய் விசாரி என்கிற கட்டளைகள் இடப்பட்டது எவருக்கோ இருக்க, இறுதியாய், கனிந்ததை எவரோ பறிக்க இரண்டுக்கும் இடையிலான இணைப்பு, இறுதியில்தான் ஒருவருக்கொருவர் தெரிய வருவதே தொடக்கத்தில் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. 

கொடுக்கப்பட்ட வேலையில் கவனத்தைக் குவித்து முழுமையாக நிறைவேற்றினாலே பெரும்பாலான தருணங்களில் காரியம் வெற்றியடைந்துவிடும் என்பதும் என்னால் உன்னால் என்பதைத்தாண்டி நம்மால் என்கிற உணர்வே வெற்றிக்கு அடிப்படை என்பதும் உறுதிப்பட்டு இருக்கிறது.

அதிகபட்சமாய் இங்கு இருப்பதற்கான வாய்ப்பே எனக்கு இன்னும் ஆறு வருடங்கள்தாம். ஆனால் ஒரு தினம் போல் மறுதினம் இருப்பதில்லை என்பதை கணக்கில் கொண்டால் ஏழு வருடங்கள் ஏழு யுகங்களுக்கு அல்லவா சமானம். சன்மானம் உபரி வெகுமதி.