20 January 2014

கட்டாயத்துக்கு கனவான்

வேலையாய் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். கார் பத்தடி நகர்ந்ததும் கண்ணயர்ந்து விடுவது என் வழக்கம். நோக்கியா போன் பாண்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து ஒலித்தது. தட்டுத் தடுமாறி வெளியில் எடுத்தேன். 

ஹலோ நீங்கள் விமலாதித்த மாமல்லன்தானே என்றது மலையாளப் பெண் குரல்.

ஆமாம்.

சார் நான் திருவனந்தபுரத்திலேந்து பேசறேன். 

ஓ அப்படியா சரி.

காலச்சுவடில் வந்த, ’இணையமும் இலக்கியமும்’  கட்டுரையை, கேரள பாடப் புத்தக கமிட்டி அப்ரூவ் செய்திருக்கு. உங்களைப் பற்றிய தகவல்கள் வேணும்.

ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குக் காரணம், தூக்கக் கலக்கம் மட்டுமல்ல. இது யாருக்கோ போகவேண்டிய கால், நமக்குத் தவறாய் வந்துவிட்டதாக ஓர் எண்ணம். அது இன்னும்கூட இருந்துகொண்டு இருக்கிறது. என்ன ஏது என்று முழுக்கப் புரிபடவில்லை ஆனாலும் எல்லாம் புரிந்ததுபோல சமயத்தில் நாம் தலையாட்டி வைப்பதில்லையா அது போல சரி சரி என்று சொல்லி வைத்தேன்.

எழுத்தாளராக உங்களைப் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்.

எழுத்தாளனாக... புத்தகத் தலைப்புகளைக் கூறினேன். (அதிலும் சின்மயியை மறந்துவிட்டேன்.)

நீங்கள் பிறந்த ஆண்டு

மேடம் உங்களுக்கு என்னென்ன தகவல் வேண்டும் என்று எனக்கு மெய்ல் அனுப்பிவிடுங்களேன். நான் எல்லாவற்றையும் கொடுத்துவிடுகிறேன்.

மெயில்..லா நீங்கள் சொன்னாலே போதும் நான் எழுதிக்கொள்கிறேன்.

சரி

நீங்கள் பிறந்த வருடம் 

1960

பிறந்த இடம்

மெட்ராஸ்

சென்னையா?

ஆமாம் ஆனால் நான் பிறந்தபோது அது மெட்ராஸாகதான் இருந்தது.

எங்கு வேலை பார்க்கிறீர்கள்?

செண்ட்ரல் எக்சைஸ்.

செண்ட்ரல் எக்சை....

எக்சர்சைஸ் என்றே எல்லோரும் திரும்பச் சொல்வார்கள் இது எக்சைஸ்

மத்திய அரசா?

ஆமாம்.

செரி இந்தக் கட்டுரைக்கான உங்கள் அனுமதிக்காக வேண்டி, இந்த நம்பரில் எங்கள் உயர் அதிகாரி உங்களைத் தொடர்புகொள்ளுவார் 

அப்படியா. இன்னொரு எண் தருகிறேன். இப்போதெல்லாம் இதை நான் அதிகம் உபயோகிப்பதில்லை.

இல்லை இதைத்தான் காலச்சுவடு அலுவலகத்தில் கொடுத்தார்கள்.

சரி. ஆனாலும் அதை எடுத்துக் கொள்ளுங்கள் மேடம்

செரி

பக்கத்தில் இருந்த உடனடி அதிகாரியை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர் நிஷ்டையில் இருந்தார். ஓட்டுனர் பொடியன், மேற்கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தில் இத்தோடு விடுவார்களா இன்னும் வேறு இடம் போகப்போகிறார்களா இந்தப் பரதேசிகள் என்பது போன்ற அசுவாரசியம்தான் அப்பி இருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலை ஒரு பயலும் கவனிக்கவில்லை. இந்த உரையாடல் மெய்தானா?

மேற்படி உரையாடல் நிஜம்தான் என்பதை எந்த விதமாகவும் இன்னொருவரிடம் உறுதிசெய்துகொள்ள வழியில்லை.

அலுவலகம் வந்து சேர்ந்தபின், இருக்கைக்குப் போகையில் பாண்ட் பாக்கெட்டில் கையைவிட்டால் கால் வந்த போனைக் காணவில்லை. சுற்றி முற்றிப் பார்த்தாலும் எங்கும் இல்லை. ஒரு கணம் அனைத்தும் இருண்டன. அந்த போனில் இருக்கும் நம்பருக்கு போன் செய்துதானே செய்தியை உறுதிசெய்துகொள்ள முடியும். ஒரு வேளை. ஃபேக் ஐடி போல இது ஏதாவது இணைய சில்லுண்டிகளின் சில்மிஷ வேலையாய் இருந்தால்? கால் வந்த அந்த போனே இப்போது காணவில்லை. கடவுளே!

படிகளை இரண்டிரண்டாகத் தாவி 89கேஜி தங்கு தங்கென கீழே இறங்கி ஓடினேன்.

இன்னோவாவுக்குள் இளையராஜாவின் பாதி உடல் மறைந்திருந்தது. 

ராஜா என் போனைப் பாத்தியா?

கை..அய்..ல வெச்சிருக்கீங்களே சார்.

அது இல்லப்பா இன்னோரு போன். நோக்கியா. சட்டுனு பாக்க ப்ளாக்பெரி மாதிரி இருக்குமே.

அந்த நம்பரை..அய்.. அடிங்க சார்.

அந்த போனின் எண்ணை அடித்தேன்.

சார் எ..ங்கி..இய்யோ லைட்டா கேக்குது இருங்க, என்றபடி காருக்கு வெளியில் சுற்றுமுற்றும் பார்க்கத் தொடங்கினான்.

53 வருட பழைய காது. எதுவும் கேட்கவில்லை.  

இ..ய்யிதோ இ..ய்யிருக்குதே ஜெனரேட்டர் அருகில் குனிந்து உறையோடு எடுத்து, இதுவா சார் என்றான்.

ஆமாண்டா ராஜா! வண்டில வரும்போது கால் வந்துது இல்லே இதுலதான் பேசினேன். ரொம்ப தேங்க்ஸ்.

வந்த எண்ணைப் பார்த்து, ஐஃபோனிலிருந்து அழைத்தேன்.

மேடம். நான்தான் விமலாதித்த மாமல்லன். அந்தக் கட்டுரை காலச்சுவடுல வந்த போது என் பேரை விமலாதித்தமாமல்லன்னு சேர்த்துப் போட்டுட்டாங்க. அதுக்காகதான் ஃபோன் பண்ணினேன்.

இல்லை. நாங்க அதை விமலாதித்த ஸ்பேஸ் விட்டு மாமல்லன்னுதான் வெச்சிருக்கோம்

நீங்கள் சொன்னது என்ன பாடப் புத்தகம்?

11ஆம் கிளாஸ்லை சிறப்புத்தமிழ்னு ஒரு பாடம் உண்டு. உங்க கட்டுரை நல்லா இருக்கறதா தேர்ந்தெடுத்து புத்தகத்துல சேர்க்க செலெக்‌ஷன் கமிட்டி அப்ரூவ் பண்ணி இருக்கு.

 (இது நெஜமாவே நான்தானான்னு எனக்குதானா என்று கன்பர்ம் பண்ணிக்கதானே நான் கால் பண்ணினதே).

ஓகே மேடம் ரொம்ப தேங்ஸ்.

உடனே காலச்சுவடு கண்ணனுக்கு போன் அடித்தேன். விஷயத்தைக் கூறினேன்.

அப்படியா நல்ல விஷயம்.

அப்பிடினா உனக்குத் தெரியாதா? காலச்சுவடுல பேசினதா சொன்னாங்களே

ஆபீஸ்ல பேசி இருப்பாங்க எனக்கு இது நியூஸ். நல்ல விஷயம்தான்.

அடுத்து சுகுமாரனுக்கு போன்.

எங்க இருக்கே புக்ஃபேர்லையா இல்ல வெளியிலையா?

ஊருக்கு ட்ரெயின்ல போயிகிட்டு இருக்கேன்.

நியூஸ் தெரியுமா?

என்ன நியூஸ்?

கூறினேன். 

இதுதான் உண்மையான வீரியத்தை உனக்குள்ள ஏற்படுத்தணும். நியாயமான விஷயத்தைக்கூட நீ எழுதறவிதத்தால வெட்டி சண்டையா நினைக்க வெச்சிடுறே.

ஓகே. நைட்டு பேசறேன்.

எனக்கு வேண்டியது இவனுடைய சான்றிதழா? 

இந்த சின்ன விஷயத்தில் கூட எவருடைய பரிந்துரையும் இல்லை. உண்மையான மெரிட்டில்தான் நாம் பாஸாகி இருக்கிறோமா என்பதை எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளதானே இவ்வலவு அவஸ்தை. முகம் தெரியாத யாரோ ஒருவரை என் எழுத்து வசீகரிப்பதை விட என்ன பெரிய விருது எழுத்தாளனுக்குக் கிடைத்துவிடக்கூடும்?

கட்டாயத்துக்கு வேண்டுமானால் கொஞ்சநேரம் கனவானாய் இருக்கப் பார்க்கலாம். எவனுடைய கட்டுக்கும் அடங்காமல், லுச்சாவாய் திரிவதில் கிடைக்கும் சுதந்திர சுவாசத்துக்கு ஈடு இணை ஏது?

இதை எழுதுவது எதற்காக என்றால் என்னை ஃபெயிலாக்கப் பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்றுதான்.

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பதிப்பாளர்  கேரள அரசாங்கம் என்பதால் PDFஆக இணையத்தில் இலவசமாய் ஏற்றினால், ராயல்டி பிரச்சனை ஏதும் வராதில்லையா மனுஷ்ய புத்திரன்?

இணையமும் இலக்கியமும் PDF